திருமறைக்காடு


பண் :

பாடல் எண் : 1

பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

பொழிப்புரை :

பண்ணையொத்த மொழியாளாகிய உமை அம்மையை ஒருபங்கிற் கொண்டவரே ! மண்ணுலகத்தவர் வலம் புரியும் மறைக்காட்டுறையும் பெருமானே ! அடியேன் என்கண்களால் உம்மைக் காணுமாறு , வேதங்களால் அடைக்கப் பெற்ற இக்கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள்செய்வீராக .

குறிப்புரை :

கண்களால் உமது திருக்காட்சியைக் காணத் திருக்கதவைத் திறந்தருள்வீராக என வேண்டியது இத் திருப்பதிகம் . பண்ணினேர் மொழியாள் - திருமறைக்காட்டு அம்பிகையின் திருப்பெயர் . யாழைப் பழித்த மொழியம்மை என்றும் வீணா விதூஷிணி என்றும் இன்றும் வழங்குகிறது . மொழியாளாகிய உமை என்க . பங்கர் - ஒருபாகத்தே உடையவர் . மண்ணினார் - நிலவுலகிலே உள்ள மக்கள் . திண்ணமாக - உறுதியாக .

பண் :

பாடல் எண் : 2

ஈண்டு செஞ்சடை யாகத்து ளீசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.

பொழிப்புரை :

ஆகத்தில் ஈண்டிய செஞ்சடைகொண்ட இறைவரே ! தொகுதியாய கருமுகிலின் நிறத்தையும் தளிரின் ஒளியையும் உடைய மணிகண்டரே . அடியேனை ஆண்டுகொண்ட நீரே அருள் செய்வீராக ; நீண்ட இப்பெருங்கதவின் வலியினை நீக்குவீராக .

குறிப்புரை :

ஈண்டு - திரண்டு கூடிய , அதாவது , சேர்த்துக் கட்டிய . மூண்ட கார்முகில் - திரண்ட கரிய மேகம் . முறி - தளிர் . இறைவன் கண்டம் கறுப்பு நிறமும் ஒளியும் உடையது என்க . நீண்ட மரக்கதவின்வலி - நெடுநாளாகத் திறக்கப்படாத கதவின் வலிமையை .

பண் :

பாடல் எண் : 3

அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே.

பொழிப்புரை :

அட்டமூர்த்தியாகிய எந்தையே ! தீயவர் புரங்களைச் சுட்ட உயர்ந்த தேவரே ! பட்டமாகக் கட்டிய சடைமுடியுள்ள பரமரே ! செவ்வையாக இக்கதவினைத் திறப்பித் தருள்வீராக .

குறிப்புரை :

அட்டமூர்த்தி - ஐம்பூதமும் ஞாயிறும் மதியும் உயிருமாகிய எண்வகை வடிவு . மூர்த்தியது என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி . அப்பர் - தந்தையானவர் . துட்டர் - துஷ்டராகிய திரிபுரத்தசுரர் . வான்புரம் - வானிலேபறக்கும் கோட்டை , சுட்ட - எரித்து அழித்த . சுவண்டர் - திருவெண்ணீறணிந்தவர் . பட்டம் கட்டிய சென்னி - சடை முடியில் பிறை முதலியன தங்கியிருத்தல்தான் ஏகநாயகன் என்னும் பட்டத்தைக் காட்டுகின்றது என்பது கருத்து . பரமர் - மேலானவர் . சட்ட - செவ்வையாக யாம் உம்மை நேரே காணும்படி .

பண் :

பாடல் எண் : 4

அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடைவிருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே.

பொழிப்புரை :

அருமை உடைய நான்மறை அருளிய நாவுடை யவரே ! பெரிய புரம் எரியுண்ணுமாறு சுட்ட உயர்ந்த தேவரே ! விரிந்த கோவண ஆடை கொண்ட மிகப்பழையவரே ! பெரிய இக்கதவினைப் பிரித்தருள்வீராக .

குறிப்புரை :

அரிய - பொருள் உணர்தற்கு அரிய ( நான்மறை ). விரிகொள் - விரித்தலைக்கொண்ட . விருத்தர் - பழையோன் .

பண் :

பாடல் எண் : 5

மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.

பொழிப்புரை :

திருமலையைப்போல் அழியாதிருக்கும் மறைக் காட்டுறையும் பெருமானே ! கலைகள் வந்திறைஞ்சிக் கழல் ஏத்தப் படுபவரே ! விலைமதிப்பற்ற செம்மணிவண்ணத் திருமேனியரே ! தொலைவில்லாத இக்கதவுகளைத் திறந்தருள்வீராக .

குறிப்புரை :

மலையின் நீடு இருக்கும் மறைக்காடு - திருக்கயிலை ஊழிகளில் அழியாது நிற்றல்போலத் தானும் அழியாது நீடுதலாக இருக்கும் மறைக்காடு . இதுபோன்று ஊழிக்காலத்தும் ஒடுக்கம் கூறப்படாத தலங்கள் பிரளயஜித் எனப்படும் . இரண்டாம் அடி ; கலைகளின் ஆசிரியர்களும் அவற்றைக் கற்றோரும் வந்திறைஞ்சும் திருவடிகளையுடையவர் ; அவற்றால் உரைக்கப்படும் ஏத்தாகிய பொருள்சேர் புகழை உடையர் . ( கலைகளின் தெய்வம் வந்திறைஞ்சி ஏத்தும் எனினும் பொருந்தும் - இக்காரணம் பற்றியே மறைக்காடு எனப்பட்டது ) தொலைவிலா - நீக்கப்படாத , திறக்கப்படாத . துணைநீக்கும் - இணைந்துள்ள நிலையை நீக்கும் , திறப்பியும் என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீரடி கேளுமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.

பொழிப்புரை :

ஊர்ப்புறத்து நீரின் மருங்கெலாம் தாழை பூப்பதும் , தண்பொழில் சூழ்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே ! யார்க்குங் காண்டல் அரியீர் ! அடிகளே ! உமைநோக்கிக் காணும் பொருட்டு இக்கதவைத் திறந்தருள்வீராக !

குறிப்புரை :

புறணியருகெலாம் பூக்கும் தாழையும் தண்ணிதாக ஆக்கும் பொழிலும் . சூழ் - சூழ்ந்த . அடிகேள் - தவமுனிவரே ; உமை - உம்மை .

பண் :

பாடல் எண் : 7

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி யணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.

பொழிப்புரை :

வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசும் மேலானவரே ! முடிவில்லாதவரே ! மறைக்காட்டுறையும் பெருமானே ! எம் தந்தையே ! அடியார்கள் நேர்வாயிலில் வந்து இறைஞ்சிடும் பொருட்டு இப் பெருங்கதவம் பிணிக்கப்பட்டிருத்தலை நீக்கித் திறந்தருள்வீராக .

குறிப்புரை :

விகிர்தர் - மாறுபட்ட வேடங்களை உடையவர் . அந்தமில்லி - கேடில்லாதவர் . அணி - அழகிய . எந்தை - என் தந்தையே . பிணி - கதவுகள் பிணிக்கப் பட்டிருத்தல் .

பண் :

பாடல் எண் : 8

ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.

பொழிப்புரை :

கங்கையாற்றைச் சடையிற் சூடும் மறைக் காட்டுறையும் பெருமானே ! ஒரு கூற்றை உமைக்கு ஈந்த இளையவரே ! விடையேறிய எம்பெருமானே ! இந்த மாறுபாடில்லாத கதவின் வலியினை நீக்கித் திறந்தருள்வீராக .

குறிப்புரை :

ஆறு - கங்கை . அணி - அழகு . கூறு - உடம்பில் ஒரு பாதி . மாதுஉமை - பெண்ணாகிய உமையம்மைக்கு . குழகர் - இளையர் . மாறிலா - ஒப்பில்லாத , முன் மறைகள் அடைத்த நிலையினின்று மாறுதலின்றி உள்ள எனினும் ஆம் .

பண் :

பாடல் எண் : 9

சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி யணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.

பொழிப்புரை :

வெண்பொடிச் சுண்ணம் பூசும் உயர்ந்த தேவரே ! அழகுசெய்து ஏற்றின்கண் ஏறி உயர்ந்து தோன்றும் பரமரே ! அண்ணலே ! ஆதியே ! அணிமறைக் காட்டுறையும் பெருமானே ! திண்ணமாக இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக .

குறிப்புரை :

சுண்ணமும் வெண்பொடியும் எனினும் அமையும் ; கலவைச்சாந்தும் திருநீறும் என்பது பொருள் . பண்ணி - அலங்கரித்து . அண்ணல் - தலைமையானவன் . ஆதி - முதன்மையானவன் . திண்ணம் உறுதி .

பண் :

பாடல் எண் : 10

விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

பொழிப்புரை :

விண்ணுலகத்தவர் விரும்பி எதிர்கொண்டு இன்புறுமாறு மண்ணுலகத்தவர் சென்று வணங்கியெழும் மறைக் காட்டுறையும் பெருமானே ! கண்ணினால் உமைக் காணுவதற்காகக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக .

குறிப்புரை :

தேவர்கள் முன்னர்வந்து வழிபாடு முடித்துள்ளாராகலின் , பின் வழிபடவரும் மண்ணவர்களை எதிர் கொள்ளுகின்றார்கள் என்க . இவ்வியல்பினையுடையது திரு மறைக்காடு என்க .

பண் :

பாடல் எண் : 11

அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.

பொழிப்புரை :

பெருகும் புன்னைகள் சூழ்ந்த மறைக்காட்டுறையும் பெருமானே ! இராவணனை விரலால் அடர்த்திட்ட நீர் எளியேன் பால் இரக்கம் கொஞ்சமும் இல்லாதவராயுள்ளீர் ! எம்பெருமானீரே ! விரைந்து , இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக .

குறிப்புரை :

பத்துத் திருப்பாடல்கள் பாடியும் கதவு திறவாமையைக் கண்ட அப்பர் பெருமான் இரக்கமில்லையோ ! எனக்கூறிய இப் பாடலின் உரை கேட்டு நாவரசரின் பாமாலையினிசையில் ஈடுபட்டிருந்த இறைவன் விரைந்து கதவைத் திறந்தனன் . அரக்கன் - இராவணன் . அடர்த்திட்ட - நெருக்கியருள் செய்த . இரக்கமொன்றிலீர் - இன்று இரக்கம் சிறிதும் என்பால் இலராயினீர் . சுரக்கும் பெருகிய , தேனைச் சுரக்கும் எனினும் அமையும் . சரக்க - விரைவாக .
சிற்பி