திருத்தென்குரங்காடுதுறை


பண் :

பாடல் எண் : 1

இரங்கா வன்மனத் தார்க ளியங்குமுப்
புரங்கா வல்அழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்காடு துறைக் கோலக்க பாலியே. 

பொழிப்புரை :

அலைகள் ஆடுகின்ற பெரிய நீரினை உடைய காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் அழகிய கபாலம் கைக்கொண்ட பெருமான், இரங்காத வலிய மனத்தவர்களாகிய அரக்கர்கள் இயங்குகின்ற முப்புரங்காவல் அழியுமாறு பொடியாக்கியவன் ஆவன்.

குறிப்புரை :

இரங்கா வன்மனத்தார்கள் - பிறர் துன்பங்கண்டு இரங்காத கல்மனங்கொண்டவர்கள். இயங்கும் - ஊர்ந்து செல்லும். முப்புரம் - மூன்று கோட்டைகள். காவல் அழிய - காத்தல் தொழில் அழியும்படி. பொடியாக்கினான் - நீறாக்கியவன். தரங்கம் ஆடும் - அலைகள் அசையும். தடநீர் - மிக்கநீர். கோலம் - அழகிய.

பண் :

பாடல் எண் : 2

முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர்ச் சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங் காடு துறையுறை
அத்த னென்னஅண் ணித்திட்டிருந்ததே.

பொழிப்புரை :

முத்தும், மணியும், பவளத்தொடு ஒளிர்கின்ற கொத்தும், சுடர்விடும் சோதியும், சோலைகள் சூழ்ந்த பூங்கொத்துக்கள் மலர்கின்ற குரங்காடுதுறை உறையும் அத்தனும் என்று கூற உள்ளத்தில் தித்தித்திருந்தனன் அப்பெருமான்.

குறிப்புரை :

பவளத்து ஒளிர் தொத்து - ஒளிர் பவளத் தொத்து என மாறுக. விளங்கிய பவளக் கொத்துப் போன்றவன் என்பது பொருள். கொத்தலர் சோலைசூழ் குரங்காடுதுறை என்க. அண்ணித்தல் - இனித்தல்.

பண் :

பாடல் எண் : 3

குளிர்பு னற்குரங் காடுது றையனைத்
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் னுள்ளமும்
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே. 

பொழிப்புரை :

குளிர்கின்ற நீர் சூழ்ந்த குரங்காடுதுறையில் இருப்பவனும், மாந்தளிரைப் போன்ற நிறம் உடைய மேனியினளாகிய உமாதேவியைப் பங்கிற்கொண்டவனும் தண்ணியமதி ஒளியனும் ஆகிய பெருமானை நினைந்த அடியேனுக்கு என் உள்ளமும் தெளிவுறும்படித் தெளிவினைத் தெளிந்தது.

குறிப்புரை :

தளிர்நிறத் தையல் - தளிர்போன்ற நிறத்தையுடைய பார்வதி. உள்ளம் - மனம். தெளிவினை - தெளியவேண்டிய பொருளாயுள்ள இறைவனை. தெளிய - விளங்க, தெளிந்திட்டது - உணர்ந்து தெளிந்து கொண்டது.

பண் :

பாடல் எண் : 4

மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங் காடுதுறைதனில்
அணவன் காண்அன்பு செய்யு மடியர்க்கே. 

பொழிப்புரை :

அன்புசெய்யும் அடியார்க்கு மணவாளக் கோலம் உடையவனும், மலைமகளாகிய உமாதேவிக்கு மங்கலக்கணவனும், கலைஞானிகளாற் காதலிக்கப்பெறுவானும், எண் குணத்தானும், குரங்காடுதுறையில் அண்ணியவனும், ஆவன்.

குறிப்புரை :

மணவன் - எப்பொழுதும் மணவாளனாயிருப்பவன். மலைமகளாய பார்வதிக்கு நித்யமங்கலத்தைச் செய்யும் கணவன் என்க. கலைஞானிகளால் காதல் செய்யப்படும் எண்குணவன் என்க. குணவன் - குணங்களை உடையவன். எண்குணங்களாவன - தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், இயற்கை உணர்வினனாதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை, முற்றுமுணர்தல் என இவை. அணவன் - அணுகியிருப்பவன், அன்பு செய்யும் அடியார்க்கு அருளுவதற்காகக் குரங்காடுதுறையில் அணவன் என முடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 5

ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன்
காலத் தான்உயிர் போக்கிய காலினன்
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங் காடு துறையனே. 

பொழிப்புரை :

குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன் உலகத்தாராற் றொழுதேத்தப்பட்ட நன்மை உடையவனும், காலன் உயிர்போகச் செய்த திருக்காலை உடையவனும், நீலநிறம் நிறைந்த திருமிடற்றை உடையவனும், வெண்ணீறணிந்த கோலத்தை உடையவனும் ஆவன்.

குறிப்புரை :

ஞாலத்தார் - உலகத்தார். காலத்தான் - காலன், இயமன். நீலம் ஆர்மிடறு - நீலக்கறை பொருந்திய கழுத்து; அத்து சாரியை.

பண் :

பாடல் எண் : 6

ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப்
பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடும்
கூட்டி னான்குரங் காடு துறையனே.

பொழிப்புரை :

குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், முன்னர் என்னை அமணர்களோடு ஆட்டுவித்தவனும், பின்னர்த் தன் பொன்னார் திருவடிகளுக்கு இனிய பண்ணிசையை என்னைப் பாட்டுவித்தவனும், வினையை வீட்டியவனும், மெய்யடியார்களோடு என்னைக் கூட்டுவித்தவனும் ஆவன்.

குறிப்புரை :

அமணரோடு என்றனை ஆட்டினான் என்க. ஆட்டினான் - கூட்டிஆட்டுவித்தான். தன - தன்னுடையனவாகிய. பொன்னடிக்கு - பொன்போன்று பொதிதற்குரிய திருவடிகளுக்கு. பாட்டினான் - திருப் பாடல்களைப் பாடச்செய்தான். வினை வீட்டினான் - இருவினைகளை அழியச் செய்தான். மெய்யடியார் - உண்மை அடியார்.

பண் :

பாடல் எண் : 7

மாத்தன் தான்மறை யார்முறை யான்மறை
ஓத்தன் தாரகன் றன்னுயி ருண்டபெண்
போத்தன் தானவன் பொங்கு சினந்தணி
கூத்தன் தான்குரங் காடு துறையனே. 

பொழிப்புரை :

வேதங்களில் கூறிய முறையால் மாற்றுயர்ந்த பொன்போன்றவனும், வேதசாகைகளை அருளிச்செய்தவனும், தாரகனை அடக்கிய காளியைவென்ற வீரனும், முயலகனது சினத்தைத் தணித்த கூத்தனுமாய் விளங்குபவன் குரங்காடுதுறை இறைவன்.

குறிப்புரை :

மாத்தன் - பொன்னின் உயர்ந்த மாற்றுப் போன்றவன்; பெரியவன். மறையார் முறையால் - வேதங்களிற் பொருந்திய இலக்கண நெறியால் தான் மாத்தன் என மாற்றுக. மறைஓத்தன் - வேதமாகிய உண்மை நூலை உடையவன். தாருகன் தன் உயிர் உண்ட பெண் போத்து - தாருகன் என்ற அரக்கனை அழித்து அவனுடைய உயிரைப் போக்கிய காளியை வென்ற. போத்தன் - வீரன். போத்தன் தானவன் - வீரத்துடன் வந்த முயலகன். சினம் - இருவருடைய கோபத்தை. தணி - அடக்கிய. கூத்தன் - திருக்கூத்தாடுபவன்.

பண் :

பாடல் எண் : 8

நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்அழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடம்
கூடு மின்குரங் காடு துறையையே. 

பொழிப்புரை :

நம் தமராகிய தொண்டர்களே! பரமன் பயிலும் இடமாகிய குரங்காடுதுறையையே மனத்தால் நாடி ஆடுவீர்களாக; அழுவீர்களாக; தொழுவீர்களாக; அவன் அடியே பாடுவீர்களாக; அத்தலத்தையே கூடுவீர்களாக.

குறிப்புரை :

நாடி - சென்று. நம் தமராய - நம்முடைய சுற்றத்தினராய. ஆடுமின் - மகிழ்ச்சிக் கூத்தாடுங்கள். \\\\\\\"ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை, பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை, துணையிலி பிணநெஞ்சே, தேடுகின்றிலை தெருவுதோறலைகிலை செய்வதொன்றறியேனே\\\\\\\". (தி.8 திருவாசகம் - 35.)

பண் :

பாடல் எண் : 9

தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்ற வந்தக னைஅயிற் சூலத்தால்
கொன்ற வன்குரங் காடு துறையனே. 

பொழிப்புரை :

குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், தென்றலாகிய நல்ல நீண்டுயர்ந்த தேரை உடையானாகிய காமன் உடல் அழியுமாறு வெவ்விய அனல் பொங்க விழித்தவனும், அன்று காலனைக் கூரிய சூலத்தாற் கொன்றவனும் ஆவன்.

குறிப்புரை :

தென்றல் தேருடையான் - மன்மதன். நன்னெடும் - நல்ல பெரிய. பொன்ற - அழிய. வெங்கனல் பொங்க - கொடிய கோபத்தீ பெருக. விழித்தவன் - நெற்றிக்கண்ணால் சினந்தவன். அன்று அவ்வந்தகன் எனப் பிரித்து மார்க்கண்டேயர் வேண்டிய அன்று அந்த இயமனை என்க. அயில் - கூரிய.

பண் :

பாடல் எண் : 10

நற்ற வம்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநல்
கொற்ற வன்குரங் காடு துறைதொழப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே. 

பொழிப்புரை :

நல்ல தவம் புரிந்தவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் நல் அறம் மிகுந்த நன்மொழியால் அருள் செய்தவனாகிய நல்ல கொற்றவனுறைகின்ற குரங்காடுதுறையைத் தொழுதால் பற்றுகின்ற தீவினையாகியவை கெடும்.

குறிப்புரை :

நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். உற்ற - பொருத்தமான.
நல்மொழி - நல்ல உபதேச மொழி. பற்றும் - நம்மைப் பிடிக்கும். பாறும் - அழியும்.

பண் :

பாடல் எண் : 11

கடுத்த தோரரக் கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
அடுத்த லும்மவ னின்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங் காடு துறையனே. 

பொழிப்புரை :

குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், சினந்த தேரை உடைய இராவணனது, திருக்கயிலையை எடுக்கலுற்ற தோள்களும் தலையும் இற்று, அவன் அலறும்படியாகத் திருவிரலை அடுத்தவன்; பின் அவன் இன்னிசை கேட்டு அருள்கொடுத்தவன் ஆவன்.

குறிப்புரை :

கடுத்த - விரைவான். தலையிற்றலற - தலை நெரிந்தலற. விரல் அடுத்தலும் - விரல் ஊன்றலும்.
சிற்பி