திருமயிலாடுதுறை


பண் :

பாடல் எண் : 1

கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ள முள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.

பொழிப்புரை :

மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலும் , கங்கை வெள்ளம் தாங்கிய சடையனுமாகிய பெருமானை விரும்பிக் காதல் கொள்ளும் இயல்புடைய திரண்ட வளைகள் பெய்யப்பட்ட இப்பெண் உள்ளத்தால் உள்கி அப்பெருமான் திருப்பெயரையே உரைக்கும் தன்மையள் ஆயினள் .

குறிப்புரை :

மங்கை நல்லாள் ஒருத்தி என்ற எழுவாய் வருவித்துக் கொள்க . காதன்மை கொள்ளும் - ஆசைகொள்ளுவாள் . கோல் வளை - திரண்ட வளையல்களை . பெய்துறும் - உடல் இளைத்தலால் கீழே கழலவிடுவாள் . உள்ளம் உள்கி - மனமுருகி ; திருப்பெயர் உரைக்கும் என்க . வள்ளல் - நாற்றிசை வள்ளலாய் மாயூரத்தைச் சூழ நான்கு திசையிலும் வீற்றிருப்பவன் . வேண்டி - விரும்பி ; சடையனையே விரும்பி என்க . செவிலி கூற்று .

பண் :

பாடல் எண் : 2

சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பால்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே.

பொழிப்புரை :

சடையின்கண் வெண்பிறை வைத்த பெருமை பொருந்திய மயிலாடுதுறைத் தலத்து இறைவனது கொத்தாகப் பொலியும் கொன்றை மலரினைக் கொடுத்தால் தன் சித்தம் தெளிந்து , உடல் பூரித்து வளைகளைச் செறிப்பாள் என் பைங்கொடியாகிய இவள் தன் பச்சைவண்ணமும் நீங்கிப் பழைய நிறம் பெறுவாள் .

குறிப்புரை :

சித்தம் தேறும் - மனந்தெளிவாள் . செறிவளை - கையில் செறித்த வளையல்கள் . சிக்கெனும் - கையில் கழலாது செறிந்து பொருந்தும் ; மகிழ்ச்சியால் உடம்பு பூரிக்க வளைகழலாது தங்கும் என்றபடி . பச்சை - பசலை . என் பைங்கொடி - என் அன்பு மகளாகிய பசிய கொடிபோன்ற பச்சிளம் பருவத்தாள் . பால்மதி வைத்த என்க . மா - சிறந்த . கொத்தினிற் பொலிகொன்றை - கொத்துக்களாய் மலர்ந்து பொலிவுறும் பெருமான் சூடிய கொன்றைமாலை . கொடுக்கில் - தருவாரேயானால் . கொன்றை கொடுக்கில் சித்தம் தேறும் என முன்னே கூட்டிப் பொருள் காண்க . செவிலி கூற்று .

பண் :

பாடல் எண் : 3

அண்டர் வாழ்வும் அமர ரிருக்கையும்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

பொழிப்புரை :

வண்டுகள் சேர்ந்த மயிலாடுதுறைத் தலத்து இறைவனுக்குத் தொண்டுசெய்யும் அடியார் திருப்பாதங்களைச் சூடிச் செறிந்துகொண்டால் , தேவ உலக வாழ்வும் , தேவர்களது பதவி இன்பங்களும் கண்டு வீற்றிருக்கும் கருத்து எமக்குச் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

அண்டர் வாழ்வு - தேவர் பதவி . அமரர் இருக்கை - இங்கு அயன்மால் பதவிகள் . கண்டு - அநுபவித்து . வீற்றிருக்கும் கருத்து - தலைமைதோன்ற இருக்கின்ற குறிக்கோள் . ஒன்றிலோம் - ஒன்றும் எங்கள் மனத்து இல்லை . ஒன்றும் - சிறிதும் . அவை பிறவா நெறியாகிய வீடுபேறாகா . நல்வினைப் பயனுள்ள அளவும் துய்த்து அது முடிந்தவுடன் மண்ணிற்பிறக்கும் நிலையுடையன . ` வானேயும் பெறில் வேண்டேன் ` என்றார் மாணிக்கவாசகரும் . பொழிலின்கண் வண்டுசேர் மயிலாடுதுறை என்க . பாதங்கள் - திருவடிமலர்களை . சூடி - தலையிலே சூடி . துதையில் - பொருத்திக்கொள்வோமே யானால் ; அதுவே வீடுபேறு . ஒன்று , முற்றும்மை தொக்கது .

பண் :

பாடல் எண் : 4

வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்க னருளிலே.

பொழிப்புரை :

பெருவீரம் உடையானும் , பெருமைக்குரிய மயிலாடுதுறையில் உறையும் அழகிய சொல்லை உடையானாகிய உமைபங்கனும் ஆகிய பெருமான் அருளினால் வெவ்விய சினத்தை உடையனாய் விரைந்துவரும் காலன் நம்மிடம் விரைய மாட்டான் ; அஞ்சத்தகுவனவாகிய இறப்பும் பிறப்பும் அறுக்கலாம் .

குறிப்புரை :

வெஞ்சினம் - கொடிய கோபம் . விரைகிலான் - விரைந்துவந்து உயிரைக் கொள்ள மாட்டான் ; ` ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவர் ` என்றார் பின்னும் . அஞ்சு இறப்பும் - அஞ்சுதற்குரியதாகிய இறப்பு . ` யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கு என்கடவேன் ` என்றார் மணிவாசகர் . அறுக்கலாம் - நீக்கிக் கொள்ளலாம் . மஞ்சன் , மைந்தன் என்பதன் போலி . அஞ்சொலாள் உமை - அஞ்சொலாளாகிய உமை . இத்தலத்து இறைவி திருப்பெயர் அஞ்சொல்நாயகி . அஞ்சொல் நாயகி அஞ்சல் நாயகியாய் அதற்கேற்ப அபயாம்பிகை என மொழி பெயர்க்கப் பெற்று ( அபயந்தருபவள் என்ற பொருளில் ) வழங்கி வருகிறது .

பண் :

பாடல் எண் : 5

குறைவி லோங்கொடு மாநுட வாழ்க்கையால்
கறைநி லாவிய கண்டனெண் தோளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே.

பொழிப்புரை :

திருநீலகண்டனும் , எட்டுத் தோளினனும் , வேதம் வல்லவனுமாகிய மயிலாடுதுறை உறையும் இறைவன் நீண்ட கழல்களை ஏத்தி இருந்தால் , கொடிய மானிட வாழ்க்கையால் வருகின்ற குறைவு சிறிதும் இல்லாதவராவோம் .

குறிப்புரை :

கொடு - தீய . மீண்டும் மீண்டும் பிறவிக்கேதுவாய வினை தேடலால் தீயது என்றார் . நீள் கழல் - அழிவில்லாத திருவடிகளை ; ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அம்மானுட வாழ்க்கையால் வினை தேடுதலாகிய குறையிலை என்க .

பண் :

பாடல் எண் : 6

நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைகள் ஆயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.

பொழிப்புரை :

கலைகளை ஆய வல்லவனும் , கயிலாயமலை உடையவனுமாகிய பெருமானின் நிலையை சொல்லும் நெஞ்சமே ! பெருமைக்குரிய மயிலாடுதுறை இறைவன் நம்தலையின் மேலும் மனத்துள்ளும் தங்குதற்கு எத்துணைப் பெருந்தவம் நீ செய்துள்ளாய் !

குறிப்புரை :

நிலைமை சொல்லு நெஞ்சே - நெஞ்சே ! உன் தவத்தின் நிலைமையை உண்மையாக எனக்குச் சொல் . கலைகளாய என்பதற்குக் கலைகள் ஆயன எனவும் ஆய்வதற்கு எனவும் பொருள் கொள்க . கயிலாயநன் மலையன் - திருக்கயிலாயத் திருமலையிலே எழுந்தருளியிருப்பவன் . மயிலாடுதுறையன் தலையின் மேலும் மனத்துள்ளும் எழுந்தருளும் வண்ணம் என்ன தவத்தைச் செய்தாய் சொல் என்று நெஞ்சை விளித்துக்கேட்கும் முறையில் அமைந்தது . உள்ளும் புறமும் வழிபடல் குறிப்பு .

பண் :

பாடல் எண் : 7

நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயிலாடு துறையென்று
போற்று வார்க்குமுண் டோபுவி வாழ்க்கையே.

பொழிப்புரை :

திருநீறணிந்தவனும் , நிமிர்தலுற்ற பொலிவுற்ற சடையினனும் , விடையாகிய ஏற்றினை உடையவனும் , நம்மை ஆளுடையவனும் , புலன்களின் நெறியை மாற்றியவனுமாகிய மயிலாடுதுறை என்று போற்றுகின்ற அடியார்கட்குத் துயரம் மிகுந்த இவ்வுலக வாழ்க்கை உண்டோ ?

குறிப்புரை :

நிமிர் - நீண்ட . புன் - மெல்லிய . புலன் மாற்றினான் - ஐம்புல அவாவை நீக்கியவன் . புவி வாழ்க்கை - மண்ணுலக வாழ்க்கை ; பிறப்பு எனினுமாம் .

பண் :

பாடல் எண் : 8

கோலும் புல்லு மொருகையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.

பொழிப்புரை :

நீல நிறம் உடைய கரிய மயில்கள் ஆடும் துறையினை உடையவனே ! முக்கோலும் , தருப்பைப்புல்லும் , ஒரு கையில் கூர்ச்சமும் , தோலும் பூண்டு துயரம் அடைந்து பயன் யாது ? நுண்ணுணர்வுடையோர்க்கு நூலும் வேண்டுமோ ?

குறிப்புரை :

கோல் - மூன்று கிளைவடிவாயகோல் . அல்லது யோக தண்டம் . இது அந்தணர்க்குரியதாதலை ` நூலேகரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய ` ( தொல் , பொருள் . 615) ` முக்கோல்கொள் அந்தணர் ` ( கலித் ) என்பன முதலியவற்றால் அறியலாம் . புல் - தருப்பைப்புல் . கூர்ச்சம் - தர்ப்பை நுனிகளை முடிந்தது ; உயிரையோ கடவுளையோ ஆவாகனம் செய்தற்குரியது . தோலும் பூண்டு - மான்தோல் உடுத்து அல்லது பூணூலில் முடித்து . துயரமுற்று - வருந்தி . நுண்ணுணர்ந்தோர்கட்கு நூலும் வேண்டுமோ - மெய்ப்பொருளை நுணுகி உள்ளவாறறிந்த ஞானிகளுக்குச் சாதனங்கள் வேண்டாம் என்பதைக் குறிப்பது . ஞானியர்கள் சாத்திய மடைந்தவர் ; அவர்களுக்குச் சாதனங்கள் தேவையில்லை என்பதாம் . முக்கோல் முதலியவற்றை உடையவர்களே வேதமோதற்குரியவர் எனப்படுவதால் அவ்வுரிமையைப் பெற்றும் இறைவனை உணராதார்க்குப் பயன் இல்லை என்பதாம் .

பண் :

பாடல் எண் : 9

பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
வணங்கு மாமயி லாடு துறையரன்
அணங்கொர் பால்கொண்ட கோல மழகிதே.

பொழிப்புரை :

படத்தினைக்கொண்டு ஆடுகின்ற அரவனைய அல்குலை உடைய கங்கையை , மணம்கமழும்படி சடையின் கண் வைத்த மறைவடிவானவனும் , வணங்கியெழும் மயிலாடுதுறை உறைபவனுமாகிய இறைவன் அம்மையினை ஒருபாகத்தே கொண்டு அருள்செய்யும் திருக்கோலம் மிக அழகியதாகும் .

குறிப்புரை :

பணம் - பாம்பின் படம் . ஆடு - ஆடுகின்ற . அரவு - அரவுபோன்ற ; அரவுகொள் பணம்போன்ற அல்குல் என்க . பகீரதி - கங்கை . மணங்கொள - அவள் தன்னை மணம் புரிந்துகொள்ள . வணங்கு மாமயிலாடுதுறை ; அணங்கு எனப்பின்னர் வருதலால் இங்கு அதனைக் கூறாது வணங்கு என்றே கூறினார் . அம்பிகை மயில் உருக்கொண்டு பெருமானை வழிபட்டாள் என்பது தலபுராணம் . வணங்கும் பார்வதிதேவியாகிய மாமயிலாடுதுறை என்றார் . அணங்கு - பார்வதி . கோலம் - தோற்றப் பொலிவு .

பண் :

பாடல் எண் : 10

நீணி லாவர வச்சடை நேசனைப்
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனைக்
காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே.

பொழிப்புரை :

நீண்ட நிலவினையும் , அரவத்தையும் சடையில் விரும்பிச் சூடியுள்ளவனைப் பேணாதவர் பேதுறும்படி விலக்கினோம் ; ஒளிபொருந்திய மயிலாடுதுறையினைக் காணில் , ஆர்க்கும் கடுந்துயரங்கள் இல்லை .

குறிப்புரை :

நேசன் - அன்பனை . பேணிலாதவர் - விரும்பாதவர் . பேதுற - துன்புற . ஓட்டினோம் - தீர்க்கச்செய்தோம் . வாள்நிலா - ஒளி நிலவும் புகழ் . காணில் - தரிசித்தால் . கடுந்துயர் - இறப்பு முதலிய மிக்க துன்பங்கள் .

பண் :

பாடல் எண் : 11

பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவ னின்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழும்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.

பொழிப்புரை :

இராவணனது பருத்த தோள்களும் முடிகளும் தூளாகுமாறு இருத்தினவனும் , அவனது இன்னிசையைக் கேட்டலும் வரம் அருளியவனும் ஆகிய பெருமானை , மயிலாடுதுறையில் தொழும் கரத்தினை உடையவர்கள் வினை , கட்டற்றுப்போகும் காண்பீராக ;.

குறிப்புரை :

பருத்த - பெரிய. பொடிபட - சிதற. வரத்தினான் - நாளும், வாளும், பெயரும் வரமாகத் தந்தவன். கரத்தினார் - கையை உடையவர், கருத்தினார் எனவும் பாடம், வினைக்கட்டு - இருவினைப் பந்தபாசங்கள். அறும் - முழுதும் நீங்கும்.
சிற்பி