திருவிடைமருதூர்


பண் :

பாடல் எண் : 1

பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மானிடை மருதினில்
பூச நாம்புகு தும்புன லாடவே.

பொழிப்புரை :

பல அன்பர்கள் உலக பாசங்கள் ஒன்றும் இல்லாதவராய் மணமிக்க புதுமலர்கள் கொண்டு திருஇடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் எம்பெருமான் திருவடியை வழிபட்டு வைகுதலைக் கண்டு , புனலாட யாமும் பூசத்திருநாளில் அங்குப் புகுந்து வழிபடுவோம் .

குறிப்புரை :

பாசம் - உலகப்பற்று . ஒன்று - சிறிதேனும் என்னும் பொருட்டு . இலராய் - இல்லாதவராய் . பத்தர்கள் - அன்பர்கள் . நாண் மலர் - அன்றலர்ந்த புதுமலர் . அடி - இறைவன் திருவடிகளை . வைகலும் - நாள்தோறும் ( வழிபடும் ) ஈசனாகிய எம்பெருமானின் இடை மருது என்க . புகுதும் - செல்வோம் . பூசப் புனலாட நாம் புகுதும் எனக் கூட்டுக . திருவிடைமருதூரில் தைப்பூசத் திருநாள் சிறந்ததாதலை இன்றும் காண்க . ( தைப்பூசம் முதல்வன் தீர்த்தம் தரும் நாள் )

பண் :

பாடல் எண் : 2

மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னால்முனி கள்வழி பாடுசெய்
இறைவ னெம்பெரு மானிடை மருதினில்
உறையு மீசனை யுள்குமெ னுள்ளமே.

பொழிப்புரை :

வானவர்களும் முனிவர்களும் மறையின் முறையினால் புதிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்ற இறைவனும் , எம்பெருமானுமாகிய இடைமருதூரில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்கும் .

குறிப்புரை :

வேதவிதிப்படி ( மறையின் முறையினால் ) வானவர் முனிகள் வழிபாடு செய் இறைவன் என இயைக்க . உள்கும் - நினைக்கும் .

பண் :

பாடல் எண் : 3

கொன்றை மாலையுங் கூவிள மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை பிரானிடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே.

பொழிப்புரை :

கொன்றை மாலையும் , கூவிளமும் , ஊமத்தமலரும் ஒருங்கு சென்று சேரும்படியாகத் திகழ்கின்ற சடையில் வைத்தவனாகிய இடைமருதூர் உறையும் எந்தையினை என்றும் நன்றுறக் கைதொழுவார் வினைகள் நாசமாகும் .

குறிப்புரை :

கொன்றைமாலையும் கூவிளமும் மத்தமும் திகழ்சடை சென்றுசேர வைத்தவன் எனினும் அமையும் . என்றும் - நாடொறும் . நன்று கைதொழுவார் - நல்ல முறையில் கையால் தொழுவார் .

பண் :

பாடல் எண் : 4

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளு மிடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.

பொழிப்புரை :

எம்மையாளும் இடைமருதூர் உறையும் இறைவன் கழலைச் செம்மையாகத் தொழுவார் வினை சிந்தும் . அத்தொழுகை இம்மையில் வானவர் செல்வம் விளைத்திடும் ; அப்பிறப்பில் பிறவித் துயர் இல்லாவகையில் நீங்கும் .

குறிப்புரை :

இம்மை - இப்பிறப்பிலேயே . வானவர் செல்வம் - சுவர்க்கபோகம் . விளைத்திடும் - உண்டாக்கும் . அம்மையே - இப் பிறப்பின் பின் எய்தும் நிலையில் . பிறவித்துயர் - பிறவித்துன்பம் . நீத்திடும் - நீக்கும் . ஆளும் - ஆட்கொள்ளும் . செம்மையே - செவ்வியமுறையில் .

பண் :

பாடல் எண் : 5

வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையும்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கு மிடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.

பொழிப்புரை :

வண்டுகள் அணைந்த வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடாமுடியை உடைய கூத்தனார் எனப் படர்க் கையிற் பரவியும் எண்டிசைக்கும் கதியாகிய இடைமருதா என முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபட மேலை வினைகள் யாவும் நம்மைவிட்டு விலகிக்கெடும் .

குறிப்புரை :

வண்டணைந்தனவாகிய வன்னியும் கொன்றையும் கொண்டு என்க . அணிந்த - சூடிய . எண்டிசைக்கும் இடைமருதா - எட்டுத்திசைகளுக்கும் தலைவனாய் விளங்கும் இடைமருதனே . விண்டுபோயறும் - நம்மைவிட்டு நீங்கி ஒழியும் . மேலைவினைகள் - பழவினைகள் . படர்க்கையின் வைத்துப் பரவியும் முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபடின் மேலைவினைகள் விண்டு போய்அறும் என்க ; நம்மைப் பற்றுதல் நெகிழ்ந்து சேய்மைக்கண் விலகிப் பின் இல்லையாய்க் கெடும் .

பண் :

பாடல் எண் : 6

ஏற தேறு மிடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்
ஊறி யூறி யுருகுமெ னுள்ளமே.

பொழிப்புரை :

விடையினை உகந்தேறும் இறைவரும் , தன்னைக் கூறுவார் வினைகளைத் தீர்க்கும் குழகரும் , ஆறு செஞ்சடையின்கண் வைத்த அழகருமாகிய இடைமருதூர் எம்பிரானையெண்ணி என் உள்ளம் ஊறி ஊறி உருகுகின்றது .

குறிப்புரை :

ஏறதேறும் - இடபமேறும் . கூறுவார் - தன்னாமம் சொல்லிப் புகழ்ந்து போற்றுவார் . வினை - துன்பத்திற்குக் காரணமாகிய வினை . என் உள்ளம் ஊறி ஊறி உருகும் - என் மனமானது நெக்கு நெக்கு உருகும் .

பண் :

பாடல் எண் : 7

விண்ணு ளாரும் விரும்பப் படுபவர்
மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே.

பொழிப்புரை :

விண்ணிலுள்ள தேவரான் விரும்பப்படுபவரும் , மண்ணினுள்ள மனிதரான் மதிக்கப்படுபவரும் ஆகிய இறைவர்க்குரிய பொழில் சூழ்ந்த திரு இடைமருதூரை எண்ணி நண்ணியவரை வினையினால் வரும் கேடுகள் நண்ணமாட்டா .

குறிப்புரை :

விரும்பப்படுபவர் - விரும்பி வழிபடப்படுபவர் . மதிக்கப்படுபவர் - மதித்துப்போற்றப்படுபவர் . ( விண்ணவர் முதல்வனை உணர்ந்துளார் ஆதலின் விரும்புவர் ; மண்ணவர் கற்றபின்னன்றி உணரார் ஆகலின் மதித்து உணர்ந்து வழிபடுவர் ). எண்ணினார் - எண்ணத்தை இடங்கொண்ட முதல்வன் , அல்லது அடியார் கருத்தில் ஆர்ந்த இடைமருது எனக் கூட்டப்படும் .

பண் :

பாடல் எண் : 8

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினி லீசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.

பொழிப்புரை :

திருநீறு பூசும் விகிர்தரும் , நறுமண மாலைகள் சூடும் தலைவரும் , என் தந்தைபோல்வாருமாகிய திருவிடைமருதூர் ஈசனைச் சிந்தையால் நினைப்பவர்களது வினைகள் தேயும் .

குறிப்புரை :

வெந்த வெண்பொடி - தமது அருளொளியால் பொருள் அனைத்தும் வெந்து நீறாக ( மாயா சத்தி ரூபமாக ) வந்த வெண்பொடி . கந்தம் - வாசனை . கருத்தனார் - கருத்தின்கண் விளங்குபவன் எனினும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 9

வேத மோதும் விரிசடை யண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கு மிடைமரு தாவென்று
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.

பொழிப்புரை :

தேவர்கள் ஓதும் விரிசடை அண்ணலாரும் பூதங்கள் பாடநின்று ஆடும் புனிதருமாகியவரை ஏதந்தீர்க்கும் இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் இறைவா ! என்று சொல்லிப் பாதங்கள் ஏத்தினால் நம்பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் .

குறிப்புரை :

வேதம் ஓதும் - வேதத்தை அருளிய , அல்லது வேதத்தால் ஓதப்படும் . புனிதன் - தூயன் ; நின்மலன் . ஏதம் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே.

பொழிப்புரை :

இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் ஈசன் , தன்னையடைந்த அன்பர்களுக்குக் கனி , கட்டிபட்ட கரும்பு , குளிர் மலரணிந்த குழலையுடைய பாவை போன்ற பெண்கள் , தனித்து முடிகவித்து நின்று ஆளும் அரசு ஆகிய அனைத்தினும் மிக்க இனிமை உடையவன் . தன்னை அடைந்த மெய்ஞ்ஞானிகளுக்கு அவர்தம் உணர்வு புறத்தே செல்வுழி இப்பொருள்களிலெல்லாம் பரானந்த போகமாய் விளைவன் என்றலும் பொருத்தம் .

குறிப்புரை :

இனியன் என்பதைக் கனி கரும்பு முதலியவற்றோடு தனித்தனி கூட்டுக . கட்டிபட்ட கரும்பு - கட்டியாகிய கரும்புச்சாறு ; வெல்லம் . பனிமலர்க்குழல் - இளமையை அறிவித்தது . பாவை நல்லார் - பதுமைபோன்றழகிய பெண்கள் . தனிமுடி கவித்தாளும் அரசு - நிலம் பொது எனல் இன்றி உலகிற்கு ஒரே அரசனாய் மகுடம் சூடி ஆட்சிசெய்யும் அரசுரிமை . தன்னடைந்தார்க்கு - தன்னையே சரண் என்றடைந்த ஞானியர்க்கு . இப்பாடலில் கூறும் நான்கு பொருள்களும் குழந்தை இளைஞர் குமாரர் முதியர் என்பார்க்கு இனிமை பயப்பன . இந்நான்கு தரத்தினர்க்கும் அப்பொருள்களின் மேலான இன்பம் செய்பவன் என்ற நயப்பொருள் காண்க .

பண் :

பாடல் எண் : 11

முற்றி லாமதி சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை யாலரக் கன்முடி
எற்றி னார்கொடி யாரிடை மருதினைப்
பற்றி னாரைப் பற்றாவினை பாவமே.

பொழிப்புரை :

இளம்பிறை சூடும் முதல்வரும் , மலையால் அரக்கன் முடியை விரலைச் சிறிது ஊன்றி ஒற்றியவரும் , இடபக் கொடியை உடையவரும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள இடை மருதூரினைப் பற்றியவர்களை வினைகளும் அவற்றான் வரும் இடர்களும் பற்றமாட்டா .

குறிப்புரை :

முற்றிலாமதி - குழவித் திங்களாகிய பிறைமதி. ஒற்றினார் - அரக்கன் முடியை மலையால் ஒற்றினார்; அதுவே அவனை அழவைத்தது என்க. எற்றினார் கொடியார் - ஏற்றுக் கொடியார். எற்றினார் குறுக்கல் விகாரம். பற்றினார் - இடைமரு தீசனைப் பற்றுக்கோடாய்க் கொண்டு வாழ்வார். இடைமருதீசனைப் பற்றியவர்களை வினை பாவம் பற்றா என்க. வினை - தூலவினை எனப்படும் ஆகாமியம்; பாவம் - அதன் சூக்கும நிலையாகிய அபூர்வம் (காணப்படாதது).
சிற்பி