திருஅதிகைவீரட்டம்


பண் :

பாடல் எண் : 1

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி சேரு மவருக்கே.

பொழிப்புரை :

கன்னற்கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய் , எட்டுவகைப்பட்ட நாண்மலர்களாகிய தேனவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

எட்டு நாண்மலர் - அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள் . அவையாவன :- புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவர்த்தம் , பாதிரி , குவளை , அலரி , செந்தாமரை ஆகிய பூக்கள் போல விரும்பத்தக்க எண்குணங்கள் எனலுமாம் . மட்டு அலர் - தேன் நிறைந்த மலர் . இடுவார் - அர்ச்சிப்பார் . மாயும் - அழியும் . ஆல் அசை . கட்டி - கரும்புக் கட்டியாகிய வெல்லத்தோடு . தேன் கலந்தன்ன - தேனைக் கலந்ததை ஒத்த ; வீரட்டனார் என்க . அடிசேருமவருக்கு - திருவடிகளைச் சேர்பவர்களுக்கு . வினைமாயும் என இயைத்து முடிவு கொள்க . பூசையால் பவன் முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபும் இங்கு நினைக்கத்தக்கது . ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத்திருப்பதிகம் . அகப்பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை , ஐம்பொறியடக்கம் , பொறை , அருள் , அறிவு , வாய்மை , தவம் , அன்பு என்னும் நலஞ் சிறந்தார் மனத் தகத்து மலர்கள் எட்டும் . இதனைத் தண்டகம் என்பர் .

பண் :

பாடல் எண் : 2

நீள மாநினைந் தெண்மல ரிட்டவர்
கோள வல்வினை யுங்குறை விப்பரால்
வாள மாலிழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

பொழிப்புரை :

வட்டமாகவும் , பெரிதாகவும் ஓடுகின்ற கெடில நதிக்கரை வேலிபோல் சூழ்ந்த வீரட்டத்திறைவர் , தம்மை இடை விடாது நினைந்து எண்வகை மலர்களால் வழிபடுபவர்களின் கொடிய வல்வினையை நீக்குவர் .

குறிப்புரை :

நீளமா - இடைவிடாது . கோளவல்வினையும் - கொடுமை பொருந்திய வலிய வினைகளையும் . ஆல் - அசை . வாளம் - வட்டமாக . மால் இழியும் - பெரிதாக ஓடுகின்ற . வேலி என்பது வேளி எனத் திரிந்தது .

பண் :

பாடல் எண் : 3

கள்ளி னாண்மல ரோரிரு நான்குகொண்டு
உள்கு வாரவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.

பொழிப்புரை :

தெள்ளிய நீர்வயலிற் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய வெண்ணீறணிந்த திருமேனி உடைய பெருமான் , தேன் ஒழுகுகின்ற புதிய எட்டு மலர்களைக்கொண்டு அருச்சித்துத் தம்மை உள்குவார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார் .

குறிப்புரை :

கள்ளின் நாண்மலர் - தேன் நிறைந்த மலர் . ஓர் இருநான்கு - எட்டுமலர்கள் . தெள்ளுநீர் - தெளிந்த நீர் .

பண் :

பாடல் எண் : 4

பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட்டு
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.

பொழிப்புரை :

செறிந்த குளிர்நீர் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய புலித்தோலை ஆடையாக உடுத்த பெருமானே , எட்டுவகைப்பட்ட பூங்கொத்துக்களை இட்டு வணங்கிநிற்கும் அடியார்களுடைய வல் வினைகளை ஓட்டுவார் .

குறிப்புரை :

பூங்கொத்தாயின - எட்டுவகை மலர்களின் பூங் கொத்துக்கள் . மூன்றோடோரைந்து - எட்டு . இட்டு - சாத்தி . வாங்கி - வளைந்து ; வணங்கி . வீங்கி - பெருகிய . உடையாடை - உடுத்தற்குரிய ஆடை.

பண் :

பாடல் எண் : 5

தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன்
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேன லானை யுரித்தவீ ரட்டரே.

பொழிப்புரை :

மீன்களை உடைய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக் கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும் , ஆனை உரித்தவருமாகிய பெருமான் , தேன் உடைய அழகிய போதுகளாகிய எட்டுவகைப்பட்ட மணமலர்களை இட்டு வணங்குவார் வினைகளைத் தீர்ப்பவர் ஆவர் .

குறிப்புரை :

தேனப்போதுகள் - தேன் பொருந்திய பூக்கள் . தான் - தானே . அப்போது - அம்மலர்களை . இடுவார் - அருச்சிப்பார் . மீனத் தண்புனல் - மீன்கள் நிறைந்த குளிர்ந்த புனல் . வேனலானை - கோபமுடையானை . உரித்த - தோலை உரித்தெடுத்த .

பண் :

பாடல் எண் : 6

ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.

பொழிப்புரை :

வன்மை உடையதாகிய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும் , வேழத்தின் உரியைப் போர்த்தவருமாகிய பெருமானே , இதழி ( ஏழி ) யாகிய கொன்றை மலர்களைக் கொண்டு பணிந்த அடியார்களுடைய ஊழியாகத் தொடர்ந்துவரும் பழைய வினைகள் ஓடும்படி நீக்குவார் .

குறிப்புரை :

ஏழி - ஏழை முன்னாக உடையது எட்டு . தொன்மலர் - தொன்மையாகச் சொல்லப்பட்ட மலர் . ஊழி - பல பிறப்புக்கள் . பாழி - வலிமை .

பண் :

பாடல் எண் : 7

உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

பொழிப்புரை :

மலைகளினின்று வந்து இழிவதாகிய கெடில நதியின் கரையில் உள்ளதும் , நறுமணஞ் சூழ்ந்து எழில் பெற்றதுமாகிய திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே , ஆகம நூல்கள் உரைக்கின்ற நெறியின்படி எட்டு வகைப்பட்ட ஒளியுடைய மலர்களை இட்டு வணங்கும் அடியார்களின் அலைகள்போல் வருகின்ற வல்வினைகளைத் தீர்ப்பவர் ஆவர் .

குறிப்புரை :

உரைசெய் நூல்வழி - உரைக்கப்பட்ட சிவாகம நூல் முறைப்படி . ஒண்மலர் - விளக்கமான மலர்கள் . திசைகள் போல்வரு - அலைகளைப் போலச் சிறிதும் பெரிதுமாய்த் தொடர்ந்து வரும் . வரைகள் - மலைகள் . விரைகள் - மணப்பொருள்கள் .

பண் :

பாடல் எண் : 8

ஓலி வண்டறை யொண்மல ரெட்டினால்
காலை யேத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

பொழிப்புரை :

மழைநீர் வந்து இழிகின்ற கெடில நதியின் கரையில் உள்ளதும் , வேலிகள் சூழ்ந்து எழில் உடையதுமாகிய திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே , ஓலமிடும் வண்டுகள் ஒலிக்கும் எட்டுவகைப்பட்ட மலர்களால் தம்மைக் காலத்தேவந்து வழிபடுவார்களின் வினையைத் தீர்ப்பவர் .

குறிப்புரை :

ஓலிவண்டறை - ஓலமிடுவதாகிய வண்டுகள் ஒலிக்கின்ற . காலை - காலையிலே . ஆல் அசை . ஆலி - ஒலித்து . கூடிவேலி சூழ்ந்து - வேலிபோலச் சூழ்ந்து .

பண் :

பாடல் எண் : 9

தாரித் துள்ளித் தடமல ரெட்டினால்
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்திரை பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.

பொழிப்புரை :

வலிமை உடையதாய்த் தெளிந்துவரும் அலைகளை உடையதாய்ப் பாய்கின்ற கெடிலநதியின் கரையின்கண் உள்ள வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள மணம் வீசும் செஞ்சடையை நன்கு கட்டிய பெருமான் , மனத்தே இறைவன் திருவுருவைத்தாங்கிச் சிந்தித்து எட்டு வகைப்பட்ட மலர்களால் ஏத்தும் வல்லமை உடைய அடியார்களின் வினைகளைக் கெடுப்பார் .

குறிப்புரை :

தாரித்து - தரித்து என்பது தாரித்து என நீண்டது . தரித்தல் - மனத்திற்கொள்ளல் . தடமலர் - பெரிதாகிய மலர் . பாரித்து - மிகுந்து . பாற்றுவார் - கெடுப்பார் . மூரி - பெரிய . வேரி - தேன் பொருந்திய மலர்கள் . வேய்ந்த - கட்டிய .

பண் :

பாடல் எண் : 10

அட்ட புட்ப மவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்
தட்டு மாறுசெய் கிற்பவ திகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே.

பொழிப்புரை :

திருவதிகைவீரட்டனார் திருவடி சேரும் அடியார்கள் , அட்டபுட்பங்களைவிதிமுறைப்படி கொண்டு அட்ட மூர்த்தியும் , ஆதியற்றவரும் ஆகிய பெருமானின்பால் அணைந்து பொருந்துமாறு வழிபாடு செய்யும் திறம் உடையவர் ஆவர் .

குறிப்புரை :

அட்டபுஷ்பம் - எட்டுமலர்கள். அவைகொளுமாறு - பூக்களை எடுக்கும் விதிமுறைப்படி எடுத்து. அட்டமூர்த்தி - எட்டு வடிவினனாகிய இறைவன். அனாதி - ஆதியற்றவன். அட்டுமாறு செய்கிற்ப - இறைவனைச் சூடுமாறு செய்வார்கள். அடிச்சேருமவர்கள் செய்கிற்ப என்க.
சிற்பி