திருவேகம்பம்


பண் :

பாடல் எண் : 1

பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! நீ முற்பிறவிகளிற் செய்த பழவினைகளின் பயனைக் கண்டும் கண்டும் பின்னும் களிப்புற்றுக் கெடுகின்றனையே , வண்டு உலாவுகின்ற மலரையணிந்த செஞ்சடை உடையவனாகிய திருவேகம்பத்துப் பெருமானுக்குத் தொண்டனாகி உன் துயர்கள் தீரும்பொருட்டுத் திரிவாயாக .

குறிப்புரை :

பண்டு செய்த பழவினை - முற்பிறவிகளிற் செய்த சஞ்சிதம் . பயன் - பிரார்த்தம் . கண்டும் கண்டும் - அனுபவத்தால் பார்த்தும் பார்த்தும் . களித்தி - களிப்படைகின்றாய் . காண் - அசை . வண்டுலா மலர் - தேனுண்ண வண்டுகள் உலவுகின்ற மலர்கள் . திரியாய் - திரிவாயாக . துயர்தீர - அத்துன்பம் நீங்க .

பண் :

பாடல் எண் : 2

நச்சி நாளும் நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழில்
கச்சி யேகம்ப மேகை தொழுமினே.

பொழிப்புரை :

அடியார்கள் நாள்தோறும் நசை உடையவராய் நயந்து தொழவும் , உமைநங்கையார் இச்சையால் வழிபடவும் கண்டு , செறிந்த இனிய பொழில்களை உடைய கச்சியேகம்பத்தினை நீங்களும் கைகளாற் றொழுவீர்களாக .

குறிப்புரை :

நச்சி - அன்புகொண்டு . நாளும் - நாடோறும் . நயந்து - விரும்பி . இச்சையால் - ஆசையால் . உமைநங்கை - காமாட்சி . கொச்சையார் குறுகார் - அறிவில்லாதவர்கள் சென்றடையார் . இத் தலத்துக் காமாட்சி வழிபட்டதைக் குறித்தது இரண்டாவது தொடர் .

பண் :

பாடல் எண் : 3

ஊனி லாவி யியங்கி யுலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானுலாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே.

பொழிப்புரை :

கச்சி ஏகம்பர் , உடல்கள்தோறும் உயிராய் இயங்கி உலகமெல்லாம் பொருந்திய இயல்பினை உடையவராயினும் , வான மெங்கும் உலாவிய இசை விளங்கும் படியாக வெவ்விய சுடுகாட்டில் நட்டமும் ஆடுவர் .

குறிப்புரை :

ஊனில் ஆவி - உயிர்கள் உடலினுள் பொருந்தி . இயங்கி - இயங்க என்பது இயங்கி எனத் திரிந்தது . உலக முழுவதும் தானு லாவிய தன்மையர் ஆயினும் - தான் நிறைந்த தன்மையை உடையவர் ஆனாலும் . வானுலாவிய பாணி - ஆகாயமெங்கும் உலவும் தாள ஓசை . பிறங்க - விளங்க . வெங்கான் - கொடிய இடுகாடு .

பண் :

பாடல் எண் : 4

இமையா முக்கண ரென்நெஞ்சத் துள்ளவர்
தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர்
இமையோ ரேத்த இருந்தவ னேகம்பன்
நமையா ளும்மவ னைத்தொழு மின்களே.

பொழிப்புரை :

இமையாத முக்கண்ணை உடையவரும் , என் நெஞ்சத்தின்கண் உள்ளவரும் , தம்மை யாரும் அறியவொண்ணாத பெருந்தகைமை உள்ளவரும் . தேவர்கள் ஏத்துமாறு வீற்றிருந்தவரும் , நம்மையாள்பவருமாகிய திருவேகம்பரைத் தொழுவீர்களாக .

குறிப்புரை :

இமையா - இமைக்காத . முக்கணர் - மூன்றுகண்களை உடையவர் . இமைத்தால் . கண்பொத்தி பார்வதி விளையாடிய போது ஏற்பட்ட இருண்டநிலை உலகிற்கு உண்டாமோ என்னும் கருணையால் இமையாதிருக்கும் முக்கணர் என்க . தம்மையாரும் உள்ளவாறறிய முடியாத தன்மையர் என்க . ஆளும் - நம்மை ஆட்கொள்ளுவான் .

பண் :

பாடல் எண் : 5

மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி யேகம்பத் தெந்தையே.

பொழிப்புரை :

கச்சியேகம்பத்தின்கண் எழுந்தருளியுள்ள எந்தை , எனக்கு மருந்தும் , சுற்றமும் , மக்களும் ஆகப் பொருந்திநின்று விளங்கும் புண்ணிய வடிவினன் ; கரிய பெரிய கண்ணை உடைய உமாதேவி கைதொழ இருந்தவன் ஆவன் .

குறிப்புரை :

எனக்குப் பொருந்தி நின்று மருந்தினோடு நல் சுற்றமாய எம் புண்ணியன் எனக் கூட்டுக . பொருந்தி நின்று - துணையாய்ப் பொருந்தித்தோன்றி . ஆய - ஆகிய . கருந்தடங்கண்ணினாள் - கரிய பெரிய கண்ணை உடையவளாகிய . காமாட்சி வழிபட்ட வரலாற்றை உட்கொண்டது இத்திருப்பாடல் ( எந்தை - எங்கள் தந்தை .)

பண் :

பாடல் எண் : 6

பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க்
கருளு நன்மைதந் தாயவ ரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
இருள்கெ டச்சென்று கைதொழு தேத்துமே.

பொழிப்புரை :

பற்று அற்றவர்களுக்குப் பொருளும் , நற்சுற்றமும் , அருளும் , நன்மைதந்து ஆதலுற்ற அரும்பொருளும் ஆகியவனும் , சுருளுதலைக்கொண்ட செஞ்சடை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கச்சிஏகம்பத்தை , உம்மைச்சார்ந்த இருள் மலங்கெடச் சென்று கரங்குவித்து வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

பற்றிலார்க்குப் பொருளினோடு நற்சுற்றமும் அருளுமாகிய நன்மைகளைத்தந்து நிற்கின்ற அரியபொருள் . பொருள் - பொன் , மணி , நெல் முதலிய செல்வங்கள் . பற்றிலர்க்கு - பிற பற்று ஒன்றும் இல்லாதவர்களுக்கு . நன்மை தந்து - நன்மைகளைக் கொடுத்து . சுருள்கொள் - சுருளுதலைக்கொண்ட . இருள் - ஆணவ இருள் . ஏத்தும் - தோத்திரம் சொல்லி வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 7

மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்
தாக்கு மைவர்த மாப்பை யவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சியே கம்பனே.

பொழிப்புரை :

கச்சியேகம்பத்து இறைவன் , மெய் , வாய் , கண் , மூக்குச் செவியாகி வந்து ஆக்கிய ஐம்புலன்களினாலாய கட்டினை அவிழ்த்தருளித் தன் திருக்கண்களால் நம்மை நோக்குவான் ; நோய்களை உண்டாக்கும் வினைகள் நம்மிடத்துவாராமற் காக்கும் நாயகன் ஆவன் .

குறிப்புரை :

மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறிகளும் இங்குச் சொல்லப்பட்டன . ஆக்கும் - வினையை உண்டாக்குகின்ற ஐவர்தம் - ஐம்பூதங்களினுடைய . ஆப்பு - கட்டு . அவிழ்த்து - பந்திக்காமல் நீக்கி . அருள் - அருட்பார்வையால் . நமை - நம்மை . நோய் - துன்பம் . அவிழ்த்து நம்மை நோய்வினை வாராமே அருள நோக்குவான் எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 8

பண்ணி லோசை பழத்தினி லின்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சியே கம்பனே.

பொழிப்புரை :

கச்சியேகம்பத்து இறைவன் பண்ணின் இசையாகவும் பழத்தில் இனிய சுவையாகவும் , பெண் ஆண் என்று ஒருபாற்படுத்திப் பேசுதற்கு அரியவனாகவும் , வண்ணம் இல்லாதவனாகவும் , வடிவம் வேறாயவனாகவும் , கண்ணினுட் கருமணியாகவும் உள்ளான் .

குறிப்புரை :

பண் - இராகம் . ஓசை - சுரம் . பண்ணில் ஓசையும் , பழத்தினில் இனிய சுவையும் பிரிவின்றியிருத்தல் போல நும்மொடு உடனாயிருப்பவன் . பெண் என்றாயினும் , ஆண் என்றாயினும் சொல்லுதற்கியலாதவன் . வண்ணமில்லி - தனக்கென ஒரு நிறமில்லாதவன் . வடிவு வேறாயவன் - தனக்கென ஒரு வடிவமில்லாதவன் . வேறாதல் - இங்கு இன்மையைக் குறித்தது . கண்ணிலுண்மணி - கண்ணின்பாவை மணியை ஒத்தவன் , இப்பாடல் இறைவன் உயிர்களுள் அத்துவிதமாய்க் கலந்து நிற்கும் நிலையும் காட்டுவிக்கும் நிலையும் உணர்த்தப்படுவது .

பண் :

பாடல் எண் : 9

திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சியே கம்பனே.

பொழிப்புரை :

கச்சியேகம்பத்து இறைவன் , திருமகளின் நாயகனாகிய திருமாலும் , சிவந்த தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் அஞ்சி வெருவும்படியாக விளங்குகின்ற நிமிர்ந்த சோதி ஒளியாகவும் , ஒப்பற்றவனாகவும் , உணர்வு ஆகவும் , உணர்வல்லாத கருவினுள் நாயகனாகவும் உள்ளான் .

குறிப்புரை :

திரு - இலக்குமி . அயன் - பிரமன் . செம்மலர் - செவ்விய தாமரை . வெருவ - அஞ்ச . ஒருவன் - ஏகன் . உணர்வாய் - உணர்வு வடிவாய் இருப்பவன் சித்தவடிவமானவன் என்க . உணர்வல்லதோர் கருவுள் நாயகன் - உணர்வில்லாத சடப்பொருள்களிலும் நிறைந்திருக்கும் தலைவன் . இறைவன் சட சித்துக்கள் அனைத்திலும் நிறைந்திருப்பவன் என்பதாம் .

பண் :

பாடல் எண் : 10

இடுகு நுண்ணிடை யேந்திள மென்முலை
வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிக ளெம்மை யருந்துயர் தீர்ப்பரே.

பொழிப்புரை :

மிகச் சிறிய ( இடுகிய ) நுண்ணிடையையும் , இளமை உடைய சற்றே ஏந்தினாற்போன்ற மென்முலையையும் , உடைய வடிவினையுடைய பெண்கள்பால் உள்ளம் வையாதீர்கள் ; திருநீற்றுப்பொடியணிந்த மேனியனாகிய , பொழில் சூழ்ந்த கச்சியேகம்பத்து எழுந்தருளியுள்ள இறைவன் எம்மையெல்லாம் அரிய துயரங்கள் தீர்த்துக் காப்பர் .

குறிப்புரை :

இடுகு - சிறுத்த . நுண் - நுண்ணிய . ஏந்து - நிமிர்ந்த . வடிவின் மாதர் - அழகிய வடிவினையுடைய பெண்கள் . திறம் - தன்மை . வையன்மின் - ஈடுபடுத்தாதீர்கள் . அருந்துயர் - அரிய துன்பம் . தீர்ப்பர் - போக்கிக் காப்பர் என்றபடி .

பண் :

பாடல் எண் : 11

இலங்கை வேந்த னிராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக் கவ்விர லூன்றலும்
கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே.

பொழிப்புரை :

எங்கள் நாதனாகிய கச்சியேகம்பத்து இறைவன் , இலங்கை வேந்தனாகிய இராவணன் சென்று தம் திருக்கயிலாயத்தை எடுக்க முற்படுதலும் , தன் திருவிரலை ஊன்றக்கலங்குதலுற்று ` கச்சி ஏகம்பத்து இறைவா !` என்று அவன் அலறினன் ; அதுகேட்டு நலம் பெற மீளும் செலவை அவனுக்கு அருளிய பெருங்கருணைத்திறம் உடையவன் .

குறிப்புரை :

விலங்கல் - கயிலைமலை. கச்சியேகம்பவோ - கச்சியேகம்பனே முறையோ. என்றலும் - என்று தோத்திரித்தலும். நலங்கொள் செலவு - நன்மையைக்கொண்ட மீட்சி. நாளொடு வாள் பெற்றுச் சென்றதைக் குறித்ததாம்.
சிற்பி