திருஅதிகைவீரட்டம்


பண் :

பாடல் எண் : 1

கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

வளைந்த பிறைமதி சூடி , கோவணம் அணிந்து விரும்பியும் பயனற்ற நாணமில்லாத வாழ்க்கை உடையவரேனும் , வீணையிற் பாடல் பயின்ற சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கண்டு தொழுதபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

கோணல் மாமதி - வளைந்து பிறந்த பிறை . ஓர் கோவணம் - ஒரு கோவணமணிந்து . நாணில் வாழ்க்கை - வெட்கமில்லாத வாழ்க்கை . கோவணங்கட்டித் திரிதலின் நாணில் வாழ்க்கை என்றார் . நயந்தும் - விரும்பியும் . பயன்நிலை - பயனுக்கு நிலைக்களனாயிருப்பவர் . பாணில் - இசைகளில் . வீணை பயின்றவன் - இசைகளில் வீணை இசையைப் பழகியவன் . உலகப் படைப்பின்போது இறைவனிடத்துண்டாம் நாததத்துவத்தை வீணையாகக் கூறல் மரபு . காணில் அல்லது - கண்டு தொழுதாலல்லாமல் . துயில் - உறக்கம் . என் கண் துயில் கொள்ளுமோ என்க . அகப்பொருட்டுறையில் தலைவி கூற்றுப் போல வைத்துத் தம்மியல்பு கூறுகிறார் .

பண் :

பாடல் எண் : 2

பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி
அண்ண லையம ரர்தொழு மாதியைச்
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம்
நண்ணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

பண்வடிவானவரும் , பவளத்தொகுதி போன்ற மாமணி மேனியுடைய அண்ணலும் , தேவர்கள் தொழும் முதல்வரும் , திருநீற்றுப்பொடியணிந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தை நண்ணினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

பண்ணினை - இசை வடிவானவனை . பவளமாமணித் திரள் - பவளமணிக்குவியல் போன்ற . ஆதியை - முதன்மையானவனை . நண்ணில் அல்லது - சென்று தொழுதால் அல்லாமல் . சுண்ணம் - வாசனைப்பொடி . வெண்பொடியையே வாசனைப் பொடியாக அணிந்தவர் .

பண் :

பாடல் எண் : 3

உற்ற வர்தம் உறுநோய் களைபவர்
பெற்ற மேறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டம்
கற்கி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

தம்மைப் பற்றுக்கோடாக அடைந்தவரது மிக்க துயரங்களைக் களைபவரும் , இடபம் ஏறுபவரும் , விளங்கும் சடையுடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற பாயும் கெடில நீர்சுற்றிச் சூழ்கின்ற திருவதிகைவீரட்டத்தைக் கற்ற பின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

உற்றவர்தம் - தம்மை அடைந்தவர்களுடைய . உறு நோய் - மிக்க துன்பங்களை . பெற்றம் - எருது . பிறங்கு - விளங்குகின்ற . சுற்றும் - சுற்றிலும் . கற்கில் அல்லது - துதித்தால் அல்லது .

பண் :

பாடல் எண் : 4

முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டம்
கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

முதிராத வெள்ளிய பிறையினைச் சூடும் முதல்வரும் , சினக்கப்பட்டார் வாழும் மூன்று புரங்கள் தீயெழுமாறு மேருமலையாகிய வில்லைத் தாம் கொண்டு எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கற்றால் அல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

முற்றா - இளைய . செற்றார் - பகைவர் . வில்தான் கொண்டு எயில் எய்தவர் எனப்பிரிக்க .

பண் :

பாடல் எண் : 5

பல்லா ரும்பல தேவர் பணிபவர்
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன்
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டம்
கல்லே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

பலவகைப்பட்ட தேவர்களாலும் பணியப்படுபவரும் , நல்லார்களாலும் விரும்பிப் பரவப்படுபவரும் , வில்லால் மூவெயில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கல்லேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

பல்லார் - பலமக்கள் . தேவர் என்புழி உம்மை விரிக்க . நல்லாரும் - நல்லவர்களும் . நயந்து - விரும்பி .

பண் :

பாடல் எண் : 6

வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக்
கொண்டான் கோல மதியோ டரவமும்
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டம்
கண்டா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

வண்டுகள் பொருந்திய கொன்றையும் , ஊமத்த மலரும் , பிறையும் , அரவமும் அழகு வளரும் தம் சடையிற் கொண்டவரும் , பகைவரது மும்மதில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கண்டபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

வண்டார் - வண்டுகள் பொருந்திய . மத்தம் - ஊமத்தம் . வளர்சடைக் கொண்டான் . கோலமதியோடு அரவமும் கொண்டான் என்க . விண்டார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 7

அரையார் கோவண ஆடைய னாறெலாந்
திரையா ரொண்புனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்குவீ ரட்டன்பால்
கரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

இடுப்பிற் பொருந்திய கோவண ஆடையரும் , வழியெல்லாம் அலையெறியும் ஒள்ளிய நீர் பாய்கின்ற கெடிலக் கரையில் விளங்கும் நறுமணமுடைய திருநீற்றுப்பூச்சினரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

அரையார் - இடுப்பிலே பொருந்திய . ஆறெல்லாம் - வழிகளெல்லாம் . திரையார் - அலைகளோடு கூடிய . ஒண்புனல்பாய் - ஒள்ளிய தண்ணீர் பாய்கின்ற . விரையார் - மணம் பொருந்திய . கரையேனாகில் - என் குறைகளைச் சொல்லேனாயின் .

பண் :

பாடல் எண் : 8

நீறு டைத்தடந் தோளுடை நின்மலன்
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை
ஏறு டைக்கொடி யான்திரு வீரட்டம்
கூறி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த பெருந்தோளராகிய மலமற்ற வரும் , இடபக்கொடியுடையாரும் ஆகிய பெருமான் உறைவதும் புனல் பாய்கின்ற கெடில ஆற்றினுடைய கரையில் உள்ளதுமாகிய திருவதிகைவீரட்டத்தைக் கூறினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

தடம் - பெரிய . நின்மலன் - மலமற்றவன் . ஆறுடைக் கெடிலம் - பல கால்வாய்களாகிய வழிகளை உடைய கெடிலம் . ஏறுடைக்கொடி - இடபக்கொடி .

பண் :

பாடல் எண் : 9

செங்கண் மால்விடை யேறிய செல்வனார்
பைங்க ணானையி னீருரி போர்த்தவர்
அங்கண் ஞாலம தாகிய வீரட்டம்
கங்கு லாகவென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

சிவந்தகண்ணை உடைய திருமாலாகிய விடையேறிய திருவருட்செல்வரும் , பசிய கண்ணை உடைய ஆனையின் பச்சைத் தோலை உரித்துப் போர்த்தருளியவரும் , அழகிய இடமகன்ற உலகமுழுதானவருமாகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் ( காணேனாயின் ) என் கண்கள் இரவாயினும் ஆக , உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

செங்கண்மால் விடை - சிவந்த கண்களை உடைய திருமாலாகிய எருது . ஈருரி - உரித்ததோல் . அங்கண் - அழகிய இடமகன்ற . ஞாலமதாகிய - உலகத்ததாகிய . கங்குல் வீரட்டம் ஆக அல்லது என்க . இரவுப்பொழுதில் வீரட்டத்தை அடைந்தால் அல்லது என்பது கருத்து . அல்லது என்றது முன் பாடல்களிலிருந்து வருவிக்கப் பெற்றது .

பண் :

பாடல் எண் : 10

பூணா ணாரம் பொருந்த வுடையவர்
நாணா கவ்வரை வில்லிடை யம்பினால்
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டம்
காணே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

பூண் , நாண் , மாலை முதலியவற்றைப் பொருந்த உடையவரும் , அழகிய மேருமலையாகிய வில்லிடை நாணுடன் கூடிய அம்பினால் , பகைவர் மும்மதில்களை எய்தவர் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் காணேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

பொருந்த - தமக்கு ஏற்ற வகையில் . பூண் - அணிகலன் . நாண் - பூணநூல் முதலிய கயிறுகள் . ஆரம் - மலர்மாலைகள் . நாக நாண்வரை வில்லிடை - இமயவில்லின் வாசுகிப் பாம்பாகிய நாணில் . பேணார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 11

வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கம்
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

மலைகளில் நிறைந்த வயிரத்தின் தொகுதியும் , மாணிக்கமும் ஆகியவற்றைக்கொண்டு அலையார்ந்த புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ளதும் , நறுமணமிக்க திருநீற்றினையணிந்த இறைவன் விளங்குவதுமாகிய திருவதிகை வீரட்டத்தை உரையேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?

குறிப்புரை :

வரையார்ந்த - மலையிடத்தே பொருந்திய . திரள் - குவியல் . மாணிக்கத்திரள் எனவும் கூட்டுக . உரையேனாகில் - புகழ்ந்து பாடேனாயின் .

பண் :

பாடல் எண் : 12

உலந்தார் வெண்தலை உண்கல னாகவே
வலந்தான் மிக்கவவ் வாளரக் கன்றனைச்
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம்
புலம்பே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

இறந்தவர்களது ( வாழ்நாள் உலந்தார் ) வெள்ளிய தலைகளை உண்கலனாகக்கொண்டு , வெற்றிமிக்க அவ்வாளரக் கனாகிய இராவணனைச் சிலம்பணிந்த திருவடி விரலால் ஊன்றிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் புலம்பிப் பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

உலந்தார் - இறந்தவர். உண்கலன் - உண்ணும் பாத்திரம். வலம் - வெற்றி. புலம்பேனாகில் - மனங்கரைந்து பலகாலும் சொல்லிப் புகழேனாயின்.
சிற்பி