திருமாற்பேறு


பண் :

பாடல் எண் : 1

மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே.

பொழிப்புரை :

மாற்பேறுடையானுடைய தாமரை போன்ற திருவடிகள் பிரமசாரியான மார்க்கண்டேயன் ஆயுள் குறையாது நிலைபெற்றிருக்கக் கூற்றுவனை உதைத்தன . மாவலியினிடத்தில் நிலத்திற்காக யாசகம் செய்த திருமால் காண்பதற்கு அரியன . ஞானத்தால் உணர்ந்த அடியவர்களால் விரும்பித் துதிக்கப்படுவன . மாணிக்கம் போன்று ஒளி வீசுவன . மேலும் வீடுபேற்றை நல்குவன .

குறிப்புரை :

மாணிக்கு - பிரமசாரியாய்ப் பூசித்த மார்க்கண்டேய முனிவர்க்கு . உயிர்பெற :- உள்ள ஆயுள் என்றும் குறையாது நிலைபெற்றிருக்க . உயிரைப் பெறுதல் கொடுத்தல் யாதுமில்லையேனும் ` உயிர் கொடுத்தான் ` ` உயிர் பெற்றான் ` என்னும் வழக்குண்டு . அதன் கருத்து அவ்வவ்விடத்திற்கேற்பக் கொள்ளப்படும் . கூற்று - உடலையும் உயிரையும் வெவ்வேறு ( கூறு ) செய்வது . கூற்றை உதைத்தன . மாவலி - மகாபலி சக்கிரவர்த்தி . பால் :- ஏழனுருபு காணிக்கு - மூவடி மண்ணுக்கு . இரந்தவன் - இரத்தல் செய்தவன் ( திருமால் ). காண்டற்கு - கண்டு வழிபடுதற்கு . அரியன - கிடைத்தல் இல்லாதன . ( தி .4 ப .108 பா .2) ` கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல்முன் தேடின ... ... இன்னம் பரான்றன் இணையடியே ` ( தி .4 ப .100 பா .6) கண்ட - ஞானத்தால் உயிருள் உணர்ந்த . தொண்டர் - ஞானிகள் . பேணி - இடையறாப் பேரன்புகொண்டு , அயரா அன்பு செய்து . கிடந்து - துகளறுபோதத்திற் குறித்த சுகாதீதமாகிக் கிடந்து . பரவப் படுவன - அத்துவிதமாக வழிபடப்பெறுவன . பேர்த்தும் - ஒருமை திரிந்த இடத்தும் . அஃதே - அம்முத்தியின்பமே ஆகும் . மாற்பேறு - திருமாற்பேறு ; காரணப் பெயர் ; உடையான் - சுவாமி . மாணிக்கம் ஆவன :- மலரடி எழுவாய் . உதைத்தன முதலியன பயனிலை . ` மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரமன்னி ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறனடித்தலம் `. ( தி .4 ப .92 பா .16.)

பண் :

பாடல் எண் : 2

கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே.

பொழிப்புரை :

கருடனை வாகனமாக உடைய திருமால் காண்பதற்கு அரியனவாகிய மாற்பேறுடையான் திருவடிகள் அன்பு செய்தால் அகக்கண் புறக்கண் என்ற இரு கண்களும் இல்லாதவர்களுக்கும் அவர் எதிரே நிலையாக இருந்து நிலைபெயராது ஒளி வீசுவன . அழகுமிக்க வாகைமாலையைச் சூடிய பார்வதி தன் கைகளால் தடவுவதால் சிவப்பு நிறம் மிகுவன .

குறிப்புரை :

கருடத்தனிப்பாகன் - கருடனை யூர்ந்து செல்லும் தனியான சாரதி . தனி என்றாலும் மனைவியரொடும் ஏறிச்செல்லுவன் . கருடத்தனிப்பாகன் :- கருடசாரதி ` பார்த்தசாரதி `. காண்டற்கு அரியன : மாவலிபால் காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன ` ( தி .4 ப .108. பா .1). காதல் செய்யில் - அன்பு செய்தால் . குருடர்க்கும் - அகக்கண் புறக்கண் இரண்டும் இல்லாதவர்க்கும் . முன்னே - அவர் எதிரே . குடிகொண்டு இருப்பன . குடியாகியிருந்து நிலைபெயராதொளிர்வன . ` இருள் தரு துன்பப்படலம் மறைப்ப மெய்ஞ்ஞானமென்னும் பொருள்தரு கண்இழந்து உண்பொருள் நாடிப் புகல் இழந்த குருடரும் தம்மைப் பரவக் கொடு நரகக்குழி நின்று அருள்தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே ` ( தி .4 ப .92 பா .4.) ` இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல் இன்று உண்டாம் அன்பின் நிலையே அது `. ( திருவருட் பயன் . 80). கோலம் - அழகு ; அணிசெயல் ( அலங்காரம் ). மல்கு - மல்கிய . செருடக்கடிமலர் :- ` நிருதி மென்சிரீடப் பூவில் ` ( காஞ்சிப் புராணம் :- சிவ புண்ணியப் படலம் 61). கருவேள் பூங்கணையெய்து முன்னர்த் தோல்வியும் பின்னர் , அம்பிகையின் திருக்கையால் சிவனது திருக்கழுத்தைக் கட்டுமாறு செய்து வெற்றியும் உற்றதால் , அம்மையின் திருக்கை அம்மலரினும் மெல்லியன என்றுணரப்படும் என்னும் இடத்தில் காளிதாசர் , ஸ்ரீரீஷபுஷ்பாதிக ஸௌகுமார்யௌ பாஹு ததியாவிதி மேவிதர்க : பராஜிதேநாபி க்ருதௌ ஹரஸ்ய யௌ கண்டபாயேள மகரத்வஜேந ( குமார சம்பவம் 1-41) என்று பாடியுள்ளார் . செல்வி - உமா தேவியார் . கமலம் - தாமரைப் பூ . செங்கமலம் போலும் கரம் (- கை ), கையால் வருடச் சிவந்து நிற்பன மலரடி . மாற்பேறுடையான் மலரடி அரியன ; இருப்பன ; சிவப்பன . ` மலரடி ` என்றதற்குத் தக்கவாறு மோனையமைப்புள்ளதை அறிவார்க்கு ` வெருட ` என்பது பிழையாதல் விளங்கும் .
சிற்பி