திருப்பாசூர்


பண் :

பாடல் எண் : 1

முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்திப்பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்திக் கோன்தனக் கேயருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

வரிசையாகிய அடர்ந்த செஞ்சடையுடையவராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் முதற்கண் முப்புரங்களை எய்த முதல்வர் ; சிந்திப்பவர்களின் வினைகளைத் தீர்க்கும் செல்வர் ; சந்திரனுக்கு அருள் செய்த தண்ணளியாளர் .

குறிப்புரை :

முந்தி - தேவர்கள் முறையிட்ட ஒலியின் எதிரொலி அடங்குமுன் . ` மணியைக் கையால் நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறிய தில்லையிப்பால் தீயாய் எரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே ` கணை எய்யுமுன் எனலுமாம் . மூவெயில் - திரிபுரம் . தீர்த்திடும் - அழிக்கும் . திரிபுரமெரித்த விரைவுபோல நினைக்குமுன் வினை தீர்ப்பான் என்க . அந்திக்கோன் - சந்திரன் . ஏ - அசை . பந்திச் செஞ்சடை - வரிசையாய் முளைத்துச் சிவந்த சடை . பந்தி - கற்றை ; பின்னல் என்ற பொருள்கட்கும் பொருந்தும் சொல் .

பண் :

பாடல் எண் : 2

மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

படர்ந்தெழும் நாகத்தைப் பூண்ட திருப்பாசூர்த் தலத்து இறைவர் . உமாதேவியை ஒரு பாகத்து மகிழ்ந்த மணவாளர் ; உயிர்களைப் பிறவிதோறும் தொடர்ந்து வரும் வல்லமை உடைய வினைகளாகிய இருளைப் போக்கிடும் ஒளி வடிவானவர் ; எல்லை கடந்த இயமனைக் கால்கொண்டு பாய்ந்து உதைத்தவர் .

குறிப்புரை :

மடந்தை - பார்வதி . பாகம் மகிழ்ந்த - இடப்பாகத்தே கொண்டு மகிழ்வெய்திய . தொடர்ந்த - நம்மைத் தொடர்ந்துவந்த . வல்வினை - தம் பயனை ஊட்டாது அழியாத வலிய வினைகள் . கடந்த - எல்லைமீறித் தம்மை வழிபடுபவரிடம் வந்த . கால்கொடு பாய்ந்தவர் - திருவடியால் சினந்தவர் . படர்ந்த - சுற்றிய .

பண் :

பாடல் எண் : 3

நாறு கொன்றையும் நாகமுந் திங்களும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பருந்துகள் அலைக்கும் மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் , மணம்வீசும் கொன்றையும் , நாகமும் , திங்களும் , கங்கையாறும் செஞ்சடையில் வைத்த அழகர் ; கரியகண்டத்தர் ; கையிற்பிடித்த சூலத்தர் .

குறிப்புரை :

நாறு - மணம் கமழ்கின்ற . நாகம் - பாம்பு . காறு - கறுத்த . பாறினோட்டினர் - சிதறுதலை உடைய . ( இன அடை ) மண்டை ஓட்டை உடையவர் என்றும் கூறலாம் . இன் - அசை .

பண் :

பாடல் எண் : 4

வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
ஒற்றி யேறுகந் தேறு மொருவனார்
நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப்
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

நீண்ட அரவினைப் பற்றியாட்டும் , இயல்பினர் ஆகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் , வெற்றியூரில் உறையும் வேதியர் , ஏற்றினை ஒற்றி உகந்து ஏறும் ஒப்பற்றவர் , நெற்றிக் கண்ணினர் .

குறிப்புரை :

வெற்றியூர் - தேவார வைப்புத்தலங்களில் ஒன்று . ஒற்றி - ஊர்ந்து , பொருந்தி , உகந்து எனலுமாம் . ஒன்றி ஒற்றி ஆயிற்று எனக்கொண்டு ஒற்றை ஏறு என்றலும் ஒன்று . ஏறு - இடபம் . ஏறும் . எழுந்தருளும் . பற்றி - பிடித்து .

பண் :

பாடல் எண் : 5

மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் . தேன் விரிந்த மலர்களையணிந்த நீண்ட கண்ணுடைய உமாதேவியார்பால் விருப்பமும் வேட்கையும் உடையவராயிருப்பவர் ; இவர் தீயவரேல் இவரது சூழ்ச்சித் தன்மைகளை அறியேன் .

குறிப்புரை :

மட்டு - தேன் . நெடுங்கண்ணிபால் - தலைவி இடத்து . இட்டம் - விருப்பம் . வேட்கை - ஆசை . துட்டரேல் - இப்பொழுது துஷ்டராக இருப்பாரேயானால் . சூழ்ச்சிமை - கருதும் எண்ணம் . அறிந்திலேன் - முன்னர் அறிந்திலேன் . பட்ட நெற்றியர் - நெற்றிப்பட்டம் என்னும் அணிகலன் அணிந்த நெற்றியை உடையவர் ; அகத்துறைப்பாடல் ; தோழி அல்லது செவிலி கூற்று .

பண் :

பாடல் எண் : 6

பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லிப் போய்ப்புகு மூரறி யேன்சொலீர்
பல்கு நீற்றினர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

நிறைந்த திருவெண்ணீற்றினராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் , பல்லில்லாத ஓட்டினைக் கையேந்திப் பகலெல்லாம் வெயிலில் நின்று இடுகின்ற பலியினை ஏற்பவர் ; சொல்லிவிட்டுச் சென்று புகுந்த ஊரினை அறியேன் ; சொல்லுவீராக .

குறிப்புரை :

பல்லில் ஓடு - பல இல்லங்களிலும் , பல் இல்லாத மண்டையோடு எனலுமாம் . பகலெலாம் ஓடு ஏந்தித் திரிவார் என்க . எல்லி நின்று - வெயிற்பொழுதில் ஓரிடத்தில் நின்று . இடுபெய்பலி - மண்டை ஓட்டில் இட்ட உணவை . ஏற்பவர் - ஏற்று உண்பவர் . பல்கு - நிறைந்த . சொல்லிச் சென்று தங்கும் ஊர் இது என அறியேன் . அறிவீராயின் சொல்லுங்கள் . அகத்துறைப் பாடல் தலைவி அல்லது தோழி கூற்று . பல்குதல் - மிகுதல் .

பண் :

பாடல் எண் : 7

கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவந் தில்புகுந் தவ்வவர்
இட்ட மாவறி யேனிவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் கட்டிவிட்ட சடையை உடையவரும் , கபாலம் கைக்கொண்டவரும் எட்டிப்பார்த்து இல்லத்தில் புகுந்தவரும் ஆகியர் . இவர் விரும்பிச் செய்வன இவையென யான் முற்ற அறியேன் .

குறிப்புரை :

கட்டிவிட்ட - கட்டிமுடித்த . கபாலியர் - கபால மேந்தியவர் . எட்டி நோக்கி - தம்மை யாரும் காணாதபடி எட்டிப்பார்த்துக் கொண்டு . அவ்வவர் இல் புகுந்து - ஒவ்வொருவர் வீட்டிற்குள்ளேயும் நுழைந்து . இட்டமாய் இவர் செய்வன - தம் விருப்பம் போல் இவர் செய்வனவற்றை . அறியேன் - உணர்வதன்றி எடுத்துச் சொல்லும்வகை அறியாதவளாகி இருக்கின்றேன் . அகத்துறைப் பாடல் . தலைவி கூற்று .

பண் :

பாடல் எண் : 8

வேத மோதிவந் தில்புகுந் தாரவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பாதி வெண்பிறையணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர் , வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார் ; காதில் வெண்குழை வைத்த கபாலியார் ; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார் .

குறிப்புரை :

அவர் - பாசூர்ப்பெருமான் . வேதமோதிவந்து - வேதங்களை ஓதிக்கொண்டு வந்து . இல்புகுந்தார் - வீட்டிற்குள்ளே புகுந்தார் . வைத்த - அணிந்த . நீதி ஒன்றறியார் - நீதி சிறிதும் அறியாதவராய் . நிறை கொண்டனர் - பெண்களின் நிறை என்னும் குணத்தைக் கவர்ந்தார் . பாதி வெண்பிறை - இளம்பிறையைக் கூறும் சொல்வழக்கு . மாதொரு கூறன் ஆதலின் இறைவர்க்கு உரியது பாதி வெண்பிறை ஆயிற்று எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 9

சாம்பல் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பன் மூதெரு தேறு மொருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

தீயதாகிய பாம்பினையும் பற்றி ஆடுபவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் , சாம்பல் பூசுவர் ; தாழ்கின்ற சடையினைக் கட்டுவர் ; தாங்கும் இயல்புள்ள முதிர்ந்த எருதினையேறும் ஒருவர் ; ஒளிதேம்பிய வெண்மதியைச் சூடுவர் .

குறிப்புரை :

சாம்பல் - சர்வசங்காரச் சுடலைப்பொடி . தாழ்சடை - தொங்கிய சடைகளை . ஓம்பல் - காத்தல் ; தாங்குதல் . தாங்கும் இயல்புள்ள அறமே விடையாகலின் ஓம்பல் மூதெருது என்றார் . மூது - பழமை ; அழியாமை . மால்விடை எனக்கொண்டு காத்தல் தொழிலையுடைய எருதெனினுமமையும் . தேம்பல் - இளைத்தல் . தீயதோர் - கொடியதொரு .

பண் :

பாடல் எண் : 10

மாலி னோடு மறையவன் தானுமாய்
மேலுங் கீழு மளப்பரி தாயவர்
ஆலின் நீழ லறம் பகர்ந் தார்மிகப்
பால்வெண் நீற்றினர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பால்போன்ற வெண்ணீற்றையணிந்தவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் மாலினோடு பிரமனும் மேலும் கீழும் அளந்தும் காண்டற்கரியவர் ; ஆலின்நீழல் இருந்து அறம் பகர்ந்த ஞானவடிவினர் .

குறிப்புரை :

மறையவன் - வேதங்களை ஓதுபவனாகிய பிரமன் . ஆலின் நீழல் - கல்லாலின் நீழலிலே அமர்ந்து . அறம்பகர்ந்தார் - ஞானநெறியை உலகிற்கு உபதேசித்தவர் . அளப்பரிது - அளப்பரிய பொருள் . சோதிப் பிழம்பு . மிக - மிகுதியாக . பால் வெண்ணீற்றினர் - பால்போலும் வெள்ளிய திருவெண்ணீறணிந்தவர் .

பண் :

பாடல் எண் : 11

திரியும் மூஎயில் செங்கணை யொன்றினால்
எரிய எய்தன ரேனு மிலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினால்
பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பருப்பொருளும் , நுண்பொருளுமாகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் , திரியும் மூன்று புரங்களைச் சிவந்த கணையொன்றினால் எரியுமாறு எய்தனரேனும் , இலங்கையரசன் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர் ஆவர் .

குறிப்புரை :

திரியும் - பல ஊர்களையும் அழித்தற்குச் சுற்றித் திரியும் . செங்கணை - சிவந்த நெருப்பாகிய கணை அல்லது நேரிதாகிய அம்பினாலே . எரிய - எரிந்தழிய . நெரிய - உடல்நெரிய . ஊன்றியிட்டார் - ஊன்றினார் . பரியர் நுண்ணியர் - பெரிதினின் பெரியர் ; நுண்ணிதின் நுண்ணியர் ; ` அண்டங்களெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும் `. ( திருவிளை . கடவு . வாழ்த்து .7) தூலசூக்கும வடிவினர் எனலுமாம் .
சிற்பி