திருஅண்ணாமலை


பண் :

பாடல் எண் : 1

வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

கந்தையுடை அணிந்தானும் , மதிசூடியும் , வானவர்க்கு உயர்ந்தானும் , திருவண்ணாமலை வடிவினனும் , விருப்பம் உடையானும் , இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் அட்டானும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .

குறிப்புரை :

நினைத்தால் வீடு எய்துவிப்பது அண்ணாமலை என்னும் திருத்தலம் . பிரம விட்டுணுக்களால் முடியும் அடியும் அணுக முடியாதபடி நிமிர்ந்தெழுந்த சோதிப்பிழம்பே மலையாக உருக் கொண்டு உள்ளது ஆதலின் , அத்திருவுரு அண்ணாமலை ( அணுக வொண்ணாத மலை ) என வழங்கி வருவது . இத் திருப்பதிகத்தில் பாடல் தோறும் திருஅண்ணாமலையனை மறந்துய்வனோ ( மறவேன் ) என்றருள்கின்றார் அப்பர் அடிகள் . திரிபுரம் எரித்த செய்தியும் பாடல் தோறும் வருகின்றது . வட்டு - சிறு உடை , அதை அணிந்தவன் , வட்டன் . வானவர் சிட்டன் - வானவரால் பெரியோன் என உணர்ந்து தொழப்படுவோன் . சிட்டன் - சிரேஷ்டன் , உயர்ச்சியுடையோன் . இட்டம் உடையோன் இட்டன் ; முதல்வன் உயிர்களுக்குச் சிவத்துவத்தை வழங்கும் விருப்பம் உடையான்ஆதல்பற்றிஇட்டன்எனப்பட்டான் ; இட்டம் - விருப்பம் . இகழ்ந்தார் - திரிபுரத்தசுரர்கள் ( கமலாக்கன் , தாரகாக்கன் , வித்யுன்மாலி என்னும் மூவர் ) இம்மூவரும் முன்னர்ச் சிவ வழிபாடு உடையராய் இருந்து பின் நாராயணன் நாரதர் என்போரால் புத்தமதம் அறிவுறுக்கப்பட்டுச் சிவவழிபாட்டை இகழ்ந்து கைவிட்டனர் . அவ் விகழ்ச்சியே அவர்தம் திரியும் வலிய முப்புரங்களை அழித்த தென்க . புரம் - கோட்டை , இக் காலத்துப் போர் விமானங்கள் பல வற்றைத் தாங்கிப் பறக்கும் பெருவிமானந் தாங்கிக் கப்பல் 1 போன்றது . ` தொழுவார்க்கே அருளுவன் சிவபெருமான் ` என்னும் உண்மையை விளக்குவது திருவண்ணாமலை வரலாறு . சிவ வழிபாடே ஒருவர்க்குப் பகையை வெல்லும் வலியைத் தருவது . அதனை இகழின் தம்வலி இழப்பர் என்னும் உண்மையை உணர்த்துவது திரிபுரம் எரித்த வரலாறு . அட்டன் - அட்டவன் , அடுதலைச் செய்தவன் . சுவாமிகள் ` மறந்து உய்வனோ ?` எனத் தம்மேல் வைத்துக் கூறினாரேனும் , ` யாரும் மறந்து உய்தல் இல்லை ; யாவரும் திருவண்ணாமலையனை மறவற்க ` என்பதே கருத்தாகக் கொள்க . ` ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே கண்டோம் என்றுந் தீபற ! ஒன்றும் பெருமிகை உந்தீபற ` ` உய்ய வல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு எய்யவல் லானுக்கே உந்தீபற ` என்பவற்றை ஒப்புநோக்குக .

பண் :

பாடல் எண் : 2

வான னைம்மதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

வானத்துள்ளவனும் , பிறைசூடிய பேராற்றல் உடையவனும் , தேனென இனிப்பவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும் , பன்றிக்கொம்பை அணிந்தவனும் , இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் எய்த விடையேறுடையவனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

வானன் - பரமஆகாசம் எனப்படும் சிவலோகத்துள்ளான் ; இதுவே உயிர்களின் உள்ளங்களில் சிற்றம்பலமாக உள்ளது . பொதுவாக ஆகாயத்தை வடிவாகக் கொண்டவன் எனினும் அமையும் . மைந்தன் - வலியன் . தேனன் - தேன் போலும் இனியன் . ஏனன் - ஏனத்தின் கோட்டை மார்பில் அணிந்தவன் . ஏனம் - திருமாலாகிய ஆதிவராகம் . ஆனன் - ஆனை ( விடையை ) ஊர்தியாக உடையவன் .

பண் :

பாடல் எண் : 3

மத்த னைம்மத யானையு ரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைம்முனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

ஊமத்தமலர் அணிந்தவனும் , யானைத் தோலை உரித்துப் போர்த்து எம் சித்தத்துறைபவனும் , திருஅண்ணாமலைத் தலத்துக்குடையவனும் , முத்தனும் , முனிந்தார் புரங்கள் மூன்றையும் எரியுண்ணச்செய்த அத்தனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

மத்தன் - ஊமத்த மலர் அணிந்தவன் . சித்தன் - சிந்தையை கோயிலாகக் கொண்டவன் . முத்தன் - அநாதி முத்தன் ; இயல்பாகவே பாசங்களின் நீங்கியோன் . ` வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் ` என்றபடி . முனிந்தார் - ஒட்டிவாழ வெறுத்த வராய திரிபுரத்தசுரர்கள் . அத்தன் - தந்தையாயிருப்பவன் . ` அத்தா வுனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ` என்றார் ( தி .7. ப .1. பா .1) சுந்தரரும் .

பண் :

பாடல் எண் : 4

காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

காற்றாகியுள்ளவனும் , கலக்குகின்ற வினைகள் விட்டு நீங்கத் தோற்றம்புரிபவனும் , திருவண்ணாமலைத் தலத்துக் குடையவனும் , உலகினை நன்றுந் தீதுமாய்க் கூறுசெய்து வகுத்தவனும் , கொடியவர் புரங்கள் மூன்றையும் எய்த வீரநெறி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

காற்றன் - ( அட்ட மூர்த்தங்களில் காற்றும் ஒன்றாதலின் ) காற்று வடிவானவன் . ` காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி ` என்றார் திருத்தாண்டகத்தும் . கலக்கும் - உயிர்களைத் துன்புறுத்தும் . தேற்றன் - தெளிவிப்பவன் . பழவினைகளைப் பாறுவித்துத் தன்னடி யார்களைத் தெளிவிப்பவன் என்க . கூற்றன் - கூறுசெய்பவன் . ஆற்றன் - சமயநெறிகளாயிருப்பவன் . நீதிநெறியே வடிவாக உடையன் எனலுமாம் . ( ஆறு - நெறி )

பண் :

பாடல் எண் : 5

மின்ன னைவினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

மின் ஒளியுருவாயவனும் , வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்ட அழகியவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும் , என்னை உடையவனும் , இகழ்ந்தவர் புரங்கள் மூன்றையும் எய்த அத்தன்மையனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

மின்னன் - மின்ஒளி போன்ற ஒளிவடிவினன் . தென்னன் - அழகியவன் ; தென்னாடுடையவன் எனினும் அமையும் . என்னனை - என்னை உடையவனை . அன்னனை - அத்தன்மை யோனை , திரிபுரங்களை எரிக்குந் தன்மையோன் . அத்தன்மையாவது வேதத்திற் கூறப்படும் தெய்வம் எல்லாம் கருவிகளாகவே அமையத் தான் ஒருவனே வினைமுதல் ( கருத்தா ) ஆதலும் , கருவிகளால் அன்றிச் சங்கற்ப ஆற்றலால் செயல் நிகழ்த்தலும் சார்ந்தாரைக் காத்தலும் முதலியவற்றால் விளங்கும் இறைமைக் குணம் .

பண் :

பாடல் எண் : 6

மன்ற னைம்மதி யாதவன் வேள்விமேல்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்
கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

ஐந்துவகை மன்றங்களில் ( சபைகளில் ) எழுந்தருளியிருப்பவனும் , மதியாத தக்கன் வேள்வியின்மேல் உருத்துச் சென்றவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும் , புலனைந்தும் வென்ற வென்றி உடையவனும் , சினந்தார் புரங்கள் மூன்றையும் கொன்றவனும் ஆகிய பெருமானைக் கொடியவனாகிய அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

மன்றன் - அம்பலத்தே நடமாடுபவன் . மதியாதவன் - தன்னை முதல்வன் என்று மதிக்க அறியாத தக்கன் . வேள்வி மேல் சென்றன் - அவன் இயற்றிய வேள்வியை அழிக்கச்சென்றவன் . வென்றன் - வென்றவன் ; புலனைந்தும் என்னும் அதற்குரிய செயப்படு பொருள் அவாய்நிலையான் பெறப்பட்டது . ( நேரிழையைக் கலந்து நின்றே புலனைந்தும் வென்றானை என்பர் தி .6 திருத்தாண்டகத்து ) கொன்றன் - கொன்றவன் , அழித்தவன் .

பண் :

பாடல் எண் : 7

வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

வீரச்செயல்களைப் புரிந்தவனும் , விடம் உண்டவனும் , விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும் , திருவண்ணா மலை வடிவினனும் , மருத நிலத்தை இடங்கொண்டவனும் , உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

வீரன் - வீரத்திற்கு உறைவிடமானவன் . இறைவன் வீரச்செயல்களை எட்டாகத் தொகுத்து வழங்கும் வழக்குக் காண்க . உண்டனை - உண்டவனை . விண்ணவர் தீரன் - விண்ணவரை அச்சம் தீர்த்து ஆட்கொள்ளும் திண்ணியன் . ஊரன் - மாயோன் முதலிய தெய்வங்கள் போல ஒவ்வொரு நிலத்திற்கே உரிய கருப்பொருள் ஆதலின்றி எந்நிலத்துக்கும் உரிமை உடைமையின் , மருத நிலத்தை இடங்கொண்டோன் ; திருநின்றியூர் , திருப்புன்கூர் முதலாக ஊர் என முடியும் தலங்களில் உறைவோன் எனினும் அமையும் . ஆரன் - திரு ஆத்திமாலையை அணிந்தவன் ; ஆர் - ஆத்தி . ` நாறும் பூவும் நம்பற் காம் ; நாறாப் பூவும் நம்பற்காம் ` என்ப ஆகலின் அடியார்க்கு எளிதில் கிடைக்கும் ஊமத்தை , ஆத்தி முதலிய ஏற்றுச் சூடி அவர்க்கு அருள் செய்பவன் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 8

கருவி னைக்கடல் வாய்விட முண்டவெம்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

கருவாயிருந்து காப்பவனும் , கடலெழு நஞ்சு உண்ட எம்திருவாகியவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , உருவத்திருமேனி உடையவனும் உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , அருவத்திருமேனி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

கருவினை - உலகெலாமாகி வேறாய் உடனுமாய் நிற்போன் ஆகலின் , உயிர்கள் தோன்றுங்கால் அவ்வக் கருவின் கண் அவ்வவ்வுயிர்களை அவ்வவற்றின் வினைக்கீடாக விழச்செய்து அவற்றின் உடம்பையும் கரணங்களையும் ஆண்டைக்குப் பொருந்தும் நுகர்ச்சிகளையும் தந்து வளர்ப்போன் என முதல்வனைக் குறிப்பித் தருளினார் . இனி உலக முதற்காரணமாகிய மாயைக்குத்தான் தாரகமாய் நின்று தனது சத்திசங்கற்பத்தால் உலகைத் தோற்றுவித்தல்பற்றி முதல்வனைக் கரு என்றார் எனினும் அமையும் . ` ஓங்காரத்தொருவன் காண் . உலகுக் கெல்லாம் வித்தவன்காண் ` ( தி . 6. ப . 48. பா .4.) என சுவாமிகள் பின் அருளிச்செய்தல் காண்க .` தத் ஆத்மாநம் அகுருத ` ( அதுதன்னைத் தானே ஆக்கியது ) என்னும் தைத்திரீய உரைக்கும் இதுவே கருத்து என்க . கடல்வாய்விடம் - கடலாகிய இடத்து எழுந்த ஆலகாலம் ; வாய் - இடம் . ` திருநீலகண்டம் ` தன்னை எண்ணுவார்க்குத் துயர் அனைத்தும் நீக்கி வீடு பயப்பிப்பதாதலின் , அத்திரு அடையாளமுள்ள முதல்வன் திருவுரு மெய்யுணர்ந்தோரால் விரும்பப்படுவது என்னும் கருத்தால் ` கடல்வாய்விடம் உண்ட எம் திருவினை ` என்றார் . ` ஓம் நீல கண்டாய நம ` என்னும் எட்டெழுத்தை நவில்வார் மீளப்பிறவார் எனக் காஞ்சிப் புராணம் ( சிவபுண்ணியப்படலம் ) கூறுகிறது . திருநீல கண்டத் திருப்பதிகம் ஒருவரைப் பிறந்த பிறவியிற் பேணி முதல்வன் கழல் அடையச்செய்யும் என அதன் திருக்கடைக் காப்புக் குறித்தல் காண்க . அருவம் , அருவுருவம் , உருவம் என்னும் நிலைகளைக் கடந்த முதல்வன் உயிர்கள் தன்னை உணர்ந்து உய்யக் கருதி அத்திரு மேனிகளை மேற்கொண்டான் ஆகலின் , உருவினை எனவும் அரு வினை எனவும் அருளிச்செய்தார் . உரு - மகேச்சுரத் திருவுருவங்கள் ; அரு - யோகியர் பிரணவம் , பிராசாதம் முதலிய மந்திரங்களின் துணையால் அகத்தே காணும் ஒளியுரு . அருவுரு - ஐம்பெரு மனுக்களாலும் , திருவைந்தெழுத்தாலும் அமையும் மந்திரத் திருமேனி .

பண் :

பாடல் எண் : 9

அருத்த னையர வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

பொருள் வடிவாயுள்ளவனும் , ஐந்தலையுடைய நாகத்தைத் திருந்த அணிந்தவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , தலைவனானவனும் , தீக்குணங்களைக் கடியாதார் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , உயிர்களுக்கு வினைப்பயனைப் பிறழாது நுகர்விப் போனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

அருத்தன் - நாற்பேறுகளின் இரண்டாவது பேறாகிய பொருளாயிருப்பவன் . சொற்பொருளாயிருப்பவன் எனினும் மெய்ப் பொருள் எனப் பேசப்படுபவன் எனினும் பொருந்தும் . ` கற்றநூற் கருத்தும்நீ அருத்தம் இன்பம் என்றிவை முற்றும்நீ ` ( தி .3. ப .52. பா .3). ` பொன்னானாய் மணியானாய் போகமானாய் பூமிமேல் புகழ்தக்க பொருளே `. ( அப்பர் ) என்னும் திருமுறை உரைகள் காண்க . அரவைந் தலை நாகம் - முன் பின்னாகத்தொக்க இருபெயரொட்டு . ஐந்தலை நாகமாகிய அரவு என்க . திருத்தன் - திருந்த அணிந்தவன் . கருத்தன் - தலைவன் , தன்வயம் உடையோன் . ` சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர் வின்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது சுதந்திரமின்றி நிற்றலான் , இனிச் சங்காரமே முதல் ` என்றது ( சிவஞான போதம் . 1. 3.) கடியார் - கடிதல் நீக்குதல் , தீமையைக் கடிந்து ஒழுகாத அசுரர் என்றபடி . அருத்தன் - அருத்துவோன் , நுகர்விப்போன் ( வினைப்பயனை என்பது அவாய் நிலையான் வந்தது ). புரமூன்றெய்த அருத்தன் என அடுத்து நின்றமையின் . எய்தது வினைப்பயன் நுகர்வித்தற்கு எனக்கொள்க . சுதன்மன் , சுபுத்தி , சுசீலன் என்போரைக் கொண்டது அந்நியதிபற்றி .

பண் :

பாடல் எண் : 10

அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

இராவணன் அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றிய திருத்தமானவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , இரக்கம் கொண்டு என் உடலில் உற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலுங் கூடுமே? .

குறிப்புரை :

அரக்கன் - இராவணன் . அலற - வாய்விட்டு அரற்றும்படி . திருத்தன் - மாறுபடாதவன் , செய்யன் , திருந்தும்படி செய்தவன் எனினும் பொருந்தும் ; என்னை ? செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றான் அரக்கன் ஆகலின் . இரக்கமாய் - இரங்கியருளி . உடலுறு நோய் ஒன்றேயாயினும் அதனால் பெற்ற வருத்தம் பல வகைப் பட்டமையின் நோய்களை என்றார் . துரக்கன் - துரத்தியவன் . உடலுறு நோய்களைத் - துரக்கனை என்பது பாடமாயின் , உடலில் உற்ற சூலைநோயைக் களைந்த உரக்கனை எனப் பிரிக்க . உரக்கன் - வலிமையுள்ளோன் ; தன்நிலை திரியாதவன் . என் உடல் உறு நோயை இரக்கமாய்க் களைந்த என்றமையின் நோய் பிறநெறி சார்ந்தமை பற்றி உற்றதென்பதும் , அதனைச் சிவபிரான் இரக்கம் ( கருணை ) காரணமாகவே அதன் மூலத்தோடு களைந்தருளினான் என்பதும் பெறப்படுதல் காண்க . ` மந்திரம் நமச்சிவாய ஆக நீறணியப் பெற்றால் - வெந்தறும் வினையும்நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே ` என்ற இடத்தும் நோய் அதன் காரணமாகிய வினையுடன் ஒருங்கே வெந்து அறும் என்றமை காண்க .
சிற்பி