திருச்செம்பொன்பள்ளி


பண் :

பாடல் எண் : 1

கான றாத கடிபொழில் வண்டினம்
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி
தான றாததோர் கொள்கையன் காண்மினே.

பொழிப்புரை :

மணம் நீங்காத விளக்கம் உடைய பொழில்களில் வண்டினங்களின் தேன் நீங்காத திருச்செம்பொன் பள்ளி இறைவன் , தசைவிட்டு நீங்காத ஒரு வெண்தலையில் பலியினைத் தான் ஏற்றலினின்றும் நீங்காத இயல்புடையவன் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

கான் - மணம் . அறாத - நீங்காத . கடி - விளக்கம் . வண்டினம் - வண்டுக்கூட்டங்கள் . தேன் அறாத - தேனை இழக்காத . ஊன் அறாததொர் வெண்டலை - தசை நீங்காததொரு வெள்ளிய மண்டையோடு . பலிதானறாததோர் கொள்கையன் - பிச்சையெடுக்கும் தொழில் நீங்காத தன்மையன் .

பண் :

பாடல் எண் : 2

என்பு மாமையும் பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.

பொழிப்புரை :

எலும்பும் , ஆமையும் அணிந்து திரிதருகின்ற செம்பொன்பள்ளி இறைவனும் சிவலோகனுமாகிய பெருமானை அன்பு செய்யும் ஆராய்ந்த இழையை அணிந்த பெண்களே ! அப் பெருமானை நம் அழகிய மனக்கோயிலின்கண்ணே நினைந்தால் நம் வினைகள் நாசமாகும் .

குறிப்புரை :

என்பும் - எலும்பு மாலையும் . ஆமையும் - கூர்மாவதாரமாகிய ஆமையின் ஓட்டையும் . பூண்டு - அணிந்து - ` முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு ` ( தி .1. ப .1. பா .2)) உழிதர்வர்க்கு - திரிபவர்க்கு . ஆயிழையீர் - சிறந்த நூல்களை ஆராயும் இயல்பினீர் . பொன்பள்ளி - பொற்கோயில் . நம்பொன்பள்ளி உள்க - அழகிய நமது உள்ளக்கோயிலில் நிறுத்தி உள்க .

பண் :

பாடல் எண் : 3

வேறு கோலத்த ராணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ண லவனையே.

பொழிப்புரை :

வேறுகோலத்தோடு கூடியவரும் , ஆண் , பெண் அல்லாதவரும் , கிழித்த கோவணத்துகிலாடையுடையவரும் , செம்பொன் பள்ளியில் வீற்றிருந்து கங்கையாளைச் சடையிற் சூடிய அண்ணலாகிய அப்பெருமானைத் தெளிந்துகொள்ளுதல் யார்க்கும் எளிதாம் ஒன்றன்று .

குறிப்புரை :

ஆணலர் பெண்ணலர் வேறு கோலத்தர் எனக் கூட்டுக . வேறு கோலத்தர் - ஆண் பெண் அலியலன் என்னுமாறும் இது அவனுருவன்று என்னுமாறும் தனிப்பட்ட கோலம் கொள்பவர் . கீறு - கிழித்த . ஐ - அழகிய . துகில் - ஆடை . இருபெயரொட்டு . சிறந்த ஆடை . அவனைத் தேறலாவதொன்றன்று - அவனைத் துணிதல் பசுபோதத்தால் ஆவதொன்றன்று .

பண் :

பாடல் எண் : 4

அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்
திருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.

பொழிப்புரை :

அருவருப்புக்கொள்ளாது ஒரு வெண்டலையை ஏந்திவந்து தெருவெல்லாம் உழல்வார் செம்பொன் பள்ளி இறைவர் ; திருமாலும் பிரமனுமாகிய இருவரால் திருமுடி , திருவடிகளின் எல்லை தேடப்பட்ட அவ்வொருவர் பலபெயர்களும் கொண்டு திகழ்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

அருவராததொர் - வெறுக்கத்தக்கதல்லாத ஒரு . இருவராய - அருளுடன் சத்தியும் சிவமுமாய் . இடுவார் - வந்து பிச்சையிடுவார் . கடை - வீட்டுவாயில் . உழல்வார் - திரிந்து வருந்துவார் . ஒருவர் தாம் பலபேருளர் - தாமொரு பொருளேயானவர் ஆயினும் பல திருப் பெயர்களை உடையவர் . ஆணவத்தைப் பலியாக இடுதல் உட் பொருள் ` பசுபோதக் கவளமிட ` ( திருவிளையாடல் - கடவுள் வாழ்த்து 15).

பண் :

பாடல் எண் : 5

பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்
ஏவ லாலெயின் மூன்று மெரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.

பொழிப்புரை :

தேவர்கள் சென்று இறைஞ்சுகின்ற செம்பொன் பள்ளி இறைவர் கொன்றைப்பூப் பொருந்திய சடையில் கங்கையைச் சூடியவரும் , ஓரம்பினால் முப்புரம் எரித்தவரும் , மூவர்க்கும் முதலாய் நின்ற மூர்த்தியும் ஆவர் .

குறிப்புரை :

பூவுலாம் - பூக்கள் பொருந்திய . புனல் - கங்கை . ஏ அலால் - அம்பு இல்லாமலே நகைத்தெரித்தவன் என்றபடி . வல் ஏ ஆல் - வலிய அம்பால் எனவும் மாறுக . மூவராய் முதலாய் - படைத்துக் காத்து அழிக்கும் கடவுளராயும் . அம்மூவர்க்கும் முழுமுதலாயும் உள்ளவர் . தேவர் சென்றிறைஞ்சும் - விருத்திரன் என்ற அசுரனைக் கொல்லும் பொருட்டும் தக்கயாகத்தில் போந்தபழி நீங்குதற் பொருட்டும் இந்திரனும் , சிருஷ்டியின்பொருட்டுப் பிரமனும் , கணவனைப்பெற இரதியும் , எட்டுத்திக்குப் பாலரும் வழிபட்டதாய்த் தலவரலாறு .

பண் :

பாடல் எண் : 6

சலவ ராயொரு பாம்பொடு தண்மதிக்
கலவ ராவதின் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவில் லாலெயில் மூன்றெய்த கூத்தரே.

பொழிப்புரை :

பெருமைக்குரிய வில்லால் மூன்றெயில்களை எய்த கூத்தரும் , பொட்டணிந்தவரும் , நீண்ட சடாமுடி உடையவருமாகிய செம்பொன்பள்ளி இறைவர் கங்கையைச் சூடியவராய் , பாம்பும் குளிர்பிறையும் கலந்தவராய் ஆவதன் காரணம் என்னையோ ?.

குறிப்புரை :

சலவராய் - கங்கையைச் சூடியவராய் . கலவராவதின் காரணம் - கலந்தணிபவராதற்குக் காரணம் . நெற்றிப் பொட்டும் நீர்முடியும் அணிந்தவர் . குலம் - உயர்ந்த .

பண் :

பாடல் எண் : 7

கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த ராகி யிருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோ ரைந்தலை நாகமே.

பொழிப்புரை :

கையிற்கொண்ட சூலம் உடையவரும் , கட்டு வாங்கத்தை உடையவரும் , திருநீலகண்டரும் ஆகி இருசுடர்களைப் போன்று சிவந்த திருமேனியும் அதிற்பூசிய வெண்ணீற்றினருமாகிய செம்பொன்பள்ளித் தலைவர் கையின்கண் உள்ளது ஓர் ஐந்தலை நாகமாகும் .

குறிப்புரை :

கைகொள் - கையின்கண் கொண்ட . கட்டுவாங்கத்தினர் - மழுவாயுதத்தினர் . இருசுடர் - சூரிய சந்திரர் வடிவாயிருப்பவர் . கையது - கையின்கண் அணியப்பட்டது . கையிற்பிடித்தது கங்கணமாகக் கொண்டது என்றுமாம் .

பண் :

பாடல் எண் : 8

வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையி னீருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.

பொழிப்புரை :

வெவ்விய கண்ணையுடைய நாகத்தினை அஞ்சும்படி ஆர்த்துக்கட்டியவரும் , பசுமையான கண்ணையுடைய ஆனையின் பச்சைத்தோலைப் போர்த்தவரும் , செங்கண்ணையுடைய திருமாலைத் தமக்கு விடையாக உடையவரும் ஆகிய செம்பொன் பள்ளி இறைவர் தம்மை அடைக்கலமாக அடைந்தவர்களின் வினைகளைத் தீர்ப்பர் .

குறிப்புரை :

வெங்கண் நாகம் - கொடிய கண்ணையுடைய பாம்பு , வெருவுற - அஞ்ச . பைங்கண் - செவ்விய இளைய கண்கள் . ஆர்த்தவர் - கட்டியவர் . அங்கணாய் - அழகிய பற்றுக் கோடாய் . அடைக்கலமாய் , அவ்விடத்தவராய் , அவரையே புகலிடமாய் எனவுமாம் .

பண் :

பாடல் எண் : 9

நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.

பொழிப்புரை :

செம்பொன்பள்ளி இறைவர் நன்மை மிக்க நாரணனும் , பிரமனும் ஆகிய இருவரும் நிலைபெற்ற திருமுடியையும் திருவடியையும் காணத்தொடங்கிச் சென்றும் காண்டலரியவராய் நின்ற அச்சூழ்நிலையில் நீண்டு அழலுருவாயினர் .

குறிப்புரை :

நன்றி - நன்மையையுடைய . பிரமன்போலப் பொய் கூறாமையின் நன்றி நாரணன் என்றார் . நீள் எரியாகிநின்ற சூழலில் நீள் முடியோடு அடி காண்புறச் சென்று காண்பறியானென்க .

பண் :

பாடல் எண் : 10

திரியும் மும்மதில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன லோட்டி யிலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்
அரிய வான மவரருள் செய்வரே.

பொழிப்புரை :

செம்பொன்பள்ளி இறைவர் . திரிகின்ற மும்மதில்களைச் செங்கணை ஒன்றினால் எரியுமாறு எய்து அனலினால் ஓட்டி , இராவணன் நெரியுமாறு தம் திருவிரல் ஒன்றால் ஊன்றியவர் ; தம்மை யடைந்த அன்பர்க்கு அரிதாகிய வீட்டுலக இன்பத்தை அப்பெருமான் அருள்வர் .

குறிப்புரை :

செங்கணை - கூரியநேரிய கணை . அனலோட்டி - அக்கினிதேவனாகிய கணையை ஏவி . அரியவானம் - கிடைத்தற்கரிய வீடுபேறு . ஒன்றினால் - ஒன்றின்கண் வைத்து . அனல்செங்கணை ஒன்றினால் ஓட்டி எரிய எய்து எனக் கூட்டுக .
சிற்பி