திருக்கடவூர்வீரட்டம்


பண் :

பாடல் எண் : 1

மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலால்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

திருக்கடவூரில் மேவும் பெருமான் , மலையில் வாழும் யானை போன்று மயக்கம் செய்த கொடிய வினைகளுக்கே நிலைக்களமாய் யானைபோன்று அடங்காது பலவற்றையும் நினைக்கின்ற நல்வினைகளாகிய யானைகளையும் ஏனைய மதயானையையும் அழிக்கும் இயல்பினர் . கலையின் பயனாகிய ஒழுக்கத்தால் அடையத்தகும் யானை போன்றவர் .

குறிப்புரை :

மலைக்கொள் யானை மயக்கிய வல்வினை - மலையில் வாழும் யானை போன்று மயக்கத்தைச் செய்த கொடிய வினைகள் . வல்வினை நிலைக்கொளானை - கொடிய வினைகளுக்கே நிலைக் களமாய் யானை போன்று அடங்காது பலவற்றை . நினைப்புறும் - நினைக்கின்ற . கொலைக்கை யானையும் - வல்வினையாகிய யானையையும் ஏனை மத யானையையும் . கலைக்கையானை - கல்வியறிவினாலாகிய ஒழுக்கத்தின் பயனாக அடையத்தக்க பொருள்களாயுள்ளவர் .

பண் :

பாடல் எண் : 2

வெள்ளி மால்வரை போல்வதொ ரானையார்
உள்ள வாறெனை யுள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

வெள்ளிமால்வரை போன்ற அயிராவணம் என்னும் ஒப்பற்ற ஆனையை உடையார் ; உள்ளவாறே என் உள்ளத்தில் புகுகின்ற ஆனைபோல்வார் ; கொள்ளும் இடமாகிய கோயிலுள் ஆனையாய் உள்ளவர் ; ஆதலின் கடவூர்த்தலத்து இறைவர் கள்ளம் உடைய ஆனைபோல்வார் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

வெள்ளிமால்வரை - கயிலை ; கயிலைபோன்று வெள்ளிய . ஆன் - எருது ; எருதையுடையர் என்க . அல்லது ஐராவணம் எனினுமமையும் . உள்ளவாறு - மெய்யாக என்னுள் புகுமென்க . ஆனையார் - பெரியர் . கொள் அம் ஆகிய கோயில் - அழகைக் கொண்டதாகிய சிறிய கோயில் எனக்கூட்டுக . கள்ள ஆனை - காண்பதற்கு அரிய யானைபோன்றவர் .

பண் :

பாடல் எண் : 3

ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ வுருக்கிய வானையார்
வேன லானை யுரித்துமை யஞ்சவே
கான லானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

ஞானமாகிய நன்குணரத்தக்க ஆனையார் ; உடற் பொதியைமேவுமாறு உருக்கி உள்ளொளிபெருக்கும் ஆனையார் ; ஆனையை உமாதேவியார் அஞ்சுமாறு உரித்த கடவூர்த் தலத்து இறைவர் ; கானல் ஆனையும் போல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

ஞானமாகிய நண்குணர் - அறியவேண்டுவன பலவற்றையும் நன்கு உணர்ந்தவராகிய . ஊனை - உடலை . வேவஉருக்கிய - கருவி கரணங்களை அன்புமயமாகச் செய்த . வேனல் ஆனை - சினமுள்ளதாய் வந்த யானை . கான் அல் யானை - காட்டில் திரிதல் இல்லாத நல்ல யானை . உமையஞ்ச உரித்த கடவுளர் என முடிக்க . உரித்த உமை பெயரெச்சத்தகரம் தொக்கது .

பண் :

பாடல் எண் : 4

ஆல முண்டழ காயதொ ரானையார்
நீல மேனி நெடும்பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

நஞ்சினை உண்டும் அழகுபெற்ற ஆனையார் ; நீல மேனியை ஒருபாகத்தே உடைய நீண்ட பளிங்கனைய ஆனையார் ; கொழுவிய சுடர்விடும் கோலம் உடைய ஆனையார் ; கடவூர்த் தலத்திறைவர் கால ஆனை போல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

ஆலம் - விடம் . ஆலமுண்டு அழகைப் பெற்ற என்க . அழகாயதொரானையார் - அழகியதொரு யானை போன்றவர் . நீல மேனி - பார்வதி அல்லது திருமாலின் திருவுரு . பளிங்கானையார் - வெண்ணீறணிந்து வெள்ளியராய் விளங்குபவர் . கோலமாய் - அழகியராய் . கொழுஞ்சுடர் ஆனையர் - மிக்கஒளியாய் விளங்கும் இயல்பினர் . கால ஆனை - காலனுக்கு ஆனைபோன்றவர் . காலனை அழித்தவர் .

பண் :

பாடல் எண் : 5

அளித்த ஆன் அஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

அன்பர்கள் பரிந்து கொடுக்கும் பஞ்ச கவ்வியங்களை ஆடிய ஆனையார் ; வெண்மையான இடபக்கொடி உடைய ஆனையார் ; இகழ்ந்து வந்த யானையினை எல்லோரும் எள்குமாறு உரித்த ஆனையார் ; கடவூர்த்தலத்திறைவர் களிப்புற்ற யானை போல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

ஆன் அளித்த அஞ்சும் ஆடிய என்க . ஆன் - பசு . அஞ்சு - பஞ்சகவ்வியம் . வெளுத்த ஏறு - நீள்கொடியில் வெளுத்த ஏறுடையார் என மாறி வெள்விடைக் கொடியர் என்க . எளித்த - எளிதாகக் கருதிக் கொல்லவந்த . எள்குவித் தானையார் - இகழ்ந்து கொன்ற இயல்பினர் . பெயரெச்சத்தகரம் தொக்கது . களித்த - மிக்க இன்பத்தையுடைய .

பண் :

பாடல் எண் : 6

விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

விடுத்த பெரியமலையை விண்ணுற நிமிர்க்கும் ஆனையார் ; தொடுத்த பெரியமலை தூய்மையாக உடைய ஆனையார் ; சினந்துவந்த காலனைக் காய்ந்த ஒப்பற்ற கடவூர்த்தலத்திறைவர் சினத்தலுற்ற ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

விண்ணுற விடுத்த - ஆகாயத்தை அளாவச் செய்த . மால்வரை - பெரியமலை ; கயிலாயம் . மால்வரை தொடுத்த - பெரிய இமயமலையை வில்லாக வளைத்த . கடுத்த - கோபித்த .

பண் :

பாடல் எண் : 7

மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

மண்ணுலகின் உள்ளாரை மயக்கம் உறுவிக்கும் ஆனையார் ; எண்ணிக்கையிற் பெருகிய நல்லடியார் பலர் ஏத்தித்தொழும் ஆனையார் ; விண்ணுலகின்கண் உள்ள தேவர்கள் பலரும் அறிகின்ற ஆனையார் ; கடவூர்த்தலத்து இறைவர் காதலாகித் தொழும் அடியார் கண்ணுள் நின்று காட்சி வழங்கும் ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

மண்ணுளார் - மக்கள் . மயக்குறும் - பரிபாக மடைதற் பொருட்டு மலங்களாகிய அழுக்குகளில் மயக்குறுவிக்கும் . எண்ணுளார் பலர் - பல எண்ணங்களையுடைய பலர் . கண்ணுள் ஆனை - கண்களுக்குள் நீங்காதிருக்கும் ஆனை போன்றவர் .

பண் :

பாடல் எண் : 8

சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

சினக்கின்ற செம்பவளத் திரள்களை உடைய ஆனையார் ; மனத்தின்கண் நிறைந்த வல்வினைகளைத் தீர்க்கும் ஆனையார் ; அன்னைக்கும் மேலாகிய அன்புடையார் மனத்து உறையும் ஆனையார் ; கடவூர்த்தலத்து இறைவர் ஒலித்து முழங்கி வரும் ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

சினக்கும் - சிவக்கும் . திரள் - திரள்போன்ற . மனக்கும் - மனத்தின்கண் . அனைக்கும் - அன்னையினும் . கனைக்கும் - அடியார்களைத் தன்பால் அழைக்கும் .

பண் :

பாடல் எண் : 9

வேத மாகிய வெஞ்சுட ரானையார்
நீதி யானில னாகிய வானையார்
ஓதி யூழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

வேதங்களாய் அதன் ஒளியாய் விளங்கும் ஆனைபோன்றவர் . நீதிமுறை விளங்க நிலத்தின்கண் தோன்றியவர் என்க . வேதங்களை ஓதி பல ஊழிகளையும் கண்டறிந்தவர் . அன்பர்க்கன்பர் கடவூர் இறைவர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

வேதமாகிய ஆனையார் , வெஞ்சுடர் ஆனையார் என்க . நீதியால் - கடமையாக . நிலனாகிய - நிலமாக விளங்கிய ; நிலத்தின்கண் திருமேனிகொண்டு தோன்றிய என்றுமாம் . ஓதி - வேதமோதி . ஊழிதெரிந்துணர் - பல ஊழிகளையும் தெரிந்து உணர்கின்ற .

பண் :

பாடல் எண் : 10

நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

நெடியோனாகிய திருமாலும் , நான்முகனும் காண்போம் என்று ஆணவத்தாற் கருதிப் புகுந்தும் காண்டற்கரியவராய் மாட்சி உடைய பேரழலாக நிமிர்ந்த ஆனையார் ; கடவூர்த் தலத்து இறைவர் காண்டற்குரிய ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

காண்டும் - அடிமுடி காண்போம் . மாண்ட - செருக்கு அழிந்த . காண்டலானை - அனைவரும் காணத்தக்க ஆனை போன்றவர் .

பண் :

பாடல் எண் : 11

அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்க ளிறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

எடுப்பேன் என்று அடுத்துவந்த இலங்கை வேந்தனை எடுக்கலுற்ற இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனையார் ; சினந்த காலனைக் காய்ந்த ஆனையார் ; கடவூர்த் தலத்து இறைவர் கொன்றையணிந்த ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

அடுத்துவந்த - கயிலையை நெருங்கிவந்த. கடுத்த - சினந்துவந்த. கடுக்கை - கொன்றை.
சிற்பி