திருக்கோழம்பம்


பண் :

பாடல் எண் : 1

வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய்
ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள்
கோழம் பத்துறை கூத்தன் குரைகழல்
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே. 

பொழிப்புரை :

வேழம்பம் என்னும் விளையாட்டைப் புரிகின்ற ஐந்து புலன்களாகியவர்கள் விரும்பினவற்றையே தாமும் விரும்பிச் சென்று உலகியல் ஆழங்காற்பட்டுப் பல அறிவற்றவர்கள் வீழ்வர்; கோழம்பத்தில் உறைகின்ற கூத்தன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் பக்தர்களே மிகவும் திறம் உடையவர்கள்.

குறிப்புரை :

வேழம்பத்து ஐவர் - உயிருக்கு ஏளனத்தைத் தரும் ஐம் பொறிகள். வேழம்பம் என்ற சொல்லுக்குக் கூத்து, ஏளனம், பரிகாசம் என்ற பொருள்கள் உள்ளன; ஏற்பன கொள்க. ஐவர் அர் விகுதி இழித்தற் பொருளில் வந்தது. வேண்டிற்று - விரும்பியதை. வேண்டிப் போய் - தானும் விரும்பிச் சென்று. ஆழம் பற்றி - துன்பப் படுகுழியினைப் பற்றி. ஆதர் - குருடர் அல்லது அறிவிலார். குரை - ஒலிக்கின்ற. தாழும் - வணங்கும். சால - மிக. சதுரர் - சதுரப் பாடுடையவர்.

பண் :

பாடல் எண் : 2

கயிலை நன்மலை யாளுங் கபாலியை
மயிலி யல்மலை மாதின் மணாளனைக்
குயில்ப யில்பொழிற் கோழம்பம் மேயவென்
உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே. 

பொழிப்புரை :

திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது.

குறிப்புரை :

கபாலி - பிரமகபாலத்தை ஏந்தியவன். மயிலியல் - மயிலின் சாயல்தன்மை. பயில் - தங்குகின்ற. உயிரினை - உயிராயிருப்பவனை.

பண் :

பாடல் எண் : 3

வாழும் பான்மைய ராகிய வான்செல்வம்
தாழும் பான்மைய ராகித்தம் வாயினால்
தாழம் பூமணம் நாறிய தாழ்பொழில்
கோழம் பாவெனக் கூடிய செல்வமே. 

பொழிப்புரை :

வணங்கும் தன்மையோடு கூடியவராகித் தம் வாயினால், தாழம்பூக்களின் மணம் வீசுகின்ற பொழிலை உடைய \\\\\\\"கோழம்பத்தலத்து இறைவா!\\\\\\\" என்று கூறியதனால் கூடும் செல்வமே, வாழும் தன்மையராகிப் பெற்ற உயர்ந்த செல்வம் ஆகும்.

குறிப்புரை :

தேவர் பெற்ற செல்வம் இறைவனைப் பாடிப் பணிந்து பெற்ற செல்வமேயாம் என்றது. வாழும் பான்மையராகி - பிறவி யெடுத்தபயனை அடையும் குறிக்கோளோடு வாழும் தன்மையை உடையவராகி அல்லது வீடுபேற்றில் எஞ்ஞான்றும் வாழும் தன்மையை உடையவராகி. அவ்வான் செல்வம் - அவ்வுயர்ந்த வீட்டுநெறியாகிய செல்வத்தில். தாழும் - விரும்பும் அல்லது தங்கும். பான்மையராகி - எண்ணத்தையுடையவராகி. தாழ்பொழில் - நீண்டபொழில். கோழம்பா - திருக்கோழம்பம் என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவனே. கோழம்பா என அவ்வான் செல்வம் கூடிய செல்வம் ஆம் என வினை முடிவுசெய்க.

பண் :

பாடல் எண் : 4

பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்
கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு
கோடல் பூத்தலர் கோழம்பத் துள்மகிழ்ந்
தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே. 

பொழிப்புரை :

வெண்கோடலும் செங்கோடலும் ஆகிய மலர்கள் பூத்து விளங்கும் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனாகிய இறைவனுக்கு இப்பெண் அன்றே அன்புபட்டாள் ஆதலின், பண்ணொடு கூடிய பாடல் ஆக்குவாள்; மணற்குன்றில் மணலினைக் கொண்டு கூடல் இழைப்பாள்.

குறிப்புரை :

பண்ணொடு பாடலாக்கிடும் - பண்ணோடு பாடச் செய்யும். கூடலாக்கிடும் - கூடல் விளைந்திடச்செய்யும். கூடல் - பெண்கள் தன் எண்ணம் நிறைவேறுமோ அன்றிப் பிறிதாமோ என அறிய நிலத்தில் கண்ணை மூடிக்கொண்டு வட்டமிட்டுப் பார்ப்பர். அச் சுழியின் இருமுனைகளும் கூடினால் வெற்றி என்றும் கூடாதொழியின் எண்ணம் பலியாதென்றும் கருதுவர். இதற்குக் கூடலிழைத்தல் என்று பெயர். குன்றின்மணற்கொடு - மலையத் தனை மணலைக் கொண்டு, கூடல் இழைத்திடும் என்க. மலையில் இருக்கும் மணல்களைத் தான் வாழ்வதற்கு இடமாகக்கொண்டு மலரும் கோடல் எனினுமாம். கோடல் - காந்தள். பூத்துஅலர் - பூத்து மலர்கின்ற. பெண்ணிவள் கோழம்பத்துக் கூத்தனுக்கு அன்பு பட்டாளல்லவா அவ்வன்பு, பாடல் கூடல் இவற்றை இவட்கு விளைத்திடும் எனமுடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 5

தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர்
பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன்
குளிர்கொள் நீர்வயற் கோழம்பம் மேவினான்
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே.

பொழிப்புரை :

மாந்தளிரின் வண்ணம் கொண்ட மேனியளாகிய உமாதேவி மிக அஞ்சுமாறு ஒப்பற்ற பிளிறிவரும் யானையின் பச்சைத்தோலைப் போர்த்தவனாகிய, குளிர்ச்சிகொண்ட நீண்ட வயல்களையுடைய கோழம்பத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செறிவினைக்கொண்ட கங்கையினைச் சடைமேலும் நயந்தது வியப்புக்குரியதே.

குறிப்புரை :

தளிர்கொள் - தளிரின் நிறத்தைக்கொண்ட. பிளிறு வாரணம் - பிளிறித் தம்மை அடரவந்த யானை. ஈருரி - உரித்ததோல். நளிர் - குளிர்ந்த தன்மை. நீர் - கங்கை. மேலும் நயந்தது - அப் பெண்ணுக்கு மேலும் நயப்பை உண்டாக்கியது என்றோ அச்சடையின் மேலும் அவள் நயப்புச் சென்றதென்றோ கொள்க.

பண் :

பாடல் எண் : 6

நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம்
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பில்
கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண்
டாதி பாத மடையவல் லார்களே. 

பொழிப்புரை :

வேதங்களை ஓதிய நாவை உடையவரும், இடபக்கொடியினரும், மலைமங்கையாகிய உமாதேவியோடும் கோழம்பத்திற் கோயில்கொண்ட ஆதியுமாகிய பெருமானின் பாதங்களை அடையவல்லவர்கள் தாம் நமக்கும் பிறர்க்கும் தலைவர் என்று மதிக்கத்தக்கவர்கள்.

குறிப்புரை :

நமக்கும் பிறர்க்கும் நாதராவர். கோதை மாது - மாலை சூடிய மங்கை. கோயில்கொண்ட ஆதி எனப் பிரிக்க. ஆதி - முதல்வன். கோழம்பம் அடையவல்லார்களே நாதராவர் என்க.

பண் :

பாடல் எண் : 7

முன்னை நான்செய்த பாவ முதலறப்
பின்னை நான்பெரி தும்மருள் பெற்றது
அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர்
பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே. 

பொழிப்புரை :

அன்னம் பொருந்திய வயலை உடைய கோழம்பத்துள் அமர்ந்திருக்கின்ற பின்னிய நீண்டசடையானைப் பிதற்றியே, முன்பு நான் செய்த பாவம் முதல் அறும்படிப் பின்பு நான் பெரிதும் அருள்பெற்றது.

குறிப்புரை :

முன்னை நான் செய்த பாவ முதல் - முற்பிறவியில் நான் செய்த பாவமாகிய முதல். அற - நீங்க. பின்னை - பின்னர் (இப்பிறவியில்). பெரிதும் - மிகுதியும். ஆர் - பொருந்திய. பின்னல் - முறுக்கிய. வார் - நீண்ட. பிதற்றியே - இறைவன் திருநாமத்தைப் பல காலும் சொல்லியேயாகும்.
முற்பிறப்பில் செய்த பாவங்காரணமாக நான் சமணசமயம் சார்ந்ததும், பின்னர் அதனின் நீங்கிப் பெருமான் திருவருள் பெற்றதும் எல்லாம், அவன் திருப்பெயரைப் பலகாலும் ஓதிய காரணத்தால் ஆயின என்றார்.

பண் :

பாடல் எண் : 8

ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண்
கோழை மாரொடுங் கூடிய குற்றமாங்
கூழை பாய்வயற் கோழம்பத் தானடி
ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே.

பொழிப்புரை :

ஏழையேனாகிய அடியேன் கூழைமீன்கள் பாய்கின்ற வயல்களை உடைய கோழம்பத்தான் அடியை மறந்து அவர்பால் இருந்தது, பெண்களிடம் நின்று இரண்டு கைகளாலும் அவர்கள் இடும் உணவைக்கொண்டு உண்ணும் கோழைகளோடு கூடிய குற்றமாம்.

குறிப்புரை :

ஏழைமாரிடம் - பெண்களிடம். இருகைக்கொடு உண் - இரண்டு கைகளாலும் பிச்சையேற்று உண்ணுகின்ற. கோழை மாரொடும் - துணிவற்றவர்களாகிய சமணர்களிடம். கூடிய - சேர்ந்து வாழ்ந்த. குற்றமாம் - குற்றமாகும். கூழை - மீன்கள். பாய் - பாய்கின்ற. பெருமானை மறந்து, சமண சமயத்தைச் சார்ந்து அங்கு வாழ்ந்திருந்ததற்குக் காரணம் கோழையரொடும் கூடிய குற்றமாகும் என வினை முடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 9

அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி
பரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக்
குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத்
துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே. 

பொழிப்புரை :

பாம்பாகிய படுக்கையில் பயிலும் திருமாலும், பிரமனும் வந்து அடிபரவப்பெறுவானும், பரம்பொருளாகிய உயர்ந்தசோதியும், பரமாசாரியனும் ஆகிய குரவமரங்கள் செறிந்த கோழம்பத்தின்கண் அறிவு வடிவானவனை நீங்குபவர்க்கு உணர்தல் இயலுமோ?

குறிப்புரை :

அரவணை - ஆதிசேடனாகிய படுக்கை. பயில் - உறங்குகின்ற. மால் - திருமால். அயன் - பிரமன். பரவனை - பரவப் படுபவனை. பரமாம் - மேலான. குரவனை - குருநாதனை. குரவு - குராமரங்கள். உரவன் - அறிவு வலியுடையவன். ஒருவர்க்கு - நீங்குபவர்க்கு. உணர்வு பொருந்துமோ என்க.

பண் :

பாடல் எண் : 10

சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே. 

பொழிப்புரை :

போரெதிர்ந்துவந்த சூரபன்மனைக் கொன்ற வேற்படையை உடைய முருகவேளுக்குத் தந்தையும், நல்ல கோழம்பம் மேவிய தேவர்தலைவனும் ஆகிய பெருமானுக்கு அன்புடைய தொண்டர்கள், அமரலோகத்தை ஆளும் உரிமையுடையவராவர்.

குறிப்புரை :

சமரசூரபன்மா - போரிலே வல்ல சூரபன்மா என்ற அசுரன். தடிந்த - கொன்ற. வேல்குமரன் - வேலாயுதத்தை உடைய முருகன். தாதை - தந்தையாகிய சிவபெருமான். அமரர்கோ - தேவர்கள் தலைவனாகிய பெருமான். அன்புடைத் தொண்டர்கள் அமரலோகம் ஆளுதலை உடையவர்களாவர்.

பண் :

பாடல் எண் : 11

துட்ட னாகி மலையெடுத் தஃதின்கீழ்ப்
பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென்
றிட்ட கீத மிசைத்த அரக்கனே. 

பொழிப்புரை :

கொட்ட நறுமணம் வீசுகின்ற கோழம்பத்து இறைவன் என்று விருப்பத்திற்குரிய கீதம் இசைத்த அரக்கன் துட்டனாகித் திருக்கயிலையை எடுக்கலுற்று, அம்மலையின் கீழ்ப்பட்டு விழுந்து படர்ந்து பின் உய்ந்தான்.

குறிப்புரை :

துட்டன் - துஷ்டன். அஃதின்கீழ் - அதன்கீழ். பட்டு - அகப்பட்டு. வீழ்ந்து - ஆணவம் வீழப்பெற்று. படர்ந்து - பெருமானைப்பற்றி. உய்யப்போயினான் - அநுக்ரகம் பெற்றான். கொட்டம் - மணப்பொருளில் ஒன்று. நாறிய - கமழ்கின்ற. என்றிட்ட கீதம் - என்று வரும் இசைப்பாடல். இசைத்த - பாடிய.
சிற்பி