திருப்பாலைத்துறை


பண் :

பாடல் எண் : 1

நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , நீலமாமணி போலும் திருக்கழுத்தினர் ; நீண்ட சடையில் அழகுமிக்க பெரிய மதியையும் கங்கையையும் கூடவைத்தவர் ; சூலம் , மான் , மழு ஏந்தித் தம் ஒளி முடியில் பாலும் நெய்யும் திருவபிடேகம் கொள்வர் .

குறிப்புரை :

நீலமாமணி கண்டத்தர் - பெரிய நீலமணி போன்ற நஞ்சு பொருந்திய கழுத்தையுடையவர் . கோலமாமதி - அழகிற் சிறந்த சந்திரன் . கூட்டினார் - சேரவைத்தார் .

பண் :

பாடல் எண் : 2

கவள மாகளிற் றின்உரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , சோற்றுக்கவளம் கொள்ளும் யானையின் உரியைப் போர்த்தவர் ; வெள்ளிய நகைப்பை உடைய உமைமங்கையை ஒருபங்கிற் கொண்டவர் ; தேவர்கள் போற்றித் திசைநோக்கித் தொழும் பவளம் போன்று சிவந்த மேனியர் .

குறிப்புரை :

கவளம் - யானைக்கிடும் உணவு . மா - பெரிய . உரி - தோல் . தவளம் - வெண்மை . தவளவெண்ணகை மங்கை ; ஒருபொருட் பன்மொழி ( தலத்து அம்பிகையின் திருப்பெயர் ). மிக்க வெண்மையைக் காட்டிற்று . திவளவானவர் - விளங்குதலை உடைய வானவர் . திசைதொழும் - திசைதோறும் வணங்குகின்ற .

பண் :

பாடல் எண் : 3

மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ
மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி னாரவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , மின்னலையொத்த நுண்ணிடையை உடைய கன்னிப்பெண்கள் எங்கும் பலராய்க்கூடிக் காவிரியில் நீராடிப்போற்றித் திருவடிகளைத்தொழ நிலைபெற்று , நான்கு வேதங்களும் பல கீதங்களும் பன்னிய சிறப்புடையவராவர் .

குறிப்புரை :

மின்னின் - மின்னல்போன்ற . மிக்கு - மிகுதியாக . மன்னி - நிலைபெற்ற . பல்கீதமும் - பல்வகை இசைப்பாடல்களையும் . பன்னினார் - சொன்னார் .

பண் :

பாடல் எண் : 4

நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங்
கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே
ஆடி னாரழ காகிய நான்மறை
பாடி னாரவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , சுடுகாடே இடமாய் நீண்டு நின்ற பேயின் தொகுதிகளும் , கூடிய பூதங்களும் தம்மில் இணைந்து நின்று ஆர்க்குமாறு ஆடியவர் ; அழகாகிய நான்மறை பாடியவர் .

குறிப்புரை :

நீடு - பெரிதாய் நீண்ட . காடு - இடுகாடு . இடமாய் - ஆடுமிடமாக . கூடு - பேய்க்கணங்களுடன் கூடுகின்ற . குழுமி - சேர்ந்து . ஆர்க்க - ஆரவாரிக்க .

பண் :

பாடல் எண் : 5

சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்த னேநமை யாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , சித்தரும் , கன்னியரும் , தேவரும் , தானவர்களும் , பித்தர்களும் , நான்கு மறைகளில் வல்ல வேதியரும் பேணிய அத்தனே ! நம்மை ஆளுடையாய் ! என்று கூறும் அன்பர்களுக்கு அன்பராய் இருப்பர் .

குறிப்புரை :

தானவர் - அசுரர் . பித்தர் - ஒன்றொடொன்று ஒவ்வாத வேடமும் செயலுமுடையவர் . பேணிய - விரும்பிய . பத்தர்கட்கன்பர் - அடியார்களுக்கு அன்பர் .

பண் :

பாடல் எண் : 6

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயவென்
றெண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

தேவர்கள் பணிந்து ஏத்த , ( அதுகண்டு ) வியப்புறும் மண்ணுலகத்தோர் , மறவாது ` சிவாய ` என்று தியானிக்க , அவர்களுக்கு இடமாக எழில் மிகும் வானகத்தைப் படைத்தருளியவர் , திருப்பாலைத்துறைப் பிரானே .

குறிப்புரை :

விண்ணினார் - தேவர் . பணிந்தேத்த - வணங்கித் துதிக்க . வியப்புறும் - அதிசயமுறுகின்ற . மண்ணினார் - நிலவுலகில் உள்ளவர் ; தேவர் வழிபடுதலைக் கண்டு வியப்புற்ற மண்ணினார் என்க . ` சிவாய ` - இது சூக்கும பஞ்சாக்ஷரம் எனப்படுவது . எண்ணினார்க்கு - தியானித்தவர்கட்கு . இடமா - வீற்றிருக்கும் இடமாக . எழில் வானகம் - வீடுபேறு . த்ரயீ எனப்படும் வேதங்கள் சிவநாமத்தை இதயநடுவுள் வைத்துப் போற்றுவது போல மூவர் தேவாரங்களில் நடுவணதாகிய இத்திருமுறையில் நடுவணதாகிய 51 ஆவது பதிகத்து இத்திருப்பதிகத்துள் நடுவணதாகிய இத்திருப்பாடலில் நடுவில் ` சிவாய ` என்னும் சிவமூலமந்திரம் அமைந்து விளங்கும் தெய்வ அமைப்பை உடையது இத்திருப்பாட்டு .

பண் :

பாடல் எண் : 7

குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை
விரவி னார்பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

மருவிய புதுமலர்களாகிய மல்லிகையும் செண்பகமும் உதிர்ந்து பரவிய நீர்ப்பரப்பை உடைய பொன்னிக் கரையிலுள்ள திருப்பாலைத்துறையர் , கொடுகொட்டி , கொக்கரை , பண் பொருந்திய வீணை ஆகிய வாச்சியங்களின் இசையினை விரவியவரும் , குரவரும் ஆவர் .

குறிப்புரை :

குரவனார் - குருவாக இருப்பவர் . பண் - இசை . கெழுமிய - பொருந்திய . மருவு - அணிந்த , பொருந்திய . நாண்மலர் - புது மலர் . மலராகிய மல்லிகை சண்பகம் என்க . பரவு - பரவிய .

பண் :

பாடல் எண் : 8

தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
தடரும் போதர னாயருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனல்
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

நறுமணமுடைய கங்கை படரும் செஞ்சடை உடைய திருப்பாலைத்துறையர் , தம்மைத்தொடரும் தொண்டரைத் துன்பங்கள் தொடர்ந்துவந்து வருத்தும்போது அரனாகத் தோன்றி அருள்செய்பவர் ; கடலினின்றெழுந்த நஞ்சினை உண்டு அணிசெய்யப் பெற்ற திருக்கழுத்தினர் .

குறிப்புரை :

தொடரும் - தன்னைத் தொடர்ந்து பற்றிய . துக்கம் - துன்பம் . அடரும்போது - வருத்தும்போதில் . அரனாய் - அத்துன்பத்தை அழிப்பவனாய் . கடி - விளக்கம் அல்லது மணம் . புனல் - கங்கை . படரும் - பரவியிருக்கும் .

பண் :

பாடல் எண் : 9

மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியல்
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , மேகமண்டலத்தைத் தோய்கின்ற பிறையினைச் சூடுவர் ; மேகலையாக நாகம் தோய்ந்த அரையினை உடையவர் ; நல்லியலுடைய போகம் தோய்தற்குரிய இரண்டு தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகம் தோய்ந்தவர் .

குறிப்புரை :

மேகலை - பெண்கள் இடையில் அணியும் அணிகலன் . மேகலை கூறியது மாதொரு கூறராதல் பற்றி .

பண் :

பாடல் எண் : 10

வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்
அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற் கரியவர்
பைங்க ணேற்றினர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , வெவ்விய கண்ணை உடைய வாளரவை ஆட்டி அச்சுறுத்துவர் ; அழகிய கண்ணை உடையவர் ; அடியார்க்கு அருள் வழங்குபவர் ; செங்கண்ணை உடைய மாலும் அயனும் தேடற்கு அரியவர் ; பைங்கண்ணை உடைய இடபத்தை வாகனமாக உடையவர் .

குறிப்புரை :

வெங்கண் - கொடிய கண் . வாள் அரவு - ஒளி பொருந்திய பாம்பு . ஆட்டி - ஆடச்செய்து . வெருட்டுவர் - தோற்றத்தால் அச்சம் விளைவிப்பவர் . அங்கணார் - அழகிய கருணை பொருந்திய கண்களை உடையவர் .

பண் :

பாடல் எண் : 11

உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாஅருள் செய்தபா லைத்துறை
கரத்தி னால்தொழு வார்வினை யோயுமே.

பொழிப்புரை :

தன் ஆற்றலினால் இராவணன் உயர்ந்த திருக்கயிலாய மாமலையை நெருக்கலுற்றானை நெரித்து , அவன் பாடலும் கேட்டு இரக்கமாக அருள்புரிந்த திருப்பாலைத்துறையைக் கரங்களால் தொழுவார் வினை நீங்கும் .

குறிப்புரை :

உரத்தினால் - வலிமையினால் . உயர்மாமலை - உயர்ந்த கயிலைமாமலையினால் . நெருக்கினானை - மலைமகளை அஞ்சச் செய்தவனை . நெரித்து - ஊன்றி . கரத்தினால் - கைகளால் .
சிற்பி