திருஆரூர்


பண் :

பாடல் எண் : 1

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பரா ரூரரே.

பொழிப்புரை :

கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாச்சியங்களைக் கொண்டு இசைத்து மருங்கிலே நின்று பிளந்தவாயை உடைய பல பூதங்கள் ஆடாநிற்ப ஆடுங்கூத்தராய் அக்குமணிகளையும் அரவையும் பூண்பவர் திருவாரூர்ப் பெருமானாவர் .

குறிப்புரை :

கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி முதலியன இறைவனது திருக்கூத்திற்கு முழங்கும் பக்கவாச்சியங்கள் . பகுவாயன - திறந்தவாயை உடையனவாகிய . ஒக்க ஆடல் உகந்து - ஒருசேர அவைகளும் தன்னோடு ஆடுதலை விரும்பி . உடன் - அவற்றோடு . கூத்தராய் - சங்காரதாண்டவராய் . அக்கு - சங்குமணி . ஆர்ப்பர் - கட்டுவர் .

பண் :

பாடல் எண் : 2

எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புக ழாரூ ரரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பந்தமும் , வீடுமாயிருக்கும் தேவதேவனாகிய திருவாரூர்ப் பெருமானுக்குரிய முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும் , சிரத்தினும் தங்குதற்கு எவ்வளவு பெருந்தவம் நீ செய்தனை ? ( திருவாரூர் , அரநெறியை உள்ளத்திற் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நற்றவத்தார்க்கு அன்றி எய்தொணாது என்றபடி ).

குறிப்புரை :

நெஞ்சமே ! எந்த மாதவம் செய்தனை - மனமே மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய் ! இது வியப்புமொழி . பந்தம் - உலக ஈடுபாடு . பந்தமும் வீடுமாயவன் என்றபடி . அந்தமில் புகழ் - முடிவில்லாத புகழ் . ஆரூர் அரநெறி என்பது ஆருர்த் திருக்கோயில்களில் பூங்கோயில் , அரநெறி , பரவை யுண்மண்டளி என்பவற்றுள் ஒன்று . சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் . சிந்தை - உள்மனம் . நிலையான நினைப்பு உண்டாக்கும் அடி மனம் .` அரநெறி சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்க எந்த மாதவம் செய்தனை ` என்றியைக்க .

பண் :

பாடல் எண் : 3

வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக்
கிண்டை மாலை புனைந்து மிராப்பகல்
தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க்
கண்ட மாளவும் வைப்பரா ரூரரே.

பொழிப்புரை :

வண்டுகள் அணுகப்பெறாது சூழ உலாவும் மலர்களைக்கொண்டு வளரும் சடைக்கு இண்டை மாலைகள் புனைந்தும் , இரவும் பகலும் தொண்டுகள் புரிந்தும் தொடர்ந்து விடாது வழிபடுவார்க்கு அண்டங்களை ஆளவும் கொடுக்கும் பெருமான் திருவாரூரர் ஆவர் . ஆளவும் என்னும் எச்ச உம்மையால் சிவஞானமாகிய முக்கியப் பயனைத் தருவதோடு எனக்கொள்க .

குறிப்புரை :

சரியைத்தொண்டு செய்வார்க்கு உளதாம் அவாந்தரப் பயனைக் கூறுகிறது இத்திருப்பாடல் . வண்டுலாமலர் - வைகறையில் வண்டுகள் தேனுண்ண வருவதன்முன்பே எடுத்த மலர் ஆதலின் ஆண்டு உள்ள தேனை நுகர்தற்கு வண்டுகள் உலாவுகின்றன என்றவாறு . வளர்சடை - வளர்கின்ற திருச்சடை . புனைந்தும் - தொடுத்தும் . இராப்பகல் - இரவும் பகலும் . தொடர்ந்துவிடாதவர்க்கு - இப்பணிகளை மேற்கொண்டு இடையே விடாது தொடர்ந்து பணிசெய்வார்க்கு . அண்டம் ஆளவும் வைப்பர் - உலகமுழுவதையும் ஒரு குடைக்கீழ் அரசாளும் உரிமையைத் தருவதும் செய்வர் . ` துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண்ணேறலாகும் ` என்றார் பிறாண்டும் .

பண் :

பாடல் எண் : 4

துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய்
என்பெ லாம்நெக் கிராப்பக லேத்திநின்
றின்ப ராய்நினைந் தென்று மிடையறா
அன்ப ராமவர்க் கன்பரா ரூரரே.

பொழிப்புரை :

துன்பங்கள் முற்றும் நீங்கி நலம் சான்றவராய் எலும்பெல்லாம் நெகிழ்ந்து இரவும் பகலும் வழிபட்டு நின்று இன்பமுடையோராய் நினைந்து என்றும் இடையறாத அன்பர்க்கு அன்பராய் இருப்பர் திருவாரூர்ப் பெருமான் . ( இவ்வியல்புடையார்க்கே முதல்வனும் , அன்பனாய் , அவரைத் தன் தமர்க்குள் வைக்கும் என்றபடி .)

குறிப்புரை :

இறைவன் அன்பர்க்கன்பராம் தன்மை கூறுகிறது இத் திருப்பாடல் . துன்பெலாம் அறநீங்கி - இன்பங்களினின்று நீங்கியது போலத் துன்பங்களினின்றும் முற்றிலும் விடுதலை பெற்று . துன்பங்களை இன்பங்களாகவோ , தமக்குத் தொடர்வில்லாதனவாகவோ கருதும் மனஇயல்பு பெற்று என்றபடி . அற - முற்றிலும் . சுபத்தராய் - நலஞ்சான்ற சிந்தையராய் , உவகையுள்ளவராய் என்றபடி . சுபம் - நலம் . இடையறா அன்பு , தைலதாரை போன்று இடையறவில்லாத அன்பு .

பண் :

பாடல் எண் : 5

முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்
முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கித னாரூ ரடைமினே.

பொழிப்புரை :

ஈமக்கிடையில் கிடத்துவதற்கு முன்பு , அடங்காத ஐந்து புலன்களைக் குற்றமறக்களைந்து முரண்பாடு கொண்ட அத்தக்கன் வேள்வியாகிய குறும்பை அடக்கியவனாகிய சிவபெருமான் உறையும் திருவாரூரை நீர் அடைந்து வழிபடுவீராக .

குறிப்புரை :

முருட்டு மெத்தை - முரட்டுத் தன்மைவாய்ந்த படுக்கை . இறந்தபின் கிடத்தும் ஈமப்படுக்கை . முன்கிடத்தா முனம் - எல்லோர் முன்னிலையிலும் கிடத்துவதற்கு முன்னரே . அரட்டர் ஐவர் - வலிய தீயவர்களாகிய ஐம்பொறிகள் . ஆசறுத்திட்டு - குற்றம் தீர்த்துஅவற்றால் விளையும் தீமைகளை மாற்றி நல்வழியில் செலுத்தி . முரட்டடித்த - முரட்டுத்தனத்தால் நடத்திய . அரட்டடக்கி - குறும்புகளை அடக்கியவன் . யாக்கை நிலையாது ஆகலின் , அஃது உள்ள போதே விரைந்து திருவாரூர் அடைந்து உய்க என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

எம்மை யாரிலை யானுமு ளேனலேன்
எம்மை யாரு மிதுசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்
கம்மை யாரைத்தந் தாராரூ ரையரே.

பொழிப்புரை :

எம்மைக்காத்தற்குரிய இருமுதுகுரவரும் இலர் ; யானும் ( இளம் பருவத்தினன் ஆகலின் ) தனித்து வாழும் மன உறுதி உள்ளேன் அல்லேன் ; எனது அன்னையை ஒத்த உடன்பிறந்தாரும் ( திலகவதியாரும் ) இதனைச் செய்ய ( எனக்குத் துணையாய் நின்றருள ) வல்லரே ! ( ஆயினும் அவர் இதுபோது உயிர்விடத் துணிதலின் ) தாயாய் உடனிருந்து உபகரிக்கவல்லார் ஆர் ? என்று இங்ஙனம் பன் முறை வாய்விட்டு அரற்றிய எளியேனுக்குத் திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானே ( ஐயரே ) வீட்டு நெறிக்கு உரிய என் உடன் தோன்றினாரை ( உயிர்தாங்கச் செய்து ) எனக்கு இருமுதுகுரவரும் , ஆசானும் , கேளும் , உறவுமாக வைத்தருளினார் . இப்பாட்டு நாவுக்கரசர் , முதல்வன் தமது தமக்கையாரை உம்பருலகணைய உறும் நிலை விலக்கி உயிர்தாங்கி மனைத்தவம் புரிந்திருக்க வைத்தது தாம் பின்னர் மெய்யுணர்வு பெற்றுத் திருத் தொண்டின் நெறி பேணி உய்தற்பொருட்டே என நினைந்து பாடியது .

குறிப்புரை :

முதல் அடியில் எம் ஐயர் என்பது நீண்டு நின்றது ; ஐயர் - தாய் தந்தையர் என்னும் இரு முதுகுரவர் . இரண்டாம் அடியில் எம்மையார் என்றதில் என்அம்மை , எம்மை என ஆகி ஆர்பெற்றது . இங்கு நாவுக்கரசருக்குத் தமக்கையாராகிய திலகவதியாரைக் குறிக்கும் . இது - என்றது தாம் இன்றியமையாததாக உணர்ந்த நற்சார்பாய் உடனிருத்தலை , ஆயினும் இதுபோது அவர் உயிர்விடத் துணிதலின் என்றது இசையெச்சம் . அம்மையார் எனக்கு ? என்றதில் அம்மை - அம்மைக்கு வாயிலாவார் அல்லது தாய்போல்வார் எனப் பொருள்படும் . அம் ஐ எனப் பிரித்து அழகிய ஆசான் என உரைப்பினும் அமையும் . அம்மை - வீடு . இப் பாட்டுப் பெரியபுராணத்துத் திலகவதியார் உயிர்தாங்கும் செய்தி கூறும் பகுதிக்கு அகச்சான்று ஆதல் காண்க . ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் திருவிருத்தத்தில் உடன் தோன்றினராய் என்றதும் திலகவதியாரைக் குறித்தே எனக்கொள்க .

பண் :

பாடல் எண் : 7

தண்ட வாளியைத் தக்கன்றன் வேள்வியைச்
செண்ட தாடிய தேவர கண்டனைக்
கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க்
கொண்டி யாயின வாறென்றன் கோதையே.

பொழிப்புரை :

என்றன் கோதையாகிய இவள் தண்டத்தை ( ஒறுப்பு முறை ) க் கையாள்பவனும் , தக்கன் செய்த பெருவேள்வியைச் செண்டு ஏந்தி ஆடுதல்போல் எளிதாக அட்ட தேவர்கள் முதல்வனும் ஆகிய ஆரூர் வீதிவிடங்கனை ( அவன் உலாப்போதரும்போது ) பன்முறை கண்டு அவனைக் காதலித்து அன்பே வடிவாய் நம் வயப்பட்டு ஒழுகாத கொண்டி ( பட்டி ) ஆயினவாறு என்னே !

குறிப்புரை :

இது தன் மகள் முதல்வனைக் கண்டு காதலித்துப் பின் அவனைக் காணுந்தோறும் காதல் கைமிக்குப் பிச்சியாயினமையை வியந்து செவிலி கூறியது . தண்டம் - அறத்தின் மூவகைகளில் மூன்றாவதாகிய ஒறுப்பு . இதனை ஆண்டவன் தண்ட ஆளி . தக்கன் வேள்வியைத் தகர்த்தது ஒப்ப நாடிச் செய்த ஒறுப்புமுறையே என்றற்கு முதல்வனை இப் பெயரால் குறித்தார் . அகண்டன் - கண்டிக்கப்படாதவன் , தேசகாலப் பொருள்களால் எல்லைசெய்யப்படாதவன் என்பது கருத்து . முதல்வன் தேசம் காலம் பொருள் அனைத்தையும் தன் பேரருளில் அடங்கக் கொண்டு நிறைநீர்மை உடையன் ஆகலின் அகண்டன் ; அஃது ஈண்டு முதல்வன் , தலைவன் என்னும் துணையாய் நின்றது , ஆதலின் தேவர் அகண்டன் என்னும் தொடர் தேவர்க்கு முதல்வன் என விரியும் . கொண்டி - ( காதலால் ) கொள்ளப்பட்டவள் , பிச்சி .

பண் :

பாடல் எண் : 8

இவள்ந மைப்பல பேசத் தொடங்கினாள்
அவண மன்றெனி லாரூ ரரனெனும்
பவனி வீதி விடங்கனைக் கண்டிவள்
தவனி யாயின வாறென்றன் தையலே.

பொழிப்புரை :

இவள்நம்பால் ஒருநெறிப்படாதபலபேச்சுக்களைப் பேசத்தொடங்கிவிட்டாள் . இவள் உள்ள அவ்விடத்தேம் அல்லேம் எனின் ( அதாவது , இவள் தனித்துள்ளபோது ) ஆரூர் அரன் என மொழிவாள் . என்றன் தையலாகிய இவள் உலாப்போந்த வீதிவிடங்கப் பெருமானைக் கண்டமையால் காம நோயுடையாள் ஆனவாறு இது !

குறிப்புரை :

செவிலி தலைவியின் காதலொழுக்கத்தை நற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்தியது இது . அவணம் அன்றெனின் : அவண் - அவ்விடம் ; அவணம் - அவ்விடத்தேம் ; எனவே , யாம் இவள் உள்ள அவ்விடத்தேம் ஆதல் இல்லை எனில் என்றபடி . ஆரூர் அரன் எனும் என்பதில் எனும் - செய்யும் என்னும் முற்று . தவனி - காமத்தீயால் தபிக்கப்பட்டவள் . 7, 8 ஆவது திருப்பாடல்கள் முதல்வனைக் கண்டுணரும் ஆன்மாக்கள் அவனால் வசீகரிக்கப்பெற்று உலகியல் தழுவாது அருள்வயப்பட்டுச் சீவன் முத்தராம் தன்மையை அகப்பொருள் மேல் வைத்துக் குறிப்பவை .

பண் :

பாடல் எண் : 9

நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
காரொத் தமிடற் றர்கனல் வாயரா
ஆரத் தருறை யும்மணி யாரூரைத்
தூரத் தேதொழு வார்வினை தூளியே.

பொழிப்புரை :

கங்கைச் சடையரும் , திருநீலகண்டரும் , அரவாகிய ஆரம் உடையவருமாகிய பெருமான் உறையும் அணி ஆரூர்த் தலத்தைத் தூரத்தே கண்டு தொழுவார் வினைகள் தூளியாகிக் கெடும் .

குறிப்புரை :

இத்திருப்பாடல் : ஆரூர் நினைத்துத்தொழ முத்தியளிப்பது என்கிறது . நீரை - கங்கையை ; நிமலன் - குற்றமற்றவன் ; காரொத்த மிடற்றர் - மேகத்தை ஒத்த நீலகண்டத்தர் ; கனல்வாய்அரா - கனல் போன்ற நஞ்சை வாயின் கண்ணே உடைய பாம்பு . ஆரம் - மாலை . அணி - அழகு . தூரத்தேதொழுவார் - திருவாரூரை நினைந்து தூரத்திலிருந்தே வணங்குவார் . வினை - பழவினை நிகழ்வினைகள் . தூளி - தூசி , பொடி .

பண் :

பாடல் எண் : 10

உள்ள மேயொ ருறுதி யுரைப்பன்நான்
வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வய லாரூ ரமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.

பொழிப்புரை :

உள்ளமே ! நான் ஓர் உறுதி உரைப்பன் ; கேள் ; கங்கைவெள்ளத்தைத் தாங்கும் விரித்த சடை உடைய வேதியனும் சேறு , நீர் பொருந்திய வயல்களை உடைய ஆரூர் அமர்ந்த எம் வள்ளலுமாகிய பெருமான் சேவடிகளை வாழ்த்து ; வணங்கு .

குறிப்புரை :

\\\\\\\'ஒன்றுறுதி ` - என்பதும் பாடம் ; அதனை உறுதி ஒன்று என மாறுக . வெள்ளந்தாங்கும் சடை - உலகத்தை அழிக்கும் பெரு வெள்ளமாய் விரைந்துவந்த கங்கையைத்தடுத்த சடை . வேதியன் - வேதங்களை அருளிச்செய்தவன் . அள்ளல் - சேறு . சேறும் நீருமாய்ச் சிறந்த வயல்கள் சூழ்ந்த ஆரூர் என்றபடி . வள்ளல் - தியாகேசன் . சேவடி - செம்மையான திருவடிகள் ; சிவந்த எனினும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 11

விண்ட மாமலர் மேலுறை வானொடும்
கொண்டல் வண்ணனுங் கூடி யறிகிலா
அண்ட வாணன்த னாரூ ரடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே.

பொழிப்புரை :

விரிந்த மலர்மேலுறை பிரமனும் , மேக வண்ணனாகிய திருமாலும் கூடி அறியகில்லாத திருவாரூர் அண்டவாணனது திருவடிகளைத் தொழப் பழைய வல்வினைகள் நில்லாமற் கெடும் .

குறிப்புரை :

கொண்டல் - மேகம் . ஆரூர் அண்டவாணன் தன் அடிதொழ எனக்கொண்டு கூட்டுக .

பண் :

பாடல் எண் : 12

மையு லாவிய கண்டத்த னண்டத்தன்
கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐய னாரூ ரடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாம்அல்லல் ஒன்றிலை காண்மினே.

பொழிப்புரை :

கரிய கண்டம் உடையானும் , அண்டத்திலுள்ளானும் , கையிற் சூலம் உடையானும் , கண்ணுதலானும் ஆகிய திருவாரூர்த்தலத்தின்கண் ஐயன் அடிதொழும் எல்லாரும் உய்தி பெறலாம் ; துன்பம் ஒன்றும் அவர்க்கில்லை ; காண்பீராக .

குறிப்புரை :

ஆரூர் இறைவன் அடிதொழுவார்க்கு அல்லல் இல்லை என்றறிவிக்கிறது. மை - விஷத்தின் கரியநிறம். அண்டத்தன்-பாரொடு விண் உலகமாய்ப் பரந்து விரிந்தவன். உலாவிய - விளங்கிய. ஐயன் - அழகியன் அல்லது தலைவன். அடி தொழுவார்க்கெலாம் அல்லல் ஒன்றில்லை. அவர்கள் உய்யலாம் என்றியைக்க. காண்மின் அஃது உண்மை என்பதைக் காணுங்கள்.
சிற்பி