திருநின்றியூர்


பண் :

பாடல் எண் : 1

கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.

பொழிப்புரை :

நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் புரிகின்ற நின்றியூரில் , கடிய கையுடைய கூற்றுவனை உதைத் திட்டவரும் அன்பர்களின் கருத்தில் உறைபவரும் ஆகிய இறைவர் , கொடிய கண்களை உடைய வெள்ளிய கபாலம் கொண்டு , குறை கொண்டு விலைகூவுதற்குப்படும் பொருள் ஏதுமிலராகிய இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்புடையவர் ஆவர் .

குறிப்புரை :

கொடுங்கண் - தோண்டப்பட்ட கண்களை உடைய . குறைவிலைப்படுங்கண் ஒன்று இலராய் - குறைந்த விலைக்கு விற்றுக்கொள்வதோர் இடமுமில்லாதவராய் ` விற்றூண் ஒன்றில்லாத நல்கூர்ந்தான்காண் ` ( தி .6. ப .8. பா .1.) பலி தேர்ந்து - இரந்து . நெடுங்கண் - காதளவு நீண்ட கண்கள் . ஆட்டயர் - நாட்டியம் அயர்கின்ற . கடுங்கை - உலகப்பற்றினின்று உயிர்களைப் பிரித்தல் வலிதாதலின் வலிதாகிய கை என்றார் . கருத்தர் - மூலகாரணர் .

பண் :

பாடல் எண் : 2

வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளற் பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதுபவரும் , விளங்குகின்ற வெள்ளியதோடும் வெள்ளிய சங்கக்குழையும் உடைய காதினருமாகிய ( அர்த்தநாரீசுவரரும் ) எமது கள்வரே ! வீதியில் வேலனைய நீண்ட கண்களை உடைய பெண்களின் வெள்வளைகளைக் கொள்வது தேவரீர்க்கு நீதியோ ? உரைத்தருள்வீராக .

குறிப்புரை :

வீதி - தெருவீதியின்கண் . வேல்நெடுங்கண்ணியர் - வேல் போன்று கூரிய நீண்ட கண்களை உடைய தாருகாவனத்து முனிபன்னியர் . வெள்வளை - சங்க வளையல்களை . கொளற் பாலது நீதியே - கொள்வது முறையோ . காதலால் மெலிந்த பெண்களின் கைவளை சோரும் என்பது அகப்பொருள் இயல்பு . வெண் தோட்டராய் - வெண்மையான ஒளி செய்கின்ற தோடணிந்தவராய் . காதில் குழைவைத்த - மற்றொரு காதில் குழையணிந்த . தோடு குழை என்பன மாதொருபாகராய இயல்பு குறித்தன . கள்வர் - பிச்சை கொள்ள வந்து வெள்வளையோடு உள்ளத்தைக் கொண்டவர் ஆதலால் எம் கள்வர் என்றார் .

பண் :

பாடல் எண் : 3

புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.

பொழிப்புரை :

புற்றினைப் பொருந்திய அரவினைப் புலித் தோலின்மேல் சுற்றியவரும் , திருநீற்றைப் பூசிய மேனியினரும் , சுடர் நெற்றிக்கண்ணை உடையாருமாகிய இறைவர் அமர்கின்ற நின்றியூரைப் பற்றிய அன்பர்களை , வினைகளும் அவற்றான் வரும் பாபங்களும் பற்றமாட்டா .

குறிப்புரை :

புற்றினார் அரவம் - புற்றில் உறைகின்றதாகிய பாம்பு . புலித்தோல்மிசை - புலித்தோலின்மேல் . சுற்றினார் - வரிந்து கட்டினார் . சுண்ணப்போர்வை - உடலைப் போர்த்தது போன்ற திருநீற்றுப் பூச்சு . சுடர் - நெருப்பாகிய . அமர் - எழுந்தருளியுள்ள . பற்றினாரை - வணங்குதலை நிலையாகக் கொண்டவர்களை . பற்றா - பற்றமாட்டா . வினை பாவம் - தீவினையும் பாவமும் . வினை - தூலவினை ; ஆகாமியம் . பாவம் - சூக்குமவினை ; சஞ்சிதம் .

பண் :

பாடல் எண் : 4

பறையி னோசையும் பாடலி னோசையும்
மறையி னோசையும் மல்கி யயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையு மீசனை யுள்குமென் னுள்ளமே.

பொழிப்புரை :

பறையின் ஓசையும் , தெய்வப்பாடல்களின் ஓசையும் , வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது .

குறிப்புரை :

பறை - தோற்பறை ; வாத்திய விசேடம் . மல்கி - நிறைந்து . அயல் எலாம் - ஊர்ப்புறமெங்கும் . நிறையும் - நிறைகின்ற . பூம்பொழில் - பூக்களை உடையதாகிய சோலை . உள்கும் - எண்ணும் .

பண் :

பாடல் எண் : 5

சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே.

பொழிப்புரை :

நினைத்தற்குரிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில் . பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் உரியினைப் போர்த்த பரமரே ! சுனையிற் பூத்த நீல மலரும் தோற்றுச் சுளித்தற் கேதுவாய் நெடுங்கண்களை உடையளாகிய இவள் ! இத்தன்மை உடையவன் , என்று என்றும் ஏசுவதன் காரணம் என்னை ?

குறிப்புரை :

சுனையுள் நீலம் - சுனையில் பூத்த நீலப்பூவை ( வெகுளும் ). நெடுங்கணாள் - நீண்ட கண்ணை உடையவள் . இனையன் என்று - காதலித்தாரைக் கை விட்டவன் என்று . என்றும் - நாடோறும் . ஏசுவது - பழித்துரைப்பது . என் கொலோ - யாது காரணத்தாலோ . நினையும் - எல்லோராலும் விரும்பி நினைக்கப்படும் . பனையின் ஈருரி - பனை போன்ற கையை உடையதாகிய யானையை உரித்த தோலை .

பண் :

பாடல் எண் : 6

உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனில்
திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.

பொழிப்புரை :

உரைப்பக் கேட்பீராக ; நும் சென்னியின்கண் உள்ள சிவபிரானை , வரிசையாகிய பொன்மதில் சூழ்ந்த திருநின்றியூரில் மாற்றுரைக்கத்தக்க பொன் போன்ற கற்றைச் சடையுடையராகிய இவரை ஆர் என்று வினவுவீராயின் , அலைத்துப் பாடித் திரிதரும் செல்வர் இவர் .

குறிப்புரை :

நும் உச்சியுளான் - உங்கள் தலைமேல் உள்ளவனாகிய பெருமான் . நிரைப்பொன் - வரிசையான அழகிய ; மா - பெரிய . உரைப்பொன் - மாற்றுரைக்க வைத்த பொன் . இவர் ஆரோ என்னில் எனக்கூட்டுக . திரைத்து - அலைத்து . அழித்து . திரிதரும் - அலையும் .

பண் :

பாடல் எண் : 7

கன்றி யூர்முகில் போலுங் கருங்களிறு
இன்றி ஏறல னாலிது என்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை யெங்கள் விகிர்தனே.

பொழிப்புரை :

திருநின்றியூரைப் பதியாகப் பொருந்தியவனும் , வெற்றிமிக்க ஆனேறு உடையவனுமாகிய எங்கள் விகிர்தன் , கறுத்து ஊர்ந்து வருகின்ற முகில்போன்ற கருங்களிறு இன்றி வேறு ஏறி ஊராதது என்னையோ ?

குறிப்புரை :

கன்றி - கறுத்து . ஊர்முகில் - வானத்தே மெதுவாய்ச் செல்லும் மேகம் . கருங்களிறு . கரியயானை . யானையைக்கொள்ளாது ஏற்றைக்கொண்ட பெருமான் நடந்து வருதல் என்ன காரணமோ என்க . ஏறலனால் - ஏறாதவனாயினான் . இதுஎன்கொலோ - இதற்குக் காரண மென்னவோ ? ` கடகரியும் பரிமாவும் தேருமுகந்தேறாதே இடப முகந்தேறியவாறு `. நிலாயவன் - விளங்கியவன் . வென்றியேறு - வெற்றிக்குரியதாகிய எருது . விகிர்தன் - மாறுபட்ட செயல்களை உடையன் ; ஏறுடையவன் .

பண் :

பாடல் எண் : 8

நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயி லெய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னால்தொழு வார்வினை யோயுமே.

பொழிப்புரை :

நிலையில்லாத வெள்ளெலும்புகளை மாலையாக உடையவனும் , நீண்டதோர் கொல்லுந்தொழிலுடைய வில்லால் எயில் எய்த கொடியவனும் , நிலையினார் வயல்சூழ் திருநின்றியூர் இறைவனும் ஆகிய பெருமானை மொழியினாற் பாடித் தொழுவார் வினைகள் கெடும் .

குறிப்புரை :

நிலையிலா - நிலையற்றவர்களுடைய . வெள்ளை மாலையன் - வெண்ணிறமுடையதாகிய எலும்பு மாலையை அணிந்தவன் . கொலைவிலால் - கொல்லும் தொழில் செய்யும் வில்லால் . எயில் - திரிபுர மதில்களை கொடியவன் - பகைவர்க்குக் கொடியவனாயிருப்பவன் . நிலையின் ஆர் - நிலைத்த தன்மை பொருந்திய உரையினால் தொழுவார் - தோத்திரிப்பார் . ஓயும் - மெலியும் .

பண் :

பாடல் எண் : 9

அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! இஞ்சியாகிய மதிலையுடைய முப்புரங்களை எய்து , தேவர்கள் தொழ , தன்சடையில் வெள்ளிய பிறையைச் சூடிய கூத்தன் உறைகின்ற நின்றியூரை , நீ , அஞ்சியாயினும் , அன்பினைப் பொருந்தியாயினும் நினைத்து உய்வாயாக .

குறிப்புரை :

அஞ்சியாகிலும் - அச்சம் கொண்டாவது . அன்பு பட்டாகிலும் - அன்பு கொண்டாவது . பயபக்தி இரண்டில் ஒன்றையேனும் கடைப்பிடித்து என்றபடி . வாழி முன்னிலையசை . நெஞ்சம் - மனமே ; அண்மைவிளி . நின்றியூரை நீ நினை என்க . இஞ்சி - கோட்டை மதில் . இஞ்சிமாமதில் இருபெயரொட்டு . கோட்டை , மதில் என்றபடி . எய்து - அழித்து . குஞ்சிவான்பிறை - தலையில் சூடிய இளைய அழகிய பிறை .

பண் :

பாடல் எண் : 10

எளிய னாமொழி யாவிலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்றவல் லானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே.

பொழிப்புரை :

எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நெளியுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும் .

குறிப்புரை :

எளியனாமொழியா - யாரிடத்தும்தான் எளியனாய் மொழிபயிலாத ; பிறரால் எளியன் என்று சொல்லப்படாத . இறை - தலைவன் . களியினால் - மகிழ்ச்சி மயக்கத்தால் . நெளிய - துன்பமுற . அளியினால் - அன்பினால் . அல்கும் - இல்லாமற்போகும் .
சிற்பி