திருக்குடமூக்கு


பண் :

பாடல் எண் : 1

பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.

பொழிப்புரை :

குடமூக்கிலே உள்ள பெருமான் , பூவின் வண்ணத்தை உடையவன் , புண்ணியமே வடிவானவன் , அடியார்கள் ஆகும் வண்ணம் நண்ணி யருள்புரிந்து அடிமைச் சீட்டெழுதி ஆட்கொள்பவன் , தீயின் நிறத்தை உடைய செம்மேனியில் திருநீறு பூசியவன் , கோவண ஆடை உடையவன் .

குறிப்புரை :

பூவணத்தவன் - பூவின் நிறத்தையும் , தன்மையையும் ஒத்தவன் . ` பூவண்ணம் பூவின் மணம் போல ` என்றபடி எங்கும் அருளொடு நிறைந்தவன் என்க . புண்ணியம் - புண்ணியமே வடிவானவன் . ` புண்ணியப்பொருளாய் நின்றான் `. நண்ணி - விரும்பி . அடியார்களை அங்கு நண்ணி ஆவணத்துடையான் என்க . ஆவணத் துடையான் - ` என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக்கெழுதிய ஆவணம் ` ( தி .10 திருமந்திரம் ). ஆவணம் - அடிமைச் சாசனம் . சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட வரலாற்றில் காணலாம் . தீவண மெய்யில் திருநீறு பூசி என்க . தீவணமெய் - நெருப்பின் நிறம் போன்ற சிவந்த திருமேனி . தீவண்ண மெய்யில் திருநீறு பூசியதை நீறுபூத்த நெருப்போடு உவமிப்பர் . ஓர் கோவணத் துடையான் - ஒற்றைக் கோவண ஆடையன் . மேற்குத் திசையின் மூலையின் முடுக்கில் அமைந்த கோயிலாயிருந்தமை பற்றி வழங்கியது குடமுடுக்குக் கோயில் என்பது . பிரளய காலத்தில் சகல உயிர்களையும் அடைத்து வைத்த குடத்தின் மூக்கு இருந்த இடம் என்பது புராணம் . குடமூக்கில் உள்ளான் என்க .

பண் :

பாடல் எண் : 2

பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டிய்யுறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

உலகில் உள்ளவர்களே ! நீர் பிறந்து வாளா திரிந்து இறந்து போகாமல் , எல்லா உலகங்களையும் எரித்து சர்வசங்கார காலத்தில் ஆடும் இறைவனின் திறத்தைச் சிந்தையுள் இருத்துவீராக ! வேர்வை தோன்றுமாறு விரைந்து ஆடிய காளியின் ஆடலை வெல்லுமாறு கூத்து ஆடிய பெருமான் குடமூக்கில் உறைபவன் ஆவான் .

குறிப்புரை :

பூத்து ஆடி - இவ்வுலகில் தோன்றிப் பயனற்ற செயல்களைச் செய்து . கழியாதே - இறவாமல் . பூமியீர் - நிலவுலகினராகிய நீவிர் . தீத்தாடி - தீயின்கண் நின்று ஆடுபவன் . தீர்த்து ஆடி எனப் பிரித்துப் பொருள் காணலுமாம் . திறம் - தன்மையை . வைமின் - எண்ணி மனத்திலிருத்துங்கள் . தன்னோடு போட்டியிட்ட காளியுடன் நடமாடி வென்றவன் என்ற வரலாற்றை உட்கொண்டவை பின் இரண்டு வரிகள் . வேர்த்து - சீற்றங்கொண்டு . விசை - ஆடலின் வேகம் . தீர்க என்று - முடிவடைவதாகுக என்று . கூத்தாடி - ஊர்த்துவ தாண்டவத்தை ஆடியவன் . உறையும் - எளியனாய் உலகினர்வந்து வணங்கி அருள் பெறக் குட மூக்கில் எழுந்தருளியிருப்பவன் என்றவாறு .

பண் :

பாடல் எண் : 3

நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி யெனப்படும்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

உமைநங்கையாளை ஒரு பாகத்திற்கொண்ட தலைவர் . அங்கையாளொடு வண்டு தாழ்சடையினளாகிய கங்கையாளும் , உறையும் குடமூக்கில் காவிரியுமாகிய தீர்த்தச் சிறப்புக்கள் உள்ளன .

குறிப்புரை :

நங்கை - மகளிருள் சிறந்தாரை வழங்கும் பெயர் . நங்கையாகிய உமையாளுடன் கூடி உறையும் குடமூக்கில் என்க . கங்கை கன்னி - ஏழு தீர்த்த மாதாக்களில் இருவர் ( கன்னி - காவிரி ). அறுபதம் - வண்டு . தாழ் - மொய்க்கும் . அங்கையாள் - அழகிய கையினள் . இது ஏனைய தீர்த்த மாதாக்களில் ஒருவரைக் குறிப்பது . இத்தலத்திலுள்ள மகாமகதீர்த்தத்தின்கண் கங்கை முதலிய சப்ததீர்த்த மாதாக்கள் நீராடித் தூய்மை பெற்றதாகப் புராண வரலாறு கூறுகிறது .

பண் :

பாடல் எண் : 4

ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னும்மினி தாகும் மியமுனை
சேதா ஏறுடை யானமர்ந் தவிடம்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

ஓதாதே உணர்ந்த முதல்வன் திறத்தை எவ்வளவேனும் கூறினால் இனிதாகும் ; யமுனையும் கோதாவிரியும் தீர்த்தங்களாகப் பொருந்திய குடமூக்கே சிவந்த ஆனேறுடை யானாகிய சிவபிரான் உறையும் இடம் .

குறிப்புரை :

ஓதாநாவன் - ஏனையர்போல நாவால் ஓதாது எல்லாம் உணர்ந்தவன் இயல்பாகவே இயற்கையுணர்வினன் . ` கல்லாமே கலை ஞானம் கற்பித்தானை ` பிறரைப் புகழாத நாவன் எனலுமாம் . திறத்தை - பெருமையின் வகைகளை . உரைத்திரேல் - உரைப்பீரே யானால் . ஏதானும் - இனிய அல்லவும் ; சிறிதளவேனும் ஏதாக இருந்தாலும் எனலுமாம் . இனிதாகும் - தீமையும் நன்மை விளைக்கும் . இயமுனை , யகரம் மொழிக்கு முதலில் வாராமை கருதி இயமுனை என்றாயது . இய முனை - யமுனை நதி . ஏறுடையான் அமர்ந்த இடம் யமுனை கோதாவிரி உறையும் குடமூக்கில் என்க . சேதா ஏறு - பசுவினமாகிய எருது ; ஆனேறு .

பண் :

பாடல் எண் : 5

நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.

பொழிப்புரை :

நல்ல நெஞ்சே ! நீ , திக்குகளையே ஆடையாக உடைய தலைவனும் வக்கரையென்னும் திருத்தலத்து உறைவானும் ஆகிய இறைவனை வணங்குவாயாக ! அக்கு மாலையினையும் , அரவினையும் அரையில் கட்டியவனும் , கொக்கரையென்னும் பாடலையும் கூத்தையும் உடையவனுமாகிய பெருமான் குடமூக்கிலே உள்ளான் .

குறிப்புரை :

நக்கரையன் - உடையில்லாதவன் . வக்கரை உறைவான் - திருவக்கரை என்னும் தலத்தில் எழுந்தருளி இருப்பவன் . நாடொறும் நன்னெஞ்சே நக்கரையனை வக்கரை உறைவானை நீ வணங்கு என்க . அக்கு - சங்குமணி . அரை - இடை . அரவு அரை என்பதற்குப் பாம்புகளின் அரசன் எனலுமாம் . இடையிலே அக்குமணி கட்டியதோடு அரவையும் இடையின்கண் கட்டியவன் என்க . கொக்கரை - கொக்கிறகம்பூ , பாடல் , ஒருவகை வாச்சியம் ; மூன்றுள் ஏற்பன கொள்க .

பண் :

பாடல் எண் : 6

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

பற்றுக்களைத் துறக்கும் நெஞ்சுடையவர்களாகிய தொண்டர்களே ! மறவனாகிய பார்த்தன்மேற் கணைதொடுத்த எம் குறவேடம் கொண்ட பெருமானும் , குடமூக்கில் உறைபவனுமாகிய இறைவனை உமது பிறவி நீங்குமாறு பித்தராய் நின்று பிதற்றுவீர்களாக .

குறிப்புரை :

துறவி நெஞ்சினர் - அகப்பற்று புறப்பற்றை அடியோடு ஒழித்துத் துறவு எய்திய மனத்தை உடையவர் . பித்தராய்ப் பிதற்றுமின் - ஈடுபாடுடையவராய்ப் பலவாறு அவன் புகழைச் சொல்லுங்கள் . மறவனாய் - வீரனாய் . பார்த்தன் - அருச்சுனன் . கணை - அம்பு . தொட்ட - விடுத்த . குறவன் - கிராத வேடந்தாங்கி நின்றவன் . குரவன் என்பது எதுகை நோக்கித் திரிந்ததெனலுமாம் . அப்பொழுது மறவன் என்பதை வேடன் எனக் கொள்க .

பண் :

பாடல் எண் : 7

தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

பழையதாகிய வலிய வினைகளாம் பற்று அற வேண்டுவோரே ! பகைவராகி யெதிர்ந்த முப்புராதிகளது மூன்று நகரங்களையும் ஒரு மாத்திரைப் போதில் எரியுண்ணக் கொண்டவன் உறையும் குடமூக்கில் , தொண்டராகித் தொழுது பணிவீர்களாக !

குறிப்புரை :

தொண்டராகி - தொண்டு செய்யும் அடியவராய் . பண்டை வல்வினைப் பற்று - பழவினைகளாகிய பிராரத்தங்களின் பிணிப்பு அற - நீங்க . வேண்டுவீர் - விரும்புவீராய நீங்கள் . விண்டவர் - திரிபுரப்பகைவர் . ஒரு மாத்திரை - ஒரு கணப்பொழுதில் . கொண்டவன் - அழித்தவன் .

பண் :

பாடல் எண் : 8

காமி யஞ்செய்து காலங் கழியாதே
ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமி யோடு சரச்சு வதியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

பயன் கருதிய செயல்களையே வாளா செய்து காலம் கழிக்காமல் வேள்விகள் பல செய்து , தன் கணவனாகிய பிரமனோடு சரசுவதியும் கோமி ( கோதாவரி ) யும் , உறையும் குடமூக்கிற் பெருமானை , உள்ளத்தே உணர்வீர்களாக !

குறிப்புரை :

காமியம் - மனம் விரும்பியவை . ஓமியம் - ஓம காரியம் . புறத்தே அக்னிகாரியத்தையும் அகத்தே ஆறாதார யோகத்தையும் உணர்த்தும் . குண்டலிகத் தானமான உந்தியில் ஞான அனலை எழுப்பி அதனுள் விந்துத் தானத்து அமிழ்தமான நெய்யைச் சுழுமுனை இடை நாடிகளாகிய சுருக்கு சுருவங்களால் ஓமித்தல் . உள்ளத்து அர்ச்சித்தலாவது - புறப்பூசை போல அகத்தே கொல்லாமை முதலிய அட்ட புட்பங்கொண்டு வழிபடல் . சாமி - சாமை நிறமுடைய யமுனை ஆகலாம் . கோமி - கோதாவிரி . ` தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரைபுட்கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை ` ( தி .6. ப .75. பா .10.)

பண் :

பாடல் எண் : 9

சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம்
குரவ னாருறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

பிரமன் , திருமால் முதலிய தேவர்க்கெல்லாம் பரம ஞானாசாரியனாக விளங்கும் பரமன் உறையும் குடமூக்கில் , பல நாளும் பயின்று சிவனுக்குப் பக்தர்களாக முயற்சி செய்து வாழ்வீர்களாக .

குறிப்புரை :

சிரமம் - வருந்திச் செய்யும் இயமம் நியமம் முதலிய முயற்சி . பத்தர் - அன்புடையவராய் . பயிற்றுமின் - சொல்லிப் பழகுங்கள் . மற்றொழிந்தார்க்கெலாம் - ஏனைய தேவர் முதலானோர்க்கும் . குரவன் - தலைவன் அல்லது ஆசிரியன் .

பண் :

பாடல் எண் : 10

அன்று தானரக் கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுக் கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே.

பொழிப்புரை :

அரக்கனாகிய இராவணன் திருக்கயிலாயத்தை அன்று சென்றுதான் எடுக்க , உமை அஞ்சுதலும் தான் பெரிதும் சிரித்துத் தன் நல்விரலை ஊன்றிப் பிறகு அவனை வருத்திச் சாமவேதம் கேட்ட பெருமான் குடமூக்கிலே உறைபவன் ஆவான் .

குறிப்புரை :

அன்றுதான் - முன்னொரு காலத்தே தான் என்ற முனைப்போடு . எடுக்க - தூக்க . நன்று தான் நக்கு - நன்மை உண்டாகச் சிரித்து . முப்புரமழித்த சிரிப்புப் போல அழியச் சிரித்த சிரிப்பன்று என்பார் நன்று தான் நக்கு என்றார் . கொன்று - வருத்தி . கீதம் - சாமகானம் . உறைவது என வருவிக்க .
சிற்பி