திருவாவடுதுறை


பண் :

பாடல் எண் : 1

நிறைக்க வாலிய ளல்லளிந் நேரிழை
மறைக்க வாலிய ளல்லளிம் மாதராள்
பிறைக்க வாலப் பெரும்புன லாவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.

பொழிப்புரை :

பிறையோடு கூடிய செஞ்சடையில் கங்கையாகிய பெரும்புனலை உடையவரும் , திருவாவடுதுறையில் உள்ள கபாலியுமாகிய சிவபெருமானோடு ஆடிய திருநீற்றினை நிறைக்கத் தூய்மையுடையவள் அல்லள் இந்த நேரிழையணிந்த பெண் ; அன்றியும் இப்பெண் அதனால் வரும் துயரங்களை மறைக்கும் வல்லமை உடையவளுமல்லள் .

குறிப்புரை :

தலைவனைக் கண்டு மயங்கிய தன் மகளின் நிலையைத் தாய் கூறுவதாக அகப்பொருட் கருத்தமைந்த பதிகம் இது . நிறைக்க - உடலெங்கும் நிறைவிக்க . வாலியள் - தூயவள் . இந்நேரிழை - இந்தத் தலைவி . மறைக்க - மறைத்துப் பேச . வாலியள் அல்லள் - வலியள் அல்லள் . பிறைக் கவாலம் - பிறையையும் கபாலத்தையும் . பெரும்புனல் - காவிரி . கவாலி - கபாலமேந்தியவன் . ஆடிய - உடனுறைந்து புணர்ந்த . சுண்ணம் - திருநீற்றுப்பூச்சு . திருநீற்றுப் பூச்சிற்கும் தான் செய்யும் களவொழுக்கத் திற்கும் போதிய தூய்மை உடையவள் அல்லள் என்றார் . சுண்ணம் நிறைக்க எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 2

தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞக னெம்மிறை
அளவு கண்டில ளாவடு தண்டுறைக்
களவு கண்டன ளொத்தனள் கன்னியே.

பொழிப்புரை :

இக்கன்னி , வெள்ளிய பெருமைமிகுந்து மதிக்கத்தக்க சாயலை உடைய சந்திரனின் பிளவாகிய பிறையினைச் சூடிய எம்மிறைவனாகிய பிஞ்ஞகனின் அன்பின் அளவை முற்றும் கண்டிலளேனும் , திருவாவடுதுறையிலே அவனைக் களவொழுக் கத்தாற் கண்டவளை ஒத்தாள் ஆயினள் .

குறிப்புரை :

தவளம் - வெண்மை . மா - சிறந்த . மதிச்சாயலோர் சந்திரன் பிளவு - முழுமதியின் ஓர் சாயலைக்கொண்ட பிளவுச் சந்திரன் எனலுமாம் . ஒருகலைப் பிறை என்றபடி . பிஞ்ஞகன் - தலைக்கோலம் அணிந்தவன் . எம் இறை அளவுகண்டிலள் - எம் இறைவனது பெருமையின் அளவை அறிந்தாளில்லை . களவு கண்டனள் - களவொழுக்கத்தின் கண்ணே ஈடுபட்டாள் . ஒத்தனள் - அவனோடு உள்ளத்தால் ஒரு தன்மையள் ஆயினாள் .

பண் :

பாடல் எண் : 3

பாதிப் பெண்ணொரு பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங் கொண்டவ னொண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.

பொழிப்புரை :

இப்பெண் , தன் திருமேனியில் ஒரு பாதிப் பெண்ணினை உடையவனே என்றும் , பலவாகிய மறைகளை ஓதியருளி என்னுள்ளத்தைக் கவர்ந்துகொண்டவனே என்றும் , ஒள்ளிய உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஆதியானவனே என்றும் , திருவாவடுதுறையில் விரும்பியெழுந்தருளியிருக்கும் சோதியே என்றும் , சுடரே என்றும் சொல்லும் இயல்பினள் .

குறிப்புரை :

பாதிப்பெண் - பார்வதிதேவியின் பாதி உடலை . ஒரு பாகத்தன் - ஒரு பாகத்தே கொண்டவன் . பன்மறை ஓதி - வேதங்கள் பலவும் விரித்தவன் . ஆதி - முதல்வன் .

பண் :

பாடல் எண் : 4

கார்க்கொண் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொண் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றைய னாவடு தண்டுறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.

பொழிப்புரை :

இப்பெண் , கருமையைக்கொண்ட பெரிய முகில் போலும் கண்டத்தை உடையவனும் , கச்சினைக்கொண்ட மெல்லிய முலையாளாகிய உமையம்மையைச் சேர்ந்து இறுமாந்து இவளது நெஞ்சைப் பிணைக்கும் கொன்றையினை உடையவனும் ஆகிய திருவாவடுதுறைப் பெருமானின் திருமார்பில் அணிந்துள்ள கொன்றைமாலைக்கு மனம் தாழ்கின்றனள் ; காண்பீராக .

குறிப்புரை :

கார்க்கொள் - கருமையைக் கொண்ட . மா - சிறந்த . முகில் - மேகம் . வார்க்கொள் - கச்சினைக் கொண்ட . இறுமாந்து - செருக்கடைந்து . ஆர்க்கொள் - ஆத்திமாலையைக் கொண்ட எனலுமாம் . தார்க்கு - மாலைக்கு . தாழுமா - விரும்புமாற்றை . பெருமானை மென்முலையாற் சேர்ந்து இறுமாந்து அவனணிந்திருக்கும் மாலையைப் பெறப் பணிந்துநின்றாள் ஒரு தலைவி ; காணுங்கள் என்க .

பண் :

பாடல் எண் : 5

கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமு தேயெனும் பண்பினன்
அருகு சென்றில ளாவடு தண்டுறை
ஒருவ னென்னை யுடையகோ வென்னுமே.

பொழிப்புரை :

இப்பெண் , கருத்த கண்டத்தை உடையவனும் , கதிர்காய்கின்ற ஒளிவடிவினனும் , பருகுதற்கினிய பால் அமுது என்று கூறத்தக்க பண்பை உடையவனுமாகிய அப்பெருமான் அருகிற் சென்றனள் . அல்லளாயினும் , அவன்பாற்கொண்ட காதல் மிகுதியால் ` என்னை உடையவன் திருஆவடுதண்டுறையில் உறையும் தலைவனே ` என்று கூறும் இயல்பினள் .

குறிப்புரை :

கருகு - கருகிய . காய் - எரிக்கின்ற . கதிர் - கிரணங்களை உடைய . பருகு - பருகத்தக்கதாகிய . பாலமுதேயெனும் பண்பினன் - பாலும் அமுதமும் ஒத்த பண்பையுடையவன் . அருகு சென்றிலள் - அவன் அருகிற்சென்று காணவுமில்லாதாள் ஒருத்தி . என்னையுடைய கோ - என்னை மனைவியாக உடைய தலைவன் . என்னும் - என்று சொல்லிக்கொண்டிருப்பாள் .

பண் :

பாடல் எண் : 6

குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமும்
தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழக னாவடு தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.

பொழிப்புரை :

இவ்வழகுடைய பெண் , கொன்றை மலர்களும் , கூவிளந்தளிர்களும் , ஊமத்தமலர்களும் சூடிய சடையும் , தையல் ஒரு பாகமும் கொண்ட ஆவடுதண்டுறைக்குரிய அழகனே என்று விரும்பி அழைத்தலால் , கைவளைகள் கழலுகின்ற நிலைமையள் ஆயினள் .

குறிப்புரை :

குழல் - சடைமுடி . கூவிளம் - வில்வம் . கூவிளம் மத்தம் , தழல் இவற்றைத் தாங்கினான் - தையல் - பார்வதி . ஓர் பாகமாத் தாங்கினான் - ஒரு பாகத்தே கொண்டான் . கைவளை கழலும் , உடல் இளைக்கும் , நிறையழியும் என்றவாறு .

பண் :

பாடல் எண் : 7

பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்ல ளாவடு தண்டுறை
மஞ்ச னோடிவ ளாடிய மையலே.

பொழிப்புரை :

இப்பெண் திருவாவடுதண்துறையில் உள்ள , புலன் ஐந்தும் வென்ற பெருவீரனாகிய சிவபெருமானோடு ஆடிக் கொண்ட மயக்கத்தினால் , பஞ்சனைய மெல்லடியுடைய உமா தேவியாரைப் பங்கிற்கொண்ட அப்பரமனைத் தஞ்சப்பொருளாகக் கொண்டு இறுமாப்பு எய்தி , வேறு யாரையும் அஞ்சாதவள் ஆயினள் .

குறிப்புரை :

பஞ்சின்மெல்லடிப்பாவை - பஞ்சுபோல மெல்லிய அடிகளையுடைய பாவை ; பார்வதி . தஞ்சம் - அடைக்கலம் . இறு மாந்து - செருக்கியிருத்தலால் . மஞ்சன் , மைந்தன் என்பதன் போலி . மையல் - காம மயக்கம் . ஆவடுதண்துறை மைந்தனோடு இவளாடியமையால் , அவனையே அடைக்கலமாக எண்ணிச் செருக்கி யாவையும் அஞ்சு வாளல்லள் என்க .

பண் :

பாடல் எண் : 8

பிறையுஞ் சூடிநற் பெண்ணோ டாணாகிய
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
அறையும் பூம்பொழி லாவடு தண்டுறை
இறைவ னென்னை யுடையவ னென்னுமே.

பொழிப்புரை :

இப்பெண் , பிறையினைச் சென்னியிற் சூடிய பெண்ணும் ஆணுமாகிய இறைவனும் , மேகங்களும் , வண்டினங்களும் ஒலிக்கின்ற பூம்பொழில்களை உடைய ஆவடுதண்துறையில் என்னை உடையவனும் ஆகிய பெருமானே , என் கற்பினையும் , உள்ளத்தினையும் , பிற தன்மைகளையும் கவர்ந்து கொண்டவன் என்று சொல்லுமியல்பினள் .

குறிப்புரை :

பெண்ணொடு ஆணாகி - மாதொரு கூறனாகி . அ , சாரியை . நிறை - ஒழுக்கம் . நீர்மை - அழகு . அறையும் - வண்டுகள் ஒலிக்கின்ற . பூம்பொழில் - பூவார்சோலை . என்னும் - என்று சொல்லுவாள் .

பண் :

பாடல் எண் : 9

வையந் தானளந் தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான்
ஐய னாவடு தண்டுறை யாவெனக்
கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.

பொழிப்புரை :

உலகங்களைத் தான் அளந்தவனாகிய திருமாலும் , பிரமனும் ஆகிய இருவரும் மெய்ப்பொருளாகிய பிரமத்தைக் காணலுற்றபோது அவ்விருவர் முன்னே பேரழலாய் நிமிர்ந்த பெருமானே ! ஐயனே ! ஆவடுதண்டுறையில் உள்ள அண்ணலே என்று வாய்விட்டுக்கூவி உடல் மெலிதலால் இவள் கைகளில் உள்ள வெள்வளைகள் கழல்கின்றவாயின .

குறிப்புரை :

வையம் - உலகம் . அளந்தானும் - அளந்தவனாகிய திருமாலும் . அயன் - பிரமன் . மெய்யை - உண்மையான பரம் பொருளை . அழலாயினான் - சோதிவடிவாய்த் தோன்றியவன் . ஐயன் - அழகியவனே ! அண்மைவிளி . இத்தலைவிக்கு ஐயனே ஆவடு தண்துறையா என்று சொல்லும்போதே கைவளை கழல்கின்றதே என்க .

பண் :

பாடல் எண் : 10

பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவ னாவடு தண்டுறை
நக்க னென்னுமிந் நாணிலி காண்மினே.

பொழிப்புரை :

பெருமான் தன் நெஞ்சும் கற்பும் கவர்ந்து கொண்டனனேனும் , அதுகுறித்துச் சிறிதும் நாணமில்லாதவளாகிய இப்பெண் , மீண்டும் , பூதங்கள் பக்கத்தில் நின்று பாடப் பலி கொள்வான் என்றும் , ஆற்றல்மிக்க வாளை உடைய அரக்கனை வலி கெடுத்தான் என்றும் , அக்கமாலைகள் அணிந்தான் என்றும் . திருஆவடு தண்டுறையில் உள்ள திகம்பரன் என்றும் கூறிப் புகழ்ந்தவண்ணம் இருப்பாள் .

குறிப்புரை :

பக்கம் - இருபுறங்களிலும் . பலி - பிச்சை . மிக்க - செருக்கிய . அரக்கன் - இராவணன் . வீட்டினான் - அழித்தான் . அக்கு - என்புமாலை . நக்கன் - எல்லோரும் நகுதற்குரிய உடை நீத்த தோற்றமுடையவன் . இந்நாணிலி - இந்த வெட்கத்தை விட்ட தலைவி . காமம்விடு அல்லது நாண்விடு என்பவற்றுள் நாணத்தை விட்டாள் என்க . நாணிலியாதலின் நக்கன் என்பாள் என்க .
சிற்பி