பொது


பண் :

பாடல் எண் : 1

வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே.

பொழிப்புரை :

வெண்ணிறத்தினை உடைய சங்கின் துண்டு போன்ற வெண்ணிறமான மண்டையோட்டை ஏந்தியவனாய் , வெள்ளியை முறுக்கினாற் போன்ற வெள்ளிய பூணூலை அணிந்தவனாய் , விரிந்த சடையின்மேல் வெள்ளித்தகடு போன்ற வெண் பிறையைச் சூடியவனாய் , வெள்ளிய எலும்புகளை அணிந்து பவளம் போன்ற உடலில் வெண்ணிறநீற்றைப் பூசிய வேதியன் சிவபெருமான் ஆவான் .

குறிப்புரை :

வெள்ளி - வெண்ணிறத்தையுடையதாகிய , குழை - சங்கினது , துணிபோலும் - துண்டுபோலும் . கபாலத்தன் - கபாலக் கலனைக் கையிலேந்தியவன் . கபாலத்துக்குச் சங்கின் துணி உவமம் . குழை - காது ; ` ஊசலுற்றவர் குழைக்குடைந்திடுதலால் ` ( கந்தபுராணம் திருநாட்டுப் . 44) குண்டலம் எனினும் பொருந்தும் , கபாலத்துக் குவம மாவன யாவும் பொருந்தும் ஆயினும் , அவை ` குழை ` என்பதற்குப் பொருளாதல் வேண்டும் . வெள்ளிப்புரி ; வெள்ளிக்கம்பி ; வெண்புரி நூல் - பூணுநூல் ; முப்புரிநூல் . வெள்ளித்தகடு போன்ற வெண்பிறை . என்பு - எலும்பு . வெள்ளிப்பொடி - திருவெண்ணீறு . கபாலம் , புரிநூல் , பிறை , என்பு , பூச்சு எல்லாம் வெண்ணிறத்தன . கபாலத்துக்குச் சங்கக் குழைத்துண்டமும் , புரிநூற்கு வெள்ளிப்புரியும் , வெண்பிறைக்கு வெள்ளித் தகடும் உவமம் . ` வெண்பிறை `:- ` வெண்டிங்கள் `:- ` செஞ் ஞாயிறு ` போல , இயைபின்மை நீக்கிய அடை கொண்டது . ` வெள்ளிப் பொடிப் பவளப் புறம் :- ` பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு ` ( தி .4 ப .81 பா .4.). ` பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறு ` ( தி .4 ப .81 பா .9.) பவளத்தடவரை போலுந் திண்டோள்கள் ( தி .4 ப .113 பா .1.) ` முழுத்தழல் மேனித்தவளப் பொடியன் ` ( தி .4 ப .112 பா .4.)

பண் :

பாடல் எண் : 2

உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கட் டுணிநெஞ்சமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பொன் போல ஒளிவீசும் செந்நிற முடைய பரவிய சடையில் கடல் போன்ற அலைகளை உடைய கங்கையையும் குளிர்ந்த பிறையையும் வைத்த , சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய தெய்வத்தின் அடிமை செய்தற்கண் துணிவுடையை ஆவாய் . அவ்வாறு செய்தால் பிண்டமாகிய உடலைத் துறந்து , ஏழுலக மான அண்டத்தைக் கடந்து அழியாத பிறவித்துன்பக் கடலைக் கடந்து நாம் பிழைத்துப் பாசநீக்கம் பெற்று அப்பெருமானுடைய வீட்டுலகை அடையலாம் .

குறிப்புரை :

உடலைத் துறந்து , உலகு ஏழும் கடந்து , உலவாத துன்பக் கடலைக் கடந்து , உய்யப் போயிடல் ஆகும் :- உடலைத் துறத்தல் - பிண்டத்தைக் கடத்தல் . ( தி :-4 ப .110 பா .1, ப .113 பா .7) உலகு ஏழும் கடத்தல் - அண்டத்தைக் கடத்தல் , உலவாத துன்பம் - அழியாத பிறவித்துன்பம் . பொதுவாக மும்மலச் சார்பும் சிறப்பாக ஆணவமலப் பிணியும் பற்றிய துன்பம் . அத்துன்பக்கடலைக் கடத்தல் . உய்யப் போயிடல் :- அவற்றைக் கடத்தலாகிய பாசநீக்கம் உயிர்க்குள தாகப் பெறுதல் . கனகம் - ஆடகப்பொன் . வண்ணம் - நிறம் ; அழகுமாம் . படலை - திரட்சி . ` பொன்னளவார்சடை ` ( தி .4 ப .105 பா .4.) சடையிற் கங்கையையும் பிறையையும் சுடலைப் பொடியையும் உடைய கடவுள் . சடைமேல் திருவெண்ணீறு வைத்தல் இன்றும் சைவத் திருமடாலயங்களில் , சீலத்திரு குருமகா சந்நிதானம் இளைய சந்நிதானங்களுக்கும் தம்பிரான்களுக்கும் உள்ள அருளொழுக்கம் ஆகும் . அருச்சுனன் தவம் புரிந்தபோது திருநீற்றைச் சடைப்புறத்தே வைத்திருந்த உண்மையை , ` ஆசினான் மறைப்படியும் எண்ணில் கோடி ஆகமத்தின் படியும் எழுத்தைந்துங் கூறிப் பூசினான் வடிவ மெலாம் விபூதியாலப் பூதியினைப் புரிந்த சடைப் புறத்தே சேர்த்தான் ` ( வில்லிபாரதம் . அருச்சுனன் தவநிலைச் . 37)

பண் :

பாடல் எண் : 3

முன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்
கன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே.

பொழிப்புரை :

தீவண்ணனே ! உன் முன்னிலையில் யான் ஏதாவது கூறினால் அது உபசாரவார்த்தை போலக் காணப்படும் . இம் மூவுலகுக்கும் தாயும் தந்தையும் ஆயவன் நீ அல்லையோ ? உன்னைத் தியானித்துக் கொண்டே என் உயிர் நீங்கும் . என் உயிர் இவ்வுடலை நீங்கியபின் என்னை நீ மறக்கக் கூடாது என்பதனையே யான் உன்னை வேண்டுகிறேன் .

குறிப்புரை :

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் அழல்வணா ! இம்மூவுலகுக்கு ( ம் ) அன்னையும் அத்தனும் ஆவாய் நீ அலையோ ? முன் நின்று சொன்னால் உபசாரவார்த்தையைப் போலத் தோன்றும் . தோன்றினும் அது சத்திய வார்த்தையே அன்றி உபசார வார்த்தை அன்று . நெருப்புருவனே , இந்த மூன்றுலகங்கட்கும் தாயும் தந்தையும் ஆவாய் நீ அல்லையோ ? உன்னை அல்லாது வேறு அம்மையும் அப்பனும் எவ்வுலகங்கட்கும் உண்டோ ? இல்லையே ! இன்மையால் , இவ்வுரைமுகமனுரை ஆகுமோ ! ஆகாது . இது வாய்மை யுரையே . என் உடலினின்று , யான் இறக்குங் காலத்தில் , உன்னை நினைந்து கொண்டே இறப்பேன் . இறந்தால் என்னை மறத்தலைப் பெறாய் . ` கழிந்ததற்பின் `:- ` கற்றபின் நிற்க அதற்குத் தக ` என்பது போல்வது . எம்பிரானாகிய உன்னை நான் வேண்டிக்கொண்டவரம் இதுவே ( என்னை மறத்தலைப் பெறாமையே ). மறக்கப் பெறாமை - மறக்கப் பெறுதலைச் செய்யாமை , மறவாமை என்றபடி . யான் உன்னை நினைந்தே கழிதலால் , அவ்வாறு என்னை நீ நினைக்கச் செய்தலும் , அத்திறத்தில் என்னை நீ மறவாதிருத்தலும் உடனமைந்து கிடந்தன என்றவாறு . ` நினையா என் நெஞ்சை நினைவித்தான் ` ( தி .6 ப .43 பா .1)

பண் :

பாடல் எண் : 4

நின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்
பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே.

பொழிப்புரை :

இறையவனே ! உன்னை எப்போதும் நினைத்திருக்குமாறு செய்ய நீ இசைகின்றாய் அல்லை . உன்னை உறுதியாகத் தியானிக்கப் புகுந்தால் அப்போதே அதனை மறக்கச் செய்து வேறொரு பொருளில் அடியேனுடைய மனம் ஈடுபடுமாறு செய்கின்றாய் . உன்னை எப்போதும் மறந்தவனாயினும் உனக்கு இனியனாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியேனை ஒத்தவர் வேறு எவரேனும் இவ்வுலகில் உள்ளனரோ என்பதனைச் சொல்லுவாயாக .

குறிப்புரை :

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் - நினையா என் நெஞ்சை நினைவித்தாலும் காலை , மாலை , நண்பகல் , நள்ளிரவு எனச் சிலபொழுதுதாம் நினைவித்தருள்கின்றாய் . அந் நினைதற் பயிற்சியால் எப்போதும் நினையும் ஆராவேட்கை அடியேற்குளதாயிற்று . ஆயினும் அவ்வாறே எப்போதும் நினையும் ஆற்றலை அருள் செய்திலாய் . விட்டுவிட்டு நினையும் அஃதன்றி எண்ணெ யொழுக்கை ( தைலதாரையை ) ப் போன்று தொடர்ச்சியாக நினையும் ஆற்றலைத் தந்தருள்கின்றிலை . நினையலை ஒட்டாய் . ( எதிர்மறை வினை ). ` துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே ` நினையும் ஆற்றலெய்தி எப்போதும் நினையும் அளவு என்னுடன் ஒட்டி வாழ்தி என்றவாறு . ஒட்டாமை என்பது ஈண்டுணர்த்தும் பொருளை ஓர்ந்துணர்க . ` உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி ` ` ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை கட்டிநின்ற கழிந்தவை போயறத் தொட்டு நின்றும் அச் சோற்றுத் துறையர்க்கே பட்டியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே `, ` நினையலொட்டாய் ` நினையலொட்டும் என்னும் இரண்டு நிலையிலும் வைத்து அதன் பொருளை நினைக . எப்போதும் நினையவொட்டாய் - எப்பொழுதிலும் ( ஒருவேளையிலும் ) உன்னை நினைதல் எனக்கு ஒட்டுமாறு செய்யாய் . ஒரு வேளை கூட உன்னை நினைக்கச் செய்திலாய் என்றலும் பின்னுள்ள பகுதிக்குப் பொருந்தும் . நீ நினையலொட்டாய் . நினையல் அடியார் ( அப்பர் ) வினை . ஒட்டாமை கடவுள் செயல் . நினையப் புகில் - நினைக்கலுற்றால் , பின்னை - ( முன்னை நினையவொட்டாது செய்ததன்றிப் ) பின்னையும் . அப்போதே - நினைக்கலுற்ற அப்பொழுதிலேயே . மறப்பித்து - மறக்கச்செய்து . பேர்த்து - பெயர்த்து ; நினைப்பைப் பிறிதொன்றிற் பெயர்ந்து செல்ல வைத்து . ஒன்று - பிறிதொன்றனை . நாடுவித்தி - நாடுமாறு செய்கின்றாய் . உன்னை நினையப்புகில் , பிறிதொன்றனை நினையப் பண்ணுவாய் என்றவாறு . இத்திறத்தில் , எப்போதும் உன்னை மறந்திட்டு , உனக்கு இனிதாக இருக்கும் என்னை ஒப்பார் ( எவரேனும் ) உளரோ ? இறையவனே , யாரேனும் உளராயின் , சொல்லு . வாழி .

பண் :

பாடல் எண் : 5

முழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்
தெழிற் 1 பெருஞ் சோதியை யெங்கள் பிரானை யிகழ்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத்
தொழப்படுந்தேவர்தம்மால் தொழுவிக்குந்தன் றொண்டரையே.

பொழிப்புரை :

முழுமையான அனல்போன்ற சிவந்த திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிந்தவனாய் , மேருமலை போன்ற அழகிய பெரிய ஒளிவடிவினனாகிய எங்கள் பெருமானை இகழ்கின்ற நீங்கள் இதனைத் தெரிந்து கொள்ளுங்கள் . பொது மக்களால் தொழப்படும் சிறுதேவரால் தொழப்படும் எம்பெருமானைத் தொழுத பின்னர் அப் பெருமான் பிறரால் தொழப்படும் அச்சிறுதேவரைக் கொண்டும் அவர்களால் தன் அடியவர்களைத் தொழச் செய்வான் .

குறிப்புரை :

முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் - முழுத்தீப் போலும் திருமேனிமேல் வெண்ணீறுடையவன் . தீ முழுமையும் ஒரு மேனியாயுற்றுத் திகழ்பவன் என்றவாறு . தவளம் - வெண்மை . பொடி - திருநீறு , ` தவள வெண்ணீறு ` ( தி .4 ப .113 பா .3) கனகக் குன்றத்து எழில் பெருஞ்சோதியை - பொன்மலைபோலும் எழுச்சியும் அழகும் உடைய மெய்ப்பேரொளியை . ` பரஞ்சோதி ` என்று பண்டிதர் பதிப்பிலுளது . பழம்பதிப்பில் ` பெருஞ்சோதி ` என்றே உளது . எங்கள் பிரானை - எங்களுக்குப் பிரியத்தைச் செய்பவனை , பிரியான் என்றதன் மரூஉவாக் கொண்டுரைத்தல் சிறந்தது . ` அரியானை என்றெடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத திருத்தாண்டகச் செந் தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்றெவ்வுலகும் விளங்கிய பொன்னம்பலத்துமேவியாவும் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழாற் பின்னும் பாடல் செய்வார் ` ( தி .12 திருநா . புராணம் 175). கிழவர் - கிழார் , சிறுவர் - சிறார் , மகவர் - மகார் என்பனபோல மருவியது . பிரான் என்பதுமாம் . இகழ்திர் - இகழ்வீர் . தொழுதல் = தேவர்களைப் பணிவோர் செயல் . படுதல் :- அத் தேவர் வினை . தொழப்படுந் தேவர் தொழுதலும் ; அத்தேவர் தொழப் படுதலும் . ` தொழப்படுந்தேவர் ` என்றது தேவரது ஏற்றத்தைக் குறித்தது . ` தொழப்படுந் தேவர் தொழப் படுவான் ` என்றது சிவபரத்துவத்தைக் குறித்தது . ` தொழப்படுந் தேவர் தம்மால் தொழுவிக்கும் தொண்டரை ` என்றது திருத்தொண்டர் பெருமையைக் குறித்தது . ` தொழுத பின்னை - தொழுதால் . ` கற்றபின் நிற்க அதற்குத் தக ` ( குறள் ) என்புழிப் பரிமேலழகர் உரைத்ததுணர்க . தொழும்போதே உண்டாதலின் பின்னை என்றது காலப் பெயர் அன்று . தொழுவித்தல் - கடவுள் செயல் , தொழுதல் - தொழப்படுந் தேவர் வினை , தொழுவிக்கப்பெறுவோர் தொண்டர் . தொழப்படுந்தேவர் :- உருத்திரன் , திருமால் , நான்முகன் , இந்திரன் முதலியோர் . தொழப் படுவோர் அவராயின் , அவரைத் தொழுவார் யார் ? மண்ணோரும் விண்ணோரும் பாதலத்தோருமாவர் . தொழப்படுவோரால் தொழப் படுவார் சிவபிரானும் சிவத் தொண்டரும் .

பண் :

பாடல் எண் : 6

விண்ணகத் தான்மிக்க வேதத்து ளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்து ளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங்கறைக் கண்டனே.

பொழிப்புரை :

எம் நீலகண்டப் பெருமான் தேவருலகிலும் , மேம்பட்ட வேதத்திலும் , கடலால் சூழப்பட்ட இம்மண்ணுலகத்திலும் , திருமாலுடைய உள்ளத்திலும் , பழகுதற்கு இனிய பண்களிலும் , அடியவர் உள்ளத்தும் , பழைய நாயைப் போன்ற இழிந்த அடியேனுடைய மனக் கண்களிலும் மனத்தும் , தலைமீதும் எங்கும் கரந்து பரந்துள்ளான் .

குறிப்புரை :

விண் அகத்தான் - விண்ணிடத்தவனும் ; மிக்க வேதத்துளான் - மேலான மறைப் பொருளானவனும் ; விரிநீர் உடுத்த மண்ணகத்தான் - பரந்த கடல் புடைசூழ்ந்த நிலத்திலுறைபவனும் ; திருமால் அகத்தான் - திருமாலின் உள்ளத்திற் குடிகொண்டவனும் ; மருவற்கு இனிய பண் அகத்தான் - பொருந்துதற்கு இனியவான பண்ணினிசை யானவனும் ; பத்தர் - தொண்டர் , சித்தத்துளான் - சிந்தையிலுள்ளவனும் . பழ அடியேன் ; நாயடியேன் . அடியேனது கண் , மனம் , சென்னி , கண்ணிலுள்ளவனும் , மனத்திலுள்ளவனும் , சென்னியிலுள்ளவனும் ; கறைக்கண்டனே - நஞ்சின் கறுப்பையுடைய ( திருநீல ) கண்டனே . இங்குக் காட்டத்தக்க ஒப்புமைப் பகுதிகள் அளவிலாதுள்ளன . ` மனத்தகத்தான் ..... வாக்கினுள்ளான் ` சிரத்தின் மேலான் என்கண்ணுளானே ! ( தி .6 ப .8 பா .5.) வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை ......... சிந்திக்கப்பெற்றேன் நானே `.

பண் :

பாடல் எண் : 7

பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.

பொழிப்புரை :

பெரிய கடல் இவ்வுலகைமூட ஊழிவெள்ளம் ஏற்படப் பிரமனுடைய சத்திய உலகத்தும் பெரிய கடல்நீர் பொங்கி அதனை மூழ்க்கப் பிரமனும் இறப்பான் . அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும் கரிய கடல்போன்ற நிறத்தினனாகிய திரு மாலுடைய உடலையும் சுமந்து கொண்டு அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனாய் , ஒடுங்கிய உலகம் மீளத்தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து எம்பெருமான் சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான் .

குறிப்புரை :

பெருங்கடல் மூடிப் பிரளயம்கொண்டு - பெரிய கடலாற் சூழப்பட்டுப் பிரளயம் உற்று பிரமனும் போய் - படைத்தற் றொழிலானாகிய பிரமனும் சென்று ; இருங்கடன் மூடி - தன் பெரிய கடன்மை முடிந்து ; இறக்கும் - மாள்வான் . இறந்தான் களேபரமும் - இறந்த அவனது உடலையும் ; கருங்கடல் வண்ணன் களேபரமும் - கரிய கடலினது நிறம்போலும் நீலநிறமுடைய திருமாலினுடலையும் ; கொண்டு - கைக்கொண்டு . கங்காளர் ஆய் - கங்காளத்தினை மேற் கொண்டவராகி . மீளவரும் கடன் நின்று - ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து ; எம் இறை - எம் இறைவன் . நல்வீணை வாசிக்கும் - அழகிய வீணையை இயம்பும் . வீணைக்கு நலம் - சுருதியியல் கெடாதவாறமைந்து , இன்னிசைத் தோற்றத்துக்குரியதாதல் . ` பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி ` ( தி .6 ப .57 பா .7) ` கங்காள வேடக்கருத்தர் ` ( தி .6 ப .28 பா .7) ` கரியுரித்தாடு கங்காளர் ` ( தி .3 ப .93 பா .6) ` கங்காளன் பூசுங் கவசத் திருநீறு ` ( தி .10 திருமந்திரம் ) - உடல் . மகேசுரமூர்த்தத் தொன்று .

பண் :

பாடல் எண் : 8

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே.

பொழிப்புரை :

கடலில் எழுந்தவிடத்தை உண்டும் எந்தக் குறைபாடும் இல்லாத ஒப்பற்ற சிவபெருமானுக்கு அடிமைகளாய்த் தொண்டு செய்யும் மேம்பட்டவர்களுக்கு , வானமும் மண்ணும் அசைந்து ஒடுங்கினாலும் , பெரிய மலைகள் இடம் பெயர்ந்து மேல் கீழாகத் தடுமாறினாலும் , கடல்களிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் அழிந்தாலும் , சூரிய சந்திரர்கள் இடம் பெயர்ந்து விழுந்தாலும் அவற்றைப் பற்றிய கவலை ஏதும் ஏற்படாது .

குறிப்புரை :

வேலைநஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லாத ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கு , வானம் துளங்கில் என் ? மண் கம்பம் ஆகில் என் ? மால்வரையும் தானம் துளங்கித் தலைதடுமாறில் என் ? தண் கடலும் மீனம்படில் என் ? விரிசுடர் வீழில் என் ? என்று கொள்க . வானம் - விண்ணுலகம் . துளங்கில் - அசைந்தால் . என் - நமக்குறும் அச்சம் யாது ? நமக்கு அதனால் சிறிதும் இடர் இல்லை . மண்ணுலகு , கம்பம் - நடுக்கம் ; ( பூகம்பம் , நிலநடுக்கம் ). மால்வரையும் தண்கடலும் முறையே தானம் துளங்கித் , தலைதடுமாறிலும் ( நீர்வற்றி ) மீன்கள் பட்டொழியிலும் நமக்கு யாதும் இடர்ப்பாடு இல்லை . மால்வரை - பெரிய மலைகள் . தானம் - இடம் . துளங்கி - பெயர்ந்து . தலை தடுமாறல் - நிலைகெடல் . தண்கடலாயிருந்து வறுங்கடலாங் கால் , அதில் உள்ள மீன் முதலியன எல்லாம் மாயும் . படில் - மாய்ந்தால் , விரிசுடர் - உலகெலாம் விரிந்த சுடருடைய செங்கதிர் வெண்கதிர் முதலியவை . வீழில் - விழுந்தால் . தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் ? ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறில் என் ? செப்பம் ஆகும் . சேறைச் செந்நெறி மேவிய அப்பனார் உளர் அஞ்சுவ தென்னுக்கே .` ( தி .5 ப .77 பா .6.)

பண் :

பாடல் எண் : 9

சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.

பொழிப்புரை :

சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மேனிப் பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திடுவானாகில் அவனை அடியேன் ` பவன் ` என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றி அவன் அடியேனை இயக்கும் இடம் தொறும் திரிந்து பலநாளும் அழைத்தால் , இவன் என்னைப் பலநாளாக அழைத்தலைத் தவறாது செய்கிறான் என்று திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான் .

குறிப்புரை :

சிவன் என்னும் திருப்பெயரைத் தன் ஒருவனுக்கே யுரியதாக்கிக் கொண்ட செய்ய திருமேனியையுடைய எம்பெருமா னாகிய அவன் என்னை ஆளாகக் கொண்டு . தண்ணளிசெய்தருள்வான் . அளித்திடும் ஆகில் , அவனை , அடியேன் , ` பவன் ` என்னும் திருப் பெயர்ப் பொருள் முதலியவற்றை உள்ளத்திலும் உரையிலும் பற்றி , ( அவன் இயக்கும் இடந்தொறும் ) இயங்கிப் பலநாளும் அத் திருப்பெயரால் அழைத்துவந்தால் , இவன் என்னைப் பலநாளும் அழைத்துவருகின்றான் . அழைத்தலை ஒழிவதில்லை என்று அடியேற்குக் காட்சிதந்தருள்வான் . சிவன் - செய்யன் . தமிழ்ச் சொல்லாகக் கொண்டு பொருள்கூறிய இடம் இது . செம்மேனி யெம்மான் என்றது ` சிவன் ! என்ற தமிழ்ச் சொல்லின் பொருளாகும் . சிவன் , மகேசுரன் , உருத்திரன் , விண்டு , பிதாமகன் , சமுசாரவைத்தியன் , சருவஞ்ஞன் , பரமாத்துமா என்னும் திருப்பெயர் எட்டுடன் ` பவன் முதலாம் ஆயிரம் பேர் எடுத்துக்கூறிக் குறையாத பேரன்பிற் பதும மலர்கொடு பூசை புரியும் .` ( காஞ்சிப் . திருமாற்பேற்றுப் . 9). ` அகில நாமமும் எமக்குரிப் பெயராம் அவற்றினும் பவன் முதற்பெயர் சிறப்பாத் தகும் ` ( காஞ்சிப் . திருவேகம்பப் . 43) ஆகில் - அன்புடையேம் . ஆகில் . அழைத்தால் நம் விடாப்பிடிக்காக எதிர்ப்பட்டருள்வான் . ( தி .8 திருவாசகம் திருச்சதகம் . 58.) முதலடி பரத்துவம் உணர்த்தியதுணர்க .

பண் :

பாடல் எண் : 10

என்னையொப் பாருன்னை யெங்ஙனங் காண்ப ரிகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே.

பொழிப்புரை :

பொன்னை ஒத்து ஒளியுடையதாய் , தீயை ஒத்துச் செந்நிறத்ததாய்ச் சிவந்த வானத்தைப் பிளந்து நெடுகப் பரவியதாய மின்னலை ஒத்து விட்டு விட்டு ஒளிவீசும் சடைக்கற்றையை உடைய வேதப்பரம்பொருளே ! அடியேனை ஒத்த சிற்றறிவினர் உன்னை யாங்ஙனம் காண இயலும் ? உன்னோடு மாறுபட்டு உன்னை ஒப்பவராகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தேவர்கள் உன்னுடைய அடியையோ முடியையோ காண இயலாதவாறு உன்பெருமை ஏனைய எல்லாத் தேவர்களையும் விட மேம்பட்டுள்ளது .

குறிப்புரை :

பொன்னை ஒத்து , நெருப்பைக் கலந்து , செம்மானத்தை அழித்து , மின்னலை ஒத்தல் பொருந்த மிளிர்கின்ற சடைத்திரளை யுடைய வேதமுதல்வனே , உன்னை இகலி , என்னை ஒப்பவர் எங்ஙனம் உன்னைக் காண்பர் , நின்னை ஒப்பவர் நின்னைக் காணும் படியினது அன்று நின்பெருமை . உன்னை இகலி என்றதை முன் வாக்கியத்திலும் , நின்பெருமை என்றதைப் பின்வாக்கியத்திலும் கொண்டுரைக்க . என்னை ஒப்பார் உன்னை இகலி உன்னை எங்ஙனம் காண்பர் ? நின்பெருமை நின்னைக் காணும்படித்து அன்று , படித்து - தன்மைத்து , படி - தன்மை . பெருமை காணும்படித்து அன்று . ` அவரன்ன ஒப்பாரியாம் கண்டதில் ` ( குறள் 1071) என்றது ஒப்பு . ஒப்பாரித்தல் - அழுவித்தல் ; வளாவுதல் - கலத்தல் , தணித்தலுமாம் . வெந்நீர் வளாவுதல் ` என்னும் வழக்கு நோக்கியும் உணர்க . செம் மானஞ் செற்று :- ` செம்மான நிறம் போல்வதோர் சிந்தையுள் எம் மானைக்கண்டு கொண்டது என் உள்ளம் .` ( தி .5 ப .98 பா .4) ` சிந்தையாய் நின்ற சிவனே போற்றி ` ( தி .6 ப .5 பா .9). செவ்வானம் செம்மானம் எனத் திரியலாம் . வவ்வும் மவ்வும் ஒன்றன் நிலைக் களத்து மற்றொன்று நிற்பன . ` வான மாரி ` என்பது ` மான வாரி ` என்றதறிக . ` சடைக்கற்றையினாய் ` ( தி .4 ப .112 பா .2). ` நின்னை ` என்றிருமுறையும் ` உன்னை ` என்றொருமுறையும் நிற்றலின் பொருத்தம் ஆராய்தற்குரியது .
சிற்பி