திருவரிசிற்கரைப்புத்தூர்


பண் :

பாடல் எண் : 1

முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.

பொழிப்புரை :

மொய்க்கின்ற முத்துக்கள் ஊர்ந்து வரும் தண்ணீரை உடைய அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறையும் பெருமான் ` திருவடி போற்றி ` என்று கூறுவோரெல்லாம் , பொய்யுடையதாகி ஊர்கின்ற ஐந்து புலன்களோடு , பொருந்திய வன்மை உடைய தாய் ஊர்கின்ற வினைகளையும் மாற்றும் வல்லமை உடையவர்கள் .

குறிப்புரை :

முத்தூரும் புனல் - முத்துக்களை ஊர்ந்து செல்லும் தண்ணீர் . அரிசிற்கரை - அரிசிலாற்றங்கரை . மொய் - நிறைந்த . போற்றியென்பாரெலாம் - போற்றி என்று சொல்வாரெல்லாரும் . பொய்த்தூரும் புலன் ஐந்து - அழிவையே மேற்கொண்டுள்ள ஐந்து புலன்கள் . புல்கிய - சேர்ந்த . மைத்து ஊரும் வினை - கரிதாய் மயக்கம் செய்து வருகின்ற வினைகள் . மாற்றவும் - நீக்கவும் . வல்லர் - வல்லமையுடையர் .

பண் :

பாடல் எண் : 2

பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துரு காமனத் தார்களைப்
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.

பொழிப்புரை :

வெண்பிறையாகிய தலைக் கண்ணியணிந்த சடையுடைய எம்பெருமானே என்று கூறி , தம்முடைய குற்றங்களை எண்ணிஉணர்ந்த நல்லடியார்கள் கண்ட வணக்கத்துக்குரியவரே ! மிகுதியாகக் கருத்தில் எண்ணி உருகாத மனத்தை உடையவர்களைப் புறக்கணித்திடுகின்ற புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே ! ( எம்மையாண்டருள்க ).

குறிப்புரை :

பிறைக்கண்ணிச் சடை - பிறையாகிய தலைமாலையை உடைய சடை . கறைக்கணித்தவர் - தம் குற்றங்களை எண்ணி ஆராய்ந்தவர் . கண்டவணக்கத்து ஆய் - தரிசித்த வணக்கத்தை மேற்கொண்டு . உற - பொருந்த . கணித்து - இறைவன் புகழைஎண்ணி . புறக்கணித்திடும் - வெறுக்கும் .

பண் :

பாடல் எண் : 3

அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாம்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.

பொழிப்புரை :

அரிசிலாற்றுக்கரையின்மேல் உள்ள அழகு நிறைந்த மதிலை உடைய நம் திருப்புத்தூர்ப் புனிதரை , வணங்கவேண்டிய முறைமைப்படிப் பரவிப் பணிவார்க்கெல்லாம் குற்றமற்ற நன்னெறி தோன்றும் ; காண்பீராக .

குறிப்புரை :

அரிசிலின் - அரிசிலாற்றின் . அணி ஆர்தரு - அழகு பொருந்திய . புரிசை - மதில்களோடு கூடிய . புனிதன் - தூயன் . பரிசொடும் - நல்ல தன்மையோடும் . பரவி - தோத்திரித்து . பணிவார்க்கெல்லாம் - வணங்குவார் எல்லாருக்கும் . துரிசில் நன்னெறி - குற்றமற்ற நல்ல வீட்டுநெறி . தோன்றிடும் - உண்டாம் .

பண் :

பாடல் எண் : 4

வேத னைமிகு வீணையில் மேவிய
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை
நாத னைநினைந் தென்மனம் நையுமே.

பொழிப்புரை :

வேதங்கள் ஓதுபவனை , வீணையில் மிகுகின்ற கீதங்கள் உடையவனை , மணம் வீசுகின்ற கொன்றையாகிய அழகிய போதினை அணிந்தவனை , அரிசிற் புனல் சூழ்ந்த புத்தூரில் உள்ள நாதனை , என் மனம் நினைந்து நெகிழ்கின்றது .

குறிப்புரை :

வேதனை - வேதங்களின் வடிவாயுள்ளவனை , அல்லது வேதங்களை அருளிச்செய்தவனை . மிகு - சிறந்த . வீணையில் மேவிய கீதனை - வீணையில் பொருந்திய இசை வடிவானவனை . கிளரும் - விளங்கும் . நறும் - மணங்கமழும் . கொன்றையம் போதனை - கொன்றைமலரணிந்தவனை . புனல்சூழ்ந்த - நீர்வளம் சூழ்ந்த .

பண் :

பாடல் எண் : 5

அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.

பொழிப்புரை :

கோங்கின் அரும்புபோன்ற முலையுடைய பெண்களோடு கூடித் துன்பங்கள் மிகுந்த வாழ்க்கையின்மேல் விருப்பம் சேர்கின்ற நிலையைவிட்டு நீங்கி , நல்ல பக்தி கொண்டு , திருப்புத்தூரில் உள்ள இறைவனைச் சிந்திக்கச்சிந்திக்கக் கரும்புச் சாற்றைவிடத் தித்திக்கும் ; காண்பீராக .

குறிப்புரை :

அரும்புபோல் - தாமரையரும்புபோலும் . அருப்பு - வலித்தல் விகாரம் . அல்லல் - துன்பம் தருகின்ற . விருப்புச் சேர் நிலை - விருப்பம் சேர்க்கும் தன்மை . நல்லிட்டமாய் - நல்ல விருப்பத்தோடு . சிந்தை செயச்செய - மனத்தால் நினைக்க நினைக்க . அண்ணிக்கும் - இனிக்கும் .

பண் :

பாடல் எண் : 6

பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப்
பூம்புன லும்பொ திந்தபுத் தூருளான்
நாம்ப ணிந்தடி போற்றிட நாள்தொறும்
சாம்ப லென்பு தனக்கணி யாகுமே.

பொழிப்புரை :

பாம்பும் , பிறையும் , பொலிவுள்ள கங்கைநதியும் படர்ந்த செஞ்சடையின்கண் பொதிந்த புத்தூரில் உள்ள புனிதர் , நாள்தொறும் நாம் பணிந்து , தன் திருவடியைப் போற்றிட , தான் சாம்பலையும் , எலும்பையும் தமக்கு அணியாக்கொள்வர்

குறிப்புரை :

படர் - தங்கிய . புன் - மெல்லிய . பூம்புனல் - அழகிய கங்கையாறு . பொதிந்த - மறைத்துவைத்த . நாம் பணிந்து நாள்தோறும் போற்றிடப் புத்தூருளான் என வினை முடிவு செய்க . அவனுடைய அடையாளமாய் அழகு செய்வன சாம்பலும் , என்பும் ஆம் . அணி - அழகு விளைப்பனவாகும் .

பண் :

பாடல் எண் : 7

கனல்அங் கைதனி லேந்திவெங் காட்டிடை
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர்
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.

பொழிப்புரை :

புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் தம் அழகிய கையினில் தீயையேந்தி , வெவ்விய காட்டிடை நெருப்புப் பொருந்திய இடத்திடை எய்தி நின்று ஆடும் இயல்பினர் ; பாடும் இயல்பினர் ; பின்னுதற்குரிய அழகிய செஞ்சடைமேல் பிறையும் கங்கையும் சூடும் இயல்பினர் .

குறிப்புரை :

கனல் - நெருப்பு . அங்கை - அகங்கையில் . வெங்காட்டிடை - இடுகாட்டில் . அங்கு , அசை . நெருப்பு அவ்விடங்களில் பற்றியெரியும்படி அனல்வீசி என்க . பினலம்செஞ்சடை - பின்னியது போன்று முறுக்குண்ட அழகிய சிவந்த சடை . தருபுனல் - ஓடிவரும் கங்கை அல்லது மக்கட்கு நல்வாழ்வு தரும் கங்கை என்க . போலும் - அசைப்பிலயம் என்ற பாடத்திற்குப் பிரளயம் என்பதன் இடைக் குறை என உரைக்க .

பண் :

பாடல் எண் : 8

காற்றி னுங்கடி தாகி நடப்பதோர்
ஏற்றி னும்மிசைந் தேறுவ ரென்பொடு
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப்
போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே.

பொழிப்புரை :

புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் . காற்றைவிட விரைந்து நடப்பதாகிய ஒப்பற்ற இடபத்தினும் மனம் ஒத்து ஏறுவர் ; எலும்பும் திருநீறும் அணிவர் ; ` தம்மையே நினைவாகிப் போற்றி ` என்று வழிபடுவார்க்கு அன்பர் ஆவர் .

குறிப்புரை :

கடிதாகி - விரைவுடையதாய் . ஏற்றினும் - இடபத்தின் கண்ணும் . இசைந்து - விரும்பி . நினைவாய்த் தம்மைப் போற்றி யென்பார்க்கு அன்பர் .

பண் :

பாடல் எண் : 9

முன்னும் முப்புரஞ் செற்றன ராயினும்
அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம்
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே.

பொழிப்புரை :

புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் , முன்னும் மூன்றுபுரங்களைச் சினந்தவராயினும் , வருந்தித் தம்மையடைந்தவர்க்கெல்லாம் அன்னம் போல்வர் ; விரிந்த சடை ஒளி விளங்கும் மின்னலென உடையவர் ; திருமேனி செம்பொன்னென உடையவர் ஆவர் .

குறிப்புரை :

முன்னும் - முற்காலத்தும் . செற்றனராயினும் - அழித்தனரானாலும் . அலந்து - வருந்தி , அடைந்தார்க்கெல்லாம் - அடைந்தவரெல்லார்க்கும் . அன்னம் - இளைப்பாற்றும் உணவு - திருவெண்ணீறணிந்த தோற்றத்தால் அன்னத்தை ஒப்பர் . விரிசடையால் மின்னலை ஒப்பர் . செம்பொன்னும் ஒப்பர் என்க .

பண் :

பாடல் எண் : 10

செருத்த னால்தன தேர்செல வுய்த்திடும்
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல்
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.

பொழிப்புரை :

பொழில்கள் நிறைந்த புத்தூர்த் தலத்திறைவர் , பொருதற்குத் தன்னுடைய தேர் செல்லுமாறு செலுத்துகின்ற கருத்தொடு கூடியவனாகிய இராவணன் திருக்கயிலையை எடுக்கலுற்ற போது , அவன் உடலும் பருத்த தோள்களும் சிதைந்து கெடும் படியாகத் தம் திருப்பாதத்து ஒரு திருவிரலைப் பொருத்தியவர் ஆவர் .

குறிப்புரை :

செருதன்னால் - போரால் . தன - தன்னுடையவான . உய்த்திடும் - செலுத்தும் . கருத்தனாய் - எண்ணமுடையவனாய் .
சிற்பி