திருஅண்ணாமலை


பண் :

பாடல் எண் : 1

பட்டி ஏறுகந் தேறிப் பலவி ( ல் ) லம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்தியண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.

பொழிப்புரை :

அடங்காத ஏற்றினை அடக்கி விடையாக் கொண்டு உகந்து ஏறிப் பல மனைகள் தோறும் விருப்பத்தோடு சென்று இரந்து உண்டு அலைந்து சுழலும் , அட்டமூர்த்தியின் திருவுருவாகிய திருஅண்ணாமலையைக் கைகளால் தொழ வினைகள் கெட்டு ஒழியும் ; என்றும் கேடு இல்லை ; காண்பீராக .

குறிப்புரை :

அண்ணாமலையை நினைந்து தொழ உண்டாம் பயன் கூறுகிறது இத்திருப்பதிகம் . பட்டி - அலைந்து திரிந்து கள்ளமேய்ச்சல் மேய்கின்ற மாட்டைப் பட்டிமாடு என்பர் . ஊர் சுற்றித் தன் விருப்பம் போல் திரிவாரையும் பட்டி என்பர் . ` அகப் பட்டியாவார் ` ( குறள் ) ` நோதக்க செய்யும் சிறுபட்டி ` ( கலித்தொகை . 51:1) திருமால் கண்ணனாய் ஆயர்பாடியில் சுற்றித் திரிந்து வெண்ணெய் திருடி உண்டவராதலால் பட்டி என்றார் . அறவிடை எனினும் , அறத்தின் திறம் உயிர்களால் உணர்தல் கூடாமையின் பட்டி என்றார் எனக்கொள்க . அவரே இடபமாய்த் தாங்குதலின் பட்டி ஏறு என்றார் . பலஇல்லம் - தாருகாவனத்திலிருந்த ரிஷிபத்தினியர் வீடுகள் . இட்டமாக - விருப்பத்துடனே . இரந்துண்டல் - பிச்சையேற்றுண்டல் . உழிதரும் - திரியும் . அட்ட மூர்த்தி - எட்டுப்பொருள்களை வடிவமாக உடையோன் . மூர்த்தி - வடிவு , அதனை உடையது மூர்த்தம் . ` இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எரியும் காற்றுமாகி அரு நிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாயமாய் அட்டமூர்த்தியாகி ` ( தி .6. ப .94. பா .1) அட்ட மூர்த்தங்களை உணர்க . திருமால் பிரமன் தேடுதற்கரிய சோதி வடிவாய் எழுந்தருளிய பெருமானாதலின் அட்டமூர்த்தங்களில் ஒன்றும் அத்தன்மையை நினைந்து கூறினார் . வினைகெட்டுப்போம் நமக்குக் கேடு இல்லை எனக் கூட்டுக . கேடு - துன்பம் . காண்மின் என்பது உறுதியுரை , நேரிற்காணுங்கள் என்னும் பொருள் தருதலின் .

பண் :

பாடல் எண் : 2

பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்குமண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.

பொழிப்புரை :

மனைகளிலிடும் பலிக்கெனப் பெற்றம் ஏறும் பெருமான் , தனக்குச் சுற்றமாமெனும் உமையம்மையோடும் வருவார் . துயர்தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைதொழுவார் . நல்ல தவத்தோடு ஞானநெறியில் பிறழாது இருக்கப்பெறுவர் .

குறிப்புரை :

பெய்பலிக்குப் பெற்றம் ஏறுவர் என்று புராணங்களால் கூறப்படும் பெருமான் தொல்புகழாளொடும் அதிட்டித்து ( இடமாகக் கொண்டு ) நின்று அற்றம் தீர்க்கும் அண்ணாமலை என்க . தீர்க்கும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது . முதல்வனுக்கு மூர்த்தமும் இடமே ஆகலின் . சுற்றமாமிகுதல் - வாழ்க்கைத்துணை எனும்படி மேம்படுதல் . தொல்புகழ் - ` சர்வம் சக்திமயம் ஜகத் ` ` அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை எல்லாம் ` ( சித்தி . சுபக்கம் . 69 ) என உணர்த்தப்படும் பொருள் சேர்புகழ் . ( தி .1. ப .10. பா .11) ` உமையாளொடும் உடனாகிய ஒருவன் - பெண்ணாகிய பெருமான் மலை ` என அருளிச்செய்ததும் காண்க . அற்றம் - துன்பம் . கைதொழ - நற்றவத்தொடு ஞானத் திருப்பரே - என்றது கையால் தொழுவோர் சீவன்முத்தராயின் சரியை கிரியை யோகங்களோடு கூடிய ஞானநெறிக்கண் பிறழாது நிற்கப் பெறுவர் எனவும் , ஏனையராயின் , நற்றவத்தினால் ஞானத்தைத் தலைப்படுவர் எனவும் இரட்டுறமொழிய நின்றது .

பண் :

பாடல் எண் : 3

பல்லி லோடுகை யேந்திப் பலவி ( ல் ) லம்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்குமண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை யடையுமே.

பொழிப்புரை :

பல்லில்லாத மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல மனைகளுக்கும் விரைந்து சென்று பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை அவர்தம் உள்ளங்களோடு கவர்வாராகிய சிவபிரானுடைய அடியார் அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ , நல்லவாயின யாவும் நம்மைத் தாமே வந்தடையும் .

குறிப்புரை :

பல்லில்லோடு - பற்கள் உதிர்ந்த மண்டையோடு . ஒல்லை - விரைவு . உணங்கல் - உலரவைத்த பண்டங்களாகிய உணவுப் பொருள்கள் . கவர்வார் - முனிவர்தம் மனைவியரை உணவு வேண்டும் எனக்கேட்டு , அவர்தம் உள்ளங்களையும் அணிகலன்களையும் அவரறியாமே கவர்ந்தவர் . அல்லல் - துன்பம் . நல்லவாயின - நன்மைகள் எல்லாம் . நம்மை அடையும் - நாம் முயல்வதின்றித் தாமே வந்து அடையும் ; முதல்வனைத் தொழும் நம்மைத் தொழுதல் காரணமாக .

பண் :

பாடல் எண் : 4

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.

பொழிப்புரை :

பாடிச்சென்று பலிக்கென்று நின்ற பெருமான் ஓடிப் போய்விட்டனராதலால் செய்வது இனி என்னை ? ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ நம் மேலை ( பழைய ) வினைகள் ஓடிப்போகும் . (` ஓடிப் போயினர் செய்வதொன்றென் கொலோ ` எனப் பேசநின்ற பெருமானது திருவண்ணாமலை - என இசையெச்சம் கொண்டு முடிக்க )

குறிப்புரை :

பாடிச்சென்று - பிச்சையேற்றற்குப் பாடல்களைப் பாடிக் கொண்டு சென்று . பலிக்கு - பிச்சைக்கு . ஓடிப்போயினர் - பிச்சைக்கு என்று வந்தவர் ( உள்ளங்களைக் கவர்ந்துகொண்டு ) ஓடிப்போயினார் . முதல் இரண்டடிகள் தாருகாவனத்துப் பெண்டிர் கூற்று . இவ்வாறு கூறும்படி ஆடல்புரிந்த பெருமானது திருவண்ணாமலையை ஆடியும் பாடியும் கையால் தொழ என இயைக்க .

பண் :

பாடல் எண் : 5

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.

பொழிப்புரை :

தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக ; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட் கொள்வர் ; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும் .

குறிப்புரை :

தேடிச்சென்று - அவன் இருக்குமிடமாகிய அண்ணா மலையைத் தேடிப்போய் . திருந்தடி - மாறுதலின்றிச் செம்பொருளாக உள்ள திருவடிகள் . ஏத்துமின் - புகழ்ந்து போற்றுங்கள் . நாடிவந்து - நம்மைத் தேடிவந்து . நம்மையும் - உம்மை இழிவு சிறப்பு .

பண் :

பாடல் எண் : 6

கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்தியண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன் காகுமே.

பொழிப்புரை :

கரும்பினிடைக் கட்டி ஒக்குமாறு துணித்தும் வெட்டியும் வீணை வகைகளோடு பாடும் விகிர்தனாகிய அட்ட மூர்த்தியும் திருவண்ணாமலை மேவிய நட்டமாடும் பெருமானுமாகிய இறைவனை நண்ணினால் நன்றே ஆகும் .

குறிப்புரை :

கரும்பினிடைக் கட்டியை ஒக்கும் விகிர்தன் எனக் கூட்டினும் அமையும் . துணிவெட்டி - வீணையை மீட்டும்போது ஓசையைத் துணித்தும் நரம்பை வெட்டியும் . வீணைகள் பாடும் - வீணை வாச்சிய வகைகளோடு தானும் பாடுகின்ற . விகிர்தன் - மாறுபாடு உடையவன் ; போக , யோக , வேகம் எனப்படும் ஒன்றொடு ஒன்று ஒவ்வா வேடம் தான் ஒருவனே தரித்தவன் . நட்டமாடியை நண்ண நன்கு ஆகும் என்க . நன்கு - நன்மை .

பண் :

பாடல் எண் : 7

கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னனண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

பொழிப்புரை :

சேர்த்துக் கட்டிய கொண்டையரும் , வேடம் முன் கொண்டவரும் தாளத்திற்கேற்ப நட்டங்கள் ஆடுபவரும் ஆணிப் பொன் போன்றவரும் ஆகிய பரமனார் திருவண்ணாமலையைக் கைகளால் தொழுதால் நம்மிடம் வருதற்குப் பேணி நின்ற பெரு வினைகள் போகும் .

குறிப்புரை :

கோணிக்கொண்டை - சேர்த்துக்கட்டிய சடைக் கொண்டை . வேடம் முன்கொண்டவர் - முன்னர்ப் பலபல வடிவங்களோடு விளங்கியவர் . பாணி நட்டங்கள் - தாளம் இயைந்த பரதவேறுபாடுகள் . ஆணிப்பொன் - மாற்றுரைத்துப் பார்ப்பதற்கு மாதிரியாக வைத்திருக்கும் சுத்தமான பொன் , இங்கே பெருமானை ஆணிப்பொன் என்றார் . ` ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற தாணுவை ` ( தி .5 ப .2. பா .4) என்றார் முன்னும் . பேணிநின்ற - நம்மைக் குறித்து வருகின்ற . முதல் இரண்டடிகளுக்கு நாணத்தால் வளைந்து முன்னர்ப் பெண்டிர் வேடத்தைக் கொண்டவராகிய திருமால் உடன்வரப் பாணியோடு கூடிய நட்டங்கள் ஆடும் பரமனார் என உரைப்பினும் அமையும் . கொண்டையர் வேடம் - மோகினி நிலை . திருமால் மோகினியாக வரத்தாம் பிட்சாடனராகச் சென்றார் என்பது புராணம் .

பண் :

பாடல் எண் : 8

கண்டந் தான்கறுத் தான்கால னாருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்குமண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.

பொழிப்புரை :

திருநீலகண்டரும் , கூற்றுவன் உயிரைப் பண்டு கால் கொண்டு பாய்ந்த பரமனாரும் ஆகிய பெருமானுக்குரிய அண்டமுற ஓங்கி நிமிர்ந்த திருவண்ணாமலையைக் கைகளாற்றொழுதால் நம் மேலை ( பழைய ) வினைகள் நம்மைவிட்டு நீங்கும் .

குறிப்புரை :

காலனார் - எனப் பிரிப்பினும் அமையும் . பன்மை விகுதி இழிவு குறித்து நின்றது .

பண் :

பாடல் எண் : 9

முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றனண் ணாமலை
சிந்தி யாவெழு வார்வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே.

பொழிப்புரை :

முந்துறச்சென்று , மாலைச்செவ்வானன்ன மேனி உடையானுடைய திருவண்ணாமலையை மூன்று பொழுதும் வணங்குவீர்களாக ; அத்திருவண்ணாமலையைச் சிந்தித்தபடி துயிலெழுவார் வினைகளை , நறுமணமுடைய மலர்களைச் சூடும் தலைவனாகிய பெருமான் தீர்ப்பான் .

குறிப்புரை :

முந்திச்சென்று - முற்படச்சென்று . விரைந்து இன்றே போய் என்றபடி . முப்போதும் - மூன்றுகாலத்தும் . அந்தி வாயொளி யான் - அந்திக் காலத்தே தோன்றும் செவ்வொளி வண்ணத்தான் . ` செவ்வானன்னமேனி ` ( கடவுள் வாழ்த்து ) சிந்தியா - மனத்தால் சிந்தியா நின்று . எழுவார் - துயிலெழுவார் . கந்தமாமலர் - மணமுள்ள சிறந்த மலர் . கருத்தன் - எல்லாவற்றிற்கும் கருத்தாய் விளங்குபவன் .

பண் :

பாடல் எண் : 10

மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையு நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பினண் ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.

பொழிப்புரை :

பிரமனும் திருமாலும் காண்கிலாதவனும் , எங்கும் நிறைகின்ற தன்மையுள் நின்று அருள் செய்தவனுமாகிய பெருமான் உறையும் மாண்பினை உடைய திருவண்ணாமலையைக் கைகளாற் றொழுதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் கெடும் .

குறிப்புரை :

மறையினான் - நான்குவேதங்களைஓதும் தொழில் பூண்ட பிரமன் . நிறையும் நீர்மை - எங்கும் நிறைந்த தன்மை ` இங்குற்றேனென்று லிங்கத்தே தோன்றினான் ` என்பர் பின்னும் . பறையும் - கெடும் .
சிற்பி