திருக்கோளிலி


பண் :

பாடல் எண் : 1

முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேயடி யேனை மறவலே.

பொழிப்புரை :

செந்நெல் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே ! ( தியாகராசனே !) உன்னை அடியேன் முன்பே நினையாதொழிந்தேன் ; இன்னமும் நான் உன் சேவடிகளை நன்கு ஏத்தவில்லை ; ஆயினும் அடியேனை மறவாதே ; என்னை நினைந்தருள்வாயாக ! அவனை நாம் நினைக்கில் அவனும் நம்மை நினைப்பான் என்றபடி .

குறிப்புரை :

முன்னமே - காலம் வறிதே கழியாத முன்பே ; உனை நினையாதொழிந்தேன் என்க . இன்னம் - இன்னமும் . உன - உன்னுடையவான ( அ - ஆறன் உருபு ). மறவல் - மறவாதே .

பண் :

பாடல் எண் : 2

விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினைப்
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

விண்ணிலுள்ள தேவர்கள் தொழுது வணங்கும் விளக்கும் , மண்ணுலகிலுள்ளவர் வினைகள் தீர்க்கும் மருந்தும் ஆகிய பண்ணுள்ளவர்கள் பயில்கின்ற திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள அண்ணலார் அடிகளையே தொழுது உய்வீர்களாக !

குறிப்புரை :

விண்ணுளார் - தேவர் . விளக்கினை - ஒளி வடிவானவனை . மருந்தினை - மருந்துபோல்வானை . பண்ணுளார் - இசை வாணர் . விச்சுவசேவியனும் துன்பம் கடிவோனுமாகிய சிவ பிரானையே தொழுதுய்க என்கிறார் .

பண் :

பாடல் எண் : 3

நாளும் நம்முடை நாள்க ளறிகிலோம்
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும்
ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே
கோளிலி யரன் பாதமே கூறுமே.

பொழிப்புரை :

நம்முடைய வாழ்நாள்களின் வரையறையை நாளும் அறியும் ஆற்றல் இல்லை ; நம்மை ஆளும் நோய்களோ தொண்ணூற்றெட்டுக்கு மேலாகும் . அறிவின்மையின்கண் பொருந்தியிருந்து நீர் வருந்தாமல் கோளிலிச் சிவபெருமான் பாதமே கூறுவீராக .

குறிப்புரை :

நாளும் - நாடோறும் . நம்முடைய நாள்கள் - நமக்கு இவ்வுலகில் உளதாய நாள்கள் . ஆளும் - உடலை ஆட்சி செய்யும் . ஐம்பதோடாறெட்டு - தொண்ணூற்றெட்டு . ஏழைமைப்பட்டு - அறியா மையுடையராகி . நையாதே - வருந்தாதே ; மக்கள் - சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோர் . அரன் பாதமே அவரால் பற்றத்தக்கது என்றபடி .

பண் :

பாடல் எண் : 4

விழவி னோசை யொலியறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக்
குழக னார்திருப் பாதமே கூறுமே.

பொழிப்புரை :

விழாக்களின் ஓசையும் ஒலியும் விட்டு நீங்காத குளிர் பொழில்களை உடையதும் , தன்னிடம் பழகி வாழ்வார்களது வினைகளைத் தீர்க்கும் தொல்பதியும் , அழலைக் கையில் ஏந்திய பெருமான் அமர்ந்திருப்பதும் ஆகிய திருக்கோளிலியில் குழகன் திருப்பாதத்தையே கூறுவீராக .

குறிப்புரை :

ஓசை - இன்னதென அறியாத ஆரவாரம் . ஒலி - இசை முதலிய ஒலி நிகழ்ச்சிகள் . பழகினார் - தம்மொடு அன்பு செலுத்திப் பழகினார் . அழல்கையான் அமரும் கோளிலி என்க . குழகன் - என்றும் இளையன் .

பண் :

பாடல் எண் : 5

மூல மாகிய மூவர்க்கும் மூர்த்தியைக்
கால னாகிய காலற்குங் காலனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதன் பாதந் தொழுமினே.

பொழிப்புரை :

மும்மூர்த்திகளுக்கும் மூலமூர்த்தியும் , காலகாலனும் , அழகுமிக்க பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள சூலத்தைக் கையிலே உடையானுமாகிய பெருமானின் பாதங்களைத் தொழுவீராக .

குறிப்புரை :

மூவர்க்கும் மூலமாகிய மூர்த்தியை என மாறுக . காலனாகிய காலன் - காலத்தை வரையறுப்பவனாகிய இயமன் . சூல பாணி - சூலத்தைக் கையின்கண் ஏந்தியவன் . சிவபிரானே தத்துவங் கடந்த முதற்பொருளும் சமயத்தாரால் தொழப்படும் தெய்வமும் என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
நீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.

பொழிப்புரை :

காற்று வடிவாயவனும் , கடல் விடம் உண்டவனும் , வெண்ணீறணிந்தவனும் , நிமிர்ந்த புன்சடை உடைய அண்ணலும் , சடையிற் கங்கையாற்றினை உடையவனும் ஆகிய திருக்கோளிலியில் அமரும் இடபத்தை உடையானை , அவன்றன் திருவடிகளையே தொழுது ஏத்துவீராக .

குறிப்புரை :

காற்றனை - காற்று வடிவானவனை . நிமிர் - நிமிர்ந்த . புன் - மெல்லிய . ஆற்றனை - ஆறு சூடியவனை . ஆல்தனை அமரும் ஏற்றனை எனினும் பொருந்தும் . ஏற்றனார் . ( இடபம் ) ஏற்றூர்தியை உடையவர் . ஏத்தும் - தோத்திரியுங்கள் . முதல்வனை அவன் தன் திருவடியை நினைத்தே தொழுது ஏத்துமின் என்றது அதுவே நினைக்க வருவது ஆதலின் . ` நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை ` ( பரிபாடல் பா .4. அடி .62.)

பண் :

பாடல் எண் : 7

வேத மாயவிண் ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.

பொழிப்புரை :

வைதிகத் தேரின் உறுப்புக்களாய் நின்ற விண்ணோர்களுக்குத் தலைவனும் , நிலைபெற்ற உயிர்கள் ஓதி ஏத்தும் ஒப்பற்றவனும் , வண்டுகள் கோதி ஒலிக்கும் மலர்களின் வளமுடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக .

குறிப்புரை :

வேதமாய - வேத வடிவினனாய் உள்ள . வேதமாய விண்ணோர்கள் - வேதம் , வைதிகத்தேர் ; அதன் உறுப்புக்களாய் இருந்த விண்ணோர் . விண்ணோர்கள் கருவிகளாக சிவபிரான் கருத்தா வாதலை அத்தேரின் அமைப்பு காட்டிற்று . மன்னுயிர் - உலகில் நிலைபெற்ற உயிர்கள் . ஓதியேத்தும் ஒருவனை - கற்றுத் துதிக்கும் முதல்வனை . கோதி - மகரந்தங்களை வாயால்கிண்டி . அறையும் - ஒலிக்கும் . வேதநாயகன் - வேதங்களுக்குத் தலைவன் .

பண் :

பாடல் எண் : 8

நீதி யாற்றொழு வார்கள் தலைவனை
வாதை யான விடுக்கும் மணியினைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.

பொழிப்புரை :

முறையாகத் தொழுவார்களது தலைவனும் , துன்பங்களாயினவற்றை நீக்கும் செம்மணி போல்வானும் , வண்டுகள் கிண்டியொலிக்கும் மலர் வனம் உடைய திருக்கோளிலியில் வேத நாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக .

குறிப்புரை :

நீதியால் - முறையாக . வாதை - துன்பம் . விடுக்கும் - நீக்கும் . 7 ஆவது பாடல் பின்னிரண்டு வரிகளே இங்கும் அமைந்து உள்ளன .

பண் :

பாடல் எண் : 9

மாலும் நான்முக னாலு மறிவொணாப்
பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.

பொழிப்புரை :

மாலும் பிரமனும் அறியவியலாத , பாலனைய மென்மொழியுடைய உமையொரு கூறனாகிய அழகுடைய பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக .

குறிப்புரை :

அறிவொணா - அறியமுடியாத . பாலின் மென் மொழி - பாலனைய மென்மையான இனிய மொழி . நித்தல் - நாடோறும் .

பண் :

பாடல் எண் : 10

அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற்
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

அரக்கனாகிய இலங்கையர் மன்னன் இராவணனை நெருக்கி , அம்முடிகள் பத்தினையும் இறுத்தவனும் , பின் அவனுக்கு இரங்கியவனும் ஆகிய பெருமான் உறையும் திருக் கோளிலிக்கு விருப்பமாகி , அவன் அடிகளே தொழுது உய்வீராக .

குறிப்புரை :

அம்முடி - அழகிய முடி. இறுத்தான் - அழித்தவன். அவற்கு - அவனுக்கு. அருத்தி - ஆசை.
சிற்பி