திருமீயச்சூர்


பண் :

பாடல் எண் : 1

தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.

பொழிப்புரை :

இந்நாள்வரை தோன்றிய கோயில்களும் , இனித் தோன்றும் கோயில்களும் , வேற்றுக்கோயில்களும் பலவுளவேனும் , கூற்றுவனைத்தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும் ; காண்பீராக .

குறிப்புரை :

தோற்றுங்கோயில் - பிறவினை தன்வினைப் பொருள் பட நின்றது , அன்றிப் பலரால் இனித் தோற்றப்படும் கோயில்கள் எனினும் அமையும் . தோன்றியகோயில் - இதுவரை தோன்றியுள்ள சிவாலயங்கள் . வேற்றுக்கோயில்கள் - சிவாலயங்களல்லாத ஏனைய தெய்வங்களின் கோயில்கள் . பலவுள - இவை உலகில் பல உள்ளன . மீயச்சூர் இளங்கோயில் - மீயச்சூரில் பாலத்தாபனம் செய்துள்ள பாலாலயம் . பாய்ந்த - இயமனைச் சினந்து காலால் உதைத்த . குளிர் புன்சடை - கங்கை தங்கியதால் குளிர்ந்த மெல்லிய சடையுடைய . ஏற்றம் - உயர்வானது . பாலத்தாபனமாதல் பற்றிக் குறைவாக எண்ணுதல் வேண்டா என்றபடி . இதனால் வேற்றுக்கோயில்களில் அவரவர் விரும்பும் வடிவில் அருள்பவனும் சிவபிரானே என்றதும் ஆயிற்று .

பண் :

பாடல் எண் : 2

வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள்
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

திருவடிக்கு வழிபாடு செய்தலையே உள்ளத் தடைக்கும் தொண்டர்கள் தம்நெஞ்சைக் கட்டுப்படுத்திப் பாவிக்க நின்றவனும் , எம்மை அடிமையாக உடையானும் விளங்கியருளும் திருமீயச்சூர் இளங்கோயில் வழிபடுவார் சிந்தனையைத் திருத்தவல்லது ஆகும் .

குறிப்புரை :

`கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் ` ( தி .12 பெரியபுராணம் . திருக்கூட்டம் .8) என்றமையின் முதலடிக்கு இவ்வாறு உரைக்கப்பட்டது . வந்தனையைச் சிவபிரானுக்கே செலுத்தும் எனினும் அமையும் . அடித்தொண்டர் அடிமைத் திறம் பேணும் தொண்டர் . பாவிக்க நின்றவன் , எந்தமையுடையாரது திருமீயச்சூர் இளங்கோயில் சிந்தனை திருத்தும் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 3

பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும் , ஆனை அஞ்சுமாறு உரித்தவனும் , அனல் ஆடு வானும் , திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு ; அந்நினைப்பால் வாழ்வாய் .

குறிப்புரை :

பஞ்சமந்திரம் -` ஈசானஸ் ஸர்வவித்யாநாம் ` எனத் தொடங்கும் ஐந்து மந்திரங்கள் . ஓதும் பரமன் - அம்மந்திரங்களால் ஓதப்படும் முழுமுதல் . ஆனை அஞ்ச உரித்து என மொழி மாற்றிப் பொருளுரைக்க . அனலாடுவார் - தீயேந்தி ஆடுபவர் . நெஞ்சமே ! நினைந்திரு . வாழி முன்னிலையசை . இதனால் மேற்குறித்த மந்திரங்கள் வேதங்களின் தெளிவாயுள்ளவை என்றதும் அவற்றால் இறைவனை வழிபடுக என்றதும் ஆயிற்று .

பண் :

பாடல் எண் : 4

நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டுகந் தான்திரு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

மணம் வீசும் மல்லிகை , கூவிளம் , செண்பகம் முதலிய மலர்களை வேறுவேறாக விரித்த சடையிடை ஆற்றோடு கொண்டுகந்தான் திருமீயச்சூரின் இளங்கோயிலில் விடைமேற் கொண்டு உகந்த பெருமானே ! ( அடியார் சாத்தும் மல்லிகை முதலியவற்றை முடியில் ஏற்று மகிழ்ந்து அருள்புரிவன் என்பது கருத்து )

குறிப்புரை :

திருமீயச்சூர் இளங்கோயில் ஏறுகொண்டுகந்த பெருமான் அடியார் புனையும் மல்லிகை முதலியவற்றை விரித்த சடையிடை ( ஆற்றோடு உடன் அமையக் ) கொண்டுகந்தான் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 5

வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர்
செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே.

பொழிப்புரை :

வெம்மையான வண்ணத்தையுடைய நாகம் அஞ்சும்படியாக எப்பொருளையும் கவ்விக்கொள்ளும் வண்ணத்தையுடைய கனல் விரித்தாடுவார் , திருமீயச்சூர் இளங்கோயில் செவ் வண்ணந்திகழ் மேனியுள்ள பிரானது வண்ணங்கள் எப்படிப்பட்டவை !

குறிப்புரை :

` வண்ணம் ` நான்கனுள் மூன்றாவது நிறம் எனப் பொருள்படும் ; ஏனையவை இயல்பு என்னும் பொருளில் வந்துள்ளன . சினக்கும் இயல்புடைய நாகம் வெருவும்படி கவ்வும் இயல்புள்ள ( அடுத்து நின்ற பொருள்களைப்பற்றி அழிக்கும் இயல்பு ) கனலை வீசி ஆடுவர் ; அவர் இயல்பு வியக்கத் தக்கதாகவுள்ளது என்பது கருத்து . பகைப் பொருள்களை ஒருங்குடன் கொண்டு அவ்வவை தத்தம் எல்லை கடவாதபடி காக்கும் இயல்பு அவன்றன் இயல்பு என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அக லாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இளங்கோயிலில் ஒளிவிடும் மேகலை அணிந்த உமையம்மையோடு இது போன்ற நாளினும் அகலாது உள்ள பெருமான் பின்னிக்கொண்டுள்ள சடைமேல் பிறையுடன் சூடியது , பொன்போன்ற கொன்றைக்கண்ணியும் சூடியார் ( கொடுக்கும் ) மலர்களால் அணிபெறத் தொகுக்கப்பெற்ற மாலையும் ஆம் .

குறிப்புரை :

பொன்னங்கொன்றையும் - பொன்னிறமுள்ள கொன்றை மலரும் . பூவணிமாலையும் - பிற பூக்களால் அலங்கரித்துத் தொடுக்கப்பட்ட அழகிய மாலையும் . பின்னும் - நெருங்கிய . சூடிற்று - சூடியது . மின்னுமேகலையாள் - ஒளிவிடும் மேகலாபரணம் அணிந்தவள் . இன்னநாள் - இதுபோன்ற நாளிலும் கலாகருடணம் செய்துள்ள நாளிலும் , அகலார் - நீங்காது எழுந்தருளியிருப்பவர் . அகலார் சூடிற்று கொன்றையும் மாலையும் என இயைத்து வினை முடிவு செய்க . கொன்றைமாலை - திருவடையாளமாலை . ஓங்கார வாச்சியன் , திருவைந்தெழுத்தின் பொருள் என்பதைக் காட்டுவது . ஏனையது அடியார் தொடுப்பது . சூடிற்று - தொழில்மேல் நின்றது .

பண் :

பாடல் எண் : 7

படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் நீற்றினன்
விடைகொ ளூர்தியி னான்திரு மீயச்சூர்
இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

பூதங்களைப் படையாகக் கொண்டவனும் , கொன்றைமாலையனும் , சடையில் வெள்ளம் உடையவனும் , சாந்த வெண்ணீற்றனும் , விடையூர்தியானும் , திருமீயச்சூர் இளங்கோயிலின் கண் செவ்வி தெரிந்து ஏத்துமாறு நின்ற இறைவனேயாவன் .

குறிப்புரை :

படைகொள்பூதத்தன் - பூதப்படையினன் . பைங்கொன்றை - புதிய கொன்றைமலர் . சாந்தவெண்ணீற்றினன் - வெண்ணீற்றைச் சாந்தமாகக் கொண்டவன் . ஏனையவும் இவ்வாறே வெள்ளங்கொள் சடையன் , விடையூர்திகொள்வான் எனச்சொன்னிலைமாற்றிப் பொருள் கொள்ளப்படும் . இடை - சமயம் , செவ்வி . காலம் நன்கு உணர்ந்து திருக்கோயிலுக்குச் சேறல்வேண்டும் என்றபடி .

பண் :

பாடல் எண் : 8

ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

சடையினில் ஓர் ஆறு கொண்ட இயல்பினரும் , வேறுவேறுகொண்ட வேடத்தராமியல்பினரும் . கூறு கொண்டுகந்த அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலின்கண் ஏறுகொண்டு உகந்தாரேயாவர் .

குறிப்புரை :

ஓர் ஆறுகொண்ட சடையினர் தாமும் - ஒப்பற்ற கங்கையைச் சூடிய சடையினை உடையவராகிய பெருமான் . வேறு கொண்டதோர் வேடத்தராகிலும் - பலவேறு மூர்த்தங்களைக் கொண்டவராக இருந்தாலும் ( திருமீயச்சூரிளங்கோயிலில் ) கூறு கொண்டுகந்தாளொடு ஏறுகொண்டுகந்தார் - பார்வதி தேவியாரொடு விடையேறி அருள்செய்யும் மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார் .

பண் :

பாடல் எண் : 9

வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூதத்தா னென்பர் புண்ணியன் தன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

புண்ணியனாகிய இறைவனை வேதத்தான் என்றும் , வேள்வியுளான் என்றும் , பூதத்தான் என்றும் கூறுவர் ; கீதம் கிளரும் திருமீயச்சூரில் , இளங்கோயிலின்கண் அடியவர் ஏதந்தீர்க்க நின்ற இறைவரேயாவர் .

குறிப்புரை :

வேதத்தான் - வேதங்களிடையே விளங்குபவன் , நூற்றெட்டுப் பெயர்களுள் ` கிரிசாயநம ` என்பதன் பொருளும் இது . கிரி - வேதத்தின் பரியாயம் . வேள்வியுளான் - வேள்வித்தீயில் உள்ளான் . என்பர் - என்று சொல்வார்கள் . புண்ணியன் - புண்ணிய வடிவினன் . கீதத்தான் கிளரும் , என்பது எதுகை நோக்கி வலித்து நின்றது . கிளரும் - விளங்கும் . ஏதம் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

கடுக்கண் டன்கயி லாய மலைதனை
எடுக்க லுற்ற இராவணன் ஈடற
விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

விடமுண்டகண்டனும் , கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண் தீர்க்க நின்ற இறைவனேயாவன் .

குறிப்புரை :

கடு - விடம். ஈடு - வலிமை. விடுக்கண் இன்றி - விடு படுதற்கு இடன் இன்றாம்படி. வெகுண்டவன் - அருள் செய்யும் நோக்கோடு சினந்தவன். இடுக்கண் - துன்பம்.
சிற்பி