திருவீழிமிழலை


பண் :

பாடல் எண் : 1

என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

என் உயர்ந்த பொருளே ! தேவர் தொழுகின்ற கழலணிந்த நல்ல பொருளே ! நலம் தீங்கு பகுத்து அறியும் அறிவு சிறிதும் இல்லாத இயல்பினேன் அடியேன் ; எனது செம்பொன்னே ! திருவீழி மிழலையுள் அன்பு வடிவாம் பெருமானே ! அடியேனைக் குறிக் கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

என்பொனே - எனக்குப் பொன்னாய் விளங்குபவனே . இமையோர் - கண்ணிமையாத தேவர்கள் . தொழு - வணங்கும் . பைங்கழல் - சிறந்த வீரக்கழல் அல்லது பசிய பொன்னால் ஆகிய கழல் . நன் பொனே - மாற்றுயர்ந்து விளங்கும் பொன் போன்றவனே . நலந்தீங்கு அறிவு ஒன்றிலேன் - நன்மை தீமை அறியும் அறிவு சிறிதும் இல்லாதவன் . செம்பொனே - சிவந்த பொன்போலும் நிறமுடையவனே . ` பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி ` ( தி .11. பொன்வண்ணத்தந்தாதி . பா .1) அன்பன் - அன்பே தானாய் விளங்குபவன் . குறிக்கொள் - அடியேனை நினைந்து காத்தருள்க . ஏ - அசை .

பண் :

பாடல் எண் : 2

கண்ணி னாற்களி கூரக்கை யால்தொழு
தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

இன்பம் மிகும்படி கண்ணினாற்கண்டு , கையால் தொழுது , எண்ணுமாறறியாது இளைக்கும் எளியேனை , தேவர்கள் தொழும் வீழிமிழலையுள் அண்ணலே , குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

களிகூரும்படி கண்டு , தொழுது , எண்ணுமாறு என்க . கையால் தொழுது என்று பின்வருதலின் , கண்ணினால் கண்டு என்பது முன்தானே போதரும் . களிகூர - களிப்புமிக . கையால்தொழுது - கை களால் வணங்கி . எண்ணும் ஆறு அறியாது - உன்னை நினைக்கும் நெறியறியாது . இளைப்பேன்தனை - வருந்துவேனாகிய என்னை . அண்ணல் - தலைமையானவனே .

பண் :

பாடல் எண் : 3

ஞால மேவிசும் பேநலந் தீமையே
கால மேகருத் தேகருத் தாற்றொழும்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

உலகமே ! விண்ணே ! நன்மையே ! தீமையே ! காலமே ! கருத்தே ! கருத்தாற்றொழும் சீலமே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கோலமே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

நிலனும் வானும் , நலமும் தீங்கும் , இவையனைத்திற்கும் ஆதாரமாய் நின்று நிகழச் செய்கின்ற காலமும் , எண்ணும் எண்ணமும் , குறிக்கொண்டு தொழுதுவரும் நல்லொழுக்கமும் ஆகிய இவையனைத்துமாய் உள்ளவன் முதல்வன் . சீலம் - இடையறவு படுதலின்றி நெறிப்பட்டு ஒழுகும் நல்லொழுக்கம் . கோலம் - அழகிய திருவுரு , மணவாளக்கோலம் .

பண் :

பாடல் எண் : 4

முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேயொரு வாவுரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

முத்தனே ! முதல்வா ! முகிழ்க்கும் முளையை ஒத்தவனே ! ஒப்பற்றவனே ! உருவத்திருமேனி உடைய சித்தனே ! திரு வீழிமிழலையுள் வீற்றிருக்கும் அத்தனே ! அடியேனைக் குறிக் கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

முத்தன் - அநாதிமல முத்தன் . முதல்வன் - உலகிற்குப் பரம ஆதாரமாய் நின்று அதனைத் தன் சக்தி சங்கற்பத்தால் மாயை யினின்று தோற்றி நிறுத்தி ஒடுக்குவோன் . முகிழ்க்கும் முளை ஒத்தல் - அறநெறி நிற்பார் உள்ளத்தில் அவ்வறத்திற்கு முதலாக விளங்கித் தோன்றலும் , சிவஞானியர் உணர்வில் முன்னர்ப் பேருணர்வாயும் பின்னர் இன்ப உருவாயும் முகிழ்த்து வளர்தல் . ` சீவனுக்குள்ளே சிவ மணம் பூத்தது ` என்னுந் திருமந்திரம் ஒப்புநோக்கத்தக்கது . ஒருவன் , முன்னர் விளக்கப்பட்டது . சித்தன் - எல்லாம் வல்லவன் ( வித்தகசித்தர் போல வேண்டுருக் கொள்ளவல்லான் ).

பண் :

பாடல் எண் : 5

கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேயுயிர்ப் பாயுணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

மூலப்பொருளாக உள்ளவனே ! கருவாயுள்ளாய் என்று தெளிந்தவர்க்கெல்லாம் ஒப்பற்றவனே ! உயிர்ப்பாகவும் , உணர்வாகவும் நின்ற செல்வனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குரு மூர்த்தியே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

கருவன் - எல்லாவற்றிற்கும் மூலப் பொருளாய் உள்ளவன் . கருவாய்த் தெளிவார்க்கு ஒருவனே - மூலப் பொருளாய் இருப்பவன் என்பதைத் தெரியும் அறிவினை உடையார்க்கு பலராக ஒருவன் என நின்றவனே ; ஒன்றவன்தானே , ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்றாற்போல உணரநிற்றல் . உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற திருவன் - பிராணனாயும் உணர்வு வடிவாயும் இருக்கின்ற செல்வன் . குருவன் - குருவடி வானவன் .

பண் :

பாடல் எண் : 6

காத்த னேபொழி லேழையுங் காதலால்
ஆத்த னேயம ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

ஏழுலகங்களையும் கருணையால் காத்தவனே ! அமரர்க்கு ஆப்தனே ! அயன்றலையைக் கையில் சேர்த்தவனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கூத்தப்பெருமானே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

காத்தன் - காத்தவன் . பொழில் ஏழு - ஏழு உலகம் . காதலால் - அன்பால் . ஆத்தன் - ஆப்தன் . நம்பத் தகுந்தவன் ; தான் உண்மையை உணர்ந்து உள்ளவாறு எடுத்துரைப்போன் . எனவே அமரர்க்குப் பிரமாண நூல்களை அருளியோன் என்பது கருத்து . அயன்றலை சேர்த்தன் - பிரமன் தலையைக் கையில் கபாலமாகச் சேர்த்தவன் . காதலால் காத்தலும் , நூலான் உணர்த்தலும் , செருக்கு எய்திய வழி ஒறுத்தலுமுடைய கூத்தன் என்பது பாட்டின் திரண்டபொருள் .

பண் :

பாடல் எண் : 7

நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ ரும்முண ராததோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

வானவர் தமக்குரிய நீதிப்படி நித்தலும் நியமங்கள் செய்து ஓதியும் அவர்களால் உணரப்படாது நின்ற ஒப்பற்ற வேதியா ! விகிர்தனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் ஆதியே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

நீதிவானவர் - நீதியால் உயர்ந்த பெரியோர் எனினும் பொருந்தும் . நித்தல் - நாடோறும் . நியமம்செய்து - முறையாக வழிபடு தலைச் செய்து . ஓதி ( யும் ) உணராததோர் வேதியா என இயைக்க . வேதியா - வேதம் விரித்தவனே . ஆதி - முதல்வனே .

பண் :

பாடல் எண் : 8

பழகி நின்னடி சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய
அழக னேயணி வீழி மிழலையுள்
குழக னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

நின்னடியைப் பழகிச் சூடிய பாலனாகிய மார்க்கண்டேயனை வஞ்சனையால் பற்றமுற்பட்ட காலனைச் சாடிய அழகனே ! அழகுமிக்க திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குழகனே ! அடி யேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

பழகி - உனக்குப் பூசைசெய்யும் அணுக்கத் தொண்டுரிமையோடு நெருங்கிப் பழகி . அடிசூடிய - திருவடிகளைத் திருமுடியில் சூடிக்கொண்டவராகிய . பாலனை - மார்க்கண்டேயனை . கழகு - சூது ; கழகின்மேல்வைத்த - வஞ்சனையாற்பற்ற எண்ணிய . சாடிய - உதைத்த . குழகன் - இளமையுடையோன் .

பண் :

பாடல் எண் : 9

அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ்
சுண்ட வானவ னேயுணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

தேவர்கள் அசுரர்களுடன் கூடிக்கடைதலால் எழுந்த நஞ்சினை உண்ட தேவனே ! விரிந்த வான் பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையிற் கோயில் கொண்டவனே ! உணர்வு சிறிதும் இல்லேனாகிய அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

அண்டவானவர் - மேல் உலகிலுள்ள தேவர்கள் . வானவர் ( அசுரருடன் ) கூடிக் கடைந்த என்க . வானவன் - உயர்ந்தவன் . உணர்வு - அறிவு . விண்ட - மலர்கள் விண்ட , மலர்ந்த பூக்களை உடைய . வான்பொழில் - உயர்ந்த சோலை . வீழிமிழலையுள் கொண்டன் - வீழிமிழலையின் உள்ளிடத்தைத் தனக்கு இடமாகக் கொண்டவன் .

பண் :

பாடல் எண் : 10

ஒருத்தன் ஓங்கலைத் தாங்க லுற்றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

ஓங்கிய திருக்கயிலையைத் தாங்கிப் பெயர்க்கலுற்ற ஒருத்தனாகிய இராவணனின் வலிகெட அவனை வருத்தியவனே ! வஞ்சனை உடையேன் மனத்தின்கண் நிலை பெற்ற திருந்தியவனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் பொருள் வடிவாய் இருப்பவனே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

ஒருத்தன் - தான் ஒருவனே பெரியோன் எனச் செருக்கியோன் . ஓங்கல் - திருக்கயிலைமலை . தாங்கலுற்றான் - தாங்கிப் பெயர்க்க முயன்றவன் . உரம் - வலிமை . வருத்தினாய் - துன்புறச்செய்தாய் . வஞ்சனேன் - என் குறையைப் பிறர்க்குத் தெரியாதபடி மறைப்பவன் . மனம் மன்னிய - மனத்தைக் கோயிலாகக் கொண்டு நிலைபெற்ற . திருத்தன் - அழகியன் . அருத்தன் - பொருள் வடிவாக உள்ளோன் .
சிற்பி