திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்


பண் :

பாடல் எண் : 1

ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர்
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய
திருத்த னைப்புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே.

பொழிப்புரை :

ஒப்பற்றவனும் , மூன்றுலகங்களுக்கும் தேவர்க்கும் பொருளாய் உள்ளவனும் , அடியேன் மனத்துள் அமர்கின்ற கருத்தனும் , தீயாடிய திருத்தமுற்றவனுமாகிய பெருமானைப் புத்தூரிற் சென்று , கண்டு , உய்ந்தேன் .

குறிப்புரை :

ஒருத்தனை - மூவுலகொடு தேவர்க்கும் ஒருவன் என்று ஏத்தப்படுபவனை . அருத்தனை - பொருளாயிருப்பவனை . கருத்தனை - முதற் பொருளானவனை . கடுவாய்ப்புனல் - கடுவாய் என்னும் ஆற்றின் தண்ணீர் . திருத்தன் - திருத்தமானவன் . உய்ந்தேன் என்பது உய்ந்தென் எனக் குறுகியது . ஏ - அசை . கடுவாய் நதிக்கரையில் உள்ள புத்தூர் என்க .

பண் :

பாடல் எண் : 2

யாவ ருமறி தற்கரி யான்றனை
மூவ ரின்முதல் லாகிய மூர்த்தியை
நாவி னல்லுரை யாகிய நாதனைத்
தேவனைப் புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே.

பொழிப்புரை :

எல்லோரானும் அறிதற்கு அருமை உடையவனும் , மும்மூர்த்திகளுக்கும் முதலாகிய கடவுளும் , நாவில் நல்ல உரையாகி அருளும் நாதனும் , தேவனுமாகிய பெருமானைப் புத்தூரிலே சென்று கண்டு உய்ந்தேன் .

குறிப்புரை :

மூவரின் முதலாகிய மூர்த்தியை - அரி அயன் அரன் என்னும் மூவரில் தலைவராயிருப்பவனை . நாவில் நல்லுரையாகிய நாதன் - நாவின்கண்ணிருந்து வரும் நல்ல உரைகளின் வடிவாயிருப்பவன் .

பண் :

பாடல் எண் : 3

அன்ப னையடி யாரிடர் நீக்கியைச்
செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே
கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே.

பொழிப்புரை :

அன்பே வடிவானவனும் , அடியார்கள் துன்பங்களை நீக்குபவனும் , செம்பொன் மேனியனும் விளங்கும் திருக்கச்சி யேகம்பத்தில் வீற்றிருப்பவனும் ஆகிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரில் உள்ள நம் பெருமானைக் கண்டு நான் உய்யப் பெற்றேன் .

குறிப்புரை :

இடர் - துன்பம் . தென்புத்தூர் - கடுவாயாற்றின் தென் கரையிலமைந்த புத்தூர் . நம்பன் - மேலானவன் , பழையவன் .

பண் :

பாடல் எண் : 4

மாதனத்தைமா தேவனை மாறிலாக்
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக்
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே.

பொழிப்புரை :

பெருஞ்செல்வமாகிய அருட்செல்வம் உடையானும் , மகாதேவனும் , மாறுபாடில்லாத பஞ்சகவ்வியத் திரு முழுக்குக் கொள்பவனும் , சங்கவெண்குழையணிந்த காதுடையவனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரின் நாதனைக் கண்டு நான் உய்யப்பெற்றேன் .

குறிப்புரை :

மா - பெரிய . தனத்தை - செல்வங்களின் வடிவாயிருப்பவனை . மாறிலா - ஒப்பில்லாத , கோதனத்தில் - பசுவினிடம் கிடைக்கும் செல்வங்களில் அல்லது பசுவின் பாற்காம்புகளில் . ஐந்து - பஞ்சகவ்வியம் .

பண் :

பாடல் எண் : 5

குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட்
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக்
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
அண்ட னைக்கண் டருவினை யற்றெனே.

பொழிப்புரை :

மிகுந்த பல குற்றத்தை நீக்கி என்னை ஆட்கொண்டு நல்ல அருள் திறம் காட்டிய கூத்தனும் , திருநீல கண்டனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் பொருந்தியிருக்கும் பெருமானைக் கண்டு அருவினைகள் அற்றேன் .

குறிப்புரை :

குண்டுபட்ட குற்றம் - சமணர்களிடையே அகப்பட்ட குற்றம் . தவிர்த்து - நீக்கி . கண்டனை - நீலகண்டனை . அண்டன் - உலகங்களின் வடிவானவன் . அற்றேன் - நீங்கினேன் .

பண் :

பாடல் எண் : 6

பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட
மைந்த னைம்மண வாளனை மாமலர்க்
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.

பொழிப்புரை :

பாசமாகிய கட்டினை அறுத்து , என்னை ஆட்கொண்ட பெருவீரனும் , மணவாளக்கோலம் உடையானும் , பெரிய மலர்களின் நறுமணம் மிக்க நீரை உடைய கடுவாய்க் கரையிலுள்ள தென்புத்தூரில் உள்ள எந்தையும் ஆகிய ஈசனைக் கண்டதனால் அடியேற்கு இனிதாயிற்று .

குறிப்புரை :

பந்தபாசம் - அன்புப் பிணிப்பாகிய ஆசை . மைந்தனை - வலிமையுடையவனை . கந்தம் - மணம் . கண்டு - காணுதலால் . இனிதாயிற்று - என் வாழ்வு இனிதாயிற்று என்க .

பண் :

பாடல் எண் : 7

உம்ப ரானை யுருத்திர மூர்த்தியை
அம்ப ரானை யமலனை யாதியைக்
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே.

பொழிப்புரை :

தேவர் உலகத்துக்கும் அப்பால் உள்ளவனும் , உருத்திரமூர்த்தியும் , அம்பர்த்தலத்து எழுந்தருளியிருப்பவனும் , மலம் அற்றவனும் , ஆதியானவனும் , சங்குகளையுடைய நீர்பாயும் கடுவாய்க்கரைக்கண் தென்புத்தூரில் உள்ளவனும் ஆகிய எம்பெருமானைக் கண்டதனால் அடியேற்கு இன்பம் ஆயிற்று .

குறிப்புரை :

உம்பரானை - தேவர்கள் தலைவனை . உருத்திர மூர்த்தியை - அழித்தற்கடவுளாய்ச் சங்காரகாரணனாயிருப்பவனை . அம்பரானை - ஆடையணிந்தவனை அல்லது அம்பரனை எனப் பிரித்து அழகிய மேலானவனை என்க . அம்பர் என்னும் தலத்திலிருப்பவனை எனலுமாம் . அமலன் - குற்றமற்றவன் . ஆதியை - முழுமுதற் கடவுளை . கம்பு நீர் - சங்குகளை உடைய நீர் .

பண் :

பாடல் எண் : 8

மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய நித்த மணாளனைப்
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னேயென இன்பம தாயிற்றே.

பொழிப்புரை :

குற்றம் நிறைந்த பாசமாகிய மயக்கத்தை அறுமாறு செய்து என்னுள்ளத்துக்குள் நேசம் ஆகிய நித்தமணாளன் என்ற திருப்பேர்கொண்டவனும் , பூசத்திருநாளில் ஆடற்குரிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரின்கண் உள்ளவனும் ஆகிய ஈசனே என்று கூற அடியேற்கு இன்பமாயிற்று .

குறிப்புரை :

மாசு ஆர் - குற்றம் பொருந்திய . பாசமயக்கு - ஆசையாகிய மயக்கத்தை . அறுவித்து - நீங்கச்செய்து . நேசமாகிய - அன்பு வடிவமாகிய . நித்தமணாளனை - என்றும் மணவாளக் கோலத்திலிருப்பவனை . பூசநீர் - பூசநாளில் தீர்த்த விசேடமுடையது .

பண் :

பாடல் எண் : 9

இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட்
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தெனே.

பொழிப்புரை :

பிச்சையிடுவார் இட்ட சோற்றுருண்டையினைப் பெற்றுத் தம் பெரிய கொடிய வாயில் இடும் சமணர்களது கட்டியுரைக்கும் பேச்சைக்கொள்ளாமல் , கடுவாய்த்தென்கரைப் புத்தூரின் கண் எழுந்தருளியுள்ள அடிகட்கு ஆட்படப் பெற்று நான் பெரும் பாக்கியம் செய்தவன் ஆயினேன் .

குறிப்புரை :

இடுவாரிட்ட - கொடுக்கும் குணமுள்ளவர் இட்ட . கவளம் - சோற்றுருண்டை , கவர்ந்து - உண்டு . இரு - பெரிய . கடுவாயிட்டவர் - கடுக்காயை வாயின்கண் இட்டவர் . கட்டுரை - அறிவுரை . கொள்ளாதே - ஏற்றுக்கொள்ளாமல் ; தம்முன்னைநிலை நினைந்து கூறியது . ஆட்படவே பெற்று - ஆளாகுந்தன்மையையே பெற்று . நான் பாக்கியம் செய்தேன் - நான் சிறந்த பாக்கியத்தைச் செய்தவனானேன் .

பண் :

பாடல் எண் : 10

அரக்க னாற்ற லழித்தவன் பாடல்கேட்
டிரக்க மாகி யருள்புரி யீசனைத்
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தெனே.

பொழிப்புரை :

இராவணனது ஆற்றலை அழித்து அவன்பாடல் கேட்டுப் பின்னர் இரங்கி அருள்புரியும் ஈசனாகிய , அலைகளைக் கொண்ட கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன் .

குறிப்புரை :

ஆற்றல் - வலிமை . திரைக்கொள் - அலைகளைக் கொண்ட .
சிற்பி