பொது


பண் :

பாடல் எண் : 1

பவளத் தடவரை போலுந்திண் டோள்களத் தோண்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை யச்சடைமேல்
பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந்  நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை சூடும் பனிமலரே. 

பொழிப்புரை :

எம்பெருமானுக்குத் திண்ணிய தோள்கள் பெரிய பவளமலைகள் போலவும், தோள்களில் படியும் சடைக்கற்றைகள் பவளத்தின் தளிர்கள் போலவும், சடைமேல் உள்ள படமெடுக்கும் தலையை உடைய நாகம் பவளக் கொழுந்து போலவும், நாகத்தொடு சூடப்பட்ட இளம்பிறை பவளத்தின் குளிர்ந்த மலர் போலவும் காட்சி வழங்குகின்றன.

குறிப்புரை :

திண்தோள்கள் பவளத் தடவரையைப் `. பல் சடை அத் தோள்மிசையே பவளக்குழை தழைத்தால் `. பைம் முகநாகம் அச்சடைமேல் பவளக்கொழுந்து `. பவளக்கண் வாலமதி அந்நாகத்தொடும் எந்தை சூடும் பனிமலர் (`) என்று சொல்வகை செய்துகொள்க. தடவரை - பெரிய மலை. திண்மை - உறுதி; செறிவு. மிசை - மேல். குழை - குண்டலம். பை - படம். பைம் முகம் - படத்தையுடைய முகம். நாகம் - (ஐந்தலைப்) பாம்பு. வாலமதி - பாலசந்திரன்; இளம்பிறை. `வால` என்றது பால என்றதன் திரிபு. அது வடசொல். `எந்தை` - என் அப்பன். இதுதன்மை. `நுந்தை` முன்னிலை. `தந்தை` படர்க்கை. பனிமலர் - குளிர்பூ. தோளுக்குப் பவளவரையும், சடைக்குத் தழைத்த பவளக்குழையும், நாகத்துக்குப் பவளக்கொழுந்தும், பாலசந்திரனுக்குப் பவளத்தின் பூவும் உவமையாகக் கூறப் பட்டன. `கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ, பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ, புயல் சுமந்த அற்புதமோ, விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ ... சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார்.` (தி.12 பெரிய புராணம். தடுத்தாட்கொண்ட. 140) என்றதாற் பவளமலர் உண்மை அறியப்படும். (தி.4 ப.99 பா.2.) பார்க்க.

பண் :

பாடல் எண் : 2

முருகார் நறுமல ரிண்டை தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தால்
தருவா யெனக்குன் றிருவடிக் கீழொர் தலைமறைவே. 

பொழிப்புரை :

நறுமணம் கமழும் பூக்களாலாகிய இண்டை மாலையைச் சூடி வண்டுகள் ஒலிக்க, பெருகுகின்ற கங்கை ஆறு வந்து பொருந்தியுள்ள சடைக் கற்றையை உடையவனே! பிணிகளால் உண்ணப் பட்டுக் கிடக்கும் இரு தூண்களாகிய இருகால்களை உடைய அடியேன் உடம்பாகிய குடிசை நீங்கினால் அடியேனுக்கு உன் திருவடிக் கீழ்த் தலைமறைவாய் இருக்க இருப்பிடம் அருளுவாயாக.

குறிப்புரை :

முருகு - மணம். ஆர். ஆர்ந்த; நிறைந்த. நறுமலர் - நறிய பூ. இண்டை - இண்டை என்னும் பெயரிய தலையிற் சூடும் வட்ட மாலை தி.4 ப.38 பா.4 குறிப்பிற் காண்க. தழுவி - பொருந்தி. வண்டே - வண்டுகளே. முரலும் - ஒலிக்கின்ற (சடை). முரல்வன வண்டுகள். முரலும் இளம் சடை. பெருகுவது ஆறு (கங்கை). அவ்வாறு அடைவது சடையை. சடைக்கற்றையினை யுடையவனே என்று அழைத்து, உன் திருவடிக்கீழ் ஒரு தலைமறைவு எனக்குத் தருவாய் என்றும், அதுவும் இவ்வுடலின் நீங்கும் போது தருவாய் என்றும் வரம் வேண்டுகின்றார். பிணிமேய்ந்திருந்த குரம்பை. இருகால் குரம்பை. பிணியையே கூரையாக வேயப்பட்டிருந்த குடிசை. இரண்டுகால் நட்டுக் கட்டிய குடிசை. பிணி மேய்ந்திருந்த இருகாற் குரம்பையாகிய இது. நான் உடையது இது. இக்குரம்பை, பிரிந்தால்:- கூடிய நான் நீங்க, இது பிரிந்தால். எனக்கு உன் திருவடிக்கீழ் ஒர்தலை மறைவு தருவாய். தலை மறைவு:- `மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர் நெஞ்சேயவன் சிற்றம்பலத்துள் நின்றாடுங் கழல் எவர்க்குந் தாயவன்றன் பொற்கழல் என் தலைமறை நன்னிழலே` (தி.11 நம்பியாண்டார் நம்பி அருளிய கோயிற்றிருப் பண்ணியர் திருவிருத்தம். 9). குடில் செய் - குடிசை. நன்செய் - நஞ்சை. புன்செய் - புஞ்சை முதலியன போன்ற மரூஉ. குற்றில் - குறில் - குடில். குடியில் செய்யுமாம்.

பண் :

பாடல் எண் : 3

மூவா வுருவத்து முக்கண் முதல்வமீக் கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி மாறிய  தில்லையப்பால்
தீவா யெரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே. 

பொழிப்புரை :

என்றும் மூத்தல் இல்லாத வடிவத்தை உடைய முக் கண்ணனாகிய காரணனே! மிகுந்த துயரிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று உன் இருப்பிடத்தின் வாசலில் தொங்கும் மணியைத் தேவர்கள் கையால் அதன் நாவில் அசைத்து எழுப்பிய ஒலி குறைந்து அழியுமுன் திரிபுரங்கள் நெருப்பில் எரிந்து சாம்பற் பொடியாய்ப் போய்விட்டன.

குறிப்புரை :

மூவா உருவத்து முக்கண் முதல்வ - மூத்தல் இல்லாத அருளுருவையுடைய முக்கண்ணனாகிய முதல்வனே. முக்கண் - அருளுருவத்தில் ஒரு நிலையில் இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி மூன்றும் கண்களாகும். மீக்கூர்தல் - மிகப் பெருகுதல். இடும்பை - துன்பம். காவாய் - காத்தருள்வாய்; என - என்று, கடைதூங்கும் மணியை - வாயிற் கடையில் அசையும் (ஆராய்ச்சி) மணியை. அமரர் - தேவர்கள். கையால் நாவாய் அசைத்த ஒலி - தங்கள் கைகளால், அம்மணி நாக்கிடத்தில் அசையச்செய்ததால் உண்டான ஒலியானது, அசைத்த ஒலி:- காரணப்பெயரெச்சம். ஒலி மாறியது இல்லை - ஒலித்தலின் மாறினதில்லை. ஒலிஒலி ( - ஒலித்த ஒலி) என வினைத் தொகையாக்கல் பொருந்தாது. அப்பால் - ஒலித்த அப்பொழுதே; பால் எனக் காலம் இடமாயிற்று. பால் உருபன்று. திரிபுரம் இருந்த அவ் விடத்தில். தீவாய் - தீயின்கண். `தீயாய்` (பா.பே) எரிந்து - நெருப்பாகித் தீய்ந்து, பொடியாய் - சாம்பலாகி, (கழிந்தது). நாவாய் - நாவின் கண். நா மணிநா, `மிகுகூர்` மரூஉ. `மிக்கூர்` மிக்கு ஊர்கின்ற என்றுமாம். `மிசைமிசை` என்றது மீமிசை என மருவிய போல்வது, மிகல் - மேல். மிசைக் கண் - மீக்கண், மிசைத்தோல் - மீத்தோல், மீந்தோல், மிசைப் போர்வை - மீப்போர்வை முதலியனவும் அறியற்பாலன.

பண் :

பாடல் எண் : 4

பந்தித்த பாவங்க ளம்மையிற் செய்தன விம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென் னேவந் தமரர்முன்னாள்
முந்திச் செழுமல ரிட்டு முடிதாழ்த் தடிவணங்கும்
நந்திக்கு முந்துற வாட்செய்கி லாவிட்ட நன்னெஞ்சமே. 

பொழிப்புரை :

வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய் நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?

குறிப்புரை :

அமரர் முன்னாள், முந்திச் செழுமலர் இட்டு முடியைத் தாழ்த்து அடியை வணங்கும் (அத்தகு முதன்மை யுடைய) நந்தியாகிய சிவபிரானுக்கு நீயே முந்துறும் வண்ணம் தொண்டு செய்யாது விட்டனை; அக்கேடுற்ற மனமே` முற்பிறவியிற் செய்தனவாய்க் கட்டாயுற்ற தீவினைமறங்கள் இப் பிறவியில் வந்து தாக்கியபின்னர், நாணி வருந்துவதில் யாது பயன்? நன்னெஞ்சம் (நல் + நெஞ்சம்) என்றதில் நன்மை இகழ்ச்சிக் குறிப்பு. அம்மை - முற்பிறப்பு. இம்மை - இப்பிறப்பு. வரும் பிறப்பை `உம்மை என்பர். `தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பதன்றி மற்று எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர் கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்` (நாலடியார்.) என்றதில், `உம்மை` என்றது இனி எய்தும் பிறவியைக் குறித்தது அறிக. `அம்மை` என்றது சேய்மைச் சுட்டுச் சொல் லாதலின், அது முற்பிறவிக்கும் பிற்பிறவிக்கும் உரித்தாகும். ஆதலின், `அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே` என்றருளினார் எம்மையும் ஆளுடைய நம்பி. அதில் ஆள்வதற்கு ஆதும் எனக்கொள்ளவும் இடம் உண்டு. யாது என்றது ஆது என்று வந்துளது. `ஆதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்றபோது` (தி.4 ப.3 பா.1) என்றதன் குறிப்பிற் காண்க.

பண் :

பாடல் எண் : 5

அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர் செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய நம்பனையே. 

பொழிப்புரை :

********

குறிப்புரை :

அந்திவட் டத்திளங் கண்ணிய னையா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய நம்பனையே.
(தி.4 ப.98 பா.1)
1இது முன்னர்த் திருவையாற்றுத் திருவிருத்தம் இரண்டினுள் ஒன்றாய் முதலில் உளது. `ஐயாறமர்ந்து வந்தென்` `ஆறமர் செஞ்சடையான்` என்னும் வேறுபாடு மட்டும் கொண்டது. `சிந்தி` என்பது சந்தி எனப் பிழைபட்டது. அதுவே அன்றி, இது வேறுபாடல் ஆகாது. `இளங்கண்ணி` எனல் பொருந்தாது.

பண் :

பாடல் எண் : 6

உன்மத் தகமலர் சூடி யுலகந் தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை தோறும் பலிதிரிவான்
என்மத் தகத்தே யிரவும் பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தொ ரிளம்பிறை சூடிய சங்கரனே. 

பொழிப்புரை :

தன் தலையிலே ஓர் இளம் பிறையைச் சூடிய சங்கரன், ஊமத்தம் பூவைச்சூடி, உலகத்தார் தொழச் சுடுகாட்டில் சுடப் பட்ட பல மண்டை ஓடுகளையும் மாலையாக அணிந்து, பல வீட்டு வாயில்கள் தோறும் பிச்சைக்குத் திரிபவனாய், அடியேனுடைய தலையை விடுத்து இரவும் பகலும் பிரியாதவனாக உள்ளான்.

குறிப்புரை :

உன்மத்தக மலர் - ஊமத்தம் பூ. உலகம் - `எல்லா வுலகமும்`. சுடலைப் பல் மத்தகம். சுடு காட்டிலிருந்த பல்லுடைய தலையையும் பலதலைகளையும் கோத்தமாலைகளையும், கொண்டு அணிந்துகொண்டு, பல் கடைதொறும் - பலவீட்டுக் கடை வாயில் தோறும். பலிதிரிவான் - பிச்சைக்காகத்திரிபவன். என் மத்தகத்தே - என் தலையின். இரவும் பகலும் பிரியான்:- `ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்` (தி.4 ப.1 பா.1) தன் மத்தகத்து - தன் தலைமேல். ஓர் இளம்பிறை சூடிய சங்கரன். ஓர் இளம் பிறையை அணிந்த இன்பச் செயலன். சங்கரன் - இன்பஞ் செய்பவன். உன்மத்தம் என்பதே ஊமத்தம் என்று மருவியது எனல் ஈண்டு விளங்கும். உன் மத்தகம் என்றது ஆராயத்தக்கது. பின் மூன்றடிக் கண்ணும் மத்தகம் தலையைக் குறிப்பதாயினும், கொண்டது பிரம கபாலத்தையும் தலை மாலையையும். இரவும் பகலும் பிரியாதது பிரமரந்திரத்துள்ள சகச்சிரதளபங்கயத்தில்; பிறை சூடியது சடையில் என்றுணர்க. துவாத சாந்தத்தையும் இரவும் பகலும் பிரியாமைக் குரியதாகக் கொள்ளலாம். இரவு - கேவலம். பகல் - சகலம். கிரியா தீபிகை:- `பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம்` என்னும் திருவாசகத்தையும் நினைக.

பண் :

பாடல் எண் : 7

அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்க ளையமுணல்
வரைப்பா வையைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை யாமறை  தேடுமெந்தாய்
உரைப்பா ருரைப்பன வேசெய்தி யாலெங்க ளுத்தமனே. 

பொழிப்புரை :

விண்ணுலகமெல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே! நீக்கப்பட்ட பிரமன் தலை ஓட்டினை ஏந்திய கையினனே! வேதங்கள் தேடுகின்ற எந்தையே! எங்கள் மேம்பட்டவனே! இடையிலே கோவண உடை உடுத்து, பிச்சை ஏற்று வாழும் நீ பார்வதியை மணந்து கொண்ட செயல் என்ன குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு? உன்னைக் குறை கூறுகின்றவர்கள் குறை கூறுதற்கு ஏற்ற செயல்களையே நீ செய்கின்றாய்.

குறிப்புரை :

வான் இரைக்கும் இரைப்பா விண்ணுலகம் எல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே, படுதலை ஏந்துகையா - இறந்துபட்ட பிரமனது கபாலத்தைத் தாங்கிய கையினனே. மறைதேடும் எந்தாய் - வேதங்கள் தேடுகின்ற எந்தையே. `வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே` (தி.8 திருவாசகம்). எங்கள் உத்தமனே; உரைப்பார் உரைப்பன செய்தி - சொல்லுவார் சொல்வனவற்றைச் செய்வாய். அரைப்பால் உடுப்பன:- திருவரையில் உடுப்பன கோவணச் சின்னங்கள்; உண்ணல் ஐயம், ஐயம் - பிச்சையுணவு. கோவணவுடையும் பிச்சை யுண்டியும் உடைய நீ மலைமகளை மணந்து கொண்டது என்ன குடிவாழ்க்கை செய்வதற்கு? வானிரைக்கும் இரைப்பா:- `ஓசை யொலியெலாம் ஆனாய் நீயே`. உரைப்பார் உரைப்பன:- `உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் (திருக்குறள்). சின்னம் - துண்டு. தமிழ்ச்சொல். `சின்மை. சின்னஞ் சிறுபிள்னை. `சின்னஞ் சிறிய. பென்னம்பெரிய` என்பவற்றை அறிக. சின்னம் என்னும் வடசொல் வேறுண்டு. அதன் பொருள் வேறு. ஈண்டு அது பொருந்தாது.

பண் :

பாடல் எண் : 8

துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே. 

பொழிப்புரை :

பற்றற விட்டொழிப்பதற்கு எளியதல்லாத இவ் வுடம்பை விடுத்துக்கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் ஏறிவந்து நிலவுலகிற்கு இறங்கி மீண்டும் பிறப்பேன். பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகின்றது.

குறிப்புரை :

துறக்கப்படாத உடல் - பற்றற விட்டொழிக்க எளிதல்லாத உடம்பு. உடலைத் துறந்து - உடம்பை விட்டு; இறந்து. வெம் தூதுவரோடு - கொடிய யம தூதுவருடன். இறப்பன். இம்மண்ணுலகைக் கடப்பேன். இறந்தால் - கடந்தால். இரு விசும்பு - பெரிய வானுலகம். ஏறுவன் - ஏறிவந்து பிறப்பன்; மீண்டும் மண்ணுலகிற் பிறத்தலை யுணர்த்திற்று. `பூதனாசரீரம் போனால் புரியட்ட ரூபந்தானே யாதனா சரீரமாகி இன்பத் துன்பங்களெல்லாம் நாதனார் ஆணை உய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத் தீதிலா அணுவாய் யோனி சேர்ந்திடும் சீவனெல்லாம்.` (சித்தியார் சூ. 2:- 36). பிறந்தால், பிறையைச் சூடிய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகனது திருப்பெயரை மறந்துவிடுவேனோ என்று என் உள்ளம் அதே நினைவாய்க் கிடந்து சுழலுகின்றது. `ஜீவன் முத்தி` நிலையில் இவ்வையம் உண்டாமெனில். நம்மனோர் கதி என்னையோ? `நன்றறிவாரிற் கயவர் திருவுடையார் நெஞ்சத் தவல மிலர்` (குறள்) `இந்தச் சகந்தனில் இரண்டும் இன்றித் தமோமயம் ஆகி எல்லாம் நிகழ்ந்திட மகிழ்ந்து வாழும் நீர்மையார்` (சிவப்பிரகாசம். 95.)

பண் :

பாடல் எண் : 9

வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை புகுந்தான் றிருமுடிமேல்
வாரி வளாய வருபுனற் கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது போலு மிளம்பிறையே. 

பொழிப்புரை :

தேன் பெருக்கெடுத்தோடும் நறுமணம் கமழும் கொன்றைமலரைச் சூடிப் பாவமில்லாதவனாகிய இறைவன் உலகியல் செய்திகள் யாவும் கலந்து கிடக்கும் அடியேனுடைய உள்ளத்துப் புகுந்தான். அவன் திருமுடி அதன் மேல் வெள்ளமாய் வரும் நீரை உடைய கங்கை இவற்றால் தன் இயக்கம் தடைப்பட இளைய பிறை சடைப் புறமிருந்து திரும்பி ஏரி போன்ற நீர் நிறைந்த கங்கையில் தோய்ந்து கிடக்கிறது.

குறிப்புரை :

வேரி - தேன். வளாய - கலந்த. விரை - மணம். மலர்க் கொன்றை - மலர்களாலாகிய கொன்றை மாலையை. புனைந்து - அணிந்து. அனகன் (அநகன்) - மறமில்லான்; பாவமில்லான். என் சிந்தை புகுந்தான் - என் சிந்தையிற் புகுந்தனன். அனகன் புகுந்தான். `சேரிவளாய சிந்தை` என்றதால், அதன் தூய்மை யின்மை உணர்த்தினார். சேர்தல் பொருந்த எனலுமாம். `புகுந்தான்:- வினையாலணையும் பெயர், புகுந்தானது திருமுடிமேல்; வாரி வெள்ளம். வளாய - கலந்த. வருபுனல் - விரைந்து வருகின்ற நீர்ப்பெருக்கு, கங்கை சடை இரண்டும் பிறைக்குத் தடையாயிருத்தலின், அவற்றிடை மறிவாகி அக் கங்கையாகிய நீர்நிலையிற் கலந்து கிடந்தது அப்பிறை. மறிவு - மறிதல்; தடைபடுதல். ஏரி - நீர்நிலை. ஏரி - ஏர்க்குப் பயன்படுவது. குளி - குளித்தற்குப் பயனாவது. ஊருணி - ஊரினர் உண்ணப் பயனாவது. இந் நீர்நிலைகளின் பயன் வேறுபாட்டா லுண்டான பெயர் வேறுபாடறியாது, எல்லாவற்றையும் ஒரே பொருளிலாள்வது பொருந்தாது. `ஏரி நிறைந்தனையசெல்வன்` `வண்டுடைக் குளத்தின் மீக்கொளமேன் மேல் மகிழ்தலின் நோக்கி` `ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு.` (குறள்)

பண் :

பாடல் எண் : 10

கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கட னீர்சுருங்கிப்
பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும்  பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறு மஞ்சனெஞ் சேயிமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே. 

பொழிப்புரை :

நெடுங்காலம் மலைகள் மழையின்றிச் சூடேறக் கரிய கடலின் நீர் சுருங்குமாறு பல ஆண்டுகள் மழை பெய்யாது போயினும் பஞ்சம் ஏற்படுமே என்று அஞ்சாதே. என்னிடம் வஞ்சினம் கூறும் மனமே! எல்லா உயிர்க்கும் புகலிடமாகிய இச்சிவ பூமியிலே இமையாத முக்கண்களை உடைய பொன் மயமான நெடிய குன்றம் ஒன்று உள்ளது ஆதலின் அடியவர்கள் வருந்த வேண்டிய தேவை இல்லை.

குறிப்புரை :

கல் - மலை. நெடுங்காலம் - நீண்டகாலம். வெதும்பி - வெயிலால், பசுமையற்று வெய்துற்று. கருங்கடல் - நீர்நிறைவாற் கரிய தோற்றத்தையுடைய கடல். நீர்சுருங்கி - நீர் முழுதும் குறைந்து; வற்றி. பல்நெடுங்காலம் - நெடிய பலகாலம். மழைதான் மறுக்கினும் - முகில் மழையைப்பெய்ய மறுத்தாலும். பஞ்சம் - கறுப்பு; வற்கடம். உண்டு - உளது. என்று - என்று சொல்லி. அஞ்சல் - அஞ்சாதே. என்னொடும் சூளறும் நெஞ்சே - என்னுடன் வஞ்சினம் செய்யும் மனமே. இப் புகல் இடத்தே - எல்லா வுயிர்க்கும் புகலிடமான சிவபூமியிலே. பொன்னெடுங் குன்றம் ஒன்று உளது - பொன்னுருவான நெடிய மலை ஒன்றி ருக்கின்றது. அதனால், அஞ்சல் நெஞ்சே - பஞ்சம் வரும் என்ற பயமே வேண்டா. `பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்சே` (தி.4 ப.94 பா.2) என்றும் `வானந்துளங்கில் என்` (தி.4 ப.112 பா.8.) என்றும் `மண் பாதலம்புக்கும் மால்கடல் மூடி` (தி.4 ப.94 பா.9.) என்றும் தொடங்குந் திருவிருத்தங்களை ஈண்டெண்ணுக.
சூளறுதல் சூளுறுதல் இரண்டும் ஒரு பொருளில் ஆளப் படுகின்றன. (கந்தபுராணம் அசமுகி. 29; துணைவரு. 10; கிரவுஞ்ச . 10; சேதுபுராணம். விதூமச். 8; 84; கந்தமாதன. 89; கம்பர். நிகும்ப. 82; பரிபாடல். 8; 70; கலித்தொகை. 41; இறையனாரகப். பக்கம். 18. 107. உரை; மணிமேகலை. 3:- 102. தொல்காப்பியம். பொ. 147. உரை.)

பண் :

பாடல் எண் : 11

மேலு மறிந்தில னான்முகன் மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக்
கால னறிந்தா னறிதற் கரியான் கழலடியே. 

பொழிப்புரை :

பிரமன் மேலே அன்ன வடிவிற் சென்று பெருமா னுடைய முடியை அறிந்தான் அல்லன். கீழே தோண்டிச் சென்று திரு மால் மனக்கலக்கம் உற்றானே அன்றிப் பெருமானுடைய திருவடி களைக் கண்டான் அல்லன். சிவபெருமானை வழிபட்டுக் கொண்டி ருந்த இளையவனான மார்க்கண்டேயன் பால் சென்று அவன் மீது பாசக்கயிற்றை வீசி எறிந்து செயற்படாமல் மடங்கிய மனத்தை உடைய கூற்றுவன் பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியாத சிவ பெருமானுடைய கழல்களை அணிந்த திருவடிகளை அறியும் வாய்ப்பினைப் பெற்றான். அத்திருவடிகள் வாழ்க.

குறிப்புரை :

தி.8 திருவாசகம் 3 :- 50; 4:- 1-10; நான்முகன் அன்னப் புள்ளுருக்கொண்டு மேற்சென்று பறந்து தேடியலைந்து மேலும் அறிந்திலன். மாலும் பன்றியுருக்கொண்டு கீழிடந்து கீழும் அறிந்திலன். மேலும் என்றதால் கீழும் என வருவித்துரைக்கப்பட்டது. அயன் மேற்சென்று மேலும் அறிந்திலன். மால் கீழிடந்து கீழும் அறிந்திலன். மேல் கீழ் என்றன சிவபிரானுடைய திருமுடியையும் திருவடியையும் குறித்த இடவாகு பெயர். மேல்:- `போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே.` `சோதி மணிமுடி சொல்லிற் சொல் இறந்து நின்ற தொன்மை,` கீழ் - `பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்`. பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக்கு அப்பால்`. (தி.8 திருவாசகம். 164. 346) இடத்தல் - இடம்படச் செய்தல். தோண்டல்; `தங்கண்முன் இடக்குங்கை` (தி.12 பெரிய. கண்ணப்ப. 183). இடந்து - இடம் படச்செய்து. மண்ணைத் தோண்டி; பெயர்த்து. மால் - அன்பு. `மாலுங்காட்டி வழிகாட்டி வாராவுலக நெறி ஏறக் கோலங்காட்டி ஆண்டான்` (தி.8 திருவாசகம். 643). உற்ற - மிக்க. தே - சிவபிரான். `தேவு - `சிவமாந்தன்மைப் பெருவாழ்வு` (சித்தியார் கடவுள் வாழ்த்து, சிவ ஞானமாமுனிவர் உரை). தேவழிபாடு - சிவபூசை. பாலன் - மார்க்கண்டேய முனிவர். மிசை - மேல். பாசம் - கயிறு. மறிந்த சிந்தைக்காலன் - மடங்கிய சிந்தனையுடைய எமன். மறிதல்:- (திருவடியால் உதைபட்டு ஊக்கம் ஓழிந்து) மடங்குதல், அறிதற்கு அரியான் கழல் அடியே காலன் அறிந்தான்:- மாலும் அயனும் கீழிடந்தும் மேலுயர்ந்தும் அடியும் முடியும் அறிதற்கரியவனான சிவ பெருமானது திருவடியால் உதைபட்ட முகத்தால், காலன் அதை அறிந்துய்ந்தான். (தி:-4 ப.100 பா.2, ப.107பா.9, ப.98 பா.2) அக் காலனுக்குக் காட்சியளித்தது `அயன் திருமாற் கரிய சிவம்`. அவனை வீட்ட எடுத்தும் அவன் காணக் கிடைத்தது, நாரணனும் நான்முகனும் தேட எடுத்ததும், அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலத்து நட்டம் ஆட எடுத்ததும் ஆகிய திருப்பாதம். அத் திருவடியே என்றும் எங்கும் எவ்வுயிர்க்கும் துணை. அத் திருவடி வாழ்க. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் நான்காம் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது.
சிற்பி