திருப்பைஞ்ஞீலி


பண் :

பாடல் எண் : 1

உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே.

பொழிப்புரை :

கோவண உடையினரும் , ஒன்றும் குறைவில்லாதவரும் , படைக்கலங்களைக்கொண்ட பூதகணங்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலித் திருத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சடையிற் கங்கையை வைத்த சதுரப்பாடு உடைய பெருமானை அடையும் வல்லமை உடைய அன்பர்களுக்குத் துன்பங்கள் இல்லை .

குறிப்புரை :

ஒன்றும் குறைவிலர் - கோவண ஆடையராயினும் ஒன்றாலும் குறையுடையரல்லர் . பாரிடம் - பூதகணங்கள் . படை கொள் - படையாக அமைந்த ; பைஞ்ஞீலியார் என்க . சூழ்ந்த - வலம் செய்யப் பெற்ற . சதுரர் - சதுரப்பாடுடையவர் . உலகமெல்லாம் பரவி மூடி அழிக்க வல்லதாக வந்த கங்கையைப் பனித்துளி போலச் சடையில் தரித்தமைபோல்வன சதுரப்பாடுகள் . ஞீலி - ஒருவகை வாழையால் பெற்ற பெயர் .

பண் :

பாடல் எண் : 2

மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.

பொழிப்புரை :

ஊமத்தம் மலர்களைச் சூடிய பெருவீரரும் , சித்தராகத் திரிபவரும் , அன்பர் பலர் தொழுதேத்தும் பைஞ்ஞீலியில் உறையும் அத்தரும் , தொழுவார் வினை தீர்ப்பவரும் ஆகிய அப் பெருமானைத் தொழும் வல்லமை உடையவர் நல்லவர் ஆவர் .

குறிப்புரை :

மத்தமாமலர் - ஊமத்தமாகிய சிறந்த மலர் . சித்தராய் - சித்தத்தில் வைத்தவர்களாய் . வினைதீர்ப்பரால் என்பதிலுள்ள ஆல் அசை . அத்தன் - தலைவன் , தந்தை .

பண் :

பாடல் எண் : 3

விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே.

பொழிப்புரை :

நிணம் பொருந்திய சூலத்தையும் , வெண் மழு வாளையும் படைக்கலமாக உடையவனும் , பேய்களும் தூங்குகின்ற நள்ளிருளில் சுடுகாட்டில் ஆடலை உடையவனும் , பைஞ்ஞீலியில் உறையும் பரமனும் ஆகிய பெருமானைப் பழுது ஒன்றும் இன்றித் தொழுது செல்பவர் வினைகள் பொடியாகும் .

குறிப்புரை :

விழுது - நெய் எனலுமாம் . மழுவாள்படை - ஒளி பொருந்திய மழுவாயுதம் . கழுது - பேய் . துஞ்சு - உறங்கும் . இருள் - ஊழி . பழுது - குற்றம் . தூளி - பொடியாம் .

பண் :

பாடல் எண் : 4

ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே
நின்ற சூழ லறிவரி யானிடம்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி யிருந்த அடிகளே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தம்மிலே ஒன்றித் தேட முற்பட்டும் திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம் , பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும் . இத்தலத்திலேயே அடிகள் என்றும் மேவியிருப்பது .

குறிப்புரை :

ஒன்றி - கூடி . தம்மிலே ஒன்றி எனமாறுக . நின்றசூழல் - அளவுபட்ட நின்ற இடம் . அறிவரியான் - அறிதற்கரியவன் . பார் இடம் - பூமியாகிய இடம் எனலுமாம் . இடம் சென்று - எழுந்தருளி யிருக்குமிடத்திற் சென்று , அடிகள் அறிவரியான் என்க .

பண் :

பாடல் எண் : 5

வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே.

பொழிப்புரை :

வேழத்தின் தோலை உரித்துப் போர்த்த விகிர்தரும் , செஞ்சடைமேல் தாழுமாறு பிறை வைத்தவரும் , தாழைகள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவரும் ஆகிய பெருமான் யாழ்க்குப் பொருந்திய பாடலை உகந்த அடிகள் ஆவர் .

குறிப்புரை :

உரி - தோல் . விகிர்தன் - வேறுபாடுடையவன் . தாழ - தங்க . யாழின் பாடலை உகத்தலாவது - ஒடுக்கிய உயிர்கள் மீளத் தோன்ற எழுப்பும் நாதமுழக்கம் .

பண் :

பாடல் எண் : 6

குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாண னடியடைந் துய்ந்தனே.

பொழிப்புரை :

உடல் பெருக்கிக் குறிக்கோளையறியாச் சமண் மிண்டரோடு பொருந்தி உய்யப்போந்து நான் , கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித்தலத்து எழுந்தருளியுள்ள தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

குண்டு - தாழ்வு எனலுமாம் . குறி - குறிக்கோள் ; உண்மையாக அடையவேண்டிய மெய்ப்பொருள் . மிண்டர் - சொற் செயலால் வலியர் . படுத்து - பட்டு எனப் பொருள் தந்தது . கண்டங்கார் அண்டவாணன் என்க . கார் - பயிர் அடர்ந்திருத்தலால் கரிய நிறம் . அண்டவாணன் - எல்லா உலகங்கட்கும் தலைவன் . உய்ந்தனே - பிழைத்தேன் . ஏ அசை .

பண் :

பாடல் எண் : 7

வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே.

பொழிப்புரை :

வரிகளை உடைய படத்தினைப் பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின் உரியை மெய்ப்பையாக மூடிய உத்தமனார் உறைகின்ற திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் திக்குநோக்கித் தொழுபவர்கள் வானவர்களோடு இனிதாக இருப்பர் .

குறிப்புரை :

வரி - கோடுகள் பொருந்திய . பை - படத்தோடு கூடிய . ஆட்டி - ஆடச்செய்து . மதகரி - மதம் கொண்ட யானை . உரிப்பு - தோல் . திசை - இருக்கும் திசையை நோக்கி .

பண் :

பாடல் எண் : 8

கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாக மசைத்த அடிகளே.

பொழிப்புரை :

செங்கோடலும் , வெண்கோடலும் , கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால் , வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர் , ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர் .

குறிப்புரை :

கோடல் - காந்தள் மலர் . புறவு - காடு . அணி - அழகு செய்கின்ற . வண்டிசைப் பாடல்கேட்கும் பைஞ்ஞீலி என்க . பேடு ஆணும் - பேடாயும் ஆணாயும் இருப்பவர் . பேடென்றும் ( பெண்ணென்றும் ) ஆணென்றும் பிறரறியாததோர் அடிகள் என்க .

பண் :

பாடல் எண் : 9

காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை மங்கையொர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

கார்காலத்துப் பொருந்திய கொன்றை மலர்களாலாகிய தாரினை அணிந்தவனும் , கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமைமங்கையை ஒரு பங்கில் உடையவனும் , பொழில் நுகரவருவோர் இவர்ந்துவந்த தேருலாவுகின்ற பூம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய ஆரா அமுதை அடைந்து உய்வீர்களாக .

குறிப்புரை :

கார்உலாமலர் - கார்காலத்து மேகங்கள் உலவும் காலத்தே மலர்கின்ற . தாரினான் - மாலையை அணிந்தவன் . வார் உலாம் - கச்சு அணிந்த . தேருலாம் பைஞ்ஞீலி , பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி என்க . ஆர்கிலா அமுது - உண்ணா அமுதம் , தெவிட்டா அமுதம் . தருக்கி - செருக்கி . தடவரை - பெரிதாகிய கயிலைமலை . பிறிதொரு பாடலை ( தி .5. ப .2. பா .9) ஒத்துளது இப்பாடல் .

பண் :

பாடல் எண் : 10

தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

அரக்கனாகிய இராவணன் செருக்கினை உற்றுத் தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும் , நெருக்கித் திருவிரலால் ஊன்ற , சிவனையே நினைந்து அவன்பாட அவனுக்கு அருள்புரியும் எம்மான் இடம் பைஞ்ஞீலி என்றுரைப்பார்க்கு இடர்கள் இல்லை .

குறிப்புரை :

சிவனையே நினைந்து என மாறுக . நெருக்கி - இராவணனை மலையின்கீழ் அகப்படுமாறு நெருக்குதலைச் செய்து . இடர் - துன்பம் . இடமாக இருக்கை என்க .
சிற்பி