திருவிசயமங்கை


பண் :

பாடல் எண் : 1

குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.

பொழிப்புரை :

விசயமங்கையுள் வீற்றிருக்கும் வேதியனாகிய பெருமான் , தம் அங்கையில் தருப்பையும் , மலர்களும் கொண்ட அழகிய , குற்றமற்ற மங்கலவாசகம் உரைப்போர் வாழ்த்தும்படி பொருந்த உமையும் தானும் ஒரு திருமேனி உருவில் நின்றான் .

குறிப்புரை :

குசை - தருப்பை . கோசம் - புத்தகம் ; இறைவனது முழு முதல் தன்மைகூறும் பதிகங்களில் ஒன்று . வசையில் - குற்றமற்ற . மங்கல வாசகர் - மங்களவாசகமாகிய வேதவாழ்த்துக் கூறும் அந்தணர் . மணிவாசகரைக் குறித்ததாகக் கூறுவாரும் உளர் . இசைய - தம் திருமேனியோடு பொருந்த . ஒன்றாயினான் - ஓருருவமாயினான் ; மாதொரு கூறனாயினான் என்றபடி . விசையமங்கையுள் - திருவிசயமங்கை என்னும் தலத்துள் . வேதியன் - வேதங்களை அருளிச் செய்தவன் .

பண் :

பாடல் எண் : 2

ஆதி நாத னடல்விடை மேலமர்
பூத நாதன் புலியத ளாடையன்
வேத நாதன் விசயமங் கையுளான்
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

ஆதிக்கண் தோன்றியநாதனும் , வலியுடைய இடபத்தின்மேல் அமரும் பூதநாதனும் , புலித்தோலாடையனும் , வேதநாதனும் ஆகிய பெருமான் விசயமங்கையில் உள்ளான் ; அவன் திருவடிகளைப் புகழ்ந்து உரைக்க வல்லார்க்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

ஆதிநாதன் - எல்லா உலகிற்கும் ஆதியாய் முளைத்த தலைவன் . அடல் - வலிமை . விடை - இடபம் . பூத நாதன் - பூதகணங்களின் தலைவன் . புலியதள் - புலித்தோல் . வேதநாதன் - வேதங்களால் புகழப்படும் தலைவன் அல்லது வேதங்களின் தலைவன் .

பண் :

பாடல் எண் : 3

கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற வுருத்திரன்
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.

பொழிப்புரை :

கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூரில் வெள்ளிய இடபம் பூசிக்க அதற்கு அருள்செய்தவனும் , விசயமங்கையுள் இடமாகக்கொண்டு உறைகின்றவனும் ஆகிய உருத்திரன் , கிள்ளிய விடத்துப் பிரமனுக்குத் தலை ஒன்று அற்றது .

குறிப்புரை :

கொள்ளிடக்கரை - கொள்ளிடநதியின் கரையின் கண்ணே உள்ள . கோவந்தபுத்தூரில் - கோவந்தபுத்தூர் என்னும் தலத்தில் . வெள்விடைக்கு அருள்செய் - வெண்மையான இடபத்திற்கு அருள் செய்த . உருத்திரன் - துன்பத்தை ஓட்டுகின்றவன் . அயனுக்குக் கிள்ளிடத் தலையற்றது - பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றினைக் கிள்ளிட அவ்வயன் ஒரு தலையற்றவனானான் .

பண் :

பாடல் எண் : 4

திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம்
அசைய அங்கெய்திட் டாரழ லூட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.

பொழிப்புரை :

விசயமங்கையில் உள்ள மிகப் பழையவனாகிய பெருமான் , திசைகள் எங்கும் குலுங்குமாறு திரிபுரங்கள் அசையும்படிப் பொருந்திய அழலூட்டியவன் ; அப்பெருமான் திருவடிப்புறத்து விரைந்து மயங்கி விழுந்தனன் கூற்றுவன் .

குறிப்புரை :

திசையும் - எட்டுத் திசைகளும் . எங்கும் - எல்லா உலகங்களும் . குலுங்க - நடுங்க . அசைய அங்கு எய்திட்டுத் திரிபுரங்கள் ஆடி அசையும்படி அவை இருக்கும் இடம் சென்று அடைந்து . ஆர்அழல் - அணைப்பதற்கு அரிய நெருப்பை . விருத்தன் - மிக முதியன் . முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளானவனாதலின் விருத்தன் என்றார் . புறத்தடி - புறக்காலால் . விசையின் - விரைவாக . மங்கி - ஒளி மங்கி .

பண் :

பாடல் எண் : 5

பொள்ள லாக்கை யகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
உள்ளல் நோக்கியென் னுள்ளுள் உறையுமே.

பொழிப்புரை :

ஓட்டைகளை உடைய உடம்பினகத்து ஐம்பூதங்கள் கள்ளத்தனம் உடையவாக்கிக் கலக்கிய கரிய இருளிலே , அவ்விருளை விலக்குதல் புரிந்த விசயமங்கைப்பெருமான் தன் திருவுள்ளத்தே நினைந்தருளலை நோக்கி என் உள்ளத்துள்ளே உறைவான் .

குறிப்புரை :

பொள்ளல் - பொத்தல் . ஒன்பது ஓட்டைகளை உடைய வீடாதலின் உடலைப் பொள்ளல் ஆக்கை என்றார் . உள்ளல் - தன்னை நினையும்படிச் செய்து . அகத்தில் - உள்ளே . கள்ளமாக்கி - வஞ்சகத்தை மனத்தே உளதாக்கி . கலக்கிய - மனத்தை அலைத்த . கார் இருள் - மிக்க இருளை உடைய அறியாமையை . விள்ளலாக்கி - நீங்கும்படி செய்து , உள்ளல் நோக்கி - நான் தியானம் செய்வதைப் பார்த்துக்கொண்டே . உள்ளுள் - உள்ளத்திற்குள்ளே . உறையும் - எழுந்தருளியிருக்கும் .

பண் :

பாடல் எண் : 6

கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச்
செல்வ போற்றியென் பாருக்குத் தென்திசை
எல்லை யேற்றலு மின்சொலு மாகுமே.

பொழிப்புரை :

முல்லைநிலத்துக்குரிய இடபக்கொடியையும் , மேருமலையாகிய வில்லையும் பொருந்த உடையவனாகிய விசய மங்கையின் அருட்செல்வ ! போற்றி ! என்று உரைப்பார்க்குத் தென் திசையில் ஏறுதலும் , இனிய புகழும் உளதாகும் .

குறிப்புரை :

கொல்லை - முல்லைநிலக்காடு . ஏறு - மாலாகிய இடப ஏறு . ஏற்றுக்கொடி - இடபக் கொடி . பொன்மலை - மேருமலை . வில்லை ஏற்றுடையான் - மேரு மலையாகிய வில்லை ஏற்றுக்கொண்டவன் . தென்றிசை எல்லையேற்றலும் - தெற்கில் உளதாய எமனுலக எல்லையில் காலன்வந்து வரவேற்று இன்சொல் கூறுதலுமாம் என்பதாம் . வணங்கிவர வேற்பான்என்க . இன்சொலும் - இன் சொல் கேட்கும் தகுதிப்பாட்டையும் . ஆகும் - கொடுப்பதாகும் . எமனால் வழிபடப்படுவர் என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

கண்பல் உக்க கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழ லுத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.

பொழிப்புரை :

கண்ணும் பல்லும் சிந்திவிட்டகபாலத்தைத் தம் அழகியகைக்கொண்டு உண்ணுகின்ற பலிக்கு எங்கும் திரிகின்ற உத்தமனும் , வெண்பிறையைக் கண்ணியாக உடையானுமாகிய விசயமங்கையின் நண்புக்குரிய கடவுளைத் தொழப்பெற்றது நன்மையேயாகும் .

குறிப்புரை :

கண்பல் உக்க - கண்களும் பற்களும் உதிர்ந்த . கபாலம் - மண்டையோடு . அங்கைக் கொண்டு - அழகிய திருக்கரத்தே கொண்டு . உண்பலிக்கு உழல் - உண்ணும் பிச்சைக்கு வருந்தித் திரிகின்ற . உள்ளொளி - தன்னுள்ளே ஒளியையுடைய . கண்ணி - தலை மாலை . நண்பன் - தோழனாயிருப்பவன் .

பண் :

பாடல் எண் : 8

பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும் நல்வரங் கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி யேநினைந் தாசையால்
காண்ட லேகருத் தாகி யிருப்பனே.

பொழிப்புரை :

பாண்டுவின் மகனாகிய பார்த்தன் ( அருச்சுனன் ) பணிகள் செய்து தான் விரும்பிய நல்வரத்தைக் கொண்ட விசய மங்கையில் உறையும் ஆண்டவன் திருவடியே நினைந்து ஆசையால் அவனைக் காணுதலே கருத்தாக இருப்பன் அடியேன் .

குறிப்புரை :

பாண்டுவின் மகன் - பாண்டு என்னும் குருகுலத் தரசனுடைய மகன் . பார்த்தன் - அர்ச்சுனன் . பணி செய்து - தொண்டு செய்து . வேண்டும் - விரும்பும் . தலவரலாறு கூறியபடி .

பண் :

பாடல் எண் : 9

வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி உய்யக்கொளுங் காண்மினே.

பொழிப்புரை :

மயக்கந் தீர்தற்குரிய மனிதர்களே ! அடியேன் கூறுவதை வந்து கேட்பீராக ; வெந்த திருநீற்றை அணிந்தவனாகிய விசயமங்கைப் பெருமான் தன்னைச் சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனத் தன் உறவுடையவராக்கி உய்யக் கொள்வான் ; காண்பீராக .

குறிப்புரை :

கேண்மின் - கேளுங்கள் . மயல் தீர் - அறியாமை நீங்கிய . சிக்கென - உறுதியாக . பந்து - உறவினன் .

பண் :

பாடல் எண் : 10

இலங்கை வேந்த னிருபது தோளிற
விலங்கல் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.

பொழிப்புரை :

இலங்கைக்கரசனாகிய இராவணனது இருபது தோள்களும் இற்று விழும்படியாகத் திருக்கயிலையை ஊன்றிய திருவிரலை உடையவனாகிய பெருமானுக்குரிய விசய மங்கையை வலம் வந்து வணங்குபவர்களும் , வாழ்த்து இசைப்பவர்களும் நன்னெறிநாடித் தமக்கு நலம் செய்வாராவர் .

குறிப்புரை :

விலங்கல் - மலை . கயிலைமலையிடத்தே ஊன்றிய திரு விரலை உடைவன் என்பார் விலங்கல்சேர் விரலான் என்றார் . நலஞ் செய்வார் - தம்முயிர்க்கு நன்மை செய்தவராவர் . நாடி - அடைந்து .
சிற்பி