திருவீழிமிழலை


பண் :

பாடல் எண் : 1

கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே.

பொழிப்புரை :

மனங்கரைந்து கைதொழுவாரையும் காதலித்து அருள்வன் ; தன்னை விலக்கி இகழாநின்று எழும் புறச்சமயத்தாரையும் வாடச்செய்யான் . இத்தகைய அவன் வரிசையாகிய பூதகணங்களோடு நித்தலும் விரைந்து போவது வீழிமிழலைத் தலத்திற்கே . ( வேண்டுதல் வேண்டாமையிலானாகிய முதல்வன் , அந்தணர் வழிபடுதலால் அவர்க்கு அருள்புரிய விரைந்து தோன்றுவன் என்றபடி .)

குறிப்புரை :

கரைந்து - மனமுருகி ; வாயைவிட்டுப் புகழ்ந்து பேசி என்றலும் ஒன்று . கைதொழுவார் - கையால் தொழுவார் . காதலன் - அன்பு செய்வன் . வரைந்து - ( கடவுள் இல்லை என ) நீக்கி . வைதெழுவார் - துயிலுணரும்போது இகழா நின்று எழும் புறச்சமயத்தார் . வாடலன் - துன்பம் செய்யான் . நிரந்த - வரிசையாக விளங்கும் . பாரிடத்தோடு - பூதங்களோடு . தெய்வம் இல்லை என்பாரும் தன் மக்களே ஆதலின் தான் அவரை வாட்டாது தாமே நாளடைவில் உணர வைப்பன் என்றபடி . விரைந்து போவது - அன்பர் வழிபடும்போது நேர் பட நின்று வழிபாட்டை ஏற்றுக் கொள்ளுதல் .

பண் :

பாடல் எண் : 2

ஏற்று வெல்கொடி யீசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.

பொழிப்புரை :

பிற கொடிகளை வென்று மேம்பட்ட ஆனேற்றுக் கொடியையுடைய ஈசன் தனக்குரிய ஆதிரை நாளில் , தான் வேறு வேறு கோலங் கொண்டு காட்சியளித்தற்கு இடமாகிய திருவீழிமிழலையில் தாம் சந்தனம் எனக்கொண்டு பூசிவந்த வெள்ளை நீற்றைக் கொள்ளாது மணமுள்ள பொருள்களைச் சூடிக்கொள்வர் ; மிக நல்லமதியைச் சூடுவோராகவும் உளர் . சந்தன வெள்ளை நீற்றை விரவல் உடையராய் ( அணிந்து ) நாற்றம் சூடுவர் ( நறுமலர் அணிவர் ) என்றுரைப்பினும் அமையும் .

குறிப்புரை :

ஏற்றுவெல்கொடி - இடபமாகிய வெல்லுங்கொடி . ஆதிரை - திருவாதிரைத் திருநாளில் . நாற்றம் - மணமுள்ள கஸ்தூரி புனுகு முதலிய பொருள்கள் . நன்னறும் - நல்லமணமுள்ள . நீற்றுச்சந்தன வெள்ளை - சந்தனமாகக் கொள்ளப்படும் வெள்ளை நீறு . ` வெந்த சாம்பல் விரையெனப்பூசி ` ( தி .3. ப .54. பா .3) என்றல் காண்க . விரவலார் - அணியாது . வேற்றுக்கோலம் - பல வேறு கோலங்களைக் கொள்ளும் இடம் . நூல்களுட் கூறியபடி யோகியாகத் தோன்றாது போகியாகவும் காட்சி தருகிறான் என்றபடி .

பண் :

பாடல் எண் : 3

புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவ னீசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

சூலம் உடையவனும் , விடை ஊர்தியனும் , வினைகளை வென்றவனும் நாகத்தைப் பூண்டவனும் , வெண்மழு வாள் உடையவனும் , அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும் , இருவினையற்ற மேலோர் தொழும் வீழிமிழலை இறைவனே .

குறிப்புரை :

புனைபொன்சூலம் - அலங்கரிக்கப்பெற்ற பொன்னாலாகிய சூலம் . போர்விடை - போர்செய்யும் ஆற்றலோடுகூடிய இடபம் . வினைவெல் நாகத்தன் - இருவினைகளை இயல்பாகவே வென்றவனும் நாகத்தனும் . வெண்மழுவாள் - வெண்மையான மழு வாயுதமாகிய வாள் . நினைய நின்றவன் - நினைப்பதற்குரியவன் . ஈசனையே - ஈசனே . ஐ சாரியை . எனா - என்று . வினையிலார் - வினை களின் நீங்கினார் . ஈசனே என ( அடியவர்கள் ) இனைய நின்றவன் எனப் பிரித்தால் மோனை கெடாது .

பண் :

பாடல் எண் : 4

மாடத் தாடு மனத்துடன் வைத்தவர்
கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர்
பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர்
வேடத் தார்தொழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

முதல்வனை மாடத்தும் ( விமானத்தும் ), ஆடும் மனத்தும் உடன் வைத்தவராகிய திருமாலும் , வேத கோஷம் செய்யும் பிரமனும் , குருகே?ஷத்திரத்தார் பலரும் ( பாண்டவர் ), வேதத்தின் மூல பாடம் பேணும் அந்தணர்களும் , பழிப்பார் கூறும் பழிப்பு அல்லதாகிய திருவேடம் பூண்ட அடியார்களும் , தொழும் ( பதி ) திருவீழி மிழலையே .

குறிப்புரை :

மாடத்தும் ஆடும் மனத்தும் ( முதல்வனை ) உடன் வைத்தவர் - விண்ணிழி விமானமாகிய புறத்தும் நிலையாது திரியும் மனத்தும் ( அகத்தும் ) முதல்வனை வழிபட்ட திருமால் . கோடத்தார் - கோஷத்தார் .( வேத கோஷம் செய்யும் பிரமன் ) பாடத்தார் - மூல பாடம் பேணும் அந்தணர் . தொழும்பதி என ஒரு சொல் வருவிக்க . திருமால் , பிரமன் , பாண்டவர் எனத் தனித்தவர்களாகக் கொள்ளாது . தொகையினராகக் கோடலும் ஒன்று . மாடம் - மாடம் போன்ற விமானம் .

பண் :

பாடல் எண் : 5

எடுத்த வெல்கொடி யேறுடை யான்தமர்
உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது வீழி மிழலைக்கே.

பொழிப்புரை :

உயர்த்துப் பிடித்த இடபக்கொடியையுடைய சிவ பிரானின் அடியவர்கள் , கோவணமே உடுப்பது ; பிச்சை உணவே உண்பது ; கீழ்நின்ற வல்வினைகளையே கெடுப்பது ; பந்த பாசங்களை விடுத்துப் போவது வீழிமிழலைக்கே .

குறிப்புரை :

எடுத்த - தூக்கிய . வெல்கொடி - வென்ற ( மேம்பட்ட ) கொடி . தமர் - சுற்றமாகிய அடியார் . உண்பது பிச்சை - உண்ணும் உணவு பிச்சையாகக்கொண்டது . கீழ்நின்ற - தாழ நின்ற ; தாழ்தற்குக் காரணமாக நின்ற தீயவினைகள் . விடுத்துப் போவது - உலக பந்தபாசங்களை நீங்கிச் சென்று சேரும் இடம் .

பண் :

பாடல் எண் : 6

குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணு முணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே.

பொழிப்புரை :

குழலையும் , யாழையும் போன்ற மொழியாரை வேட்கையினால் இசையும் , உழலும் உடலைத் தீநெறியின்கண் ஊன்றும் நல்லுணர்வற்றவர்களே ! நெருப்பை நீர் மடியின்கண் கொண்டு கெடாதீர் ; பன்முறையினும் சாற்றினோம் , மிழலையான் திருவடி சார விண்ணாளும் திறம் பெறலாம் .

குறிப்புரை :

குழலை - என்றதில் ஐ சாரியை ; குழலும் யாழும் போன்ற இசையோடு கூடிய மொழியாரிடத்து வைக்கும் வேட்கையால் உடலைப் பேணும் அறிவிலீர் என்றபடி . ஊணும் - ஊன்றும் . உணவும் மருந்தும் உண்டு வலிவுறச் செய்கின்ற ; உண்பிக்கும் , ஊட்டும் எனினும் அமையும் . அங்ஙனம் பேணுதல் நெருப்பை மடியிற் கட்டிக் கொள்வது போன்றது என்கிறார் அப்பர் .

பண் :

பாடல் எண் : 7

தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய
நீர னாடிய நீற்றன்வண் டார்கொன்றைத்
தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே.

பொழிப்புரை :

அறிஞனும் , தீத்திரளைக் கையிற்கொண்டாடுபவனும் , சடைத் தங்கிய கங்கையனும் , ஆடிய திருநீற்றனும் , வண்டார்ந்த கொன்றைத்தாரும் , குளிர்ந்து மணக்கும் கண்ணியும் மாலையும் உடையவனும் , புலன்களை வென்று விளங்கும் வீரனும் வீழிமிழலை யிலுள்ள விகிர்தனே .

குறிப்புரை :

தீரன் - அறிஞன் . தீத்திரளன் - நெருப்புத் திரள் போன்ற செம்மேனியன் எனலுமாம் . நீரன் - கங்கையை அணிந்தவன் . ஆடிய நீற்றன் - உடலெங்கும் நீறுபூசியவன் , கொன்றையாலாகிய தாரும் , மாலையும் , கண்ணியும் அணிந்தவன் . ` கண்ணி கார் நறுங்கொன்றை ` ( புறநானூறு - கடவுள்வாழ்த்து .)

பண் :

பாடல் எண் : 8

எரியி னாரிறை யாரிடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

எரியைக்கையால் ஏந்தியவரும் , யாங்கணும் தங்கி நிற்போரும் , நரிகளைப் பரிகளாகக் கொண்டு இடுகாட்டிடை ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் ( மகாதேவனும் ) தங்கும் இடம் பிறப்போடு கூடிய இறப்பை அகல நினைப்பார் தொழும் தலமாகிய வீழிமிழலை ஆகும் .

குறிப்புரை :

எரியினார் - தமது அங்கைசேர் எரியர் ; தங்குபவர் ; இறை யார் - எங்கும் தலைமையானவர் . முறைசெய்து காப்பாற்றுவோன் எனினும் அமையும் . நரியினார் பரியா இடுகாட்டிடை மகிழ்கின்றதோர் பெரியனார் எனக் கூட்டுக . நரியினார் - இழிவு சிறப்பு ; நரிகளைப் பரிகளாக்கியவரும் , இடுகாட்டில் ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் ஆகியவர் . பிறப்பொடு சாதலை வெரீஇயினார் என்பதும் பாடமாகலாம் அல்லது வெரீஇயினார் என்பது விரியினார் என மருவிற்று என்க . பிறப் பிறப்புக்களை அஞ்சினார் என்பது பொருள் .

பண் :

பாடல் எண் : 9

நீண்ட சூழ்சடை மேலொர் நிறைமதி
காண்டு சேவடி மேலொர் கனைகழல்
வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழி மிழலைக்கே.

பொழிப்புரை :

நீண்டு சூழ்ந்த சடையின்மேல் ஓர் நிலாமதியும் , சேவடியின்மேல் கூப்பிடுதூரம் ஒலிக்கும் ஓர் கழலும் கொண்டு , வேண்டுவாராகிய யாம் உள்ள வீதியுட் புகாது வீழிமிழலைக்கே மீண்டு போவர் ; இதுவோ அவர்தம் அருள் !

குறிப்புரை :

சூழ்சடை - வளைத்து முடித்ததால் சூழ்ந்துள்ள சடை . நிலாமதி - நிலவையுடைய மதி . காண்டு - கூப்பிடுதூரம் . சேவடி மேல் கூப்பிடுதூரம் கேட்கும்படி ஒலிக்கும் ஒரு கழல் உள்ளது என்க . உலாப் புறம் போந்த பெருமானைக்கண்டு அவன் திருவுருவ அழகில் மனங் கொடுத்த தையல் ஒருத்தி , அவன்தன் பக்கல் வாராது திருக் கோயிலுக்கு மீள்வது பொறாது இன்ன இயல்பினர் அவரை விரும்புவார் உள்ள வீதியுட்புகாது மீண்டும் மிழலைக்கே போவது ஆக உள்ளது என இரங்கியதாகக் கொள்க .

பண் :

பாடல் எண் : 10

பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை யாரழ லந்தண ராகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

மாலைக்காலத்து வானவர் வந்து பாலைப் பண்ணும் செவ்வழிப் பண்ணும் கலந்த பாடல்களைப்பாடி வழிபடும் இடம் அந்த மாலைக்காலத்தே அந்தணர் நிறைந்த நெருப்பை வளர்த்து ஆகுதி செய்யும் தொழிலராய் வழிபடும் திருவீழிமிழலையே ஆம் . மாலைக்காலத்தே சுரர்பாடப்பூசுரர் வேட்டு வழிபடும் இடம் என்பது கருத்து .

குறிப்புரை :

ஆகுதி வேலையர் - அவிசு சொரியும் செயலராய் . வேலை - செயல் , தொழில் .

பண் :

பாடல் எண் : 11

மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக்
கழல்கொள் காலின் திருவிர லூன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே.

பொழிப்புரை :

இளமையான ஆனேறுடைய உமைமணாளனது திருக்கயிலாயமலையைச் சுழல ஆர்த்து எடுத்த இராவணனது முடியும் தோளும் இறும்படியாக அவன் தன் கழலணிந்த திருவடியில் உள்ள ஒரு திருவிரலால் ஊன்றுதலும் , அவ்வரக்கன் திருவீழிமிழலையானடி வாழ்க என்று வாய்விட்டரற்றினன் . அரற்றவே உமைமணாளன் அவனை மேலும் ஒறுக்காமல் விடுவித்தனன் .

குறிப்புரை :

மழலை - இளமை . ஏற்று மணாளன் - அத்தகைய விடையையுடைய ( உமை ) மணவாளன் ; மணாளக் கோலத்துடன் இருப்பவன் . சுழல - அசைந்து நிலை திரியலுற . ஆர்த்து - தன் வலிமையைப் பெரிது என எண்ணி ஆரவாரித்து . எடுத்தான் - தூக்கியவன் . முடி தோள் - முடியும் தோளும் . இற - நெரிய . விரலால் ஊன்றினவுடன் அரக்கன் அலறி மிழலையான் அடிவாழ்க என வாழ்த்திப் பாடினன் . வாழ்த்தவே இறைவன் அவனை மேலும் ஒறுக்காமல் விட்டான் என்க .
சிற்பி