திருக்கொண்டீச்சுரம்


பண் :

பாடல் எண் : 1

கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.

பொழிப்புரை :

காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது , சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக .

குறிப்புரை :

கண்ட பேச்சினில் - பயனற்ற பேச்சுக்களில் ஈடுபட்டு . காளையர் தங்கள் பால் - இளைஞர்களிடத்து . மண்டி - நெருங்கி . ஏச்சுணும் - பின் அவரால் ஏசும்மொழிகளைப் பெறும் . கழல் கூறும் - திருவடிகளின் பெருமைகளைக் கூறுங்கள் . மாதராரிடத்து அல்லற் படுகிறவர்கள் இறைவன் திருவடிகளைப் பற்றினால் இன்புறுவர் .

பண் :

பாடல் எண் : 2

சுற்ற முந்துணை நன்மட வாளொடு
பெற்ற மக்களும் பேண லொழிந்தனர்
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்
பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே.

பொழிப்புரை :

சுற்றத்தாரும் , வாழ்க்கைத்துணையாகிய நல்ல மனைவியோடு பெற்ற பிள்ளைகளும் பேணுதலை ஒழிந்தனராதலால் , குற்றமற்ற புகழை உடைய கொண்டீச்சுரத்து இறைவரையன்றி ஒரு பற்று மற்று இல்லை .

குறிப்புரை :

சுற்றமும் - சுற்றத்தினரும் . துணை - துணைவியாகிய . பேணலொழிந்தனர் - விரும்புதலைத் தவிர்ந்தனர் . பற்றலால் ஒருபற்று மற்றில்லை - இறைவனே பற்றுக்கோடாவான் வேறு ஒரு பற்றுக் கோடில்லை . ` பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு ` ( குறள் . 350) ` என்னிலாரும் எனக்கினியாரிலை ` ( தி .5. ப .21. பா .1.) உலகில் இறைவனது சார்பில்லாது பிறிது ஒரு சார்பில்லை என்று அநுபவம் காட்டியவாறு .

பண் :

பாடல் எண் : 3

மாடு தானது வில்லெனின் மாநுடர்
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர லோகத் திருத்துமே.

பொழிப்புரை :

செல்வம் இல்லையென்றால் , மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை . ஆதலால் , பல மாலைகளாற் கூட , நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக ; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும் .

குறிப்புரை :

மாடுதானது இல்லெனில் - செல்வம் இல்லையானால் . செல்வம் இல்லையானால் அவரவரும் தம்போக்கிற் செல்வர் . பாடு - பக்கம் . செல்வாரும் என உம்மைதொக்கது . மாநுடர்பாடுதான் செல்வாரில்லை - மனிதர் பெருமையோடு ஒருவரிடத்துச் செல்லுதல் இல்லை . அடியாருடன் நீர் சென்று பலவகைப்பட்ட திருப்பதிகப் பாமாலைகளால் பாடுங்கள் . இருத்தும் - அப்பெருமான் இருக்கச் செய்வான் .

பண் :

பாடல் எண் : 4

தந்தை தாயொடு தார மெனுந்தளைப்
பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய
கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச்
சிந்தை செய்மின் அவனடி சேரவே.

பொழிப்புரை :

தந்தையும் தாயும் தாரமுமாகிய கட்டாகிய தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள் பெருகி மலர்கின்ற பொழில்களை உடைய கொண்டீச்சுரத்து இறைவனைச் சேவடி சேர்வதன் பொருட்டுச் சிந்தை செய்வீர்களாக .

குறிப்புரை :

தந்தை தாய் மனைவி என்னும் பிணைப்பு ` இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை ` ( குறள் - 41.) என்பதால் தெளிவுபடுதல் அறிதற்குரியது . பயில்வு - பழகுதல் . எய்திய - பொருந்திய . கொந்து - பூங்கொத்து .

பண் :

பாடல் எண் : 5

கேளு மின்இள மைய்யது கேடுவந்
தீளை யோடிரு மல்லது எய்தன்முன்
கோள ராவணி கொண்டீச் சுரவனை
நாளு மேத்தித் தொழுமின் நன்காகுமே.

பொழிப்புரை :

மனிதர்களே ! கேட்பீர்களாக ; இளமைக்குக் கேடு வந்து சளியோடு கூடிய இருமல் வந்தெய்துவதற்குமுன் கொள்ளுகின்ற பாம்பினை அணிகின்ற கொண்டீச்சுரத்து இறைவனை நாளும் ஏத்தித் தொழுவீராக ; உமக்கு நல்லனவே ஆகும்

குறிப்புரை :

கேடு வந்து - கெடுதலை அடைந்து . ஈளை - கோழை . இருமல் எய்தமுன் - முதுமை வருமுன்பே . கோளரா - கொள்ளும் வாயையுடைய பாம்பு . நன்கு - முத்தி ஞானம் .

பண் :

பாடல் எண் : 6

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே.

பொழிப்புரை :

பூங்கொம்பைப்போன்ற பெண்கள் பயில்கின்ற கொண்டீச்சுரத்து இறைவனை ` எம்பிரான் ` என்று ஏத்தவல்லவர்க்கு , வெம்புதற்குக் காரணமாகிய நோயும் , துன்பமும் , வறுமையும் முதலிய சூழ்தற்குரிய வினைகள் இல்லை .

குறிப்புரை :

வெம்பும் - உடல் வெதும்பும் . வெறுமை - வறுமை . இடர் - துன்பம் துயர் என்பன வேறுபாடுடையன . ஒன்று மனத்துன்பம் , மற்றொன்று உடல் துன்பம் , மூன்றாவது பிறவித் துன்பம் , இவ்வாறு கொள்ளலாம் . சூழ் வினை - நம்மைச் சூழ்ந்துள்ள வினைப் பயன்களாகிய இவை . கொம்பனார் பயில் - பூங்கொம்பு போன்றவர்களாகிய மகளிர் பயில்கின்ற .

பண் :

பாடல் எண் : 7

அல்ல லோடரு நோயி லழுந்திநீர்
செல்லு மாநினை யாதே கனைகுரல்
கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே.

பொழிப்புரை :

துன்பத்தோடு அருநோய்களில் அழுந்திச் செல்லும் நெறி எது என்று நினையாமல் , நீர் , கனைத்த குரலை உடைய முல்லை நிலத்துக்குரிய இடபவாகனத்தை ஊர்ந்தவனாகிய கொண்டீச்சுரத்து இறைவனை வல்லவாறு தொழுவீரேயாயின் வினைகள் மாயும் .

குறிப்புரை :

அல்லலோடு - துன்பத்தோடு . அடரும் - நெருக்குகின்ற . நோயில் - பிணியில் . செல்லுமா - பயனின்றி இறந்தொழியுமாறு . நினையாதே - நினைக்காமல் . கனைகுரல் - கனைக்கின்ற ஒலி . கொல்லையேறு - முல்லை நிலத்து எருது . வல்லவாறு - இயன்றவாறு .

பண் :

பாடல் எண் : 8

நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
மாறி லாமலை மங்கையொர் பாகமாக்
கூற னாருறை கொண்டீச் சுரநினைந்
தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.

பொழிப்புரை :

நறுமணம் வீசும் கலவைச்சாந்தணிந்த நல்ல தனங்களையும் மெல்லிய மொழிகளையும் உடைய மாறுபாடற்ற உமா தேவியை ஒருபாகமாகக்கொண்ட கூற்றை உடையவராகிய பெருமான் உறைகின்ற கொண்டீச்சுரத்தை நினைத்து நெஞ்சில் மேலும் மேலும் எண்ணுபவர்களுக்குக் குற்றம் ஒன்றும் இல்லை .

குறிப்புரை :

நாறு - மணம் கமழ்கின்ற . சாந்து - சந்தனம் . மாறு - ஒப்பு . கூறனார் - உடலில் இடக்கூற்றை அளித்தவர் . ஊறுவார் - செல்லுவார் . உறுவார் என்பது முதல்நீண்டு ஊறுவார் என்றாயது . ஊனம் - குற்றம் .

பண் :

பாடல் எண் : 9

அயிலார் அம்பெரி மேருவில் லாகவே
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்
குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு கூர்மையையுடைய ஓரம்பினால் முப்புரங்கள் தூளாகுமாறு விழ எரியால் எய்தவனாகிய , குயில்களை உடைய பொழில் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைப் பயில்கின்ற அடியவர்கள் பெருமை பெறும் பகுதியை உடையவராவர் .

குறிப்புரை :

அயிலார் அம்பு - எரி கூர்மை பொருந்திய அம்பு அக்கினிதேவனாக . திரிபுரமழிக்கச் சென்றகாலையில் அக்கினிதேவன் அம்பாயினான் என்ற கதைக்குறிப்பைக் கொண்டது . மேரு - இமயம் . எயிலாரும் - திரிபுரக் கோட்டையில் உள்ளவரும் . பொடியாய் விழ - தூளாகிக் கீழே விழ . பயில்வாரும் - வழிபடுவார்களும் . உம்மையால் புகழ் கூறுபவர்களோடு மனம் , மெய் , அறிவு ஆகியவற்றால் வழிபடுபவர்களையும் கொள்க . பாலர் - தன்மையை உடையவர் .

பண் :

பாடல் எண் : 10

நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை
மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழில் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.

பொழிப்புரை :

நிலையினைப் பொருந்திய திருக்கயிலையை ஆணவத்தொடு நின்று எடுத்த இராவணனை மலையினால் வருத்தி அவன் ஆற்றலை வாட்டியவனாகிய , குலைகள் பொருந்திய சோலையையுடைய பொழில்கள் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைத் தலையினால் வணங்கலே தவம் ஆகும் .

குறிப்புரை :

நிலையினார்வரை - ஊழிதோறூழி முற்றும் அழியாது நிலைபெறும் அரிய மலையை. தன் உடல் வலிமையின் நிலையிற் பொருந்தி அதன் எல்லையிலே நின்று. விறல் - வலிமை. குலையினார் இன் சாரியை, பொழில்; குலைகளை உடைய சோலை. தவமாகும் - சிறந்த தவம் அதுவேயாகும்.
சிற்பி