திருப்பேரெயில்


பண் :

பாடல் எண் : 1

மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , மறையை ஓதுவர் ; மான்குட்டியை யேந்திய கையினர் ; திருநீலகண்டர் ; கபாலத்தைக் கொண்ட கையினர் ; எத்துறையும் போகுவர் ; தூய வெண்ணீற்றினர் ; பிறையும் சூடும் இயல்பினராவர் .

குறிப்புரை :

மறை ஓதுதல் முதலியவை , பிறர் ஒருவருக்கும் இல்லாத பெருமை சிவபிரான் ஒருவனுக்கே உண்டு என்பதை உணர்த்தும் உண்மையாம் பெரிய நல்லடையாளங்கள் ஆகும் என்பதைச் சிந்தித்து உணர்தல் வேண்டும் . மறை ஓதுதல் , முதல்வன் உலகிற்குப் பொய் தீர ஒழுக்கநெறி வகுத்தவன் என்பதைக் குறிக்கும் . மான்மறி ஏந்துதல் - வேதத்திற்கு நாதன் என்பதைக் குறிக்கும் . ` வேதமான்மறி ஏந்துதல் மற்றதன் நாதன் நான் என நவிற்றும் ஆறே ` ( தி .11 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பா .6) கறைகொள்கண்டம் - முதல்வன்றன் பேரருள் உடைமையினையும் , யாரையும் எவற்றையும் தன்வயப்படுத்தும் செம்பொருட்டன்மையினையும் குறிக்கும் . கபாலியார் - பிரமகபாலம் ஏந்தியவர் . இஃது உயிர்களுக்கு உள்ள யான் எனது என்னும் செருக்கு அறுத்து இன்பூட்ட வல்லான் என்பதைக் குறிக்கும் . துறை போதல் - கரையைச் சென்று அடைதல் , அல்லது , முற்றக்கற்றல் . எனவே , முதல்வன் எக்கலைக்கும் முதற் கருத்தாவாய் இயற்கை முற்றுணர்வு உடையன் என்பதைக் குறித்தபடி . பிறை சூடுதல் உயிர்களின் அக இருளைப் படிமுறையான் போக்கும் தூய நல்லுணர்வைத் தன் பக்கல் உடையன் என்பதைக் குறிக்கும் . ` தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி - ஆமதியான் என அமைத்த ஆறே ` ( தி .11 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பா .6) என்பதனான் உணர்க . இனத்துச் சார்ந்தார்க்குச் சார்பாய் நின்று தலையளி செய்வோன் என்பதைக் குறிக்கும் எனினும் அமையும் . உம்மை எண்ணுப் பொருளில் வந்தது . துறையும் போகுவர் என்றது ` ஈசானஸ் ஸர்வ வித்யானாம் ` என்னும் வேதமந்திரத்தின் கருத்தைத் தருவதாதல் காண்க . எக்கலைக்கும் முதல்வன் ( சிவபிரான் ) என்பது அம் மந்திரத்தின் பொருள் .

பண் :

பாடல் எண் : 2

கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையும்
தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் . கல்லாதவரையும் , கற்று வல்லவரையும் , வணங்காத நெறியைக் கட்டிப் பேசும் வீணரையும் , தணக்கும் இயல்புடையவர் ; எப்பொருளையும் தணிப்பவர் ( ஒடுக்குவர் ); பிணக்கும் இயல்பினரும் ஆவர் .

குறிப்புரை :

கணக்கிலார் - அளவு படாத நெஞ்சினர் , நன்னெறியில் நின்று ஆராய ஒருப்படாத நெஞ்சினர் என்றபடி , கல்லாதவர் எனினும் அமையும் . கற்றுவல்லார் - கற்றதனால் யாம் எல்லாம் வல்லேம் எனக் கருதிச் செருக்குவோர் . வணக்கிலா நெறி கண்டு கொண்டோர் - முதல்வனை உணர்ந்து பணிதல் வேண்டும் என்னும் கொள்கை யில்லாத சழக்கு நெறியை நன்னெறி எனத் தம் புல்லறிவால் துணிந்து கொண்டோர் . எப்பொருளையும் தணிப்பார் , பிணக்குவார் என்க ; ஒடுக்கித் தோற்றி நடத்துவார் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 3

சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்
பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , மழை சொரிவிப்பார் ; திங்களைச் சூழ்கதிர் விரிவிப்பார் ; ஞாயிற்றின் கண் பொருந்திய விளங்கொளியை எரிவிப்பார் ; எப் பொருளையும் தணிவிப்பார் , அவற்றைப் பிரிவிக்கும் இயல்பினரும் ஆவர் .

குறிப்புரை :

சொரிவிப்பார் மழை - மழையை வேண்டுங் காலத்துப் பெய்யச் செய்வார் . சூழ்கதிர்த் திங்களை விரிவிப்பார் - சந்திரனை நிலவுக்கதிர் விரித்தின்புறுத்தச் செய்வர் . வெயில்பட்ட விளங்கொளி - வெயில் ஒளி பொருந்தி விளங்குகின்ற சூரியனை . எரிவிப்பார் - உலகில் விளங்கச் செய்வார் . எப்பொருளையும் தணிப்பார் - எப்பொருளின் ஆற்றலையும் நிகழாதபடி அடங்கி நிற்கச் செய்வார் . பிரிவிப்பார் - இணைந்து நிற்கும் எப்பொருளையும் பிரிக்க வேண்டுங் காலத்துப் பிரியச் செய்வார் ( செல்வம் , வளம் முதலியன ஓரிடத்தில் நில்லாமே இடம் பெயர்ந்து வருதல் காண்க .)

பண் :

பாடல் எண் : 4

செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் மேருமலை வில்லால் முப்புரங்களை அழியச் செய்வார் ; தீர்த்தங்களை மிகுவிப்பார் ; பல பத்தர்களின் ஊழ்வினை அறுவிப்பார் ; அதுவன்றியும் நல்வினை பெறும்படியும் செய்வார் .

குறிப்புரை :

சிலையால் - இமயவில்லால் . மதில் - முப்புரங்களை . செறுவிப்பார் - அழியச் செய்தவர் . தீர்த்தங்கள் உறுவிப்பார் - புண்ணிய வாவிகள் பலவற்றை உண்டாக்கி அளிப்பவர் . அல்லது , அன்பர்களைத் தீர்த்தங்களை உற்று ஆடச் செய்வர் . ஊழ்வினை - ( அதனால் ) முறையாக விளையும் வினைப்பயனை . அறுவிப்பார் - நீங்கச் செய்பவர் . அது அன்றியும் நல்வினை பெறுவிப்பார் - பத்தர்களை ஊழ்வினை அறுத்தலேயன்றி , சிவஞானத்தை மிகுவிக்கும் சிவ நல்வினைகளை மேற்கொண்டு ஒழுகச் செய்வர் .

பண் :

பாடல் எண் : 5

மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோ ரைந்தலை பாம்பரைச்
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் அன்பர்களால் அன்றி மற்றையவரால் அறியப்படாத இயல்புடையவர் ; மழுவாளை உடையார் ; ஓர் ஐந்தலைப்பாம்பைப் பற்றி ஆட்டி அரையிற் சுற்றியவர் ; தூநெறியால் மிகுகின்ற பெற்றியும் உடையவர் .

குறிப்புரை :

மற்றையார் - மெய்யன்பர் அல்லாதவர் . மழுவாள் - மழுவாகிய வாள் . பற்றி - பிடித்து . ஆட்டி - ஆடச் செய்து . ஐந்தலைப் பாம்பைக் கையில்பற்றி ஆட்டுவர் ; இடுப்பிலும் சுற்றிக் கொள்வர் என்க . மகாமாயை என்னும் குண்டலிசத்தியை ஆள்பவர் என்றபடி . தூநெறி - அவா அறுக்கும் முத்திநெறி ( தூஉய்மை என்பதவாவின்மை . திருக்குறள் . 364 .) அந்நெறி நிற்பார்க்குப் பேரின்பமாய் முறுகித் தோன்றும் பெற்றியர் என்க . ` இன்பம் இடையறா தீண்டும் ` என்னும் திருக்குறளோடு (369) ஒப்பிடுக .

பண் :

பாடல் எண் : 6

திருக்கு வார்குழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யால்தனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , வளைந்த நீண்ட குழலாளை உடைய செல்வராகிய தம்மடியை இருக்குவேதம் முதலிய மெய்ம்மொழிகளால் ஏத்துவார்களின் துயரைச் சுருக்குவார் ; அவை தோன்றுகின்ற நெறி அறுமாறு அருளைப் பெருக்குவார் .

குறிப்புரை :

திருக்கு - வளைத்து முறுக்கி முடித்த . வார் குழல் - நீண்டகூந்தல் , இங்கு உமை . செல்வன - உமையைப் பாகங்கொண்ட செல்வனான சிவபெருமானுடைய . இருக்கு வாய் மொழியால் - இருக்காலும் தம் வாய் மொழியாலும் ( இருக்கு - வேதம் ); தன்னை , சேவடியை எனக் கூட்டுக . துயர் சுருக்குவார் என்க . ஆற்றற - வலிகெட . தோற்றங்கள் ஆற்றறப் பெருக்குவார் - துயர்களின் தோற்றங்கள் வலிகெடும்படி , சிவபுண்ணியச் செயல்களைப் பெருக்குவித்துத் தமக்கு அன்பராகச் செய்து கொள்வர் .

பண் :

பாடல் எண் : 7

முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனின் தானோர் தலைமகன்
என்னை யாளுமி றையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் எனின் அவர் , முன்னே தோன்றியவர் ; மயிலை ஊர்தியாக உடைய முருகவேளின் தாதையார் ; ஒப்பற்ற முதல்வர் ; என்னையாளும் இறைவரும் எம்பிரானுமாவர் ; புதியரிற் புதியரும் அவரே .

குறிப்புரை :

பேரெயிலாளரே எனின் , அவர் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய் , பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியர் ஆதல் முதலிய தன்மையர் என்க . மயில் ஊர்தியையுடைய முருகவேள் தன் ஐயார் ( தந்தையார் ) என்க . மயில் ஊர்தி - மயிலாகிய ஊர்தி ( வாகனம் ). எனின் என்பதை அசைநிலையாகக் கொள்ளினும் அமையும் .

பண் :

பாடல் எண் : 8

உழைத்துந் துள்ளியு முள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கு மன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , உழைத்தும் , துள்ளியும் , தம் உள்ளத்துள்ளே உருவத்தை இழைத்தும் எந்தையே ! பிரானே ! என்று இரவும் பகலும் இடைவிடாது அழைக்கும் அன்பர்கள் இயற்றிய பிழைகளை நீக்கும் தன்மை உடையவராவர் .

குறிப்புரை :

உழைத்தும் - மெய்வருந்தும்படித் திருப்பணிகள் செய்தும் ; துள்ளியும் - பேரின்பமேலீட்டால் ஆடியும் ; உள்ளத்துளே உரு இழைத்தும் - இறைவன் திருவுருவைச் செம்மையாக மனத்தில் சிந்தித்தும் . பிழைப்பு - செய்த பிழையின் பயனாகிய துயர் ; பிழைப்பு நீக்குவர் என்பதற்கு அடியார் எக்காரணத்தாலோ செய்யும் . குற்றத்தைத் தான் ஏற்றுக்கொண்டு அவர்க்கு அத்தீங்கு வாராமே காப்பன் என்றுரைப்பினும் அமையும் ; மெய்யன்பர்கள் குற்றங்கள் செய்யினும் குணமெனக் கொள்வன் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 9

நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவநங் கன்திறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

கங்கை உலாவிய நிமிர்ந்த புன்சடையா என்று போற்றாத அழகு பொருந்திய மன்மதன் திறலைவாட்டிய பெரும்புகழ் உடையவர் ; கச்சுப் பொருந்திய அழகிய மென்முலையாளொடும் பேரெயிலில் வீற்றிருந்தவர் .

குறிப்புரை :

புன்சடையா எனா - தவக்கோலம் பூண்ட பெருமானே எனப் போற்றித் தொழாது . மாறுபட்டுப் பூங்கணை எய்த . எனாத என்பது எனா என நின்றது , அநங்கன் - மன்மதன் . வார் உலாவும் வன ( அழகிய ) முலையாளொடும் பேரெயிலில் உள்ளவர் அநங்கன் திறலை வாட்டியபேர் உளார் என முடிக்க . ` ஓம் காமாரயே நம ` என்பது நூற்றெட்டுப் பெயர்களுள் ஒன்று .

பண் :

பாடல் எண் : 10

பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , படுதம் என்று கூறப்பெறும் கூத்தைத் தாளம் பொருந்த ஆடுபவர் ; அம்பறாத்தூணி உடையவராய் ( வேடராய் ) வந்து அருச்சுனர்க்கு அருள் செய்தவர் ; பிரமசாரியாய் வந்து ( வாமனாவதார காலத்து ) மண்ணளந்தவனாகிய திருமால் பிரமன் என்போரால் பேணப் பட்ட பெருமை உடையவர் .

குறிப்புரை :

பாணி - இசைப்பாட்டு . படுதம் - கூத்துவகை . பேணியார் - பேணி வழிபடப்பட்டவர் . இசைப் பாட்டோடு படுதம் என்னும் கூத்தாடுவாரும் , தூணியாராய் விசயற்கு அருளியோரும் பேணப்பட்டோரும் ஆகிய அவர் பேரெயிலாளர் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 11

மதத்த வாளரக் கன்மணிப் புட்பகம்
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் செருக்குடைய வாள் அரக்கன் இவர்ந்து வந்த புட்பக விமானத்தைத் திருமலை தடுக்க உடனே பதைத்து அத்திருமலையின் கீழ்ப்புகுந்து அங்கு ஆர்த்து எடுத்தபோது , அவன் முடிபத்தும் சிதையும் படியாக ஊன்றியவர் .

குறிப்புரை :

மதத்த - செருக்கு உள்ள . சிதைக்கவே - தடைசெய்தமையின் ( இவர் ) ஊன்றிய பேரெயிலாளர் ( ஊன்றியவர் ) என முடிக்க . நீள்முடி பிதக்க - நீண்டமுடி நசுங்கும்படி .
சிற்பி