திருநாரையூர்


பண் :

பாடல் எண் : 1

வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்
காறு சூடலும் அம்ம அழகிதே.

பொழிப்புரை :

மணம் வீசுகின்ற பூம்பொழில்களை உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள நம் இறைவர் , பிறிதொன்றற் கில்லாத பெருஞ்சிறப்புடைய திருக்கயிலாயத்தை உடையவர் . உமையம்மையை ஒருபங்கில் உடையவர் ; வளைந்த பிறை சூடியவர் . ஆயினும் கங்கையாற்றினைச் சடையிற் சூடல் மிக்க அழகும் வியப்பும் உடையதே .

குறிப்புரை :

வீறுதானுடைய வெற்பன் - பெருமை பொருந்திய மலையரையன் . கூன் பிறை - வளைந்த பிறை . நாறு - மணம் கமழும் . அம்ம - வியப்புமொழி ; மிக என்னும் பொருட்டு .

பண் :

பாடல் எண் : 2

புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலு மம்ம வழகிதே.

பொழிப்புரை :

தெளிந்த நீர்வளம் உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள பெருமான் , புள்ளிகளை உடைய புலித்தோலாடையும் , வெள்ளி போன்ற நிறம் கொண்ட திருநீற்றுப் பூச்சுடைய திருமேனியும் உடையவராயினும் , நஞ்சை அள்ளி உண்டல் மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும் .

குறிப்புரை :

புள்ளிகொண்ட - புள்ளிகளைக்கொண்ட . புலியுரி - புலித்தோல் . வெள்ளி கொண்ட வெண்பூதி - வெள்ளியின் நிறத்தைக் கொண்ட வெண்மையான விபூதி . நள்ளி - விரும்புபவன் ஆகிய நாரையூரான் என்க .

பண் :

பாடல் எண் : 3

வேடு தங்கிய வேடமும் வெண்தலை
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூ ரான்நடம்
ஆடு பைங்கழ லம்ம வழகிதே.

பொழிப்புரை :

நாட்டின்கண் தங்கிய புகழை உடைய நாரையூரில் எழுந்தருளியுள்ள பெருமான் , வேடத்தன்மை தங்கிய திருவேடமும் , வெண்தலை ஓட்டில் தங்கிய உணவை உண்ணும் கொள்கையும் உடையவராயினும் , நடம் ஆடுகின்ற பைங்கழல் சேவடி மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும் .

குறிப்புரை :

வேடு - வேடர் வடிவம் . பலியுண் கொள்கை என்க . கொள்கை - செயல் . நாடு தங்கிய - நாட்டின்கண் பொருந்திய .

பண் :

பாடல் எண் : 4

கொக்கின் தூவலுங் கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக்
கக்கி னாரமு மம்ம வழகிதே.

பொழிப்புரை :

திருநாரையூரில் எழுந்தருளியுள்ள நம் பெருமான் கொக்கு வடிவாய் நின்ற அசுரனின் இறகும் , கூவிள மலராலாகிய தலைக் கண்ணியும் , மிகுந்த வெண்தலைமாலையும் , விரிந்த சடையும் உடைய திகம்பரனேயாயினும் அக்கின் மாலை அணிந்திருத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

தூவல் - தூவி ; இறகு . கொக்கின் வடிவமாய் வந்த அசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன் இறைவன் . கூவிளங் கண்ணி - வில்வமாலை . மிக்க - பலவாய . நக்கன் - நிர்வாணி . அக்கின் ஆரம் - என்பு மாலை .

பண் :

பாடல் எண் : 5

வடிகொள் வெண்மழு மான்அமர் கைகளும்
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம வழகிதே.

பொழிப்புரை :

வடித்தலைக்கொண்ட ஒளியால் வெள்ளிய மழுப்படையும் மானும் விரும்புகின்ற கரங்களும் , திருநீற்று வெண் பொடி பூசிய செம்பவளம் ஒத்த மேனியும் , ஒருபங்கில் இருக்கும் நடித்தலைக் கொண்ட நன்மயில் போன்ற உமாதேவியும் உடைய திரு நாரையூர்ப் பெருமான் வடிவு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

வடிகொள் - உலையில் வடித்தெடுத்தாற் போன்று கூரிய . பொடி - திருநீறு . நடிகொள் - நடித்தலைக் கொண்ட . நடி - முதனிலைத் தொழிற்பெயர் . வடிவு அம்ம அழகிது என்க .

பண் :

பாடல் எண் : 6

சூலம் மல்கிய கையுஞ் சுடரொடு
பாலும் நெய்தயி ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலு மம்ம வழகிதே.

பொழிப்புரை :

உலகத்தில் புகழ் நிறைந்த திருநாரையூர் , நம் பெருமான் சுடரொடு நிறைந்த சூலம் பொருந்திய கையும் , பால் , நெய் , தயிர் முதலிய பஞ்சகவ்வியம் ஆடிய தன்மையும் உடையவராயினும் , ஆலநிழலில் இருந்து அறம் உரைத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

மல்கிய - பொருந்திய ; சுடரொடு - நெருப்போடு . ஞாலம் மல்கிய - உலகில் புகழால் நிறைந்த . ஆலநீழல் - கல்லாலநிழல் .

பண் :

பாடல் எண் : 7

பண்ணி னால்மறை பாடலோ டாடலும்
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை யம்ம வழகிதே.

பொழிப்புரை :

இசையொடு பொருந்திய நான்மறைகளைப் பாடுதலும் , ஆடுதலும் , நல்ல எண்ணமில்லாத தீயோர்களது முப்புரங்களை எரித்தலும் , தம்மைப் பொருந்தியவரது துயரங்களைத் தீர்த்தலும் ஆகிய திருநாரையூர் அண்ணலார் செய்கைகள் அனைத்தும் மிக்க வியப்பும் அழகும் உடையனவேயாம் .

குறிப்புரை :

பண்ணினால் - இசையினாலே . மறை பாடுதலோடு என்க . எண்ணிலார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 8

என்பு பூண்டெரு தேறி யிளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது வம்ம வழகிதே.

பொழிப்புரை :

எலும்புகளைப் பூண்டு , எருதின்மேல் ஏறி , இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி , நல்ல பகலிலும் பலிதேர்வராயினும் , திருநாரையூரில் உள்ள அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே .

குறிப்புரை :

மின்புரிந்த - மின்னலைப்போல் முறுக்கி விளங்கிய . நன்பகல் - நல்ல பகற்போது . பலிதேரினும் - உணவு இரந்தாலும் . அன்பன் - அன்பே வடிவமாயவன் .

பண் :

பாடல் எண் : 9

முரலுங் கின்னர மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுலாம்
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக்
கரவும் பூணுத லம்ம வழகிதே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற கின்னரமும் , மொந்தையும் முழங்க , நீண்டு நிகழும் இரவில் இடுகாட்டில் நின்று எரித்து ஆடுதலும் , அரவினைப் பூணுதலும் ஆகியவை கடல் ஒலிக்கும் திருநாரையூர் நம் பெருமானுக்கு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

முரலும் - இனிய ஓசையோடு ஒலிக்கும் . கின்னரம் - ஒருவகை வாத்தியம் . மொந்தை - தோற்பறை . நரலும் - ஆரவாரிக்கும் . வாரி - கடலால் சூழப்பட்ட உலகின்கண் பொருந்திய எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 10

கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்தலை யீரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையு மம்ம வழகிதே.

பொழிப்புரை :

கொன்றையினை உடைய அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான் திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

கடுக்கை - கொன்றை . அம் - அழகிய . நடுக்கம் வந்து இற - நடுக்கமடைந்து நொறுங்க . அடுத்த - ஊன்றிய .
சிற்பி