திருநெல்வாயில் அரத்துறை


பண் :

பாடல் எண் : 1

கடவு ளைக்கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை யரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது கடவுளும் , பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த , அருட்டிருமேனியுடையவனும் , ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும் , அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே .

குறிப்புரை :

கடவுள் - ஆறு அத்துவாக்களையும் கடந்தவன் . எழுநஞ்சு - இறந்தகால வினைத்தொகை . நஞ்சுண்ட உடலுளானை - ஆலகாலம் உண்டும் நஞ்சால் அழியாத உடலோடு கூடியவனை . ஒப்பாரி - ஒப்பு ,` மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரியாங் கண்டதில் ` ( குறள் 1071) . மற்றாரும் தன்னொப்பார் இல்லாதவன் என்றது . எம் அடலுளான் - எம்முடைய வலியன் . சுடர் உளான் - சிவாக்கினியில் விளங்கி நிற்போன் ; ஞாயிறு , நிலவு , தீ என்னும் முச் சுடர்களில் தெறுகதிரும் , தண்கதிரும் அடுதல் சுடுதல் விளக்கம் முதலிய சத்தியுமாய் இருப்போன் எனினும் அமையும் . கண்டீர் முன்னிலைப் பன்மை அசைச்சொல் ; கண்டாய் என்னும் முன்னிலை ஒருமை அசைச்சொல் போல . ` அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே ` எனப் பின்னும் அருளிச் செய்துள்ளார் . இத்திருப்பதிகம் அரசமுடி மன்னனுக்கே உரித்தாதல் போல வணக்கம் சிவபிரானுக்கே உரியது என்பது உணர்த்துகின்றது . அதனை , ஏனையோர்க்குச் செய்யும்போதும் , ஏனையர் தமக்குச் செய்யும் போதும் , அது , சிவபிரானுக்கு ஆகும் எனப் புத்திபண்ணுவர் அறிவுடையோர் .

பண் :

பாடல் எண் : 2

கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரும் அறிகிலா
அரும்பொப் பானை யரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது , கரும்பும் , கரும்பினிற் கட்டியும் ஒப்பானும் , விரும்பிய பொருளை ஒப்பானும் , தேவரும் அறியா அரும்பு ஒப்பானவனும் , அரத்துறைத் தலத்தை விரும்பிய வண்டு போல்வானும் ஆகிய பெருமானையே .

குறிப்புரை :

சாதகர்க்குக் கரும்பில் உள்ள சாற்றைப்போல அவர்தம் சாதனங்களில் மறைந்து நின்று அவர் சாதித்தவழி அன்பினில் விளைந்த ஆரமுதாய்த் தோன்றலின் கரும்பொப்பானை எனவும் , மெய்யன்பர்களாகிய சீவன்முத்தர்க்கு அவர் தம் அயரா அன்பே இன்பாய் யாண்டும் வெளிப்பட்டு நின்றே அருளுதலினால் கரும்பினிற் கட்டி ( சருக்கரைக் கட்டி ) எனவும் , யாரேயாயினும் யான் எனது என்னும் செருக்கு அறாத வழி அவர்க்கு அவன் திருவருள் தோன்றாது ஆதலின் விண்ணோரும் அறிகிலா எனவும் , ஆயினும் அச் செருக்கு நீங்கும் வகை சிவதன்மம் , சிவயோகம் , சிவஞானம் என்னும் சாதனங்களைச் செய்து வருவார்க்கு அவர் தம் உள்ளத்தே உணர்வின்ப அன்பாய் , முளைத்துத் தோன்றி விரிதலின் அரும்பு ஒப்பானை எனவும் , அங்ஙனம் அரும்பும் அன்பினர் உள்ளக்கமலங்களை முதல்வன் தன் அருட்கதிர்களால் அறியாமைச் சுருள் நீக்கி மலர்வித்துச் ` சீவனுக்குள்ளே சிவமணம்பூத்தது ` என்றபடி வெளிப்படுத்தலின் சுரும்பொப்பானை எனவும் அருளிச்செய்தார் சுவாமிகள் . திருவரத் துறையை முதல்வன் விரும்பியது தன்னை உயிர்கள் அவ்விடத்து அணுக்கமாகக் கண்டு தொழுது உய்தற் பொருட்டு . விரும்பு ஒப்பானை என்றது ஒருவர்க்குத் தாம் விரும்பிய பொருளினும் மேலானது ( அந் நிலைக் கண் ) இல்லாதவாறுபோல எஞ்ஞான்றும் எல்லார்க்கும் தானே தலையாய பேறாய் நிற்போன் என்றபடி .` அருளிற் பெரிய தகிலத்தில் ; வேண்டும் பொருளிற்றலையிலது போல் ` என்னும் திருவருட் பயன் காண்க . ` வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் ` எனத் தோத்திரத்தும் , ` செய்வோர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போற்செய்வன் ` எனச் சாத்திரத்தும் ஓதுதலின் . விரும்பு ஒப்பானை என்றதற்கு உயிர்களின் விருப்பத்தை ஒத்துப் பயன்விளைப்பானை என உரைப்பினும் அமையும் .

பண் :

பாடல் எண் : 3

ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரும் அறிகிலா
ஆறொப் பானை யரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம்தொழுவது ஏறு ஒப்பானும் , எல்லா உயிர்க்கும் இறைவனாகச் சிறந்து நிற்பானும் , தேவரும் அறியாநெறி ஒப்பானும் , அரத்துறைத் தலத்தை மேவிய உறுபொருளாவானுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

ஏறு ஒப்பானை என்றது பீடு ( பெருமை ) உடைமை பற்றி . இறைவேறு ஒப்பான் - எல்லா உயிர்கட்கும் தனியிறைவனாக இருப்பவன் . ஆறு - நெறி ; தன்னை அடைந்தாரைத் தூய்மைசெய்து இன்புறுத்துதல் பற்றியும் , உவகை ஊட்டுதல் பற்றியும் . ஆற்றை ( நதியை ) ஒப்பவன் என உரைப்பினும் அமையும் . தேவர் அறிகிலா என்பது முதல்வனுக்கு அடை ; ஆற்றிற்கு அன்று . ஊறு - உறுவது ; தான் என்றும் உளன் ஆயினும் அறியாமை நீங்கப்பெற்ற பின்னரே உயிர்கள் தன்னை உணர்தலின் , அவ்வுணர்வுக்குப் பின்வந்துற்ற பொருள் போல் வான் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 4

பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை யிளமதி சூடிய
அரப்பொப் பானை யரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது திருவரத்துறையை விரும்பி எழுந்தருளியவனும் பிறை சூடியவனுமாகிய பகல் ஒளியின் பரப்பையும் , இருளில் நன்மைபுரியும் வளர்மதியின் வளர்ச்சியினையும் , குறும்பையும் , அன்புகாரணமாக உண்டாகும் பாலின் சுரத்தலையும் ஒக்கும் முதல்வனையே , பிறரை அன்று .

குறிப்புரை :

பகலது பரப்பு ஒப்பானை என்க . பகல் - பகலின் கண்ணதாகிய பேரொளி . ஞாயிற்றின் ஒளியைப்போலப் பேருணர்வாய் யாங்கணும் நிறைந்தோன் என்றபடி . இரப்பு - இரத்தலால் வரும் வளர்ச்சி அல்லது ஆக்கம் ; அஃது ஒருங்கே நிகழாது முறையாய் நிகழும் . இருள்நல் நிலாவின் வளர்ச்சி ( இரப்பு ) ஒப்பானை என்க . உயிர்களது அறிவின்கண் உள்ள இருளைப் படிமுறையான் அகற்றிச் சிவஞானத்தை மேல்ஓங்கி வளரச்செய்பவன் என்றபடி . ` பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ` என்னும் ( தி .8) திருவாசகத்தின் கருத்தும் இது . பாரித்தல் - வளர்த்தல் ; ` பண்பின்மை பாரிக்கும் நோய் ` என்னும் திருக்குறள் (851) காண்க . அரப்பு - அரம்பு - குறும்பு . ( விளையாட்டு ) அரப்பு ஒப்பானை - தான் செய்யும் செயல்களை விளையாட்டுப்போல எளிதில் செய்வோனை . அரும்பு எனினுமாம் . சுரப்பு ஒப்பானை - சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சாத்திய மந்திரங்களால் வழிபடும் யோகியர்க்குக் கறந்தபோது வெளிப்படும் பால் போல வெளிப்பட்டு அருள்பவனை ; மெய்யன்பால் வழிபடும் சிவஞானிகளுக்குத் தலையீற்றுப் பசு கன்றை நினைந்த போது பாலைச் சுரக்குமாறு போல , அவர் வேண்டும் போதெல்லாம் வெளிப் பட்டருள்வன் - எனச் சாத்திரம் ஓதுமாறு அவரவர் கருத்து வகைபற்றித் தாழ்த்தும் விரைந்தும் வெளிப்படும் வகையைக் குறிப்பித்தபடி .

பண் :

பாடல் எண் : 5

நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை யரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது நெய்யும் , நெய்யிற் சுடர் போல் விளங்கும் மெய்யும் , பெருவியப்பும் போல்வானும் , தேவரும் அறியாதவனும் அரத்துறை யென்னுந் தலத்தை விரும்பிய ஒழுக்கமாவானுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

நெய் ஒத்தல் - பாலில் நெய்போல் மறைய நின்று உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுகவாங்கிக் கடைய முன்நிற்றல் , நெய்யூற்றி ஏற்றும் விளக்கில் உண்டாகும் சுடருருவம் போல்வதோர் வடிவத்தை உடையவன் . ஐ - வியப்பு ; ` ஐ வியப்பாகும் ` ( தொல் - உரி . 89 ) கை - ஒழுக்கம் ; கைஒப்பானை என்றது அறமே வடிவாகியோன் . கை ஒத்தல் - ஒழுக்கத்தோடு ஒற்றுமைப்பட்டு நிற்றல் .

பண் :

பாடல் எண் : 6

நெதியொப் பானை நெதியிற் கிழவனை
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொப் பானை யரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது நியதி ஆவானும் , நியதியின் தலைவனும் , விதியாவானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் , விச்சுவாதிளும் ஆகிய அரத்துறையென்னுந் தலத்தை மேவி உயிர்களுக்குக் கதியாயிருப்பானையே .

குறிப்புரை :

நெதி - நியதி என்றதன் திரிபு . அது பொருள்கள் காரியப்படும் நிலையில் காணப்படும் மாறுதலில்லாத ஒழுங்குமுறை ; இதனை வடநூலார் ருதம் என்பர் . நிதி என்ற பாடமும் உண்டு . நெதியின் கிழவன் - இவ்வொழுங்கை உலகத்திற்கு அமைத்து நடாத்தும் தலைவன் என்றபடி . விதி - செய்வினைப்பயன் செய்தவனையே சென்றடைதற் கேதுவாகிய ஊழ் . இதனை மேலை நாட்டார் அற ஆற்றல் (Moral Force) என்பர் . அதி - உயிர்களின் உணர்வைக் கடந்தவர் . ` உலகினை இறந்து நின்றது அவனுரு ` - ( சித்தி - சுபக்கம் . சூத் .1:49.) ` விசுவாதிகோ ருத்ரோ மஹர்ஷி :` என்பது உபநிடதம் . கதி - நெறி . உயிர்களுக்கு நெறிகளை வகுத்தவர் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 7

புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொப் பானை யரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது புனலும் , பொருந்தாதார்க்கு மின்னலும் . அனலும் போல்வானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் அரத்துறைத் தலத்துக் கனல் போன்றவனுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

புனல் ஒப்பான் - தண்ணீர் எப்பொருளையும் வளர்த்தல் போல , உயிர்தோறும் நின்று அவற்றின் அறிவை வளர்த்து வருவோன் ; ` மருவிய உயிரும் வளர்ப்போன் காண்க ` என்பது தி .8 திருவாசகம் . பொருந்தலர் தம்மை மினல் ஒப்பானை - பகைவர்க்கு இடிபோன்றவனை ; உருபு மயக்கம் . மின் என்பது இங்கு அதனோடுடன் நிகழும் இடியை உணர்த்திற்று . ` செறுநர்த் தேய்க்கும் செல்லுறழ் தடக்கை ` என்பது தி .11 திருமுருகாற்றுப்படை . அனல் - சுழன்று எரியும் தீ . இஃது இறைவன் திருமேனிக்கு உவமையாயிற்று . கனல் - மூளாத் தீ ; உயிர்தோறும் கரந்து நின்று அவற்றின் அறியாமையைத் தேய்த்து ஓங்கிவளரும் பேருணர் வாய் நிற்றல்பற்றி முதல்வனுக்கு இஃது உவமையாயிற்று . ` மூளாத் தீப் போல் உள்ளே கனன்று ` ( சுந்தரர் ) ( தி .7. ப .95. பா .1) எனும் ஆட்சி காண்க . கன்னல் எனினும் அமையும் ; இன்பப் பொருளாய் அநுபவப்படுபவன் என்பது இதன் கருத்து .

பண் :

பாடல் எண் : 8

பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொப் பானை யரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது , பொன்னும் , பொன்னின் சுடர் போன்ற மின்னலும் , அன்னையும் ஒப்பானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் , அரத்துறைத் தலத்து எழுந்தருளியிருந்து தனக்குத் தானே ஒப்பானவனுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

பொன் ஒப்பானை - ` பொன்னார் மேனியனே ` ` பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி ` ` நமோ ஹிரண்ய பாகவே ஹிரண்யவர்ணாய ஹிரண்ய ரூபாய ` என்னும் உரைகள் காண்க . அன்னை ஒப்பான் என்பது அன்னொப்பான் எனவிகாரப் பட்டு . நின்றது . தன் ஒப்பான் - தனக்குப் பிறர் ஒப்பாவதின்றித் தானே ஒப்பாக உள்ளவன் . ` நின்னாவார் பிறரின்றி நீயே யானாய் ` என்று பின்னும் அருளிச்செய்வர் .

பண் :

பாடல் எண் : 9

காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும ரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம்தொழுவது , காழித்தலத்துக் கடவுளும் , பெருமையை உடைய விடையூரும் நித்தத் திருமேனி உள்ளவரும் , பிறரால் வல்லோரும் என்று கூறப்படுவோராகிய திருமால் பிரமனுக்கும் , ஒடுங்கும் தானமாக உள்ளவருமாகிய திருஅரத்துறை அடிகளையே .

குறிப்புரை :

` காழியான் , விடையூரும் மெய்வாழியான் , ஆழியான் பிரமற்கும் ஊழியான் என்னும் மூன்று தொடர்களும் சிவபிரான் என்றுமுள்ளவன் என்னும் மறைகளின் துணிபை வலியுறுத்துவன . காழி - இறைவனுக்கு அருணிலைத் தானமாக அமைந்து பன்னிரண்டு ஊழிகளில் அழியாது நிலைபெற்றுப் பன்னிரு பெயர் எய்திய பதி . விடை - அறவிடை ; அஃது ஊழிக்காலத்துத்தான் அழியாதிருத்தற் பொருட்டு முதல்வனைச் சார்ந்து அவன்றன் ஆணையால் அவனைத் தாங்கும் ஊர்தியாகி நிலைபேறு உடையதாயிற்று . திருமாலையும் பிரமனையும் காப்புக் கடவுளும் படைப்புக் கடவுளுமாக உடைமை பற்றி ஊழியைக் கடக்க வல்லோரும் ஆவார் என்பார் . மெய்வாழியான் - நிலைபேறுள்ள அநாதி முத்த சித்து உருவினன் . என்றின்னவர் - என்ற இவர் என்னும் பொருள்பட நின்றது .

பண் :

பாடல் எண் : 10

கலையொப் பானைக் கற்றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை யரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது கலையும் , கற்றார்க்கமுதும் , மலையும் போல்வானும் , மலையெடுக்கலுற்ற இராவணனை மணிமுடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும் , அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

கலையொப்பான் - கலிப்பது கலை ; கலித்தல் - நீக்குதல் , செலுத்துதல் ; மக்களது அறியாமையை நீக்கி , அவர் தம் அறிவை நல்லதன்கண் உய்ப்பது கலை . அதுபோல முதல்வன் உயிர்களின் அகவிருள் நீக்கி அவற்றின் அறிவைப் போகத்தினும் வீட்டினும் செலுத்துபவன் . ஓர் அமுது - ஒப்பற்ற அமுது ; கற்றாரால் தனக்கு உவமையில்லாதது எனத் துணியப்படும் அமுது . ஓர்த்து உணரப்படும் அமுது என வினைத்தொகையாக்கினும் அமையும் . மலையொப்பானை - உலகிற்கு அச்சாக , எல்லா வளங்களையும் தன்பாற் கொண்டு துளக்கமின்றி இருப்பது மலை . முதல்வனும் இத்தன்மையன் என்றபடி . நிலையொப்பானை - முதல்வன் கடல் போன்று அளக்கவாராத கடந்த நிலையினன் ஆயினும், அது நீந்தவல்லார்க்கு அலைத்து ஆடுதற்குக் கைவந்து நின்றாற்போலத் தானும் அன்பர்களுக்கு நிலைத்துநின்று இன்புறும்படி ஆனந்தத்தை மிகக்கொடுப்பவன் என்பது கருத்து ./n இத்திருப்பதிகம் முதல்வன் வணக்கத்திற்கு உரியன் என்னும் முதன்மைக் கருத்தைப் பொற்சரடுபோல் பாடல்தோறும் ஊடுருவப் பெற்று, பல்வேறு அரிய இனிய உவமைகளால் அவன்றன் குறைவிலா மங்கலக் குணங்களைக் கோவை செய்து ஞானத்தால் தொழுவார்க்குத் தரப்பட்ட மணிமாலையாகத் திகழ்தல் அறியத்தக்கது.
சிற்பி