திருநள்ளாறு


பண் :

பாடல் எண் : 1

உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
நள்ளா றாவென நம்வினை நாசமே.

பொழிப்புரை :

உள்ளே தன் நிறம் கெடாததாகிய ஒப்பற்ற தாமரைத் தொகுதியின் தெளிவு நீங்காததாகிய சிவ ஒளிப் பிழம்பினை , தேன் நீங்காத பொன்போன்ற கொன்றைகமழும் சடையினை உடைய ` நள்ளாறா !` என்று கூற நம் வினைகள் நாசமாகும் .

குறிப்புரை :

அகத்தே உள்ள ஆதாரங்களில் நீங்காத தாமரைகளின் தெளிவாகக் காணப்படுகின்ற சிவசோதி . உள் ஆறாததோர் புண்டரிகத்திரள் - ` ஊறுமருவிய உயர்வரை உச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குள மொன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்பூவின்றிச் சூடான் புரிசடையோனே ` ( தி .10 திருமந்திரம் ). ஏனைத் தாமரைபோல் நீர்க்கீழ்த்தோன்றாத பீசம்முதலாகத் தோன்றி முளைத்த ஒப்பற்ற வெண்டாமரை . புண்டரிகத்திரள் - தாமரையின் தன்மைகள் எல்லாம் திரட்டித் தன்னுட்கொண்டது . தெள்ளாறாச் சிவசோதி - தெளிந்த சிவஞானத்தின் வழிகாணும் சிவமாகியப் பேரொளிப் பிழம்பு . கள் அறாத கொன்றை என்க .

பண் :

பாடல் எண் : 2

ஆர ணப்பொரு ளாமரு ளாளனார்
வார ணத்துரி போர்த்தம ணாளனார்
நாரணன் நண்ணி யேத்துநள் ளாறனார்
கார ணக்கலை ஞானக் கடவுளே.

பொழிப்புரை :

திருமால் பொருந்தி ஏத்துகின்ற நள்ளாற்று இறைவர் , வேதத்தின் பொருளாக விளங்கும் அருளை ஆள்பவர் ; யானையின் தோலைப் போர்த்த மணவாளர் ; எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய கலைஞானக்கடவுள் ஆவர் .

குறிப்புரை :

ஆரணம் - வேதங்களின் தொகுதி . ஆரணப்பொருளாம் அருளாளனார் - வேதப்பொருளாய்விளங்கும் கருணையாளர் . வாரணத்து உரி - யானையினது தோல் . நாரணன் - திருமால் . நண்ணி - சென்றடைந்து . காரணன் - எல்லாவற்றிற்கும் நிமித்த காரணன் . கலைஞானக் கடவுள் - கலைஞானம் தரும் கடவுள் என்க . அல்லது அவற்றிற்குப் பொருளாயுள்ள கடவுள் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில்
சோகம் பூண்டழல் சோரத்தொட் டான் அவன்
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.

பொழிப்புரை :

மேகத்தினைத் தன் உச்சியிற் கொண்டதாகிய மேருமாமலையாகிய வில்லைக்கொண்டு , முப்புரங்களும் சோகம் பூணுமாறு கனல் சோரத் தொட்டவனாகிய அவன் , தன்னொரு பாகத்திற்கொண்ட திருமாலும் , நான்முகனும் வழிபடுமாறு நாகம் பூண்டு கூத்தாடும் நள்ளாற்று இறைவன் .

குறிப்புரை :

மேகம் பூண்டதோர் மேரு வில் - மேகங்கள் வந்து படியும் இமயமலையாகிய வில் . எயில் - திரிபுரம் . சோகம் பூண்டு - துன்பம் மேற்கொண்டு . அழல்சோர - நெருப்புப்பற்ற . தொட்டான் - எய்தான் . பாகம் பூண்டமால் - இடப்பாகத்தே உறையும் திருமால் . திருமாலை இடப்பாகத்தே மனைவியாகக் கொண்டவன் என்றபடி . ஹரிஅர்த்தர் என்ற சிவமூர்த்தம் குறித்தவாறு . பங்கயத்தான் - பிரமன் . திருமால் பிரமரோடு நாகம் அணிந்து கூத்தாடும் நள்ளாறன் என்க .

பண் :

பாடல் எண் : 4

மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்
நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே.

பொழிப்புரை :

செஞ்சடையில் மலிந்த பாம்பினோடு பொலிகின்ற கங்கையை வைத்த புனிதனாராகிய கூற்றுவனை நலிந்த நள்ளாறரது அருளாற்றலையும் கண்டு இறுமாந்து மகிழ்வேன் .

குறிப்புரை :

மலியும் - நிறைந்த . வாளரவம் - ஒளிபொருந்திய பாம்பு . பொலியும் - அழகில் சிறந்து விளங்கும் . நலியும் - உயிர்களைத் துன்புறுத்தும் . கூற்றை - இயமனை . நலிந்து - உதைத்துத் துன்புறுத்தும் . வலியும் - வலிமையினையும் .

பண் :

பாடல் எண் : 5

உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன்
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.

பொழிப்புரை :

தேன்மணக்கும் பொழிலை உடைய திருநள்ளாற்றுப்பெருமான் உற்றுப்பொருந்தியவனாய் நிறைந்து உள்ளத்தைக் குளிர்விப்பவன் ; இறைவனாகிநின்று எண்ணத்தில் நிறைந்தவன் ; மறம் உடையவனாய் அருச்சுனனின் பொருட்டுப் பன்றியின்பின் சென்ற மாயம் என்னையோ ?

குறிப்புரை :

உறவனாய் - உறவுடையவனாய் ; நன்மை செய்பவனாய் . உள்ளம் நிறைந்து - மனத்தின்கண்ணே நிறைந்து . குளிர்ப்பவன் - மனங்குளிரச் செய்பவன் . எண் - எண்ணத்தின் கண்ணே . நறவம் - குங்கும மரம் ; தேனுமாம் . நாறும் - கமழும் . மறவனாய் - அருச்சுனனோடு சண்டையிடப் பன்றியைத் துரத்திச் சென்ற வரலாற்றைக் குறித்தது . மாயம் - பொய்ச்செயலாகிய திருவிளையாட்டு .

பண் :

பாடல் எண் : 6

செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச்
சக்க ரம்மருள் செய்த சதுரரே.

பொழிப்புரை :

சிவந்த வானமும் அழகிற்குத்தோற்று உள்ள மழிதற்குக் காரணமாகிய செஞ்சுடர் வீசும் சோதியரும் , திகம்பரருமாகிய பாம்பினை ஆர்த்துக் கட்டிய நள்ளாற்றிறைவர் வக்கராசுரன் உயிர் போக்கியவராகிய திருமாலுக்குச் சக்கரப் படையை அருள் செய்த திறம் உடையவர் .

குறிப்புரை :

செக்கர் அங்குஅழி - செவ்வானத்தின் நிறம் அவ்விடத்து அழிந்து தோன்ற . நக்கர் - நகுதற்குரிய வேடமுடையவர் . அங்கு அரவு ஆர்த்த நாதனார் என்க . வக்கரன் விருத்தசர்மனுக்கு சைதேவன் தங்கையாகிய சுருததேவியிடம் பிறந்தவன் . இவனும் சிசுபாலனும் சனகசனந்தனர் சாபம் பெற்ற ஜயவிஜயர்களுடைய அவதாரம் . இவன் வலிமை யடக்கப்பெற்றுக் கிருஷ்ணனால் கொல்லப் பட்டவன் . வவ்விய - கொன்ற . மாயன் - திருமால் .

பண் :

பாடல் எண் : 7

வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.

பொழிப்புரை :

நைந்த உள்ளம் உடையவர்களுக்கு அருளும் நள்ளாற்று இறைவர் வஞ்சனைமிக்க நஞ்சினாற் பொலிகின்ற திருக்கழுத்தினர் : தெய்வச் செல்வப்பாவையாகிய உமா தேவிக்கு வேந்தர் : வஞ்சனை உடைய நெஞ்சத்தவர்களுக்கு வழி கொடாதவர் .

குறிப்புரை :

வஞ்சம் - கொல்லும் தன்மையாகிய வஞ்சனையை உடைய . நஞ்சிற் பொலிகின்ற - விடத்தினாலே விளங்குகின்ற . விஞ்சையில் - வியத்தகு செயல்களினால் விளங்கும் . செல்வப் பாவை - ஞானச் செல்வியாகிய சிற்சத்தி . வேந்தனார் - கணவர் . நஞ்ச - நைந்த ; நைஞ்ச என்றாய் நஞ்ச என மருவியது . அன்பினால் உருகில் நஞ்சு போன்ற கொடிய மனத்தவர்க்கும் அருள் செய்யும் . உம்மை தொக்கது .

பண் :

பாடல் எண் : 8

அல்ல னென்று மலர்க்கரு ளாயின
சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான்
வல்ல னென்றும்வல் லார்வளம் மிக்கவர்
நல்ல னென்றும்நல் லார்க்குநள் ளாறனே.

பொழிப்புரை :

அலர்க்கு அல்லன் என்றும் , அருளாயின சொல்லன் என்றும் , சொல்லாமறைச் சோதியானாகிய வல்லன் என்றும் துதிக்க வல்லவர் வளம் மிக்கவராவர் . அத்தகைய நல்லார்க்கு நள்ளாறன் என்றும் நல்லன் .

குறிப்புரை :

அலர்க்கு அல்லன் - நல்லரல்லாதார்க்கு அல்லாதவன் . அருளாயின சொல்லன் - அருளுபதேசம் செய்பவன் . சொல்லாம் மறை - எழுதாக்கிளவியாய் செவிவழியாய் ஓதப்பட்டு வரும் மறையாகிய சுருதி .

பண் :

பாடல் எண் : 9

பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனும்
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.

பொழிப்புரை :

நாம் பணிந்து அடிபோற்றும் நள்ளாற்று இறைவன் , பாம்பாகிய அணையத்தக்க பள்ளியினைக் கொண்ட திருமாலும் , பூவாகிய பணைத்த பள்ளியிற் பொலிகின்ற புராணனாகிய நான்முகனும் , தாம் பணிந்து அளக்க இயலாத ஒப்பற்ற தனித்தழலாக உள்ளவன் .

குறிப்புரை :

அணை - படுக்கை . பள்ளிகொண்ட - உறங்குதலைக் கொண்ட . பரமன் - மேலான திருமால் . பூம்பணை - வயல்களில் தோன்றிய தாமரை . பொலிகின்ற - விளங்குகின்ற . புராணன் - தொல்லோனாகிய பிரமன் . தாம் - இருவர் தாமும் . பணிந்து - வணங்கி . அளப்பொண்ணா - அளக்க ஒண்ணாத . தனித்தழல் - தழலாய் நின்றவன் .

பண் :

பாடல் எண் : 10

இலங்கை மன்ன னிருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும்
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் இற்று மனஞ் சுழலும்படியாகத் திருக்கயிலாயப் பெரு வரையின் மேல் திருவிரல் ஊன்றியவரும் , நன்மை மிகுந்த திரு நீற்றருமாகிய நள்ளாறரை நாள்தோறும் வலம் வந்து வணங்குவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

இற - நொறுங்க. மலங்க - கலங்க. மால்வரை - பெரிய கயிலைமலை. மாயும் - அழியும்.
சிற்பி