திருப்பழையாறைவடதளி


பண் :

பாடல் எண் : 1

தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

தலைமயிரெல்லாவற்றையும் பறிக்கின்ற சமண் ஒழுக்கம் உடையவர்கள் உள்ளத்து நிலையினால் மறைத்தால் மறைக்கவியலுமோ ? அலைநீரின் மருங்கிலுள்ள பொழில்கள் சூழ்ந்த பழையாறைவடதளியின்கண் நிலைபெற்றவன் திருவடிகளையே நினைந்து உய்வீர்களாக .

குறிப்புரை :

கையர் - வஞ்சனையுடையவர்கள் . தலையெல்லாம் - தலையிலுள்ள உரோமங்கள் எல்லாவற்றையும் . தலை - ஆகுபெயர் . பறிக்கும் - ஒவ்வொன்றாகக் களையும் . தலைமயிரைப் பறித்தல் சமணர் இழிவழக்கு . சமண்கையர் - கையையுடைய சமணர் . கை - ஒழுக்கமுமாம் . உள்நிலையினால் - தங்கள் பொய்மை நிலைமையினால் . மறைத்தால் - மறைக்க முயற்சித்தால் . மறைக்கொண்ணுமே - மறைத்தற்கியலுவதொன்றாமோ . ஏகாரவினா எதிர்மறை குறித்தது . அலையினார் - அலைகள் பொருந்திய ; நீர்வளம் சான்ற . அலை - ஆகு பெயர் அல்லது அலைக்கண்மருங்கே என்க . நிலையினான் - எழுந்தருளி இருப்பவன் . சமணர்கள் பழையாறை வடதளித் திருக்கோயிலில் இருந்த பெருமானை மறைத்து வைத்திருந்தகாலையில் , அங்குச் சென்ற அப்பர் , பெருமானைக் காணாது உண்ணாநோன்பு கொண்டு பின்பு இறைவன் காட்சிதரப் பாடியதாதலின் இப்பாடலில் மறைத்தால் மறைக்கவொண்ணுமோ என்றார்கள் .

பண் :

பாடல் எண் : 2

மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை
தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக்
காக்கி னானணி யாறை வடதளி
நோக்கி னார்க்கில்லை யால்அரு நோய்களே.

பொழிப்புரை :

மூக்கினால் ஒலிக்குமாறு தம் மந்திரங்களை ஓதி , அக்குண்டிகை தூக்கினாராகிய சமணர்கள் குலத்தை அடியோடு வேரறுத்துத் தனக்கு அணியாறைவடதளியை ஆக்கிக் கொண்டானாகிய பெருமானை நோக்கினார்க்கு அருநோய்கள் இல்லை .

குறிப்புரை :

சமணர்களின் மந்திரங்கள் மெல்லெழுத்தே மிக்கு மூக்கொலியால் ஓதத்தக்கன ஆதலின் முரன்றோதி என்றார் . ` ஞமண ஞாணன ` ( சுந்தரர் பதிகம் ) தூரறுத்தே தனக்கு ஆக்கினான் - சமணர் கூட்டங்ளை வேரோடு களைந்து சமணர் மறைத்த கோயிலைத் தன்னதாகக் காட்டியவன் . அணி - அழகிய . அருநோய்கள் - நீங்குதற்கரிய துன்பங்கள் . நீர்க்குண்டிகைகள் மூன்றை ஒருசிறு உறியில் தூக்கித் திரிதல் சமணர் வழக்கு .

பண் :

பாடல் எண் : 3

குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில்
மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை
அண்ட ரைப்பழை யாறை வடதளிக்
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.

பொழிப்புரை :

குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , உடை யணியாத மிண்டர்களுமாகிய சமணர்களைத் துரத்திய விமலனும் , தேவதேவனும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள திருநீலகண்டரைத் தொழுது அடியேனின் கரங்கள் உய்ந்தன .

குறிப்புரை :

குண்டர் - கொழுத்தவர் . குணமில்லர் - நற்குணமில்லாதவர் . கூறை - ஆடை . இல் - இல்லாத . மிண்டர் - வலியர் . உடையின்றித் திரிதல் சமணகுருமார்வழக்கு . துரந்த - நீக்கிய , அரசனைக் கொண்டு ஒழித்த . விமலன் - குற்றமற்றவன் . அண்டர் - தேவர் . வடதளிக் கண்டரை - பழையாறை வடதளியாகிய தலத்தில் உறைபவரை .

பண் :

பாடல் எண் : 4

முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரைக்
கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப்
படைய ரைப்பழை யாறை வடதளி
உடைய ரைக்குளிர்ந் துள்குமென் னுள்ளமே.

பொழிப்புரை :

முடைநாற்றம் உடையோரும் , தலையை மழித்த மொட்டையர்களும் , கீழானவர்களுமாகிய சமணர்களை நீக்கியவரும் , கனலையும் வெண்மழுப் படையினையும் உடையவரும் ஆகிய பழையாறை வடதளிக்குடையவரை என் உள்ளம் குளிர்ந்து நினைகின்றது .

குறிப்புரை :

முடையர் - உடல் கழுவாமை , பல் விளக்காமை முதலியவற்றால் முடைநாற்றமுடையர் . தலை முண்டிக்கும் - மயிர் பறித்து மொட்டையாக்கி மழுங்கலாகக்கொள்ளும் . மொட்டரை - மொட்டையரை . கடையரை - ஒழுக்கத்தால் இழிந்தவரை . கடிந்தார் - அழித்தவராகிய . கனல் - ( கனலும் ) எரிக்கும் . வெண்மழுப்படையரை - வெள்ளிய மழுவாகிய ஆயுதத்தையுடையவரை . உள்கும் - நினைக்கும் .

பண் :

பாடல் எண் : 5

ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணும்
கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை
அள்ள லம்புன லாறை வடதளி
வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.

பொழிப்புரை :

ஒளியும் அரியும் உடைய கண்ணை உடைய பெண்டிர்க்கு முன்னும் உடையற்றவராய் நின்றுண்ணும் கள்ளர்களாகிய சமணரைக் கடிந்தவரும் , கரும்பின் ஊறும் சாறு பாய்ந்தோடிச் சேறாகிய நீர்வளம் உடைய பழையாறைவடதளியில் உள்ள வள்ளலும் ஆகிய பெருமானைப் புகழத் துயரங்கள் வாடும் .

குறிப்புரை :

ஒள்ளரிக்கண்ணார் - ஒளியோடு கூடிய செவ்வரி படர்ந்த கண்களையுடைய பெண்கள் . அமணேநின்று - அம்மணமாகி நின்று . உணும் - உண்ணும் . கள்ளரை - கள்ளத்தனமுடையவர்களை . உடையின்றிப் பெண்களிடம் உணவிரக்கும் சமண வாழ்க்கையைக் கருதியது . கடிந்த மகளிர் இடும் பிச்சையை ஏற்று காமமாதிகளை உள்வைத்து நிர்வாணராய் உண்ணும் சமணத் துறவியரை வெறுத்த . கரும்பு ஊறலை - கருப்பஞ்சாறு போன்றவனை . அள்ளல்புனல் - சேற்று வளம் சான்ற நீர் . வாடும் - வருந்தும் .

பண் :

பாடல் எண் : 6

நீதி யைக்கெட நின்றம ணேயுணும்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை யாறை வடதளிச்
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.

பொழிப்புரை :

முறைமை கெட நின்று ஆடையற்றவராய் உண்ணும் சாதியாகிய சமணரைக் கெடுமாறு செய்தருளிய சங்கரனும் , ஆதியும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள சோதியைத் தொழுவாருடைய துயர் தீரும் .

குறிப்புரை :

நீதியைக்கெட - நீதிமுறைகெட . அமணே நின்று - அம்மணமாகவே நின்று . உணும் - இரந்துணும் . சாதியை - சமண மதத்தின் செயல்களை . கெடுமாறு செய்த - அழியுமாறு செய்த . சங்கரன் - அழிப்பவன் . ஆதியை - முதல்வனாய் விளங்குபவனை .

பண் :

பாடல் எண் : 7

திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண்
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை
அருட்டி றத்தணி யாறை வடதளித்
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.

பொழிப்புரை :

திரட்டிய இரையாகிய சோற்றுக் கவளத்தையே மிகத்திணிக்கும் சமண் பொய்யர்களை அங்கிருந்தும் பிரித்த பெருமானை . அருள் திறத்தை உடைய அழகுபொருந்திய பழையாறை வடதளியில் தெளிவிக்கும் பிரானைத் தொழத் தீவினைகள் யாவும் தீரும் .

குறிப்புரை :

திரைதிரள் - வரிசையாக உருட்டிய சோற்றுத் திரள் . திரைவரிசைகளை ஒத்த எனினுமாம் . கவளம் - உணவு . திணிக்கும் - வாயில் பெய்துகொள்ளும் . பிரட்டர் - வஞ்சகர் . பிரித்த - அச் சமண சமயத்திலிருந்து நீங்கச்செய்த . அருள் திறத்து - திருவருள் வலிமையொடு கூடிய . தெருட்டரை - தம் முண்மையை உலகுக்குத் தெளியச் செய்பவனாகிய சிவபெருமானை.

பண் :

பாடல் எண் : 8

ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்
வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே.

பொழிப்புரை :

அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும் , வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம் .

குறிப்புரை :

ஓதினத்து எழுத்தஞ்சும் - ஓதவேண்டிய திருவைந்தெழுத்தையும் . உணரா - ஓதியுணராத . வேதினைப்படுத்தானை - துன்பம் செய்தவனை . வெங்கூற்று - கொடிய கூற்றை . உதை - உதைத்த . பாதன் - திருவடிகளையுடையவன் .

பண் :

பாடல் எண் : 9

வாயி ருந்தமி ழேபடித் தாளுறா
ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்
பாயி ரும்புன லாறை வடதளி
மேய வன்னென வல்வினை வீடுமே.

பொழிப்புரை :

மெய்ம்மையும் பெருமையும் உடைய தெய்வத் தமிழையே பயின்று ஆளாக உறாத ஆயிரஞ் சமணரையும் அழிவின் கட்படுத்தவனும் , பாய்கின்ற பெருந்தண்ணீர் வளம் உடைய பழையாறை வடதளியில் மேவியவனும் ஆகிய பெருமான் என்று சொல்லு மளவிலேயே வல்வினைகள் கெடும் .

குறிப்புரை :

வாய் - வாயினால் . வாய் - வாய்ந்த . சிவனுக்கு ஆளாம் தன்மையில் - உயிர்களைச் செலுத்தும் சிறப்புத்தன்மை வாய்ந்த . இருந்தமிழே படித்து - பெருமையுடைய தமிழ் மொழியைப்படித்து . வேற்று மொழிக்கில்லாத் தனிச்சிறப்புடைய ஞாலம் அளந்த மேன்மை தெய்வத்தமிழ் என்பதை நினைவு கூர்க . தெய்வத்தமிழைப் படித்தும் என உம்மை கூட்டுக . ஆளுறா - அம்மொழியின் பயனாய் விளங்கும் இறைவனை உணர்ந்து அவனுக்கு ஆளாக அடையாத . ஆயிரம் சமணும் - அவ்வூர் சமணப் பள்ளியில் அமைந்த ஆயிரவராகிய கூட்டம் . சமணர் தமிழ்மொழியில் வல்லுநர்களாகி இருந்தும் , அதன் பயனை அறியாது ஒழுகினதை நினைவுகூர்க . அழிவாக்கினான் - அழியச் செய்தான் . என - என்று சொல்ல . வீடும் - அழியும் .

பண் :

பாடல் எண் : 10

செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளித்
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.

பொழிப்புரை :

போரினைச் செய்யும் சேண் புகழ் உடைய இராவணனின் உடலும் , பிடரியும் இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள்வடிவானவனாகிய பழையாறைவடதளியின் அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும் .

குறிப்புரை :

செருத்தனை - போரை. சேண் - புகழால் நீண்ட. எருத்து - பிடரி. இற - நொறுங்க. இறை - சிறிதே. அருத்தனை - பொருள் வடிவானவனை. திருத்தன் - அழகியவன்.
சிற்பி