திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் , அடியவர்களின் சிந்தை வண்ணமும் ; மாறுபடாத வண்ணம் முன்னே தோன்றிய வண்ணமும் , முழுநீறு அணிந்து அந்திவண்ணமாகிய செவ்வண்ணமும் , தழல்போல்வதோர் வண்ணமும் உடைய இயல்பினர் .

குறிப்புரை :

சிந்தை - மனத்தின்கண் . வண்ணத்தராய் - நிலை பெற்ற தன்மையை உடையவராய் . திறம்பாவணம் - மாறுபடாதபடி , முந்தி - முற்பட்டு . முழுநீறணி சந்திவண்ணத்தராய் - முழுநீறு பூசிய செந்நிறத்தை உடையவராய் . சந்தி - காலை மாலை வேளை செவ்வானம் . அந்திவண்ணமுமாவர் - மாலைக் காலத்து செவ்வானம் போன்ற நிறத்தை உடையவருமாவர் . சந்திவண்ணத்தர் - நன்றாகத் தியானிப்பவரது தியான உருவே தன் உருவமாக உடையவர் . சந்தியா சத்திகளின் நிறங்களை உடையவராய் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 2

மூல வண்ணத்த ராய்முத லாகிய
கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்
கால வண்ணத்த ராவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் , எல்லா உலகங்களுக்கும் மூலமாகிய இயல்பும் , முதலாகித் தோன்றிய திருக்கோலத்தின் இயல்பும் , வளமையான சுடர்விடுகின்ற நீலநிறமும் நீண்ட பளிங்கனைய தம் திருவுருவத்தில் நஞ்சின் வண்ணமும் உடையவராய்த் திகழ்வர் .

குறிப்புரை :

மூலவண்ணத்தராய் - உலககாரணராய் . முதலாகிய கோலவண்ணம் - ஒடுக்கிய உலகம் முதலியவற்றைத் தம்மிடத் திலிருந்து தோற்றுவிக்கும் தன்மை . கொழுஞ்சுடர் நீலவண்ணத்தர் . கொழுவிய மிக்க ஒளியை உடைய நீலமணி மேனியராகிய திருமாலைப் பாகமாக உடையவர் . கரிய அகோர முகத்தை உடையவர் எனலுமாம் . பளிங்கு - திருவெண்ணீறணிந்ததால் பளிங்குபோன்ற நிறம் . ஆலவண்ணத்தர் - கரியர் .

பண் :

பாடல் எண் : 3

சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழ காகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்த தொர் வண்ணமும்
அந்தி வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் சிந்தை வண்ணமும் , தீயின் வண்ணமும் , அழகாகிய அந்திப்போதின் வண்ணமும் , தானும் , கடாவும் , பாசக்கயிறுமாக வரிசையாகவரும் காலனைப் பாய்ந்து உதைத்த இயல்பும் உடையவர் .

குறிப்புரை :

சிந்தை வண்ணம் - நினைப்பார் மனமே இடமாகக் கொள்ளும் தன்மை . தீயதோர் வண்ணம் - நெருப்பனைய சிவந்த நிறம் . அல்லது தீயேந்தி நிற்கும் தன்மையும் கொடிய கோபமுடையராம் தன்மையும் என்க . அந்திப்போது - அந்திமாலை போன்ற . பந்தி - ஒழுங்கு . ஒழுங்குமுறையாகிய நீதியை நிலைநாட்டும் காலன் என்க . அந்தீவண்ணம் என்பது அந்தி எனக்குறுகியது . அந்தீ வண்ணம் - நெருப்பாம் தன்மை . அட்ட மூர்த்தங்களில் நெருப்பு வடிவாய் விளங்குபவன் என்க .

பண் :

பாடல் எண் : 4

இருளின் வண்ணமு மேழிசை வண்ணமும்
சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் . இருளின் வண்ணமும் , ஏழிசைகளின் வண்ணவேற்று மைகளும் , சுருண்ட சடையின் வண்ணமும் , ஒளியின் வண்ணமும் , நான்முகனும் திருமாலும் விண்பறந்தும் மண் புகுந்தும் காண்டற் கரிதென மருளும் வண்ணமும் அவர்கள் ஆணவம் அடங்கியவழி அருளும் வண்ணமும் உடையவராவர் .

குறிப்புரை :

இருளின் வண்ணம் - அகோர முகத்தின் நிறம் . ஊழிக் காலத்து இரவின்கண் அதன்மயமாய்ச் சுற்றித் திரியும் தன்மை எனலுமாம் . அன்பரல்லாதார்க்கு இருளின் தன்மை போல உணர்தற் கரிதாய்த் தோன்றும் நிலை எனவும் கூறலுமொன்று . ஏழிசை வண்ணமுமாவர் - குரல் துத்தம் முதலிய ஏழிசையின் தன்மையனாய் விளங்குபவர் . சுருளின் வண்ணமும் - எங்கும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் தன்மை . மருளும் - மயங்கும் . நான்முகன் மாலொடு வண்ணம் - திருமால் பிரமராயிருக்கும் தன்மை எனலும் ஆம் . அருளும் வண்ணம் - அருள் செய்யும் தன்மை . ஆவர் என்பதனை எல்லாவற்றோடும் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 5

இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும்
மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் நல்லியல்புகளினின்றும் இழுக்கி அல்லவை செய்தால் வெவ்விய அழலைப் போன்று வருத்தும் மறக்கருணைவண்ணமும் , மழையைத் தன்னிடத்துடைய பெரிய மேகங்களின் இயல்பு போன்று வரையாது அருள் வழங்கும் வண்ணமும் , தம்மடியார்களை அழைத்து அருள்வழங்கும் வண்ணமும் உடையவர் .

குறிப்புரை :

இழுக்கின் வண்ணங்களாகிய வெவ்வழல் என்றிணைப்பின் ஆணவமலத்தின் பலவேறு உருவங்களாகிய கொடுமைகள் என்க . குழைக்கும் வண்ணங்கள் - மலபரிபாகம் செய்யும் குரு முதலிய முகூர்த்தங்கள் . குழைந்து - கரைத்து வலியிலதாகச் செய்தல் . மழைக்கண் மாமுகில் - மழையைத் தன்னிடத்துக் கொண்ட கரிய முகில் . மழை - நீர் . அழைக்கும் வண்ணம் - ` அருந்தவர் வாவென்றணைத்த மலர்க்கையும் ` ( தி .10 திருமந்திரம் ) அபயகரம் காட்டும் தன்மை .

பண் :

பாடல் எண் : 6

இண்டை வண்ணமு மேழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
அண்ட வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் இண்டைமாலை சூடும் இயல்பும் , ஏழிசை வடிவாகிய இயல்பும் , தொண்டர்கள் நடுவில் நிற்கும் இயல்பும் , ஒளி இயல்பும் , கண்ட வண்ணங்கள் அனைத்தும் , கனல்போன்று செவ்வொளி விரிக்கும் மாணிக்கவண்ணமும் , அண்டங்களின் வண்ணமும் ஆகியவர் .

குறிப்புரை :

இண்டை வண்ணம் - தலைமாலையின் தன்மை . தொண்டர் வண்ணம் - அடியார் தன்மை . கண்ட வண்ணங்களாய் - இவையெல்லாம் பெருமான் கண்ட தன்மைகளாய் . அனல் - நெருப்பெனச் சிவந்து விளங்கும் . மாமணி - சிறந்த மாணிக்கம் . அண்டம் - உலகம் . ஆவர் என்பதை முன்னே தனித்தனிக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 7

விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் எல்லோரும் விரும்பும் இயல்பும் , வேதத்தின் இயல்பும் , கரும்பினையொத்த இனிய மொழியையுடைய உமையம்மையார் இயல்பும் , தம்மை விரும்பும் மெய்யடியார்களின் வினைகளைத் தீர்த்திடும் இயல்பும் , அரும்பின் இயல்பும் உடையராவர் .

குறிப்புரை :

விரும்பும் வண்ணம் - மெய்யன்பர் விரும்பும் வடிவங்கள் . வேதத்தின் வண்ணம் - வேதங்களை வெளிப்படுத்தும் தன்மை . வேதவடிவம் எனலுமாம் . கரும்பின் இன்மொழிக் காரிகை - பார்வதி . விரும்புவார் - தன்னை நேசிப்பார் . வினைதீர்த்திடும் வண்ணம் - காரிகை வடிவம் கொண்டிருப்பது வினை தீர்த்தற்பொருட்டு என்க . அரும்பின் வண்ணம் - மணத்தை உள்ளடக்கிய அரும்பின் தன்மை .

பண் :

பாடல் எண் : 8

ஊழி வண்ணமு மொண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததொர் வண்ணமும்
வாழித் தீயுரு வாகிய வண்ணமும்
ஆழி வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் ஊழிகள் தோறும் ஒளிரும் இயல்பும் , ஒளிச்சுடர் இயல்பும் , யானையின் பச்சைத்தோலைப் போர்த்தருளிய இயல்பும் , ஊழித்தீ உருவாகிய இயல்பும் , கடல்வண்ணமும் உடையவராவர் .

குறிப்புரை :

ஊழி வண்ணம் - ஊழிக்காலமாம் இயல்பு . ஒண் சுடர் - சூரியன் , சந்திரன் அக்கினி . ஆழித்தீ - ஊழிக் காலத்தில் , பெருகி கடலிலிருந்து , உலகை அழிக்கும் வடவைத்தீ . ஆழி வண்ணம் - கடலாம் தன்மை .

பண் :

பாடல் எண் : 9

செய்த வன்திரு நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி தாகிய வண்ணமும்
கைது காட்சி யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றில் எழுந்தருளும் இறைவன் , ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணத்தினன் . காண்பதற்கு அரிய தன்மை வாய்ந்தவன் , மனதிலே சிறைப்படுத்தித் தியானித்தற்கு அருமை வாய்ந்த தன்மையன் . மென்மை தழுவிய அழகினன் .

குறிப்புரை :

ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணம் என்க . எய்த - அடைய . நோக்கரிதாகியவண்ணம் - காணு தற்கரிய தன்மை . கைதுகாட்சி - மனத்திற் சிறைப்படுத்திக் காணுதல் . கைது - கைப்பற்றாக ; அநுபவமாக . ஐது - மென்மை அல்லது அழகு .

பண் :

பாடல் எண் : 10

எடுத்த வாளரக் கன்திறல் வண்ணமும்
இடர்கள் போற்பெரி தாகிய வண்ணமும்
கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும்
அடுத்த வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் , திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணன் ஆற்றல் , துன்பங்கள் போற் பெரிதாகுமாறு செய்தருளிய இயல்பும் , மிகுந்த தன் கைநரம்புகளையே யாழாக்கி அவன் இசைத்தவண்ணம் கண்டு அவனுக்கு அருளாளராக அடுத்த வண்ணமும் உடையவர் ஆவர் .

குறிப்புரை :

திறல் - வலிமை. இராவணன் தன் வலியால் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட தன்மை. இடர்கள்போல் பெரிதாகிய - அவனுடைய துன்பம்போல மலை எடுக்கமுடியாத பருமனாய் ஆகிய தன்மை. கடுத்த - விரைந்து தன் உடலில் பிய்த்த. அடுத்த - அவனுக்கு அருள்செய்யும் குறிப்புப் பொருந்திய.
சிற்பி