திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்தலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர் பாம்பரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றின் கண் எழுந்தருளியுள்ள இறைவர் , அன்பர்களின் சிந்தையின்கண் வந்து பொருந்துதல் உடையவர் ; சீர்மை உடையவர் ; பொந்துகளை உடைய நீண்ட புலால் உடைய வெண் தலையைக் கையில் ஏந்தியவர் ; முந்துகின்ற வாயை உடையதோர் மூவிலைவேல் பிடித்து , அந்தியைப் போன்று சிவந்த வாயினதோர் பாம்பினை அணிந்தவர் ஆவர் .

குறிப்புரை :

வந்து சிந்தை - எழுந்தருளி அடியார்கள் மனத்தை . வாய்தல் - ஆட்சி செலுத்தும் வழி . சீரியன் - மேலோன் . பொந்து ஆர் - கண் , வாய் காது முதலான பொந்துகளை உடைய . முந்தி - முற்பட்டதாய . வாயது - கூரிய முனையை உடைய . அந்தி வாயது - மாலையில் வெளிப்போந்துலவுவது என்றும் அம் தீ வாயது எனப் பிரித்துத் தீய விடத்தை வாயின்கண் உடையது என்றும் பொருள் கொள்ளலாம் .

பண் :

பாடல் எண் : 2

பாகம் மாலை மகிழ்ந்தனர் பால்மதி
போக ஆனையி னீருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெயஞ் சாடுமை யாறரே.

பொழிப்புரை :

ஒருபாகத்தே திருமாலை உடையவர் . பால்மதியை மகிழ்ந்தளித்தவர் . இடர்கள்போக ஆனையின் உரியைப் போர்த்தவர் , தோள்களில் கொன்றைமலர் சூடியவர் . ஆனைந்து ஆடுபவர் .

குறிப்புரை :

பாகம் - உடம்பின் ஒரு பாகத்தே . மாலை - திருமாலைக் கொண்டு . பால்மதி சூடி மகிழ்ந்தனர் என்க . போக - தேவர்களின் இடர்கள் போகும்படி . கோகு - தோள் . கோகம் குலாய தோர் கொன்றை மாலை என்க . குலாயது - விளங்கிச் சூழ்ந்து . கொன்றையுமாக ஆடும் எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 3

நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் னாமத் திருவெழுத்
தஞ்சும் தோன்ற அருளுமை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவரே ! நெஞ்சமாகிய ஆழமுடைய நீர் நிலைக்குள்ளே வஞ்சம் என்கின்ற தப்பவியலாத சுழியிலே நான்பட்டு இறக்கும் போது . தேவரீர் திருநாமமாகிய திருவைந்தெழுத்தும் தோன்ற அருள்வீராக .

குறிப்புரை :

நெஞ்சம் என்பதோர் நீள்கயம் - மனமாகிய ஆழமான நீர்நிலை . வஞ்சம் என்பதோர் வான்சுழிப்பட்டு - வஞ்சனை என்பதொரு பெரிய சுழியின்கண் அகப்பட்டு . துஞ்சும்பொழுது - உணர் விழக்கும்போது . நின்னாமத் திருவெழுத்து அஞ்சும் - உன்னுடைய திருப்பெயராகிய திருவைந்தெழுத்து . தோன்ற - பொருள் நிலை உள்ளவாறு தோன்ற . அருளும் - அருள் செய்வீராக .

பண் :

பாடல் எண் : 4

நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாருமை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் தம்மை நினைக்கின்றவர்தம் நெஞ்சில் உள்ளவர் ; நீண்ட முப்புரங்கள் மூன்றையும் சுடர்விடுகின்ற அழல் உண்ணுமாறு எரி யூட்டியவர் . பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் தோலை உரித்துத் தம்திருமேனியிற் போர்த்தவர் ; எல்லாப் பொருள்களினுள்ளும் கலந்து நிற்கும் இயல்பினர் .

குறிப்புரை :

நினைக்கும் நெஞ்சினுள்ளார் - தன்னை நினைப்பவர்களது நெஞ்சிற்குள் வீற்றிருப்பவர் . நெடுமாமதில் அனைத்தும் - நீண்ட பெரிய முப்புரங்கள் முழுவகையும் . ஒள் அழல்வாய் - ஒளி பொருந்தியதாய் எரியும் நெருப்பினிடத்து . எரியூட்டினார் - எரியும்படி செய்தார் . உரி - தோல் . அனைத்து வாய்தல் உள்ளாரும் - எல்லாப் பொருள்களிடத்தும் பொருந்துதலை உடையவரும் .

பண் :

பாடல் எண் : 5

பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
அரிய பாடல ராடல ரன்றியும்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க் கெளியரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றில் எழுந்தருளும் இறைவர் , பருப் பொருளாயவர் . நுண்பொருளாயவர் . பார்த்தற்கு அரியவர் . அரிய பாடலையும் ஆடலையும் உடையவர் . கரிய கழுத்தினர் ( திருநீல கண்டர் ). பிறர்க்கெலாம் காண்டற்கு அரியவர் . தொண்டருக்கோ எளியவர் .

குறிப்புரை :

பரியர் - பருமையிற் பருமையர் , நுண்ணியர் - நுண்மையின் நுண்ணியர் . பார்த்தற்கரியவர் - பசு , பாச ஞானங்களால் அறிதற்கரியவர் . அரிய பாடலர் - அருமையுடைத்தாகிய பாடல்களைப் பாடுபவர் . ஆடலர் - நடனம் ஆடுபவர் . பிறர்க்கெலாம் காட்சியரியர் - கரவாடும் வன்னெஞ்சராய பிறருக்கு அரியவர் . தொண்டர்க்கு எளியர் - அன்புடைத் தொண்டர்களுக்கு எளியவர் .

பண் :

பாடல் எண் : 6

புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போது மிலாதது மன்றியும்
அலரும் போதும் அணியுமை யாறரே.

பொழிப்புரை :

இருள்புலரும் காலைப் பொழுதிலும் சூரியன் மறையும் அந்திப்பொழுதிலும் இதழ்விரியும் மலர்களால் விதிமுறை தெரிந்தோர் சிலர் பணிய , அங்ஙனம் ஆகமவிதி அறியாதார் இறைவன் சூடும் மலரல்லாத மலர்களையும் , இலைகளையும் கொண்டு அருச்சிக்க அவற்றையும் அணிவன் ஐயாறன் .

குறிப்புரை :

புலரும்போது - காலை . இலாப்பட்ட பொற்சுடர்ப் போது - மாலை . போது என்பதனை? இருவழியும் கூட்டுக . பொற்சுடர் - சூரியன் . மலரும் போதுகளால் சிலர் பணிய என்க . மலர்கின்ற போதுகள் என உரை காண்க . இலரும் - அவ்வகையில் காலையும் மாலையும் மலரிட்டு வழிபடும் ஆற்றல் இல்லாதவரும் . போதும் இலாததும் - மலராம் தன்மையில்லாதவற்றையும் . அன்றியும் - அம் மலரன்றி இலைகளாலும் ; அருச்சிக்க அதனை அலரும் போதுமாகக் கொள்ளும் ஐயாறன் என்க .

பண் :

பாடல் எண் : 7

பங்க மாலைக் குழலியொர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடுமை யாறரே.

பொழிப்புரை :

இம் மங்கையைக் காதன்மை செய்தவர் இடப் பாகத்தே அழகிய மாலையணிந்த கூந்தலையுடைய பார்வதியைக் கொண்ட கங்கை மாலையர் , அங்கமாலை முதலியவற்றைச் சூடும் ஐயாறர் .

குறிப்புரை :

பங்கு அம்மாலைக் குழலியாகிய பார்வதியை உடையவர் பால்நிறக்கங்கையைக் காதன்மைசெய்யும் இயல்பினர் . மங்கு ஐ மாலைமதி - ஒளிமங்கிய அந்திப் போதின்கண் தோன்றும் மதி எனப் பொருள் காண்க . அன்றியும் இம்மங்கையைக் காதன்மை செய்தவர் அம்மாலைக் குழலியைப் பங்கின்கண் உடைய கங்கை மாலையர் எனக் கூட்டுக . மாலை மதியம் - பிறை . அங்க மாலை - என்புமாலை .

பண் :

பாடல் எண் : 8

முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு மருவிய மாதவன்
தன்னை யாறு தொழத்தவ மாகுமே.

பொழிப்புரை :

முன் துன்ப நெறியின்கண் முயன்றொழுகுவீர் எல்லோரும் பின் அத்துன்ப நெறியினின்று பிரித்தருளுவீராக என்று வேண்டும் அறியாமையுடையவர்களே ! நிலைத்த ஐயாற்றில் எழுந்தருளிய மாதவனை முறையே தொழத்தவமாகும் .

குறிப்புரை :

முன் நையாறு எனப்பிரித்து முன்துன்பநெறியின் கண்ணே முயன்று ஒழுகுவீர் எல்லோரும் என்க . பின் நையாறு எனப் பிரித்துப் பின்னர் அத்துன்ப நெறியினின்றும் பிரித்தருளுவீராக என்று வேண்டும் எனப் பொருள் காண்க . மன்ஐயாறு மருவிய - நிலைத்த ஐயாற்றின்கண் எழுந்தருளிய , மாதவன் தன்னை எனக் கூட்டுக . ஆறுதொழ - பெரியதவத்தோனாகிய பெருமானை முறையாகத் தொழ .

பண் :

பாடல் எண் : 9

ஆனை யாறென ஆடுகின் றான்முடி
வானை யாறு வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபுக் கேற்கவ னின்னருள்
தேனை யாறு திறந்தாலே யொக்குமே.

பொழிப்புரை :

பஞ்சகவ்வியங்களைத் திருவபிடேகம் கொண்டு ஆடுகின்றவனாகிய பெருமான் திருமுடியில் வானையளாவிய கங்கை பாய்வதைக் காண்பீராக ; ஐயாறு புகுந்த அடியேனுக்கு அவன் இன்னருள் தேன் ஆறு திறந்து பாய்ந்தாற் போன்று தித்தித்திருக்கும் .

குறிப்புரை :

ஆன்ஐ - பசுவிடத்தில் உண்டாகிய ஐந்து . பஞ்ச கவ்வியம் . ஆறு என - ஆற்றுவெள்ளம்போல . ஆடுகின்றான் - அபிடேகம் கொள்பவன் . முடி - அவனது திருமுடியை . வான் ஐ ஆறு - ஆகாயத் திடத்தே உண்டாகிய அழகிய கங்கை . வளாயது - சூழ்ந்திருப்பது . காண்மின் - காணுங்கள் . நான் ஐயாறுபுக்கு அவன் இன்னருள் ஏற்க எனக்கூட்டுக . ஏற்க - அவனது இனிய அருளைக் கேட்டேனாக . தேனையாறு - தேனாறு . அவனது இன்னருள் வேண்டி நின்ற எனக்கு அவனது அருள் தேனாறு எனப் பெருகி ஓடி வந்தது என்க .

பண் :

பாடல் எண் : 10

அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
றரக்க னீரைந்து வாயு மலறவே
அரக்கி னானடி யாலுமை யாறனே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செவ்வரக்கினைப் போன்று சிவந்த மேனியனும் , அழகிய தளிர் போன்று விளங்கும் மேனியனும் ஆவன் ; செவ்வரக் கனைய சிவந்த அடி உடைய உமாதேவி அஞ்சுதலும் , ` அஞ்சேல் ` என்று கூறி இராவணனது பத்து வாய்களும் அலறுமாறு தன் திருவடி விரலால் அரக்கியவன் ஆவன் .

குறிப்புரை :

அரக்கின் மேனியன் - அரக்குப்போன்ற சிவந்த நிறத்தையுடைய மேனியன் . அந்தளிர் மேனியன் - அழகிய தளிரின் மென்மை போன்ற மெல்லியன் . அரக்கின் சேவடியாள் - அரக்கைப் போன்ற சிவந்த காலடியையுடையாள் . அரக்கன் - இராவணன் . அரக்கினான் - அழுத்தி நெரியச் செய்தான் . அடியால் அரக்கினானும் ஐயாறன் என்க .
சிற்பி