திருவாய்மூர்


பண் :

பாடல் எண் : 1

எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனா ரதென்கொலோ.

பொழிப்புரை :

தென்னைகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர் , என்னை எங்கே என்று தேடி , இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர் , திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார் ; அதன் காரணம் என்னை கொல் ?

குறிப்புரை :

எங்கே - எங்கே இருக்கின்றாய் என்று ; எங்கு ஏய் எனப் பிரித்து ஏய்தல் தங்கியிருத்தல் எனலும் ஆம் . இருந்திடம் தேடிக்கொண்டு - தான் தங்கியிருந்த திருமடத்தைத் தேடிக் கொண்டு . அடையாளம் - வெண்ணீறணிந்த திருக்கோலம் . தெங்கே தோன்றும் - தென்னைகளே மிகுந்து காணப்படும் . அங்கே வா - திருவாய்மூராகிய அங்கு வா . அது என்கொலோ அதற்கு என்ன காரணமோ , அறியேன் என்க .

பண் :

பாடல் எண் : 2

மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி
என்னை வாவென்று போனார தென்கொலோ.

பொழிப்புரை :

எம்பெருமானையே நினைந்து , நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமை உடைய மறைக் காட்டுறையும் மணவாளனார் தன்னை வாய்மூர் இறைவனாமாற்றை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார் ; அதன் காரணம் என்னை கொல் ?

குறிப்புரை :

மன்னும் - நிலைபெற்ற . மா - சிறந்த . மணவாளனார் - மணவாளக் கோலத்தோடு வீற்றிருக்கும் இறைவர் . உன்னி உன்னி - அப் பெருமானையே இடைவிடாதெண்ணி . தன்னை வாய்மூர்த் தலைவன் என்று சொல்லி என்க . ஆமா - ஆமாறு .

பண் :

பாடல் எண் : 3

தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன்
அஞ்சே லுன்னை யழைக்கவந் தேனென்றார்
உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூ ரடிகளே.

பொழிப்புரை :

தரித்து ஓரிடத்தில் இராதவர்க்குத் தஞ்சப் பொருளைக் கண்டேன் என்றேன் ; ` அஞ்சாதே ! உன்னை அழைக்க வந்தேன் ` என்று அருளினார் ; ` உய்ந்தேன் ` என்று மகிழ்ந்து எழுந்து ஓட்டம் எடுத்தேன் ; வாய்மூர் அடிகள் வஞ்சனையில் வல்லவரோ ?

குறிப்புரை :

தஞ்சே கண்டேன் - எளிமையாகவே கண்டேன் , தரிக்கிலாது - தாமதியாது . ஆர் என்றேன் - நீவிர் யார் என்று கேட்டேன் . அஞ்சேல் - அஞ்சாதே ; உன்னை அழைக்க வந்தேன் என்று கூறினார் . உஞ்சேன் - உய்ந்தேன் என்பதன் போலி . உகந்தே எழுந்து - மகிழ்வோடு எழுந்து . ஓட்டந்தேன் - ஓடினேன் . ஓட்டந் தந்தேன் என்பதன் மரூஉ . வஞ்சேவல்லர் - வா என்று சொல்லி மறைந்த வாய்மூர் இறைவர் வஞ்சித்தலில் வல்லவர் . வஞ்சம் என்பது ஈறு குறைந்தது .

பண் :

பாடல் எண் : 4

கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
ஒழியப் போந்திலே னொக்கவே யோட்டந்தேன்
வழியிற் கண்டிலேன் வாய்மூரடிகள்தம்
சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ.

பொழிப்புரை :

அவர் என்னைவிட்டு நீங்குமாறு கண்டேனில்லை ; கண்ணெதிரே கண்டேன் ; என்னைவிட்டு அவர் நீங்கியபின் போந்தேனில்லை ; ஒக்கவே ஓடிவந்தேன் ; ஆயினும் இடைவழியிற் கண்டேனில்லை ; வாய்மூர் அடிகளின் மாயச்சுழலில் அடியேன் இவ்வாறு பட்டுச் சுழல்கின்றதன் காரணம் என்னையோ ?

குறிப்புரை :

கழியக் கண்டிலேன் - அவர் மறைவதைப் பார்த்தேனில்லை ; மறைந்திலர் என்பதாம் . கண்ணெதிரே கண்டேன் - கண்ணெதிரே பார்த்தேன் ; தோன்றிக்கொண்டே இருந்தார் . ஒழியப் போந்திலேன் - அவரைவிட்டுத் திரும்பவில்லை . ஒக்கவே - அவருடன் சேரவே . ஓட்டந்தேன் - ஓடினேன் . வழியில் கண்டிலேன் - அங்ஙனம் ஓடிவந்தும் இடையிலே அவரைக் காணவில்லை . சுழி - வாய்மூர் இறைவரது திருவிளையாடலாகிய சுழல் .

பண் :

பாடல் எண் : 5

ஒள்ளி யாரிவ ரன்றிமற் றில்லையென்
றுள்கி யுள்கி யுகந்திருந் தேனுக்குத்
தெள்ளி யாரிவர் போலத் திருவாய்மூர்க்
கள்ளி யாரவர் போலக் கரந்ததே.

பொழிப்புரை :

ஒளியுடையவர் இவரையன்றி மற்றுயாரும் இல்லை என்று நினைந்து நினைந்து மகிழ்ந்திருந்த எளியேனுக்கு , திருவாய் மூரின்கண் தெளிந்தவர் இவர்போலக்காட்டிக் கள்ளம் உடையவர் போல ஒளித்துவிட்டனரே .

குறிப்புரை :

ஒள்ளியார் - அறிவு வடிவமாயிருப்பவர் . தெள்ளியார் - தெளிந்த பேரறிவாளர் ; இவர் திருவாய்மூர்த் தெள்ளியார் இவர்போலத் தோன்றி என்க . கள்ளியாரவர்போல - கள்ளத் தன்மை உடையவர்போல . கரந்ததே - மறைந்ததே ; என்கொலோ என்பதைத் தந்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 6

யாதே செய்துமி யாமலோ நீயென்னில்
ஆதே யேயு மளவில் பெருமையான்
மாதே வாகிய வாய்மூர் மருவினார்
போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ.

பொழிப்புரை :

எச்செயல் செய்தாலும் அவன் செயல் என்று எண்ணினால் அதுவே நல்ல பயனைத்தரும் . அளவில்லாத பெருமையுடையான் அவன் , மாதேவனாகிய வாய்மூர் இறைவா என்றதும் சென்றதும் பொய்யோ ?

குறிப்புரை :

யாதே செய்தும் - பாதகத்தைச் செய்திடினும் . யாம் அலோம் நீ எனில் - ` உலகினில் என் செயல் எல்லாம் உன் விதியே , நீயே உண்ணின்றும் செய்வித்தும் செய்கின்றாயென்றும் நிலவுவதோர் செயலெனக்கு இன்று உன் செயலே என்று நினையின் ` என்றபடி . யாம் செய்திலேம் நீயே செய்விக்கின்றாய் என நினைத்தால் . ஆதே - அதே சுட்டுநீண்டது . ஏயும் - அதனைப் பொருந்தும் எனக் கொள்கின்ற . மாதேவன் - பெரியதேவன் . போதே - வருவாயாக . என்றும் - என்றதும் . புகுந்ததும் - இங்கு வந்ததும்

பண் :

பாடல் எண் : 7

பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா
ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ.

பொழிப்புரை :

பாடி அதனாற்பெற்ற பரிசிலாகிய பழங்காசினைக் கொண்டு வாடிய வாட்டத்தைத் தவிர்ப்பாரைப்போலத் திருவாய் மூர்க்கே தேடிக்கொண்டு ஓடிவந்து இங்கே ஒளித்தவாற்றிற்கான காரணம் என்னையோ ?

குறிப்புரை :

பாடிப்பெற்ற - திருவீழிமிழலையில் பஞ்சமேற்பட்ட காலை மிழலை இறைவரிடம் சம்பந்தர் பாடிப்பெற்ற பரிசில் . பழங்காசு - பரிசிலாகப் பாடி வாங்கிய பழையவாகியவாசிக் காசுகள் . வாடி வாட்டம் - வாடியவாட்டம் என்று பிரித்து மனம் வாடிய வருத்தம் என்க . தவிர்ப்பார் - நீக்கிய இறைவர் . அவரைப்போல் முதலில் மாற்றுக் குறைந்த காசு வழங்கிப் பின் வருத்தந்தணித்து நற்காசு வழங்கிய மிழலை இறைவரைப்போல முதலில் துன்பம் தந்து பின்பு இன்பம் தரும் திருக்குறிப்புப்போலும் என்க . என்னைத் தேடிக் கொண்டு திருவாய்மூர்க்கே எனா - தேடிக்கொண்டு வந்து திருவாய் மூர்க்கே போவோம் என்று சொல்லி .

பண் :

பாடல் எண் : 8

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.

பொழிப்புரை :

வேதங்களாற் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும் , செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன்பாடி அடைப்பித்தவராகிய திருஞான சம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார் ; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ ? இவர் பித்தரேயாவர் .

குறிப்புரை :

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரைத் திருமறைக் காட்டுத் திருமடத்திற் காணாது தேடித் திருவாய்மூர்க்கு வந்து கொண்டிருக்கும் பொழுது பாடியது இச்செய்யுள் . திறக்கப்பாடிய என்னினும் ஒரு பாடலில் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் ; உந்நின்றார் . அவருக்குத் தம்மை மறைக்க வல்லரோ என்றார் . உறைப்பு - திருத்தொண்டின் வலிமையால் , உந்நின்றார் - உவ்விடத்தே நின்றார் . சம்பந்தர் அப்பரைக் காணாது தேடிப் பின் வருதலால் உந்நின்றார் என்றார் . மறைத்தமையால் இவர் பித்தர் என்க .

பண் :

பாடல் எண் : 9

தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.

பொழிப்புரை :

தனக்கு உள்ளம் பொருந்தாமையைத் தவிர்த்தருள் வாயாக என்று வேண்டினும் , பொய்யாக நினைக்கும் எளியேன் பொய்க்கும் அருள் செய்யும் நின்மலனாகிய இறைவன் , எனக்கு எதிரேவந்து வாய்மூருக்கே வா என்று கூறிவந்து தீர்த்தத்தை அடுத்த பொற்கோயிலில் வந்து புகுந்ததும் பொய்தானோ ?

குறிப்புரை :

தனக்கு ஏறாமை - தனக்குப்பொருந்தாத செயலாக . தவிர்க்க என்று - கதவைத் திறக்க என்று . நினைந்தேன் பொய்க்கு - நினைத்து விரும்பிய எனது பொருளற்ற பாட்டிற்கும் . எனக்கே வந்து - என்னிடத்திலே வந்து . வாய்மூர்க்கே எனா - வாய்மூர்க்கே போவோம் என்று சொல்லி . எதிர் - இவ்விடத்தில் ( வழியில் ). புனக்கே - காட்டிலே . பொற்கோயில் - அழகிய கோயில் . பொய்கொலோ - பொய்த் தோற்றந்தானோ .

பண் :

பாடல் எண் : 10

தீண்டற் கரிய திருவடி யொன்றினால்
மீண்டற் கும்மிதித் தார்அரக் கன்தனை
வேண்டிக்கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே.

பொழிப்புரை :

பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன் ; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான் .

குறிப்புரை :

தீண்டற்கரிய திருவடி - திருமால் முதலிய தேவர்களாலும், வேதங்களாலும் தீண்டுவதற்கரிய திருவடி. மீண்டற்கும் மிதித்தார் - அத்திருவடியால் ஆணவம் அழிப்பதற்கேயன்றி அவன் உய்தற்கும் மிதித்தார் என்க. கொள்வன் - பயன்கொள்வேன். என்றலும் - என்று நினைத்தவுடன். தோன்றும் - வெளிப்படுகின்றான்.
சிற்பி