திருப்பராய்த்துறை


பண் :

பாடல் எண் : 1

கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.

பொழிப்புரை :

நீர் பரந்துவருகின்ற காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பராய்த்துறையில் விரும்பி எழுந்தருளியிருக்கும் அருட் செல்வர் , தம்மடியடைந்த அன்பர்கட்குப் பக்குவகாலம் வருந்துணையும் மறைந்துநின்று அருள்வர் : பின் அக்காலம் வாய்த்தவழி , அவர்வினைகளைச் சுருக்கிக் கெடுக்குமாற்றில் வல்லவர் ; செஞ்சடையிற் கங்கையை உடையார் , ( காலத்தில் வந்தடைந்தவர் வினைகளை மறையும்படிச் செய்பவர் ; விரிந்த கங்கையைத் தம் செஞ்சடையில் சுருக்குமாற்றிலும் வல்லவர் என்றும் இணைக்கலாம் .)

குறிப்புரை :

காலமடைந்தவர் தம்வினை கரப்பர் - காலத்தால் வந்தடைந்த அடியவர்களின் வினைகளை மறையச்செய்வர் . கங்கை சுருங்குமாறு வல்லார் - பெருகிவரும் கங்கையைத் தம் சடையில் சுருக்கும் வல்லவர் . பரப்புநீர் வருகாவிரி - அகன்று பரவிய தண்ணீரை உடையதாய் வருகின்ற காவிரி . இத்தலத்து அகன்ற காவிரியாய் வருதல் குறித்தது . செல்வர் , இத்தலத்து இறைவர் பெயர் . பராய்த்துறை , பராய் என்னும் தலமரம் பற்றிய பெயர் வழக்கு .

பண் :

பாடல் எண் : 2

மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கம்
சேட னார்தென்ப ராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே.

பொழிப்புரை :

தென்பராய்த்துறையுறையும் அருட்செல்வர் , செருக்குடைய யானையின் பச்சைத் தோலினால் போர்த்தித் தம் திருமேனியை மூடியவர் ; வேதங்கள் நான்கினோடு , அங்கங்கள் ஆறினையும் பாடியவர் ; மிக்க பெருமையை உடையவர் ; அப் பெருமானைத் தேடிக்கொண்டு சென்று அடியேன் காண்பேன் .

குறிப்புரை :

மூடினார் - போர்த்தார் . களி - மதத்தால் செருக்கிய . ஈரூரி - உரித்தெடுத்த தோல் . மறை நான்கினோடு ஆறங்கம் பாடினார் என்க . சேடனார் - பெரியவர் ; அடியேன் தேடிக் கொண்டு சென்று காண்பன் என்க .

பண் :

பாடல் எண் : 3

பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிரு ளேமமும்
சிட்ட னார்தென்ப ராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை யறிவரே.

பொழிப்புரை :

தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் பட்டமணிந்த நெற்றியினை உடையவர் ; பாலனைய நிலவு சொரியும் மதிக்கீற்றினை உடையவர் ; நள்ளிருளில் உலகிற்கு இன்பம் செய்யும் பொருட்டு நடனம் ஆடுபவர் ; உயர்வுடையவர் ; தம்மிடம் விருப்பமாயிருக்கும் அடியார்களைத் தாம் நன்கு அறியும் இயல்பினர் ஆவர் .

குறிப்புரை :

பட்ட நெற்றியர் - நெற்றியில் திருநீற்றுப்பட்ட மணிந்தவர் . மதிக்கீறு - பிறை . நள்ளிருள் ஏமம் - இருள் செறிந்த இரவு எனலுமாம் . யாமம் என்பதன் திரிபு ஏமம் . சிட்டர் - சிரேஷ்டர் . இட்ட மாயிருப்பாரை - தன்மேல் விருப்பமாய் இருக்கும் அடியாரை .

பண் :

பாடல் எண் : 4

முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை யறிவரே.

பொழிப்புரை :

தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் , அறியாமையொடு கூடிய சில சொற்களைப் பலர் முன்னிலையிலும் பேசுவார் . எலும்புகள் பலவற்றைப் பூண்டு திரிவார் . தம்மீது அன்பராய் இருப்பாரை நன்கு அறியும் இயல்பினர் .

குறிப்புரை :

முன்பெலாம் - பலர் முன்னிலையிலும் . மோழைமை - அறியாமையொடு கூடிய சொற்கள் . உழிதர்வர் - திரிவர் . அறிவர் - தெரிந்து திருவருள் பாலிப்பர் .

பண் :

பாடல் எண் : 5

போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.

பொழிப்புரை :

உலகில் உள்ளவர்களே ! தென்பராய்த்துறையில் உறைகின்ற ஒளி வடிவான பெருமானை மகரந்தத் தொடும் கூடிய போதுகளைக்கொண்டு புனைந்து தாதவிழும் சடையுடைய அச்சங்கரன் திருவடிகளில் துயரங்களைத் தீர்த்தருள்க என்று பரவித் தொழு தெழுந்து உய்வீர்களாக .

குறிப்புரை :

தாதொடுபோது கொண்டு என மாறுக . தாது - மகரந்தம் . புனைந்து - சாத்தி . உடன் - பின்னர் . தாதவிழ் சடை - மகரந்த முறைந்து மணந்து விளங்கும் சடை . சங்கரன் - இன்பத்தைச் செய்பவன் . பாதத்துள் - திருவடிகளில் . வாதை - பிறவிநோய் . இருவினை முதலிய பாசத்தால்வரும் துன்பங்கள் . தீர்க்க என்று - தீர்த்தருள்வீராக என்று . ஏத்தி - புகழ்ந்து ; தோத்திரித்து . உய்மின் - வாழுங்கள் .

பண் :

பாடல் எண் : 6

நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்தென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.

பொழிப்புரை :

நெஞ்சே ! தென்பராய்த்துறையில் உறைகின்ற அருட்செல்வரும் , நல்லனவாகிய நான்கு மறைகளை ஓதிய நம்பரும் , பல இல்லங்களிலும் வெள்ளியதலையிற் பலிகொள்ளும் இயல்பினரும் , தில்லைத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய பெருமானை விரைந்து வணங்கி மெய்ம்மையாகத் தொழுவாயாக !

குறிப்புரை :

நல்ல நான்மறை - நன்மையைத் தருவனவாய நான்கு வேதங்கள் , தில்லையான் - தில்லையில் எழுந்தருளி இருப்பவன் . வல்லையாய் - விரைவுடையனாய் . தொழு - வணங்கு . வாய்மையே - உண்மையாக .

பண் :

பாடல் எண் : 7

நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி யிழிபுனல் போன்றதே.

பொழிப்புரை :

நெருப்பினைக் குவித்துவைத்தாலொத்த நீண்ட சடை உடையவரும் , மலையினையொத்த மதயானையினை உரித்துப் போர்த்தவரும் ஆகிய திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமார்பிற் புரள்கின்ற முந்நூல் , மலையினை அரித்துக் கொண்டு இழிகின்ற அருவிப்புனலைப் போன்றுள்ளது .

குறிப்புரை :

நெருப்பினால் குவிந்தாலொக்கும் நீள்சடை - நெருப்பைக் குவித்ததுபோன்று செவ்வொளி விரிந்த நீள்சடை . பருப்பதம் - மலைபோன்ற . மதயானை - மதம் பொருந்திய யானை . திருமார்பின் நூல் பொருப்பு அருவி இழிபுனல் போன்றது - மார்பில் அணிந்த பூணூல் மலையினின்று இழியும் அருவி போன்றது என்க .

பண் :

பாடல் எண் : 8

எட்ட விட்ட விடுமண லெக்கர்மேல்
பட்ட நுண்துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே.

பொழிப்புரை :

வானை எட்டுமாறு இட்ட மணலிடு குன்றின் மேல் நுண்ணிய நீர்த்துளிகள் பாய்கின்ற பராய்த்துறையில் உறைகின்ற உயர்ந்த இறைவன் சேவடிகளிற் சென்று அடையும் வல்லமை உடையீராயின் , நம்வினைகளாய் உள்ளவை நம்மைவிட்டு நீங்கிக் கெடும் .

குறிப்புரை :

எட்டவிட்ட - உயரமாக அமைத்த . இடுமணல் எக்கர் - காற்றாலும் அலையாலும் சேர்க்கப்பட்ட மணல் குன்றுகளின் மேல் . பட்ட - மோதிய . நுண்துளி - நுண்ணிய தண்ணீர்த்துளி . அடைகிற்றிரேல் - அடைய வல்லீரேயானால் . நம் வினை உள்ளன விட்டு வீடுமே - நம் வினையாக இருப்பவை நம்மைவிட்டுக் கெடும் .

பண் :

பாடல் எண் : 9

நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை யறிவரே.

பொழிப்புரை :

நெருப்பு அராவி நிமிர்ந்ததனையொத்த நீண்ட சடையையும் , தந்தத்தை அராவி வளைத்ததுபோன்ற பிறைமதியையும் உடையராய்த் திருப்பராய்த்துறையில் விரும்பியெழுந்தருளி இருக்கும் அருட்செல்வர் தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவர் .

குறிப்புரை :

நெருப்பராய் நிமிர்ந்தாலொக்கும் நீள்சடை - நெருப்பு நீண்டு நிமிர்ந்து நின்றது போன்ற சடை . மருப்பராய் வளைந் தாலொக்கும் வாண்மதி - யானையின் மருப்பு வளைந்திருத்தலை ஒக்கும் ஒள்ளிய பிறைமதி .

பண் :

பாடல் எண் : 10

தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
இண்டை கட்டி யிணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே.

பொழிப்புரை :

திருப்பராய்த்துறைத் தலத்து எழுந்தருளியிருப்பவரும் , பாண்டரங்கக் கூத்துடையவரும் ஆகிய இறைவர்க் குற்ற தொண்டுகளைப்பற்றிப் பாடியும் , அப்பெருமான் இணையடிகளில் இண்டைமாலை சாத்தியும் , தூமலர்கள் தூவியும் , கண்டும் , உள்ளத்திற் கொண்டும் அடியேன் உய்ந்து போவன் .

குறிப்புரை :

தொண்டு பாடி - அடிமையாம் தன்மையை விரித்துப் பாடி . இண்டை - தலை மாலை . பண்டரங்கர் - பண்டரங்கம் என்னும் திருக்கூத்தாடுபவர் . இறைவனாடிய திருக்கூத்துக்களில் இதுவும் ஒன்று ( கலித்தொகை - கடவுள்வாழ்த்து ) . பராய்த்துறைப் பாங்கர் - திருப்பராய்த்துறையை இடமாகக் கொண்டவர் . உய்ந்துபோவன் - உய்வேன் .

பண் :

பாடல் எண் : 11

அரக்க னாற்ற லழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.

பொழிப்புரை :

இராவணனது ஆற்றலை அழித்த அழகனும் , நீர் பரக்கின்ற பொன்னி மன்னுகின்ற பராய்த்துறையில் இருக்கை பொருந்திய ஈசனுமாகிய பெருமானை ஏத்துவீர்களாக ! நும்வினைகள் விரைந்து போய்த் தொலையும் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

ஆற்றல் - வலிமை . பரக்கும் - எங்கும் பரவும் . இருக்கை - இருப்பிடம் . பொருக்க - விரைந்து .
சிற்பி