திருஆமாத்தூர்


பண் :

பாடல் எண் : 1

மாமாத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூரர னேயரு ளாயென்றென்
றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே.

பொழிப்புரை :

தமக்குள்ளே பெரும் பூசல் கொண்டவராகிய திருமாலும் பிரமனும் ஆணவ மயக்கம் கொண்டு தாமாகத் தேடியும் , பெருமானின் திருவடியடையும் திருமுடியையும் காண்கிலர் ; ` ஆமாத்தூர் அரனே ! அருள்வாயாக ` என்று பலமுறை இன்பமுறக் கூவியே இறையானைக் கண்டார் .

குறிப்புரை :

மாமாத்து ஆகிய - மிக்க பெருமை உடையராகிய எனலுமாம் . ( மகத்து என்பதன் திரிபு ); மால்கொடு - அறியாமை கொண்டு . தாமா - நாம் அறிவோம் என்னும் ஆணவத்தால் ; தாள்முடி காண்கிலர் என்க . ஏமாப் பெய்தி - களிப்பு எய்தி . இறையானை - இறைவனாகிய பெருமானை . அருளாய் என்று பணிந்து இறையானைக் கண்டு ஏமாப்பெய்தினார் என்க .

பண் :

பாடல் எண் : 2

சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே.

பொழிப்புரை :

காலை மாலை ஆகிய சந்திகளில் வணங்கப்படுவானும் , யோகநெறி தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும் , தேவர்களால் தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம் மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர் .

குறிப்புரை :

சந்தியானை - மூன்று சந்தியாகாலங்களிலும் தியானிக்கப் படுகிறவனை . சமாதி - யோகநிஷ்டை ; அழுந்தியறிதல் . புந்தி - மனம் . புத்தேளிர் - தேவர் . அந்தியானை - அந்தி வண்ணனை ; அல்லது அழகிய தீயின் உருவினன் என்க . அழகன் - தலத்து இறைவன் பெயர் .

பண் :

பாடல் எண் : 3

காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூரர னேயென் றழைத்தலும்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே.

பொழிப்புரை :

காமமும் பொருளுமாகிய கார்வலையிலே பட்டுப்போகும் நெறியை அறியாமற் புலம்புகின்ற அடியேன் ` ஆமாத்தூர் அரனே !` என்று அழைத்தலும் , தேமாவின் இனிய கனி போலப் பெருமான் தித்தித்தனன் .

குறிப்புரை :

காமாத்தம் - காமமும் பொருளும் என்றும் , காமம் அர்த்தம் என்றுகொண்டு காமத்தையே பொருளாகக்கொண்டு என்றும் காண்க . கார்வலை - அறியாமையைச் செய்யும் வலை . போமாத்தை - மீளும் வழியை ; போமாற்றை என்பதன் திரிபு . தேமாத்தீங்கனி - மிக இனிய மாங்கனி . புலம்புவேனாகிய நான் அழைத்தலும் தித்திக்கும் .

பண் :

பாடல் எண் : 4

பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே.

பொழிப்புரை :

ஐம்பெரும் பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண் நினைந்தேன் ; அந்நினைப்பு என்னை எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன ; காண்பீராக .

குறிப்புரை :

பஞ்ச பூதவலை - ஐம்பூதங்களாகிய வலை . நினை வெய்தலும் - நினைப்பை அடைந்தவுடன் . வஞ்ச ஆறுகள் - வஞ்சனையாகிய ஆறுகள் . வற்றின - நீங்கின . இறைவனை நினைப்போரை மாயாகாரியங்கள் மயக்கமாட்டா என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 5

குராமன் னுங்குழ லாளொரு கூறனார்
அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் யீசனை
நிராம யன்தனை நாளும் நினைமினே.

பொழிப்புரை :

குரவமலர்கள் நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும் , பாம்பு நிலைபெற்ற சடையனும் , திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு செய்யப் பெற்ற ஈசனும் , நிராமயனும் ஆகிய பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக .

குறிப்புரை :

குராமன்னும் - குராமலர் பொருந்திய . குழலாள் - கூந்தலை உடையவளாகிய பார்வதி . ஒரு கூறனார் - இடப்பாகத்தே உடையவர் . அரா - பாம்பு . நிராமயன் - நோயற்றவன் ; பசுத்துவ மில்லாதவன் . இராமன் வழிபட்ட தலவரலாற்றை உட்கொண்டது .

பண் :

பாடல் எண் : 6

பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும்
அத்த னையணி யாமாத்தூர் மேவிய
முத்தி னையடி யேனுள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே.

பொழிப்புரை :

பித்தேறியவனும் , பெரிய தேவர்களால் தொழப்படும் தலைவனும் , அழகு பொருந்திய ஆமாத்தூரை விரும்பிப் பொருந்திய முத்துப் போல்வானும் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தே முயன்று உள்குதலும் , அன்பு என்னும் வெள்ளம் பரவி எழுவதாயிற்று ; காண்பீர்களாக .

குறிப்புரை :

உள் - உள்ளத்தின்கண்ணே அழுந்திக்காண முயலுதலும் - தியானித்தலும் . பத்திவெள்ளம் - அன்புவெள்ளம் . பரந்தது - பரவி நின்றது ; அகத்தே ஒரு குறிக்கண் வைத்து உரை குறியிறந்த அவன் நிலையை உணரும் வியாபக உணர்வைத் தலைப்பட்டேன் என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழற் கோலச் சடையிலோர்
ஆற்றி னானணி யாமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை யாளுடை யீசனே.

பொழிப்புரை :

எம்மை ஆளுடைய இறைவன் , திருநீற்றினால் நிறைந்த திருமேனி உடையவனும் , நேரிழையை ஒரு கூற்றில் உடையவனும் , அழகு நிறைந்த குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில் விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன் .

குறிப்புரை :

நீற்றினார் - திருநீறு பொருந்திய . நேரிழை - பார்வதி . குழல் - தலைமயிர் . கோலம் - அழகிய . குழல் அம்மை பாகத்து முடியாகக்கொண்டு . குழல்கோலமாகக் கலந்த சடை எனலுமாம் . ஆற்றினான் - கங்கை ஆற்றை உடையவன் .

பண் :

பாடல் எண் : 8

பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்
கண்ணித் தாகு மமுதினை யாமாத்தூர்
சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர்
கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே.

பொழிப்புரை :

பண்ணினை உடைய பாடல்களைப் பாடித் தன்னை அன்புசெய்யும் திறம் உடையவர்களுக்கு இனிக்கும் அமுது போல்வானும் , ஆமாத்தூரில் பொருந்தியவனும் , தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு மிகநெருங்கிக் கண்ணினுள்ள கருமணிப் பாவை போன்றவனுமானவனைக் காண்பீர்களாக !.

குறிப்புரை :

பாடல்கள் பண்ணிற்பத்திசெய்வித்தகர் - தோத்திரப் பாடல்களை இசையோடு பாடி அன்புசெய்யும் அடியார் . அண்ணித்தாகும் - இனிக்கும் . சண்ணிப்பானை - திருநீற்றை உத்தூளனமாகப் பூசுபவனை எனலுமாம் . தமர்க்கு - அடியார்க்கு . கண்ணிற் பாவை யன்னான் - கண்மணியை ஒத்தவன் . ` கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் ` ( தாண்டகம் ) அன்னானைக் காண்மின் என்க .

பண் :

பாடல் எண் : 9

குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
மிண்ட ரோடெனை வேறு படுத்துய்யக்
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத்
தண்டனாரிட மாமாத்தூர் காண்மினே.

பொழிப்புரை :

குண்டர்களும் , மயிற்பீலிகளைக்கொள்ளும் குணமில்லாத மிண்டர்களுமாகிய சமணர்களோடு என்னை வேறுபடுத்தி உய்யுமாறு கொண்ட நாதனாகிய குளிர்புனல்சூழ்ந்த வீரட்டத்துத் தேவதேவர் உறையும் இடம் ஆமாத்தூரேயாகும் . காண்பீர்களாக !

குறிப்புரை :

குண்டர் - தின்று கொழுத்தவர் . பீலிகள் - மயில் தோகைகளை . மிண்டர் - வலியர் . ஓடு , நீக்கப்பொருளில் வந்தது . வேறுபடுத்துய்யக்கொண்ட நாதன் - பிரித்து உய்யுநெறிகாட்டிய தலைவன் . வீரட்டம் - திருவதிகை வீரட்டம் . அண்டனார் - உலக முதல்வர் .

பண் :

பாடல் எண் : 10

வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய வாமாத்தூ ரையனே.

பொழிப்புரை :

ஆகாயத்தே இருளைச்சிதைக்கும் மதியை அரவொடும் அஞ்சாதபடி நட்புக் கொள்ள வைத்தவர் . தேன் முதலிய பஞ்சாமிர்தத்தொடும் இளநீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றை அபிடேகம் கொண்டவர் ஆமாத்தூர்ப்பெருமான் .

குறிப்புரை :

வானம் - ஆகாயத்தே . சாடும் - இருளைச் சிதைக்கும் . தானஞ்சாது - மதியும் அரவும் தம்முள் கொண்ட பகைபற்றி அஞ்சாத படி . உடன் - ஒருசேர . தேன் அஞ்சு - தேன் முதலிய அஞ்சு ; பஞ்சாமிர்தம் . ஆனஞ்சு - பஞ்சகவ்வியம் . தெங்கிள நீரொடும் ஆடிய ஐயன் ; ஆனஞ்சாடிய ஐயன் என்க .

பண் :

பாடல் எண் : 11

விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி
அடர வோர்விர லூன்றிய வாமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம்
இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே.

பொழிப்புரை :

அடங்காத விடலையாக வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு விரல் ஊன்றியவனும் , ஆமாத்தூரை இடமாகக் கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னுள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன் .

குறிப்புரை :

விடலையாய் - மூர்க்கனாய். விலங்கல் - கயிலை மலை. அடர - நெரிய. உளமதாக்கொண்டு - ஈசனுக்கு என் உள்ளத்தை இடமாக வைத்து. இன்பு - பேரின்பம்.
சிற்பி