திருநாகேச்சரம்


பண் :

பாடல் எண் : 1

நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் , நல்லவர் ; நல்லதோர் நாகத்தைக் கையிற்கொண்டு ஆட்டுவர் ; வல்வினைகளைத் தீர்க்கும் மருந்துகள் அளிக்க வல்லவர் ; பல்லில்லாத ஓடு கையேந்திப் பலி திரிகின்ற அருட்செல்வர் ஆவர் .

குறிப்புரை :

நல்லர் - நன்மையுடையவர் . ஆட்டுவர் - ஆடச் செய்பவர் ; வல்வினை தீர்க்கும் மருந்துகள் வல்லர் என்க . வல்வினை - வலியதாகிய பழவினைகள் . மருந்துகள் வல்லர் - பழவினைகளாகிய நோய் தீர்க்கும் அருட்செயல்களில் வல்லவர் . போல் - அசை . செல்வர் - உலகமெல்லாம் தம் உடைமையாகக் கொண்டவர் .

பண் :

பாடல் எண் : 2

நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடும்
தேவர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் நாவலம் பெருந்தீவாகிய ( ஜம்புத்வீபம் ) காட்டிலுள்ளவர் . அனைவரும் மேவிவந்து வணங்கி , வினையொடு பாவமாயினவற்றைப் பற்றறுவித்திடும் தேவர் ஆவர் .

குறிப்புரை :

நாவலந் தீவு - இமயத்தின் தென்பாலுள்ள இந்த நாட்டிற்கு நாவலந்தீவு அல்லது சம்புத்தீவு என்று பெயர் . இமய உச்சி யிலுள்ள மானசரோவரத்தின் நடுவே உள்ள நாவல் மரத்தை உடைய நாடு . வாழ்பவர் - வாழும் மக்கள் . மேவிவந்து - விரும்பி வந்து . வினை பாவம் இவற்றினது கட்டுக்களை அறுவித்துக் கொள்ளும்படிசெய்யும் தேவராயிருப்பவர் என்க . பற்றறுவித்தல் - சிறிதும் இல்லாது நீங்கச்செய்தல் .

பண் :

பாடல் எண் : 3

ஓத மார்கட லின்விட முண்டவர்
ஆதி யாரய னோடம ரர்க்கெலாம்
மாதொர் கூறர் மழுவல னேந்திய
நாதர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் அலைகள் பொருந்திய கடலின் விடம் உண்டவர் ; அயன் தேவர்களாதியாகிய உலகங்களுக்கெல்லாம் ஆதியாயவர் ; உமையொரு பாகர் ; மழுவினை வலக்கையில் ஏந்திய நாதர் ஆவர் .

குறிப்புரை :

ஓதம் - அலை . ஆர் - பொருந்திய ; அயனோடு அமரர்க் கெல்லாம் ஆதியார் என்க . ஆதியார் - முதலானவர் . அயன் - பிரமன் , வலன் - வலது திருக்கரம் . போல் - அசை .

பண் :

பாடல் எண் : 4

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் சந்திரனோடு சூரியனும் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின் ஐந்துதலை உடைய அரவின் பணியையும் கொண்டருளும் மைந்தர் ( பெருவீரர் ) ஆவர் .

குறிப்புரை :

தாம் - சந்திர சூரியர்கள் . உடன்வந்து - உடனாய் சேரவந்து . சீர்வழிபாடுகள் - சிறப்பு வழிபாடுகள் . செய்தபின் - வழிபாடுகள் செய்தபின்னர் . ஐந்தலை அரவு - ஐந்து தலைகளோடு கூடிய நாகம் . பணி - பணிவிடை . சந்திரன் , சூரியன் , ஐந்தலை நாகம் பூசித்த தலம் என்ற தலவரலாற்றுக் குறிப்பு அமைந்துள்ளது . அருள் - அருள்செய்த . மைந்தர் - வலியர் .

பண் :

பாடல் எண் : 5

பண்டொர் நாளிகழ் வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத்
தண்ட மாவிதா தாவின் தலைகொண்ட
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் , முன்னோர் நாளில் குற்றங்களை உடைய தக்கன் இகழ்வதற்காகக் கொண்ட வேள்வியினைக் கெடும்படியாகச் செய்தவரும் , தண்டனையாகப் பிரம தேவனின் தலையைக்கொண்ட செண்டு உடையவரும் ஆவர் .

குறிப்புரை :

பண்டோர் நாள் - முன்பொரு சமயம் . இகழ் - இகழ்ந்த . வான்பழி - மிக்கபழி . ஆர் - இழித்தற் பொருளில் வந்தது . கொண்ட - மேற்கொண்ட . வேள்விக்குமண்டை - வேள்வியாகிய செருக்கு மிக்க செயல் . கெட - அழிய . தண்டமா - தண்டனையாக . விதாதா - பிரமன் . செண்டர் - செண்டு என்னும் ஆயுதத்தை உடையவர் .

பண் :

பாடல் எண் : 6

வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை யுரித்த கரத்தினர்
செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை
நம்பர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் புதிய பூக்களையணிந்த குழல் உடைய உமாதேவியார் மனம் சுழல , ஒப்பற்றதாய் நினைப்பாரை நடுங்கச்செய்யும் இயல்பினதாய யானையை உரித்த திருக்கையினர் ; செம்பொன்னைப் போன்ற கொன்றை மலர்களையணிந்த செஞ் சடையை உடைய நம்பர் ஆவர் .

குறிப்புரை :

வம்பு - மணம் பொருந்திய . பூங்குழல் - பூக்களோடு கூடிய கூந்தலுடைய . மாது - பார்வதி . மறுக - அஞ்சி மயங்க . கம்ப யானை - அசைகின்ற யானையை . கரத்தினர் - கையை உடையவர் . செம்பொனார் - சிவந்த பொன்னின் நிறம் பொருந்திய . இதழி - கொன்றை . நம்பர் - விரும்பத்தக்கவர் .

பண் :

பாடல் எண் : 7

மானை யேந்திய கையினர் மையறு
ஞானச் சோதிய ராதியர் நாமந்தான்
ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்கும்
தேனர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் மானை ஏந்திய கையை உடையவர் ; குற்றமற்ற அறிவொளியாயவர் ; உலகிற்கெல்லாம் ஆதியாயவர் ; தம் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஓதினால் வந்து அண்ணிக்கின்ற தேனும் ஆவர் .

குறிப்புரை :

மையறு - குற்றமற்ற . ஞானச்சோதியர் - அறிவாகிய ஒளியை உடையவர் . ஆதியர் - தலையானவர் . நாமத்தான் ஆன அஞ்செழுத்து - அவரது திருப்பெயரான திருவைந்தெழுத்து . அண்ணிக்கும் - இனிக்கும் . தேனர் - தேனாயிருப்பவர் .

பண் :

பாடல் எண் : 8

கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி
அழக ரால்நிழற் கீழற மோதிய
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் கழல்கொண்ட சேவடியினர் ; காலனைக் காய்ந்தருளியவர் ; தழல் வண்ணம் கொண்ட செம்மேனியர் ; வெண்ணீற்றுப்பொடியணிந்த அழகர் ; கல்லால நிழற் கீழ் இருந்து அறம் ஓதிய குழகர் ஆவர் .

குறிப்புரை :

தழல்கொள்மேனி - தழலின் நிறத்தைக்கொண்ட திருமேனி . சாந்த வெண்ணீறணி அழகர் - சந்தனம்போலத் திரு வெண்ணீற்றை அணிந்த அழகியர் . ஆல் நிழற் கீழ் - கல்லால மர நிழலின் கீழ் .

பண் :

பாடல் எண் : 9

வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் வட்டமாக வளைந்த மதில் மூன்றுடன் கூடிய வல்லரண்களைச் சுட்டசெய்கையர் ; ஆயினும் தம்மை உள்ளத்தே சூழ்ந்தவர்களின் திரண்ட வல்வினைத் துன்பங்களைத் தீர்த்துக் குளிரும்படிச்செய்யும் உயர்ந்தோர் ஆவர் .

குறிப்புரை :

வட்டம் - வட்டவடிவாகிய . மா - சிறந்த . வல்லரண் - வலிய கோட்டை . சுட்ட - அழித்த . குட்டவல்வினை - திரண்ட பழ வினைகள் . இப்பாடல் தி .5 ப .42 9 ஆவது பாடலைப் பெரிதும் ஒத்துள்ளது .

பண் :

பாடல் எண் : 10

தூர்த்தன் தோண்முடி தாளுந் தொலையவே
சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல்
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடும்
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் மிக்க கொடியவனாகிய இராவணனது தோள்களும் , முடிகளும் , தாள்களும் தொலையுமாறு திருப்பாதத்து ஒரு விரலைச் சேர்த்தியவர் ; உலகிலுள்ளோரெலாம் ஆர்த்துவந்து நீராடிடும் தீர்த்த வடிவினர் ஆவர் .

குறிப்புரை :

தூர்த்தன் - தீ ஒழுக்கமுடையவன் . தொலைய - அழிய . ஒரு விரல் சேர்த்தினார் என்க . உலகத்தார் ஆர்த்து வந்து என்க . ஆர்த்து - ஆரவாரம் செய்து . ஆடிடும் - மூழ்குகின்ற . தீர்த்தர் - தீர்த்த மாயிருப்பவர் . தீர்த்தங்களின் வடிவமாயிருப்பவர் எனலுமாம் .
சிற்பி