திருவொற்றியூர்


பண் :

பாடல் எண் : 1

ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை
ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை யோயுமே.

பொழிப்புரை :

ஒளி விளங்குகின்ற மதி பாம்பினை ஒற்றி ஊரும் ; பாம்பும் அம்மதியினைக் கொள்வதற்காக ஒற்றி ஊர்ந்து வரும் ; இவ்வாறு இவை ஒன்றையொன்று ஒற்றி ஊரும்படியாக ஒருசடையில் வைத்த சிவபெருமானுக்குரிய ஒற்றியூரைத் தொழ நம்வினைகள் ஓயும் .

குறிப்புரை :

பாம்பும் மதியும் - தம்மிற் பகையாயினும் ஒளிமதி பாம்பினை ஒற்றி ஊரும் என்க . ஒற்றி - பொருந்தி . ஊரும் - ஊர்ந்து செல்லும் . அப்பாம்பும் அதனை ஒற்றி ஊரும் . ஒற்றி ஊரும் என்ற சொற்கூட்டுக்கு இங்கும் மேலதே பொருள் . ஒற்றி ஊர - பாம்பும் மதியும் பற்றி ஊர்ந்து செல்ல . ஒரு - ஒப்பற்ற . ஓயும் - உள்ளதனிற் குறையும் ( தொல் - சொல் . 330). உயிர்ப்பகை தீர்ப்பவன் என்பதில் உயிர்கட்குப் பகையாகிய ஆணவப்பகையின் வலியைப் போக்குவன் ஆதலின் தொழ வினை ஓயும் என்க .

பண் :

பாடல் எண் : 2

வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிரு ளாடி யிடுபிணக்
காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்தலைக் கையொற்றி யூரரே.

பொழிப்புரை :

மலையரசன் மகளாகிய உமாதேவியார் தளர்ச்சியாகிய ஒன்று உரைக்க , பேய்க்கணங்கள் நெருங்க நள்ளிரு ளின்கண் இடுபிணக்காட்டில் ஓரி கடிக்கும்படியாக எடுத்த துளை உடைய வெண்தலையினைக் கையிலே உடையவர் ஒற்றியூர்த் தலத்து இறைவர் .

குறிப்புரை :

வாட்டம் ஒன்று - ஒரு வருத்தத்தை . மலையான் மகள் - பார்வதி . ஈண்டவே என்பது ஈட்டவே என வலித்தது . அணுகி - உடனாயிருக்கவே . ஆடி - ஆடுதலைச் செய்பவன் . தன் கணவன் இருளிலே பேய்களோடு சுடலையாடுகிறான் என்பதால் உமை வருந்தியதாகக் கூறியது என்க . இடு பிணக்காடு - பிணங்களை இட்டுச்சுடும் காடு என்க . ஓரி - நரி . ஓடு - மண்டை ஓடு . ஒற்றியூரரே மலையான் மகள் வாட்டம் ஒன்று உரைக்கும் என்க . இடுகாட்டில் இட்ட பிணத்தை நரி கடித்துத்தின்ன அதனால் தசை கழிந்த மண்டை ஓடு என்க . வெண்தலை ஓட்டை என்று மாறுக . கை - கையின்கண்ணே உடைய .

பண் :

பாடல் எண் : 3

கூற்றுத் தண்டத்தை யஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே.

பொழிப்புரை :

கூற்றுவனால் வருந்தண்டமாகிய இறப்புக்கு அஞ்சி , அறத்தின் ஆற்றினால் அனைத்தையும் இயக்கும் சிவபிரானடியைக் குறிக்கொள்ளுவீராக ! திருநீற்றினைப்பூசி வணங்கி யெழுந்து நினைக்கின்ற அன்பர்க்கெல்லாம் இனிப்பு ஊறும் கரும்பினை ஒத்து இனிப்பர் ஒற்றியூர்த்தலத்து இறைவர் .

குறிப்புரை :

கூற்றுத் தண்டம் - இயமவாதனை . உயிர்களுக்கு இயமன் விதிக்கும் தண்டனை . அஞ்சி - பயந்து . அறநெறிக் கண்ணதாகிய தண்டத்தினால் மிகை செய்வாரை அடக்கும் அரன் . ஆற்றுத் தண்டத்தும் :- இங்ஙனம் அடக்க இயலாத கூற்றுவன் சலந்தரன் முதலானோரை ஒறுத்தலினின்று உணர்க . குறிக்கொண்மின் - குறியாக்கிக் கொண்டு தொழுங்கள் . ஆற்றுத் தண்டத்தால் அடக்கும் அரனடியைக் கூற்றுத்தண்டத்தை யஞ்சிக் குறிக்கொண்மின் என்க . நீற்றுத்தண்டத்தராய் - நீற்றராய் தண்டத்தராய் என்று கொள்க . திருநீறணிந்து வணங்கித் தெண்டம் செய்பவராய் . ஊற்றுத்தண்டு - கரும்பு . ஊன்று கோல் . இரட்டுற மொழிந்து கொள்க . வழுக்குழி உதவி , அணைந்துழிப் பேரின்பம் பயப்பர் .

பண் :

பாடல் எண் : 4

சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்புக் குறையு மொருவரே.

பொழிப்புரை :

மற்றையூர்களிலெல்லாம் சென்று பலி தேர்ந்து பெற்று மீண்டுபோய் ஒற்றியூரிற்புக்கு உறையும் ஒப்பற்றவராகிய இறைவர் பாய்கின்ற புலியினையுரித்த தோலுடையினராய் , சுற்றி நிற்கின்ற பேய்கள் சுழலச் சுடுகாட்டின்கண் கையில் எரியினைப் பற்றி ஆடும் இயல்பினர் .

குறிப்புரை :

சுற்றும் - சுற்றிலும் . சுழல - தம்மோடு சுழல . எரிபற்றி - எரியேந்தி . பாய்புலி - பாய்கின்ற புலி . பலிதேர்ந்து - இரந்துண்டு . எல்லா ஊர்களிலும் சென்று பலியேற்று ஒற்றியூரை உறையும் இடமாகக் கொண்ட ஒருவர் என்பதாம் . ஒருவர் - ஏகன் என்று வேதாந்தங்களால் கூறப்படும் முதல்வன் .

பண் :

பாடல் எண் : 5

புற்றில் வாளர வாட்டி யுமையொடு
பெற்ற மேறுகந் தேறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை வானோர் கபாலியே.

பொழிப்புரை :

மற்றையவர்களோடு தேவர்களும் தொழுமாறு ஒற்றியூரில் உறைவானாகிய கபாலம் கைக்கொண்ட இறைவன் புற்றிலுறையும் வாள்போன்று வருத்தந்தரவல்ல பாம்பினை ஆட்டி உமையோடு ஆனேற்றின்மேல் உயர்ந்து ஏறித்தோன்றும் பெருமையை உடையவன் .

குறிப்புரை :

புற்றில் வாளரவு - புற்றில் உள்ள ஒளி பொருந்திய நாகம் எனலும் ஆம் . பெற்றம் ஏறு - பசுவினமாகிய எருது . மற்றை யாரொடு - நிலவுலகில் வாழ்வோர் . கபாலி - கபால மேந்தியவன் .

பண் :

பாடல் எண் : 6

போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.

பொழிப்புரை :

போதுகளைவிட்டுப் பூத்த புதுமலர்களைக் கொண்டு கங்கையைத் தாழ்சடையின் கண் வைத்த மணாளனாரும் , திருவொற்றியூரில் வேதம் ஓதும் வித்தகரும் ஆகிய பெருமானின் திருவடிகளை ஏத்தினால் நம் பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

போது - காலந்தோறும் எனலும் ஆம் . தாழ்ந்து - வணங்கி அல்லது மனம் விரும்பி . நீர்மாது - கங்கை . தாழ்சடை - தங்கியுள்ள சடை . ஓதுவேதியனார் - வேதங்களை ஓதியருளியோன் . எல்லாராலும் புகழ்ந்தோதப்படும் வேதம் விரித்த பெருமான் எனலுமாம் . பறையும் - அழியும் . ஒற்றியூர் மணாளனார் பாதமேத்தப் போது தாழ்ந்து புதுமலர்கொண்டு ஏத்த நம் பாவம் பறையும் .

பண் :

பாடல் எண் : 7

பலவும் அன்னங்கள் பன்மலர் மேல்துஞ்சும்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு வொற்றியூர்
நிலவி னானடி யேயடை நெஞ்சமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! அன்னங்கள் பலவும் பலமலர்கள் மேல் தூங்குவதும் கருமை உடைய இருள் விளைத்தலைக் கண்டு பைம்பொழிலை அங்கு உலவும் தோகையுடைய மயில்கள் மேகமெனக் கருதிப் பின் அவையின்மை தெரிந்து வெட்கமுறுதற் சிறப்புடையதுமாகிய திருவொற்றியூரில் விளங்குகின்ற இறைவன் திருவடிகளையே அடைவாயாக !

குறிப்புரை :

அன்னங்கள் பலவும் என்க . பன்மலர்மேல் - பல மலர்களின்மீது . துஞ்சும் - உறங்கும் . கலவமஞ்ஞை - கலாபத்தோடு கூடிய மயில் . காரென - மேகமென்று எண்ணி . வெள்குறும் - நாணமடையும் . அன்னங்கள் உறங்கும் பல மலர்களை உடைய பொழிலை , மயில்கள் மேகங்கள் என்றெண்ணிச் சென்று பின் பொழிலென உணர்ந்து நாணும் . செறிந்த பொழில் என்க . உலவு - சூழ்ந்த . நிலவினான் - விளங்கினவர் ; நிலவையணிந்தவன் .

பண் :

பாடல் எண் : 8

ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
ஒன்று போலு முதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுகந் தாரொற்றி யூரரே.

பொழிப்புரை :

உயர்ந்து அவர் ஏறியதும் ஒரு விடையினை ; உதைத்துக் களைந்ததும் ஒரு கூற்றுவனை ; சூடியதும் ஒளி விளங்கும் ஒரு மதியினை ; இவையனைத்தும் ஒன்றுபோல் உகந்தவர் ஒற்றி யூர்த்தலத்து இறைவர் .

குறிப்புரை :

உகந்து அவர் ஏறிற்று - மகிழ்ந்து அப்பெருமான் ஏறியது . ஒன்று - இடபம் ஒன்றே . போலும் அனைத்தும் ஒப்பில் போலி ; உரையசை , உதைத்துக்களைந்தது - காலால் உதைத்து நீக்கியது . ஒன்று - அடியர் பெருமை எண்ணாத இயமனின் பிழை . சூடிற்று ஒளிமாமதி ஒன்று . உகந்தது - விரும்பிக்கொண்டது . ஒன்று - ஒற்றியூராகிய ஒன்றை . திருவொற்றியூரர் அத்தலத்தையே தாம் விரும்பும் இடமாகக் கொண்டார் . ஒன்று - ஒன்றுதல் ; அதாவது ஏகனாகி அவனருள்வழி நிற்றல் .

பண் :

பாடல் எண் : 9

படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் நீற்றினர்
உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர்
அடையு முள்ளத் தவர்வினை யல்குமே.

பொழிப்புரை :

பூதப்படை கொண்டவரும் , வேதத்தவரும் , இனியகீதத்தவரும் , சடையிற்கொண்ட கங்கையினரும் , சாந்தமெனப் பூசும் வெண்ணீற்றினரும் , தோலை உடையாக உகந்தவரும் ஆகிய பெருமான் உறைகின்ற ஒற்றியூரை அடையும் உள்ளத்தவர்களின் வினைகள் சுருங்கும் .

குறிப்புரை :

படைகொள்பூதத்தர் - பூதப்படை கொண்டவர் . வேதத்தர் - வேதமோதுபவர் . கீதத்தர் - இசைபாடுபவர் . சாந்த வெண்ணீற்றினர் - வெண்ணீற்றைச் சாந்தமாகக் கொள்பவர் . உடையும் தோல் உகந்தார் - தோலையும் உடையாக ஏற்றுக்கொண்டவர் . அல்கும் - சுருங்கும் .

பண் :

பாடல் எண் : 10

வரையி னாலுயர் தோளுடை மன்னனை
வரையி னார்வலி செற்றவர் வாழ்விடம்
திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே.

பொழிப்புரை :

மலையென உயர்ந்த தோள்களை உடைய மன்னனான இராவணனை ஒரு சிறு எல்லையில் ஆற்றல் கெடுத்த பெருமான் வாழும் இடம் , அலைகள் பக்கங்களிற்சூழ்ந்த திரு வொற்றியூர் ; அதனை வாக்கினாற் கூறி விளக்கமுறுவோரே உயர்ந்த வராவர் .

குறிப்புரை :

வரையினால் உயர் - மலைபோன்று உயர்ந்த. ஆல் அசை. மன்னன் - இராவணன். வரையினார் - கயிலைமலைக் குரியவர். வலிசெற்றவர் - வலிமையை அழித்தவர். திரையினார் புடை சூழ் - அலைகளால் சூழப்பட்ட. உரையினால் பொலிந்தார் - புகழ்ந்து பேசுவதால் விளக்கம் அடைந்தவர்கள். திருவொற்றியூரைப் பற்றிய இத்திருப்பதிகத்தை ஓதி விளக்கம் எய்தினார், உயர்ந்தவர்களாவர் என்று உரைத்தலும் ஒன்று. அப்பர் சுவாமிகளும் தமது பதிகப்பயன் உரைத்தது நமச்சிவாயப் பதிகம் கொண்டுணர்க.
சிற்பி