திருப்பூந்துருத்தி


பண் :

பாடல் எண் : 1

கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

பல கொடிகள் எடுக்கப்பெற்றதும் , திருவிழாக்களினால் உண்டாகும் ஆரவாரங்கள் அறாததும் , மணமிக்க பூம் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருக்கச்சியேகம்பரும் திருநீற்றுப் பொடியினைப் பூசிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் சுவாமியும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

கொடிகொள் - கொடிகளைக்கொண்ட . விழாக் குணலை - திருவிழா ஆரவாரம் . அறா - நீங்காத . கடிகொள் - மணம் பொருந்திய . பூம்பொழில் - பொலிவையுடைய சோலை . கொடிகொள் செல்வம் விழா அறா என்பவற்றைத் தனித்தனியே கச்சியேகம்பம் என்பதனோடு கூட்டுக . பொடிகள் - திருநீறு . பூந்துருத்திநகர் அடிகள் - பூந்துருத்தி என்னும் நகருக்குரிய தலைவர் . சேவடி - சிவந்த திருவடிகள் . நாம் இருப்பது அடிகள் சேவடிக்கீழ் என்க . இப்பதிகம் , திருவடிக் கீழிருந்து அநுபவிக்கும் இன்புறு நிலையை உணர்த்துகின்றது . ` ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல் ` ( திருவருட்பயன் . 10.1) என உணர்த்தப்படும் நிஷ்டையின் இயல்பு , இங்குள திருவாக்குப் போலெழும் திருமுறைகளை மூலமாகக் கொண்டது . இது பரமுத்தி நிலையைக் குறிக்கும் . திருப்பூந்துருத்தித் திருமடத்தில் தங்கி வாழ்ந்த குறிப்பு இப்பதிகத்தே அமைந்திருத்தல் அறிதற்குரியது .

பண் :

பாடல் எண் : 2

ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

தோல் உடையினை ஆர்த்துக்கட்டி ஒரு வேட வடிவம் கொண்டு அருச்சுனனோடு படைக்கலந் தொடுக்கு மாயினும் , பூத்த மலர்கள் நிறைந்த நீள்பொழில்களை உடைய பூந்துருத்தி நகரத்துத் தீர்த்தவடிவாய் உள்ள பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

தோலுடை ஆர்த்துக்கட்டி - புலித்தோலை இடையிலே பொருத்திக் கட்டி . பார்த்தனோடு - அர்ச்சுனனோடு . படை தொடும் - கணைதொடுத்துப் போர்புரிவான் . தீர்த்தன் - புனிதன் .

பண் :

பாடல் எண் : 3

மாதி னைமதித் தானொரு பாகமாக்
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு பாகமாக மதித்து ஏற்றவனும் , சடையின்கண் கங்கையைக் காதலால் ஒளித்துக் கொண்டவனும் . பூதங்களுக்குத் தலைவனும் , பூந்துருத்தி நகரில் எழுந்தருளியிருக்கும் முதல்வனும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

மாதினை - உமையை . ஒருபாகமா மதித்தான் - இடப் பாகத்தே ஏற்றுக்கொண்டவன் . கங்கையைக் காதலால் சடைக் கரந்தான் என்க . காதலால் - உயிர்கள்மீது வைத்த அன்பால் . கரந்தான் - மறைத்தவன் பூதநாயகன் - உயிர்களுக்குத் தலைவன் . ஆதி - முதல்வன் .

பண் :

பாடல் எண் : 4

மூவ னாய்முத லாயிவ் வுலகெலாம்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

முப்பெருங்கடவுளராயும் , அவருள் முதல்வனாயும் , இவ்வுலகெல்லாவற்றையும் காப்பவனாயும் , கடிய காலனைக் காய்ந்தவனாயும் , அன்பானினைவாரது உள்ளக் கமலத் தின்கண் தலைவனாக எழுந்தருளியிருப்பவனாயும் உள்ள பூந்துருத்தி நகரின் தேவன் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

மூவன் - முதிர்ந்தவன் . முதலாய் - எல்லாவற்றிற்கும் முதற்காரணனாய் . காவன் - காப்பவன் . கடுங்காலன் - கொடிய எமன் . காய்ந்தவன் - சினந்து அழித்தவன் . பூவின் நாயகன் - நிலவுலகிற்குத் தலைவன் ; அன்றி மலர்மேலுறையும் அரி அயனாக இருப்பவன் என்றும் , அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தில் உறையும் தலைமகன் என்றும் கொள்ளலாம் .

பண் :

பாடல் எண் : 5

செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொன் னார் செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

நம் தேசத்தில் இருப்பினும் உம்பர் உள்ள தேவருலகத்தவரோடு இருப்பினும் , பொன்னும் பொலிவார்ந்த செல்வமும் உள்ள பூந்துருத்தி நகரத்து நம்மவனாகவும் , செம் பொன்னையே யொத்த திருமேனியினனாகவும் வீற்றிருக்கும் பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

செம்பொன் - சிவந்த பொன் . உம்பரானவர் - தேவர்கள் . பொன்பொன் - அழகிய பொன் . ஆர் - பொருந்திய .

பண் :

பாடல் எண் : 6

வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

வன்மைபேசி வன்மையான கொடிய செயல்களையே செய்து திரிந்த திரிபுரங்களைக் கொல்ல எண்ணிப் பேசிக் கொடிய அம்பால் அழித்த பூந்துருத்தி நகர்ச்செல்வன் புன்மை பேசினும் அவன் திருவடிக்கீழேயே இருத்தலை எண்ணுவோம் .

குறிப்புரை :

வல்லம் - வன்மை . வலிசெய் - வன்மையான கொடிய செயல்களையே செய்கின்ற . மூன்றூர் - திரிபுரம் . கொல்லம்பேசி - கொல்லுதலைக் கருத்துட்கொண்டு . கொடுஞ்சரம் - கொடிய அம்பால் . நூறினான் - அழித்தான் . புல்லம் - புன்மை மொழிகள் .

பண் :

பாடல் எண் : 7

ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

ஒப்பற்றவனாய் ஏழு உலகங்களும் தொழ நின்று , பெரிய பாம்பும் , மதியும் , கங்கையும் சடையிற் பொருந்தியவனாய்ப் பூந்துருத்தி நகரத்தே எழுந்தருளியிருக்கும் திருத்தமானவனின் சேவடிக்கீழ் நாமிருக்கப்பெற்றோம் .

குறிப்புரை :

ஒருத்தனாய் - அழியாத முதல்வன் தானொருவனுமேயாய் . பருத்தபாம்பு - பெரிய பாம்பு . பொருத்தன் - அணிந்தவன் . திருத்தன் - திருத்தமாய் விளங்குபவன் . மாறுபடாத செம் பொருள் .

பண் :

பாடல் எண் : 8

அதிரர் தேவ ரியக்கர் விச் சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

அதிரர் , தேவர் இயக்கர் , விச்சாதரர் முதலியவர்கள் கருதுமாறு நின்ற அனைவரும் காண்டலரிய காட்சியானும் , நீர் இருகரையும் பொருதுவருகின்ற பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருப்பவனும் , சரியை முதலியவற்றில் நான்காவதாகிய ஞானத்தாலே எய்துதற்குரியவனும் ஆகிய பெருமானின் சேவடிக் கீழ் நாம் இருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

அதிரர் தேவர் - உரத்தகுரலினராய தேவர் . இயக்கர் - பதினெண்கணத்துள் ஒருவர் . விச்சாதரர் - வித்யாதரர் . கருதநின்றவர் - தேவர் முதலானோர்க்குத் தலைவர் என்று கருதுகின்ற திருமாலும் பிரமனும் . காண்பரிதாயினான் - தாணுவாய் விளங்கியவன் . பொருதநீர் - அலைக்கும் காவிரிநீர் . வரு - வருகின்ற . சதுரன் - சதுரப்பாடுடையவன் . திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களுட்போல இவர் திருப்பதிகங்களிலும் இலிங்கபுராண வரலாறும் புறச்சமயத் தவரைப்பற்றிய பழிப்பும் நியதமாகச் சிலவற்றில் கூறப்படுகின்றன .

பண் :

பாடல் எண் : 9

செதுக றாமனத் தார்புறங் கூறினும்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவி னாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

குற்றம் நீங்காத மனத்தினர் புறம் பேசினும் கொசு நீங்காத பீளைசார்ந்த கண்களையுடைய புறச்சமய நோன்பிகள் இழித்துக் கூறினும் மன்றவாணனாகிய பூந்துருத்திப் பெருமான் சேவடிக்கீழேயே நாம் இருப்போம் .

குறிப்புரை :

செதுகு அறா - தீங்கு அல்லது குற்றம் நீங்காத . புறங்கூறினும் - புறம் பேசினாலும் . கொதுகு - கொசு ; பீளை சார்ந்த கண்கள் என்க . பொதுவில் நாயகன் - பஞ்ச சபைகளின் தலைவன் . அதிபன் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 10

துடித்த தோள்வலி வாளரக் கன்தனைப்
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

தோளாற்றலும் மிக்க வாளாற்றலும் உடைய இராவணனை துடிக்குமாறும் , அவன் பிடித்த கைகள் நெரிவுறுமாறும் , கண்ணெலாம் நீர்த்துளிகள் பொடிக்குமாறும் திருவிரலால் ஊன்றிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெருமைமிக்க சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

துடித்த - தினவெடுத்த. வலி - வலிமை. பிடித்த - கயிலை மலையைப்பற்றிய. நெரிந்துற்றன - நெரிந்தன. கண்ணெலாம் - இருபது கண்களும். பொடிக்க - நீர் அரும்ப. ஊன்றிய - மிதித்த. படிகொள் சேவடி - அன்பர்க்கருளவேண்டி நிலத்தின் கண்ணே பொருந்திய அவனது சிவந்த திருவடிகள்.
சிற்பி