திருச்சோற்றுத்துறை


பண் :

பாடல் எண் : 1

கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம் பலத்துறை செல்வனார்
தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! முல்லை நிலத்துக்குரிய விடையேற்றினை உடையவரும், கொள்ளும் அரவத்தினை உடையவரும், தில்லைத் திருநகரில் சிற்றம்பலத்தே உறையும் அருட்செல்வரும், பழைய ஊழிக்காலத்தவரும் ஆகிய சோற்றுத் துறையர்க்கு வல்லமை உடையையாய்ப் பணிசெய்வாயாக.

குறிப்புரை :

கொல்லை ஏறு - முல்லை நிலத்துக்குரிய இடபம். முல்லைக்குத் திருமால் தெய்வமாதலால் திருமாலை ஏறாக உடையவன் என்று கூறவந்தவர் கொல்லைஏறு என்றார். அன்றி முல்லை நிலத்துக்குரியதான ஏறு எனினும் அமையும். \\\\\\\"கொல்லைச் சில்லைச்சே\\\\\\\" (தேவாரம் 070201). கோள் - கொல்லும் தன்மையுடைய. தொல்லையூழியர் - மிகப்பழைய ஊழிக்காலங்கள் பலவற்றையும் கண்டவர். வல்லையாய் - வலிமையை உடையையாகி; விரைவுடைமையோடு. பணிசெய் - தொண்டு செய்.

பண் :

பாடல் எண் : 2

முத்தி யாக வொருதவஞ் செய்திலை
அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை
தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! முத்திப் பேறெய்தற்பொருட்டு ஒரு தவமும் செய்திலை; அடியார்களுக்கு விருப்பத்தோடு ஒன்றையும் அளித்தாயில்லை; பூங்கொத்துகள் நின்று மலர்கின்ற சோற்றுத்துறையர்க்கு இனியாகிலும் பத்தியோடு பணி செய்வாயாக.

குறிப்புரை :

முத்தியாக - வீடுபேறடையும்பொருட்டு. தவம் - அடியார்க்களித்தல் அரனை ஓம்பல் முதலிய தவங்கள். செய்திலை - செய்யாதிருந்தாய். அத்தியால் - அருத்தியால்; விருப்பத்தோடு. அதனால் என்றுமாம். அளித்திலை - கொடுக்கவில்லை. அடியார்க் களித்தல் அரன்பணியினும் சிறந்தது என்றபடி. தொத்து நின்றலர் - கொத்துக்களாய் நின்றுமலரும், சோலைகளையுடைய என வருவிக்க. பத்தியாய் - அன்போடு.

பண் :

பாடல் எண் : 3

ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! உடலை ஒட்டி நின்ற மிகுந்த நோய்களையும், பிணித்து நிற்கும் வினைகளையும் கழிந்து அறும்படியாகச் சோற்றுத்துறையர் திருவடிகளைத் தொட்டு நின்று பட்டியாகப் பணிசெய்வாயாக.

குறிப்புரை :

ஒட்டிநின்ற - நம்மோடு நிழலாய் உடனுறைந்தும் அத்துவிதமாய்ப் பிரிப்பின்றியும் நிற்கின்ற. உடலுறுநோய் - உடலைப் பற்றிய நோய்கள்; பிறவி நோய் எனலுமாம். கட்டி நின்ற - சூழ்ந்து நிற்கும் பந்தபாசங்கள். கழிந்து - நீங்கி. அவைபோய்அற - நோய், பாசம், வினை என்ற மூன்றும் விலக. தொட்டு நின்றும் - அவன் திருவடிகளை மனத்தால் தீண்டி நின்றும். பட்டியாய் - மீளா அடிமையாய்.

பண் :

பாடல் எண் : 4

ஆதியா னண்ட வாணர்க் கருள்நல்கு
நீதி யானென்றும் நின்மல னேயென்றும்
சோதி யானென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! முதல்வனும் தேவர்களுக்கு அருள்நல்கும் நீதியனும், நின்மலனும், சோதியனும் ஆகிய சோற்றுத்துறைப் பெருமானுக்கு வேறொன்றும் வாளா வாதித்துக் காலம் போக்காது, பணிசெய்வாயாக.

குறிப்புரை :

அண்டவாணர் - மேலுலகவாசிகளாகிய தேவர் முதலியோர். நீதியான் - நீதிவடிவினன். நின்மலன் - மலமற்றவன். வாதியாய் - பரமன் புகழ்களையே பேசுபவனாய்.

பண் :

பாடல் எண் : 5

ஆட்டி னாயடி யேன்வினை யாயின
ஓட்டி னாயொரு காதி லிலங்குவெண்
தோட்டி னாயென்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! அடியவனை ஆட்டுவிப்பானே என்றும், வினைகளாயினவற்றை ஓட்டியவனே என்றும், திருச்செவியில் விளங்குகின்ற சங்கவெண் தோட்டினை யணிந்தவனே என்றும் சோற்றுத்துறையனார்க்கு நீள நினைந்து நீ பணிசெய்வாயாக.

குறிப்புரை :

ஆட்டினாய் - திருக்கூத்தாடுபவனே! ஓட்டினாய் - விலகச்செய்தவனே!, வெண்தோட்டினாய் - ஒரு பக்கத்து வெண்மையான தோடணிந்தவனே!. நீட்டி - புகழ்களை நீளச் சொல்லிக் கொண்டு.

பண் :

பாடல் எண் : 6

பொங்கி நின்றெழுந் தகடல் நஞ்சினைப்
பங்கி உண்டதோர் தெய்வமுண் டோசொலாய்
தொங்கி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்குத்
தங்கி நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! பொங்கி நின்று எழுந்த கடலினின்றும் விளைந்த ஆலகாலவிடத்தை விழுங்கி உண்ட ஒரு தெய்வம் இத்தெய்வத்தையன்றி வேறு உண்டோ சொல்வாயாக! அச்சோற்றுத்துறையர்க்கு மனம் தாழ்ந்து என்றும்தங்கி நீ பணி செய்வாயாக.

குறிப்புரை :

நஞ்சினைப் பங்கியுண்டதோர் தெய்வமுண்டோ சொலாய் - ஏனையோர் யாவரும் நன்மை தீமை கலந்து பங்கிடு பவராகிய எமது பெருமான் தீமையாகிய நஞ்சைத் தமக்கு வைத்தும், நல்லதாகிய அமிர்தத்தைத் தேவர்க்குவைத்தும் அந்த நஞ்சைப் பங்கிட்டு உண்டதுபோல வேறு தெய்வமுண்டோ? என்க. தொங்கி - துவங்கி. தங்கி - ஒருநெறிப்பட்டு.

பண் :

பாடல் எண் : 7

ஆணி போலநீ ஆற்ற வலியைகாண்
ஏணி போலிழிந் தேறியு மேங்கியும்
தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே
பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! ஆணி போல நீ மிகவும் வலி உடையையாயினும், ஏணியைப் போல் இழிந்தும் ஏறியும் இறங்கியும் வாடுகின்றனை; பிறவிப் பெருங்கடற்குத் தோணியாகிய சோற்றுத்துறையர்க்குப் பூணியாக நின்று பணி செய்வாயாக.

குறிப்புரை :

ஆணி - இருப்பாணி. ஆற்றவலியை - மிக்க வலிமை யுடையாய். ஏணிபோல் இழிந்தேறியும் - ஏணியைப் போலத்தான் இருந்த இடத்திலே இருந்து பிறர் இழியவும் ஏறவும் சாதனமாய் நின்றும் கவலைப்படும். இருப்பாணிபோல வலிமையாய் உள்ளது மான மனம் என முன்னே கூட்டுக. தோணி - பிறவிக்கடலில் இருந்து கரையேற்றும் தோணி போன்றவன். பூணியாய் - அன்புடையையாய்.

பண் :

பாடல் எண் : 8

பெற்ற மேறிலென் பேய்படை யாகிலென்
புற்றி லாடர வேயது பூணிலென்
சுற்றி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
பற்றி நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! ஏற்றினை ஏறினாலென்ன, பேய்கள் படைகளாகிலென்ன, புற்றினைப் பொருந்திய அரவை அணியாகப் பூண்டாலென்ன, நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே சுற்றியும் பற்றியும் பணிசெய்வாயாக.

குறிப்புரை :

பெற்றம் - எருது. பேய்ப்படை - ஊழிக்காலத்திரவில் இடுகாட்டுள் ஆடும்போது அப்பெருமானது படைகள், பேய்கள். ஆடரவேயது பூணிலென் - பாம்பணிந்தாலென்ன. சுற்றி - வலம்வந்து. பற்றி - விடாதுபற்றி. நீ இவற்றை இழிவெனக் கருதாது பணிசெய் என்க.

பண் :

பாடல் எண் : 9

அல்லி யானர வைந்தலை நாகணைப்
பள்ளி யானறி யாத பரிசெலாம்
சொல்லி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
புல்லி நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! தாமரையின் அகவிதழில் வீற்றிருக்கும் பிரமனும், ஆதிசேடனாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் அறிய முயன்றும் அறிய இயலாத தன்மையெல்லாம் சொல்லி, சோற்றுத்துறையர்க்கே நீ என்றும் பொருந்திப் பணிசெய்வாயாக.

குறிப்புரை :

அல்லியான் - வெண்டாமரை மலரின் அகவிதழ்களில் எழுந்தருளியிருப்பவனாய பிரமன். நாகணைப்பள்ளி - பாம்பினை அணையாகவும் பள்ளியாகவும் கொண்ட திருமால். புல்லி - கலந்து.

பண் :

பாடல் எண் : 10

மிண்ட ரோடு விரவியும் வீறிலாக்
குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ
தொண்டு செய்தென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! அமண் முண்டர்களோடு கலந்தும், பெருமையில்லாத குண்டர்களோடு பொருந்தியும் நின்ற நிலைமையினின்று நீங்கி உய்யப் போந்து நீ, சோற்றுத்துறையர்க்கே தொண்டுசெய்து என்றும் உண்டு பணி செய்வாயாக.

குறிப்புரை :

மிண்டர் - வலிய சமணர். விரவியும் - கூடியும். வீறிலா - பெருமையில்லாத. குண்டர் - உடல் கொழுத்தவர் சமணர். கழிந்து - நீங்கி. உய்யப்போந்து - உய்தற்பொருட்டு இறைவனிடத்து வந்து. என்றும் - நாடோறும். உண்டு - பணி செய்வதற்கென்றே உண்டு. பணிசெய் - தொண்டுசெய்.

பண் :

பாடல் எண் : 11

வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை
ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான்
சூழ்ந்த பாரிடஞ் சோற்றுத் துறையர்க்குத்
தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! ஆற்றலோடு வாழ்ந்தவனாகிய இராவணன் ஆழ்ந்துபோய் அலறுமாறு விரலால் ஊன்றினவனாகிய பூதப்படை சூழ்ந்த சோற்றுத்துறைப் பெருமானுக்கு மனமொழிமெய்களாற்றாழ்ந்து பணிசெய்வாயாக.

குறிப்புரை :

வாழ்ந்தவன் - உலகம் புகழ வாழ்ந்தவன். ஆழ்ந்து போய் அலற - கயிலையின்கீழ் ஆழப்பதிந்து அழ. பாரிடம் சூழ்ந்த - பூதகணங்கள் சூழ்ந்த; சோற்றுத்துறை என்க. தாழ்ந்து - வணங்கி.
சிற்பி