திருவேகம்பம்


பண் :

பாடல் எண் : 1

பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற் படவடி யோங்களே.

பொழிப்புரை :

தாமரைப்பூமேல் உள்ளவனாகிய பிரமதேவனும் , பூமகளாகிய இலக்குமிநாயகனாகிய திருமாலும் ` யாங்களே பிரமம் ` என்று கூறாது நடுக்குறும்படியாகத் தீ வடிவாகிய பெருமானே ! திருவேகம்பத்தை உடையவனே ! நின் அடியோமாகிய யாங்கள் அல்லற்படுதலும் ஆமோ ?

குறிப்புரை :

பூமேலான் - பிரமன் . பூமகள் கேள்வன் - திருமகள் கணவனாகிய திருமால் . நாமே தேவரெனாமை - நாங்களே பரம் பொருள் என்று கூறாமலும் ; நடுக்குறவும் என்க . தீமேவும் உருவா - சோதி வடிவாய்த் தோன்றியவனே . அடியோங்கள் அல்லற்பட ஆமோ - அடியோங்களாகிய நாங்கள் துன்புறுதல் தகுதியோ .

பண் :

பாடல் எண் : 2

அருந்தி றல்அம ரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.

பொழிப்புரை :

அரிய திறலை உடைய தேவர்களும் , திருமாலும் , பிரமனும் திருத்தமுறநின்று வழிபடும் வண்ணம் உமைநங்கையோடு இருந்த பெருமானது அருள் எழில் சேர்ந்த கச்சி ஏகம்பத்தைப் பொருந்த சென்று தங்கி வழிபடற்கு எழுவோமாக .

குறிப்புரை :

அருந்திறல் - பெறுதற்கரிய வலிமை . திருந்த நின்று - வழிபாட்டு முறையில் செம்மையாக நின்று . பொருந்தச் சென்று புடைபட்டு - ஏகம்பத்தை அடையச் சென்று அடைந்து . எழுதும் - உயர்வு பெறுவோமாக .

பண் :

பாடல் எண் : 3

கறைகொள் கண்டத்தெண் தோளிறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.

பொழிப்புரை :

திருநீலகண்டனும் , எட்டுத்தோள்களை உடைய இறைவனும் , முக்கண்ணினனும் , வேதம் ஓதும் நாவினனும் , தேவர்களுக்கெல்லாம் ஆதியானவனும் ஆகிய பெருமான் உறைகின்ற பூம் பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்தை நெறியினாற் சென்று முந்துறத் தொழுவோமாக .

குறிப்புரை :

ஆதி - தலைவன் . முறையால் - வழிபாட்டு முறையினால் . தொழுதும் - வணங்குவோம் . முந்தி - விரைந்து .

பண் :

பாடல் எண் : 4

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றுமமு தாயவ னேகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.

பொழிப்புரை :

பொறிகளைப் , புலன்களின்வழிப் போதல் தவிர்த்து , உள்ளத்தை ஒரு நெறியின்கண்படச் செய்து நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறிதலுறும் அமுதாகிய பெருமான் எழுந் தருளியுள்ள திருஏகம்பத்தைத் திருவருட் குறிப்பினாற் சென்று கூடித் தொழுவோமாக .

குறிப்புரை :

பொறி - மெய் , வாய் , கண் , மூக்கு , செவி . பொறியால் நுகரப் படும் புலன்கள் என்க . புலன் - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் . போக்கு - குற்றம் . உள்ளத்தை நெறிப்படுத்து - மனத்தை ஒருவழியில் செலுத்தி . அறிப்புறும் - அறிபு என்பதன் விரித்தல் . அறிவுறும் என்பது பொருள் . குறிப்பினால் சென்று - குறிக்கோளொடு சென்று . தொழுதும் - வணங்குவோம் .

பண் :

பாடல் எண் : 5

சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
டந்தி யாயன லாய்ப்புனல் வானமாய்ப்
புந்தி யாய்ப்புகுந் துள்ள நிறைந்தவெம்
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.

பொழிப்புரை :

சிந்தையுள் சிவமாகிநின்ற செம்மையினோடு , அந்தியாகவும் , அனலாகவும் , புனலாகவும் , வானமாகவும் நினைவார் புத்தியாகிய அந்தக்கரணமாகவும் எல்லாவற்றுள்ளும் புகுந்து , உள்ளத்தில் நிறைந்த எந்தையாரின் கச்சிஏகம்பத்தை ஏத்தித் தொழுவீர்களாக .

குறிப்புரை :

ஒளித்த சிந்தை - உயிரறிவு . சிவம் - இன்பம் . செம்மை - பிறழாமை . அந்தியாய் - அந்திக்காலமாய் . புந்தி - அறிவு .

பண் :

பாடல் எண் : 6

சாக்கி யத்தோடு மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார் பாடுசெ லாதுறப்
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே.

பொழிப்புரை :

புத்தமும் , சமணமுமாகிய நெறிகளிற் பட்டுத் திருவருட்செல்வம் இல்லாதவர் மருங்குசெல்லாமல் , மிகுந்த பூக்களைக்கொண்ட சேவடியானது கச்சியேகம்பத்தை நாவினைக் கொண்டு ஏத்தி விரும்பித் தொழுவோமாக .

குறிப்புரை :

சாக்கியம் - புத்தம் . பாக்கியமிலார் - சிவநெறிப் பேற்றைக் கடைப்பிடிக்கும் பாக்கியமில்லாதவர்கள் . பாடு - பக்கம் . உற - பொருந்த ; ஏத்தித்தொழுதும் எனக் கூட்டுக . பூக்கொள் - பூக்களைக் கொண்ட . நாக்கொடு ஏத்தி - நாவைக் கொண்டு புகழ்பாடி . நயந்து - விரும்பி . தொழுதும் - வணங்குவோம் .

பண் :

பாடல் எண் : 7

மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன் னணியம ரர்க்கிறை
காப்ப தாய கடிபொழி லேகம்பம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே.

பொழிப்புரை :

வெறுப்புமிகுந்து மூப்பினோடு எம்மையெல்லாம் கட்டுவதற்கு முன்பே , அணி உடைய அமரர்க்கு இறை உறைவதும் , காவலுடைய மணமிக்க பொழில் சூழ்ந்ததுமாகிய ஏகம்பத்தைச் சேர்வதாக நாம் சென்று தரிசித்து உய்வோமாக .

குறிப்புரை :

மூப்பு - முதுமைத் தன்மை . முனிவு - வெறுப்பு அல்லது கோபம் . உறுத்து - உறுவித்து , அடையச்செய்து . ஆர்ப்பதன் முன் - கூற்றுவன் பிணிப்பதற்கு முன்பு . அணி அமரர் - வரிசைப்பட்ட தேவர் . காப்பதாய - காவலை உடையதாகிய அல்லது ஊருக்குக் காவல் செய்யும் அரணாகிய . கடி - மணம் . சேர்ப்பு - சேரத்தக்க இடம் . காஞ்சியே சிறந்த தல மெனக்கருதி . நாம் சென்றடைந்துய்தும் - நாம் சென்று வழிபட்டு உய்யுநெறி காண்போம் .

பண் :

பாடல் எண் : 8

ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடும்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! ஒலிக்கின்ற பெரிய மயில்போலும் சாயலை உடைய பெண்களோடும் நீ மிகுந்து கொண்ட மயக்கத்தைத் தவிர்வாயாக ; நீலமாகிய பெருமைமிக்க கழுத்தினை உடைய அண்ணலாகிய ஏகம்பனாருடைய கோலமிக்க மலர்ச் சேவடிகளைக் கும்பிட்டு உய்வாயாக .

குறிப்புரை :

ஆலும் - ஆடும் . சாயல் - தோற்றப்பொலிவு . நீ சாலஉறும் மால்தவிர் என்க . சால - மிகவும் . உறும் - கூடுகின்ற . நீ உறும்மால்தவிர் நெஞ்சமே - மனமே நீ அடையும் மயக்கத்தை விடுவாயாக . கோலம் - அழகிய .

பண் :

பாடல் எண் : 9

பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

அனைத்துப் பொய்யையும் விட்ட உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாகவிளங்குபவனும் , சுடர்விடுகின்ற வெண்மழு ஏந்திய கையை உடையவனும் ஆகிய கச்சியேகம்பத்தை விரும்பிப் பொருந்திய தலைவனைத் தொழுவார்க்கு அல்லல்கள் இல்லையாம் .

குறிப்புரை :

புந்தியுள் - மனத்துள் . மெய்யனை - உண்மைப் பொருளாய் விளங்குபவனை . அல்லல் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

அரக்கன் தன்வலி யுன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை கேட்டவ னேகம்பம்
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.

பொழிப்புரை :

தன் ஆற்றலைக் கருதியவனாய்த் திருக்கயிலையைச் சென்று எடுத்தவனாகிய அரக்கனின் முடிகளையும் தோள்களையும் நெரித்தவனும் , அவனது இரக்கத்திற்குரிய இன்னிசையைக் கேட்டருள்புரிந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திரு வேகம்பத்தை நாம் அருள் இறுமாப்புடன் சார்ந்து தொழுவோமாக .

குறிப்புரை :

அரக்கன் - இராவணன் . தன்வலி உன்னி - தன் ஆற்றலை எண்ணி . நெருங்கி நெருக்கி என்று வலித்தல் விகாரம் பெற்றது . இரக்க இன்னிசை - இரக்கத்தோடு அவன்பாடிய இனிய இசை . சாமகானம் . கேட்டவன் - கேட்டருள் புரிந்தவன் . தருக்கதாக - அருள் இறுமாப்பு . அடியோம் என்ற பெருமித நினைவு .
சிற்பி