பொது


பண் :

பாடல் எண் : 1

விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட்
படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையு மாலைப் பிறையொதுங்கும்
சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

பகைவரோடு போரிடும் காளையை இவரும் பெரிய பாகனே ! அடியேன் வேண்டி உரைப்பது இது . கொடிய மழுவாள் ஆகிய படையும் , படைகளாய் வரிசைப் படுத்தப்பட்ட பெரிய பூதங்களும் , பாய்கின்ற புலியின் தோலாகிய ஆடையும் , உடைந்த தலைகளால் ஆகிய மாலையும் , மாலையில் தோன்றும் வளர்பிறை தங்கும் சடைமுடியும் தங்கியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிமையை விரும்பும் நெஞ்சம் ?

குறிப்புரை :

விடையும் விடைப்பெரும்பாகா :- விடைத்தல் - வேறு படுத்தல் , சீறுதல் , தாக்குதல் . மற்றை எல்லா விடைகளினும் வேறுபடும் விடையே சிவபெருமானுடையது ` உணர்வென்னும் ஊர்வதுடையாய் போற்றி ` ( தி .6 ப .57 பா .6) என்றதால் விடையை உணர்க . சீற்றமும் தாக்கும் காளை முதலியவற்றிற்கியல்பு . விடைப்பாகன் , பெரும் பாகன் . என் விண்ணப்பம் என்று இப்பதிக முழுதும் உள்ளது . விஞ்ஞாபனம் என்னும் வடசொல்லின்றிரிபென்பர் . வெம் மழுவாள் படையும் - வெய்ய மழுவாளாகிய படையும் . படையாய் நிரைத்த பல் பூதமும் - தானையாக வரிசைப்படுத்திய பல பூத கணங்களும் , பாய் புலித்தோல் உடையும் , உடைதலை மாலையும் , மாலைப் பிறை ஒதுங்கியிருக்கின்ற சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சம் ? ` பாய்புலித் தோல் ` ( தி .4 ப .81 பா .7) ` உடைதலை ` ( தி .4 ப .107 பா .6). என் தனி நெஞ்சமானது மழுவாட்படை முதலிய ஐந்தும் குடிகொண்டிருக்கும் சரக்கறையோ என்று விண்ணப்பம் செய்துகொண்டார் இதில் . சரக்கு - பொருள் . சரக்கறை - கருவூலம் . உடைதலை - உடைந்த தலை . வினைத்தொகை . முடை ( நாற்றம் ) எனல் பொருந்தாது ; முடைத்தலை என்று பாடம் இல்லாமையால் .

பண் :

பாடல் எண் : 2

விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்ப மேலிலங்கு
சங்கக் கலனுஞ் சரிகோ வணமுந் தமருகமும்
அந்திப் பிறையு மனல்வா யரவும் விரவியெல்லாம்
சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

உயரத்தில் மேம்பட்ட பெரிய பக்க மலைகளை உடைய கயிலை மலையானே ! காதுகளில் விளங்கும் சங்கினாலாகிய காதணியும் , வளைவாக உடுக்கப்பட்ட கோவணமும் , உடுக்கையும் , அந்தியில் தோன்றும் வளர்பிறையும் , விடத்தை உடைய வாயதாகிய பாம்பும் ஆகிய எல்லாம் கலந்து கூடியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வெற்பா , கலனும் , கோவணமும் , தமருகமும் , பிறையும் . அரவும் விரவிச் சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சம் ? விஞ்சத்தடவரை வெற்பா - விந்தியம் என்னும் அகன்ற பக்கமலைகளையுடைய கயிலை மலைவாணா . வரை - பக்கமலை ; மூங்கிலுமாம் . ` வெற்பிற் கற்பாவிய வரை `. ` வெற்பிற் கற்பரந்த தாள் வரை ` ( தி .8 திருக்கோவையார் 8 உரை ) சங்கக்கலன் - சங்கக் குழை ; ` கலன் ` என்பது பொதுமை நீங்கி ஈண்டுக் குழைக்குச் சிறந்து நின்றது . சரிகோவணம் - சரிந்த கோவணம் . குபிநம் - அழுக்கு . கௌபீ நம் அதன் திரிபு இது என்பர் . கோவணம் வெண்ணிறத்த தாயிருத்தல் வேண்டும் . நிறங்களுள் தலைமை வெண்மைக்கே உரித்து . அதனால் , ` கோவணம் ` என்று பெயரிட்டனர் எனலுமுண்டு . ` கீளார் கோவணம் ` தமருகம் - உடுக்கு . ` டமருகம் ` என்றதன் திரிபு . அந்திப் பிறை ( பதிகம் 85 பார்க்க ; தி .4 ப .111 பா . 5, 9, 10.) அனல் - நச்சுத் தீ . அனல் வாய் - நச்சுவாய் . அரவு - பாம்பு . விரவி - கலந்து . சந்தித்து - பொருந்தி , என் தனி நெஞ்சம் சரக்கறையோ ?

பண் :

பாடல் எண் : 3

வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்ப மேலிலங்கு
சாந்தாய வெந்த தவளவெண் ணீறுந் தகுணிச்சமும்
பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா னதள்புலித்தோல்
தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

இறந்தவர் தலையைப் பிச்சை எடுக்கும் பாத்திரமாக ஏந்தி இருப்பவனே ! திருமேனியில் விளங்கும் சந்தனம் போன்ற வெள்ளிய திருநீறும் , தகுணிச்சம் என்ற இசைக்கருவியும் , பூத்த தாமரை போன்ற திருமேனியில் அணிந்துள்ள புள்ளிகளை உடைய மான்தோலும் புலித்தோலும் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வீந்தார் - அழிந்தார் ; நூறுகோடி பிரமர்களும் , ஆறு கோடி நாராயணரும் , ஈறிலிந்திரரும் வீய வீயாதவன் ( ஈறிலாதவன் ) ஈசன் ஒருவனே எனல் பின்னர் ஐந்தாவது திருமுறை முடிவிலே காண்க . வீந்தார் `( உலந்தார் ) தலை `:- ( தி .5 ப .53 பா .12, தி .6 ப .20 பா .5) தலைகலன் - தலையாகிய கலன் . கலனை ஏந்தீ என அழைத்தார் . சாந்து ஆய வெந்த நீறு . வெண்ணீறு . தவளம் என்பது வெண்மை எனப் பொருள்தரும் வடசொல் . தவளம் வெளிய நிறத்தைக் குறித்து நிற்றலால் ` வெண்ணீறு ` என்பது பெயரளவாய் நின்றது . ` தவளப் பொடி `. ( தி . 4 ப .112 பா .5) ` வெண்குன்றம் ` ( வந்தவாசிப் பக்கத்தில் உள்ளது ) என்னும் தமிழ்ப்பெயரைத் ` தவளகிரி ` என்று வடசொல்லாற் குறிப்பர் . தகுணிச்சம் :- அகப்புறமுழவுள் ஒன்று . ` தத்தசம்பாரம் தகுணிச்சம் ` என்றது கூற்று . முழவன்று . தகுணிச்சம் விரலேறுபாகம் ... ... பெரும் பறை எனத் தோலாற் செய்யப்பட்ட கருவிகள் ` என்றதே ஈண்டுக் கொள்ளத்தக்கது . ( சிலப்பதிகாரவுரை . அரங்கேற்றுகாதை 13. 27 பார்க்க ). ` சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம் வீணை ` என ( தி .11 திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் . 9) வருதலும் அறிக . பூந்தாமரை மேனி :- ` செந்தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே ` ( தி .8 திருவாசகம் . 30) ` அலங்கலந் தாமரை மேனியப்பா ` ( தி .8 திருவாசகம் . 133) ` சிவபெருமானே செங்கமல மலர்போல் ஆர் உருவாய என் ஆரமுதே ` ( தி .8 திருவாசகம் . 599).

பண் :

பாடல் எண் : 4

வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்ப மேலிலங்கு
வஞ்சமா வந்த வருபுனற் கங்கையும் வான்மதியும்
நஞ்சமா நாக நகுசிர மாலை நகுவெண்டலை
தஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

கொடிய போரிட வந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தவனே ! தலையிலே விளங்குகின்ற வஞ்சனையாக வந்த நீரை உடைய கங்கையும் , வானில் உலவும் பிறையும் , விடத்தை உடைய பெரிய பாம்பும் , சிரிக்கின்ற தலைகளால் ஆகிய மாலையும் , பிச்சை எடுக்க உதவும் மண்டையோடும் வாழும் கரு வூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வெஞ்சமர் - கடும்போர் , போர் வேழம் . வேழத் துரியாய் - களிற்றுத் தோலையுடையவனே . வஞ்சம் ஆ வந்த கங்கை . வல் + து + அம் = வஞ்சம் - வலியுடையது . ஆ - ஆக . வந்த கங்கை . வருபுனல் - வளரும் வெள்ளம் . ` வந்த ` என்றது கங்கைக்கும் ` வரு ` என்றது புனலுக்கும் கொள்க . இன்றேல் , ` வந்த ` ` வரு ` என நின்று வழுவாம் . வான்மதி - ` வானூர் மதியம் ` வால்மதி (- வெண்பிறை ) எனலுமாம் . நஞ்சம் - நஞ்சு ( விடம் ) மாநாகம் - பெரிய பாம்பு . நகு சிரம் மாலை ... ... தலை - நக்கதலை மாலையும் நகுதலையும் . நகுதல் - சிரித்தல் , விளங்குதல் . ` பல்லார் தலை ` ( தி .6 ப .90 பா .7) ` பல்லார்ந்த வெண்டலை ` ( தி .6 ப .48 பா .9). ` பல்லாடுதலை சடைமேலுடையான் ` ( தி .6 ப .93 பா .2). தஞ்சம் - பற்றுக்கோடு . இது சொற்பொருளன்று . ( தண் + து + அம் -) தஞ்சம் அடைந்தவர்பால் தண்மையாகப் பேசுதல் வேண்டும் எனல் வழக்கு வரும்புனல் என்றிருந்ததோ ?

பண் :

பாடல் எண் : 5

வேலைக் கடனஞ்ச முண்டாயென் விண்ணப்ப மேலிலங்கு
காலற்க டந்தா னிடங்கயி லாயமுங் காமர்கொன்றை
மாலைப் பிறையு மணிவா யரவும் விரவியெல்லாம்
சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

கரையை உடைய பாற்கடலினின்றும் தோன்றிய விடத்தை அருந்தியவனே ! கூற்றுவனை அழித்த உன்னுடைய கயிலாய மலையும் , தலைமேலே விளங்கும் விருப்பம் மருவிய கொன்றை மாலையும் அதனோடு தோன்றும் பிறையும் , அழகிய வாயை உடைய பாம்பும் எல்லாம் பெரிதும் கலந்து கிடக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வேலை - கடற்கரை . கடல் - பாற்கடல் . நஞ்சம் உண்டாய் - ஆலாலமுண்டவனே ; நஞ்சுண்டவனே . காலற் கடந்தான் - காலனை வென்றவன் . ` உண்டாய் ` என்னும் முன்னிலையும் ` கடந்தான் ` என்னும் படர்க்கையும் மயங்குமா றின்றிப் பொருள் செய்துகொள்க . கடந்த நின் இடம் எனக்கொள்ளலாம் . கயிலாயமும் கொன்றையும் மாலைப் பிறையும் மணிவாய் அரவும் கலந்து எல்லாம் அமையக் கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சம் ? காமர் - விருப்பம் மருவிய ; அழகிய எனலும் உண்டு . மாலைப்பிறை :- ` அந்திப் பிறை ` ( தி .4 ப .111 பா .2). மணி - மாணிக்கம் . அனல்வாய் அரவு ` ( தி .4 ப .111 பா .2). விரவி - கலந்து . சால - அமைய . கிடத்தலின் மிகையாகக் கொள்ளலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்ப மேலிலங்கு
சூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்
ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென் பாமையோடும்
தாழிட் டிருக்கும் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

விரும்பப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே ! தலையில் விளங்கும் ஒளி சூழ்ந்த சூளாமணி என்னும் தலைக்கு அணியும் மணி ஆபரணமும் , சுடுகாட்டுச் சாம்பலும் , எழு கோவையாக அமைக்கப்பட்ட சிறந்த அக்கு மணிமாலையும் , பாம்பும் , எலும்பும் , ஆமையோடும் சேர்த்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வீழிட்ட - திரண்ட . விரும்பப்பட்ட எனலுமாம் . கொன்றைக்காய்களும் கொன்றைப் பூங்கொத்துக்களும் வீழிட்டிருக்குந் தோற்றங் குறித்ததுமாம் . தார் - மாலை . கண்ணி , தார் , மாலை என்னும் வேறுபாடு குறித்ததன்று . சூழ் இட்டு - சூழ்தலைச் செய்து . ஏழ் இட்டு இருக்கும் நல்அக்கும் - எழுகோவையாகச் செய்த நல்லக்குமணி வடமும் . 188. பார்க்க . அரவு - பாம்பு . என்பு - எலும்பு . ஆமையோடு , ` ஆமையோடும் ` என்பதில் , ` ஒடு ` என்பதன் நீட்டலுமாம் . ` ஓடு ` எனின் ` சூளாமணியும் சுடலை நீறும் ` தொழுது பாதம் ( தி .4 ப .111 பா .7) என்புழிப் போலவும் ஓசை கெடும் . சூளாமணியும் சுடலை நீறும் ( தி .4 ப .111 பா .7) நல்அக்கும் அரவும் என்பும் ஆமையோடும் தாழ்இட்டு இருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே ? தாழிடுதல் - உள் வைத்துத் திறக்கவொட்டாது தாழக்கோலிட்டுச் செறித்தல் .

பண் :

பாடல் எண் : 7

விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்ப மேலிலங்கு
தொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந் தொழுதுபாதம்
கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங் காமர்கொன்றைத்
தண்டா ரிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

பகைவருடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே ! உன் மேல் விளங்கும் விருப்பம் மருவிய கொன்றையாகிய குளிர்ந்த மாலையும் , தொண்டு செய்யும் அடியவர்களுடைய பாத தூளியும் , தொழுது உன் திருவடியைத் தியானிப்பவர்கள் தரிசித்துக் கொண்டிருக்கும் கயிலாய மலையும் பொருந்தியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

விண்டார் - பகைவர் ; நீங்கினார் . வினையாலணையும் பெயர் . ` வீந்தார் ` ( தி .4 ப .111 பா .3) என்பதுபோல . 3 புரமும் :- முப் புரத்தையும் . எய்தாய் - அம்பெய்து அழித்தவனே . தொண்டு ஆடிய - தொண்டில் முழுகிய ; தொண்டர்கள் முழுகிய , தொண்டு தொண்டர்களுடைய . அடி - திருவடி . அடிப்பொடி - திருவடித்துகள் . தொண்டு - பழமை ; அடிமை . பழமையாகச் சொல்லப்பெற்ற தொண்டர் . தொண்டர்க்குத் தொண்டர் என்றலுமாம் . தொண்டு அடிப்பொடி - தொண்டரடிப்பொடி . அடியார்க்கடியர் அடிப்பொடி நீறு . திருவடி நீறு . தொண்டர்க்குத் தொண்டர் அணியும் நின் திருவடிப் பொடிநீறு ; தொண்டு - ஒன்பது . நவதாண்டவத்துக்கு எண்ணாகு பெயராய்க் கொண்டு , நவதாண்டவம் ஆடிய பழமையான திருவடியின் பொடிநீறு எனல் பொருந்துமேற்கொள்க . தொழுது பதம் கண்டார்கள் - அடியார் பாதங்களைத் தொழுது பரனருளைக் கண்டவர்கள் . பாதங்களைக் கண்டு தொழுதவர்கள் எனலுமாம் . பதம் என்று கொள்வதே நன்று . கண்டவர்கள் கண்டுகொண்டேயிருக்கும் கயிலாயம் . காமர் - விருப்பம் மருவிய . கொன்றைத்தார் ; தண்தார் . தண்ணிய ( குளிர்ந்த ) கொன்றைமாலை . அடிப்பொடி நீறும் கயிலாயமும் கொன்றைத் தாரும் இருக்கும் சரக்கறையோ என் நெஞ்சம் ?

பண் :

பாடல் எண் : 8

விடுபட்டி யேறுகந் தேறீயென் விண்ணப்ப மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழறாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியு மத்தமும் வாளரவும்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

அடக்கமின்றி வேண்டியவாறு திரியுமாறு விடப் பட்ட பட்டிக்காளையை விரும்பி வாகனமாகக் கொள்பவனே ! கொடு கொட்டி , கொக்கரை , தக்கை , குழல் , தாளம் , வீணை , மொந்தை என்ற இசைக்கருவிகளும் , உன் திருமேனியில் விளங்கும் கொன்றை வன்னி ஊமத்தம்பூ , பாம்பு என்பனவும் குணலைக் கூத்தாடும் கருவூலமோ அடியேன் தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

` விடு ` என்பது ` விடை ` என்றதன் முதனிலை . பட்டி - தொழுவம் ; களவு விடுபட்டி யேறு - கடவுட்கு என்று விட்ட பட்டி மாடு . நாட்டில் இன்றும் கடவுட்குரியதாய் மாடுவிடுதல் உண்டு . ` பலி யெருது ` என்பது அதனையே . ஏறு உகந்து ஏறி - ஏற்றினை விரும்பி ஏறுவோனே , ` கொடுகொட்டில் ` ` கொடிதாகிய கொட்டி என்னுங் கூத்து ` ` கொடுங்கொட்டி , கொடுகொட்டி என விகாரம் ஆயிற்று , கொடுங்கொட்டி என்றார் எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுதலின் ` கொட்டியாடற்கேற்ற மொட்டிய , உமையவள் ஒருபாலாக ஒருபால் இமையாநாட்டத்து இறைவன் ஆகி , அமையா உட்கும் வியப்பும் விழைவும் , பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க , அவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம் , பொலிய ஆடினன் என்ப மற்றதன் , விருத்தம் காத்தற் பொருளொடு கூடிப் , பொருத்த வரூஉம் பொருந்திய பாடல் திருத்தகு மரபிற் தெய்வத் துதிப்பே . ` இதனான் உணர்க ` என்று கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பகுதியான ` கொடு கொட்டி ஆடுங்கால் தருவளோ ` என்றதற்கு எழுதிய நச்சினார்க்கினியர் உரையைக் காண்க . கொக்கரை - ( தி .4 ப .111 பா .9). சங்கு - வலம்புரிச் சங்கு . ( தி .4 ப .111 பா .3) குறிப்பிற்காண்க . தடுகுட்டம் ? கொடுகொட்டிக் கூத்தும் , கொக்கரையும் , தக்கையும் , குழலும் , தாளமும் , வீணையும் , மொந்தையும் , கொன்றையும் , வன்னியும் , மத்தமும் , அரவும் ஆடும் சரக்கறையோ நெஞ்சம் ?

பண் :

பாடல் எண் : 9

வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்ப மேலிலங்கு
கண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடம்
குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படை
தண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

வெள்ளிய அலைகளை உடைய கங்கையைச் சடையில் ஏந்திய வேறுபட்டவனே ! மார்பின் மேல் விளங்கும் கண்டிகையைக் கழுத்தில் பூண்டு , அரை நாண் கயிற்றின்மீது தலைகளை இணைத்த தலைமாலையை அணிந்து , நீர்ப்பாத்திரம் , கொக்கரை என்ற இசைக்கருவி , வளைந்த பிறை , குட்டையான வடிவத்தை உடைய பூதப்படை இவற்றைப் பெருமானாகிய நீ சேகரித்து வைத்துள்ள சரக்கறையோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன் .

குறிப்புரை :

வெள்திரை கங்கை - வெள்ளலைகளையுடைய கங்கை யாற்றைச் சடையிலடக்கிக் கொண்ட விகிர்தனே ; வேறுபாடு உடையவன் யாரும் விரும்பாதவற்றை மேற்கோடல் , சுடுகாட்டிலாடல் , முதலியவை வேறுபாடுகள் . ` கண்டிகைபூண்டு `:- ` கண்டியிற்பட்ட கழுத்துடையீர் `. ( தி .4 ப .95 பா .6) ` முத்து வடக்கண்டிகையும் `. கடி சூத்திரம் - அரைநாண்கடி - அரை . சூத்திரம் - கயிறு . ` கடிசூத்திரப்பிருது ` என்று விநாயகர் சகத்திர நாமத்துள் ஒன்றுண்டு . கபாலவடம் :- ` விலையில் கபாலக்கலனும் ... உடையார் ` ( தி .4 ப .2 பா .7), குண்டிகை - கமண்டலம் . கொக் கரை - வலம்புரிச்சங்கு , ஒரு வாச்சியம் எனலும் உண்டு . ( தி .4 ப .111 பா .8.) கோணற்பிறை :- அந்திப்பிறை , மாலைப்பிறை , பாதிப்பிறை . ( தி :-4 ப .111 பா .2, 5, 10.) குறட்பூதப்படை - குறளுருவுடைய பூதங்களின் தொகுதி . ` குறளர் சிந்தர் நெடியர் ` என மக்களது வடிவின் வேறு பாடறிக . இம்மூன்றும் திருமாலைக் குறித்து வழங்குதலாலும் அறியப்படும் . பெருங்கதையில் குறளர்க்கு ஆமையை உவமித்துளது . தண்டி - சேகரித்து . தண்டல் - சேகரிப்பு . ( சிவரகசியம் . பாசமோசந . 3).

பண் :

பாடல் எண் : 10

வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்ப மேலிலங்கு
சோதித் திருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்
பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய்புலித்தோல்
சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

பகைவர் உடலைப் பிளக்கும் வெள்ளிய மழுப் படையை ஆள்பவனே ! தலைமேல் விளங்கும் ஒளியுடைய சூளா மணியும் , சுடுகாட்டுச் சாம்பலும் , சிறுபிறையும் , துண்டமான மண்டை யோடும் , பாயும் புலித்தோலும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சரக்கறை அன்றோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன் .

குறிப்புரை :

வேதித்த - பேதித்த . வெம்மழு ஆளீ - வெய்ய மழுவை ஆள்பவனே . கோத்து - ஒளிசெய்து . சோதித்தல் :- சோதனை என்னும் வடசொல்லடியாகத் தோற்றுந் தொழிற் பெயர் . சோதித்து - வினை யெச்சம் . சூளாமணி ஒளிசெய்திருக்கும் . சூளாமணியும் , சுடலை நீறும் , பாதிப்பிறையும் , படுதலைத் துண்டமும் பாய் புலித்தோலும் சாதித்திருக்கும் சரக்கறையோ என்நெஞ்சம் ? ` சுடர்த்திங்கட் சூளாமணி ` ( தி .4 ப .2 பா .1) என்றதால் , திங்களே சூளாமணி எனத்தோன்றும் ஆண்டுத் திங்களும் சூளாமணியும் எனக்கொண்டுரைத்தாம் . ஈண்டும் அவ்வாறே கொள்ளல் சிறந்தது . ` மேல் இலங்கு சூழிட்டிருக்கும் நற்சூளாமணியும் சுடலை நீறும் ` ( தி .4 ப .111 பா .6) என்றும் ` நறுங்கொன்றை சுடலைப் பொடிச் சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து படரச்சுடர் மகுடா ` என்றும் முன் உள்ளன . பின்னதில் திங்கள் வேறு சூளாமணி வேறு என்றதறிக .

பண் :

பாடல் எண் : 11

விவந்தா டியகழ லெந்தாயென் விண்ணப்ப மேலிலங்கு
தவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை தாழ்புலித்தோல்
சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை சூடிநின்று
தவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

மற்றவர்களோடு மாறுபட்டு வந்து ஆடிய திருவடிகளை உடைய எம் தலைவனே ! முற்பிறவிகளில் செய்து விளங்கிய தவத்தானாகிய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட அவனுடைய பத்துத் தலைகளையும் சிதைத்தாய் . முழந்தாளவு தாழ்ந்த புலியின்தோலும் செம்மேனியில் பூசப்பட்ட வெண் திருநீறும் , தலைமாலையும் சூடிக் கொண்டு நீ தவ நிலையில் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிநெஞ்சம் என்பதனை விண்ணப்பம் செய்கிறேன் .

குறிப்புரை :

விவந்து - மாறுபாடு வந்து . வி - மாறுபாடு . விவர்த்தம் - திரும்பி வருதல் . ` விவந்து ` என்பது அதனுடைய திரிபாய வினை யெச்சமென்று கொண்டு , பெயர்ந்து என்று பொருளுரைத்தலுமாம் . ( காளியுடன் மாறுபாடு வந்தாடியது ). கழல் - வலக்காலிலணியும் வீரகண்டை . மேல் இலங்கு தவந்தான் - முற்பிறவிகளிற் செய்து விளங்கிய தவத்தையுடையவனாகிய இராவணன் தான் ; தவம் என்பது பெருந்தவம்புரிந்த இராவணனைக் குறித்ததாகக் கொள்ளலாம் . மேல் இலங்கும் தவம் கயிலையை உணர்த்தியதாகக் கொண்டு எடுத்தலுக்குச் செயப்படு பொருளாக்கலாம் . இறுத்தனை - இறச்செய்தனை இற்றன தலைகள் . இறுத்தது சிவபிரானது திருக்காற் பெருவிரல் நுனி . ` தாழ்புலித்தோல் ` - ` பாய்புலித்தோல் `. சிவந்து ஆடிய - ஆடிச் சிவந்த . ` ஆடியபொடிநீறு ` ` தொண்டாடிய தொண்டடிப்பொடிநீறு ` ( தி .4 ப .111 பா .7). ` சுடலைப் பொடிச் சுண்ணம் ` ( தி .4 ப .110 பா .6). சிரமாலை :- ` நகுசிரமாலை நகுவெண்டலை ! ( தி .4 ப .111 பா .4). புலித்தோலும் நீறும் சிரமாலையும் சூடி நின்று தவம் இருக்கும் சரக்கறையோ நெஞ்சம் ? ` படுதலைத்துண்டம் `:- படுதலையேந்துகையா ` ( தி .4 ப .113 பா .7).
சிற்பி