திருக்கடம்பூர்


பண் :

பாடல் எண் : 1

ஒருவ ராயிரு மூவரு மாயவன்
குருவ தாய குழக னுறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

ஒருவராய் , இருவராய் , மூவராய் நிற்பவனும் குருவடிவுமாகிய குழகன் உறைவிடம் , பருத்தவரால் மீன்கள் குதித்தலைக் கொள்ளும் பழனங்கள் சூழ்ந்த இடமாகிய கடம்பூர்க் கரக்கோயிலே .

குறிப்புரை :

ஒருவராய் - சத்தியைத் தன்னுருவத்தினுள் அடக்கிச் சிவன் என ஒருவராய் . இரு மூவருமாய் என்றதை இருவருமாய் மூவருமாய் எனக்கொள்க . இருவருமாய் - சத்தி சிவம் என்ற பிரிப்பில் இருவரும் ஆகி . மூவருமாயவன் - படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்புரிய அரி அயன் அரன் என்ற மும்மூர்த்திகளாயவன் . ` ஓருருவாயினை மானாங்காரத்து ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம் படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை ` ( தி .1. ப .128) என்பது முதலிய திருமுறை மேற்கோள்களால் உணர்க . குருவதாய குழகன் - தென்முகப் பரமனாய் குருநாதனாக வீற்றிருந்து மௌனோபதேசம் செய்த இளையோன் . பருவரால் - பெரிய வரால் மீன்கள் . பழனம் - மருதநிலம் ; வயலும் வயல் சார்ந்த இடங்களும் . கருவதாம் - எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகிய .

பண் :

பாடல் எண் : 2

வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

வன்னியும் , ஊமத்தமலரும் , வளர் இளந் திங்களும் , கங்கையும் ஆகியவற்றைக் கதிர்விரிக்கும் முடியில் வைத்தவன் , பொன்னின் நிறைந்து புணர்முலையாளாகிய உமாதேவியோடும் கடம்பூர்க் கரக்கோயிலில் நிலைபெற்றவன் ஆவன் . ( எல்லாம் வல்ல முதல்வன் உயிர்களுக்குப் போகம் உதவுதற்குப் போகியாய் இருந்தருள்கின்றான் என்பது கருத்து .)

குறிப்புரை :

மத்தம் - ஊமத்தம்பூ . வளர் இளந்திங்கள் - வளர்கின்ற இளைய திங்கள் . ஓர்கன்னியாள் - ஒப்பற்ற கன்னியாகிய கங்கை . கதிர்முடி - ஒளிவிடும் முடி . பொன்னின் - பொன்போல . மல்கு - ஒளி செறிந்த . புணர்முலை - செறிந்த தனங்கள் . மன்னினான் - நிலைத்து வீற்றிருந்தான் . அன்பர் அணியும் எளிய பொருள்களையும் ஏற்று . சார்ந்தாரைக் காத்து , செருக்கின் மிக்கார் வலிபோக்கி உயிர்களுக்குப் போகத்தை விளைவிப்பன் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 3

இல்லக் கோலமு மிந்த இளமையும்
அல்லற் கோல மறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே.

பொழிப்புரை :

இல்லத்திற்கொள்ளும் கோலங்களும் , இந்த இளமையுமாகிய அல்லற் கோலங்களை அறுத்துஉய்ய வல்லமை உடையீராவீர் ; அதற்குக் கடம்பூர்நகர்ச் செல்வக் கோயிலாகிய கரக்கோயிலை விரைந்து சென்று அடைந்து தொழுவீர்களாக .

குறிப்புரை :

இல்லக்கோலம் - மனைவாழ்க்கையாகிய வேடம் . மனைவி மக்கள் தாய்தந்தை சுற்றம் என்று கொண்டொழுகும் பந்த பாசமாம் தோற்றம் . இந்த இளைமையும் - இப்பொழுது நமக்கு வாய்த்துள்ள இளமைத் தோற்றமும் . அல்லற்கோலம் - துன்பத்தைத் தரும் தோற்றரவுகளாம் . அறுத்து உய வல்லிரே - இவற்றைத் துண்டித்துக்கொண்டு உய்திபெற வல்லமையுடையீர் ஆவீர் , பின்னையது செயின் என்றபடி . இளமை இல்லக்கோலம் பூணத் துணையாய் நிற்றலின் இளமைக் கோலத்தையும் வெறுத்தார் . ஒல்லை - விரைந்து . செல்வக்கோயில் - செல்வச் செழிப்புள்ள திருக்கோயில் . நமக்கு அழியாச் செல்வமாகிய திருக்கோயில் எனினுமாம் . ` பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு ` - குறள் 330 என்னும் பொதுமறையின் பிரயோகமே இது .

பண் :

பாடல் எண் : 4

வேறுசிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழக னுறைவிடம்
ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

தம்மைப்பற்றியன்றி வேறு சிந்தனை இல்லாதவர்களது தீவினைகளைக் கூறு செய்யும் குழகன் உறைவிடம் , செல்வம் ஏறுகின்ற தேவர்கள் தொழுகின்ற ஆறு சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

வேறு சிந்தையில்லாதவர் - மனத்தைப் பலவேறு வழிகளில் செல்லவிடாதவர் ; அதாவது சிவனையே சிந்திப்பார் . கூறுசெய்த - துண்டித்த . ` தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால் `. ஏறுசெல்வம் - பெருகும் செல்வம் . ஆறுசேர் - காவிரியாற்றின் வளம்சேர்ந்துள்ள ; அன்பர்கள் நன்னெறியாகிய சிவஞானத்தை அடைதற்கு இடமாகிய எனினும் ஆம் .

பண் :

பாடல் எண் : 5

திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாள னிருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

இடப்பாகத்தே பார்வதியைக் கொண்டதன்றி , திங்கள் பொருந்திய செஞ்சடை மேலும் ஒரு மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் , மணல் நிறைந்த பகுதியில் புன்னையும் , புலிநகக் கொன்றையும் , தென்னையும் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

மேலும் என்பதில் உள்ள இறந்தது தழீஇய எச்ச உம்மை இடப்பாகத்தில் ஒருத்தியைக் கொண்டிருப்பதோடன்றி என்பதைக் காட்டிற்று . ஓர் மங்கை - ஒரு பெண் ; கங்கை . மணாளன் - என்றும் மணக்கோலங்கொண்டிருப்பவன் . பொங்குசேர்மணல் - மிகுந்த மணற்பரப்பு . ஞாழல் - புலிநகக் கொன்றை . தெங்கு - தென்னை . உம்மை விரித்துரைக்க . உமையொரு பாகனாய் உலகத்தைப் படைப்பதோடு அதனை அழியாமைக் காப்பவனும் சிவபிரான் என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

மல்லை ஞாலத்து வாழு முயிர்க்கெலாம்
எல்லை யான பிரானா ரிருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

வளம் பொருந்திய உலகத்து வாழும் உயிர்கட்கெல்லாம் எல்லையாகிய தலைவர் இருப்பிடம் , முல்லை , கொழுத்த மல்லிகை ஆகிய நல்ல மலர்கள் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

மல்லைஞாலத்து - வளம்பொருந்திய இவ்வுலகத்து . எல்லையான பிரானார் - ஆதி அந்தம் என்னும் இரு கோடிகளாகவும் , சென்றடையும் பரமார்த்தமாகவும் உள்ளவன் . கொல்லை - காடு . கொழுந்தகை - நிலவளத்தால் கொழுத்த தன்மையை உடைய . நல்லசேர் - நல்லனவாய எல்லாம் சேர்ந்த .

பண் :

பாடல் எண் : 7

தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்கிட மாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

நெகிழும் இயல்புடைய ஒளிபொருந்திய அரவத்தொடு , தண்மதி வளர்கின்ற பொன்னிறம் உடைய சடையார்க்கு இடமாவது , கிளர்கின்ற பேரொலி உடைய கின்னரம் பாட்டறாத களர் நிலத்தைச் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

தளரும் - நெகிழும் . வாள் - ஒளி . வளரும் - கண்வளரும் அல்லது வளர்ச்சிபெறும் . கிளரும் - விளங்கும் . பேரொலி - மிக்க ஒலியையுடைய . கின்னரம் - ஒருவாச்சியம் . பாட்டறா - பாடுதலை ஒழியாத . களர் - முல்லைநிலம் . முதல்வனை அணைந்தோர் தம்பகைமை தீர்ந்து வாழ்வர் என்பது குறிப்பு . இப்பாடல் பிறிதொரு திருப்பாடலை ( தி .5 ப .19. பா .1) ஒத்திருப்பதை ஓர்க .

பண் :

பாடல் எண் : 8

உற்றா ராயுற வாகி யுயிர்க்கெலாம்
பெற்றா ராய பிரானா ருறைவிடம்
முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

உற்றாராய் , உறவாகி உயிர்க்கெலாம் ஈன்றாராகிய தலைவர் அறிவிற் குறைபாடுடைய முப்புராதிகளின் எயில்களை எய்த முதல்வனார் உறைவிடம் கற்றார்கள் , வாழும் கடம்பூர்க் கரக் கோயிலாகும் .

குறிப்புரை :

உற்றாராய் - உற்றுழி உதவுவோராய் ; நமக்குற்றதைத் தமக்குற்றதுபோலக் கருதும் நெருங்கிய உறவுடையவர் என்றபடி . உறவினர் - தூரக்கேண்மையை உடையவர் . உயிர்க்கெலாம் - எல்லா உயிர்கட்கும் . பெற்றாராய - தாயும் தந்தையுமாகிய . முற்றார் - அறிவு நிரம்பாதவர் . கற்றார் - மெய்ந்நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் .

பண் :

பாடல் எண் : 9

வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானா ருறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

திருநீறணிந்த மேனியவர்க்கெல்லாம் உள்ளத்தில் விளங்கும் தலைவனும் வெண்பிறை சூடிய சென்னியானும் ஆகிய பெருமான் உறைவிடம் கடம்பூரில் உள்ள கள்வன்சேர்ந்த கரக் கோயிலாகும் .

குறிப்புரை :

வெள்ளைநீறு - பால்போன்ற வெள்ளிய திருநீறு . மேனியவர் - உடம்பை உடைய அடியார் . உள்ளமாயபிரான் - மனத் தகத்து எழுந்தருளியிருக்கும் பெருமான் . அடியார் எப்பொழுதும் அப்பெருமானையே எண்ணிக்கொண்டிருத்தலில் உள்ளமாயபிரான் என்றார் . பிள்ளை வெண்பிறை - பிள்ளை மதியாகிய பிறை . கள்வன் - திருமால் ; உள்ளங்கவர்கள்வன் எனக்கொள்ளின் சென்னியனும் , கள்வனுமாகிய பிரானார் உறைவிடம் கடம்பூர்சேர் கரக்கோயில் எனமுடிக்க .

பண் :

பாடல் எண் : 10

பரப்பு நீரிலங் கைக்கிறை வன்அவன்
உரத்தி னாலடுக் கல்எடுக் கல்லுற
இரக்க மின்றி யிறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

நீர்ப்பரப்புச் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனாகிய இராவணன் தன் ஆற்றலினால் திருக்கயிலையை எடுக்கத் தொடங்க இரக்கமின்றிச் சிறிது விரலாற்றலையினை அரக்கினவன் இடம் கடம்பூர்க்கரக்கோயில் .

குறிப்புரை :

பரப்புநீர் - பரவியநீர்; கடல். உரம் - வலிமை. அடுக்கல் - மலை. எடுக்கல்லுற - தூக்க. இறைவிரல் - காற்பெரு விரல். தலை - இராவணன் தலையை. அரக்கினான் - அழுத்தி நெரித்தான். அரக்கினான் இடம் என ஒரு சொல் வருவிக்க.
சிற்பி