திருநீலக்குடி


பண் :

பாடல் எண் : 1

வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.

பொழிப்புரை :

தேடிவைத்த செல்வமும் , மனைவியும் , மக்களும் நீர் செத்தபோது உம்மைச் செறியார் ; பிரிவதே இயல்பாம் ; நாள் தோறும் நீலக்குடியரனை நினையும் சித்தம் ஆகின்சிவகதி சேர்வீர் .

குறிப்புரை :

வைத்த - சேமித்து வைத்த . மாடு - செல்வம் . மக்கள் என்பதிலும் உம்மை சேர்க்க . நீர் - நீங்கள் . செறியார் - உடன் வராதவராய் . பிரிவதே - நீங்குதலைச் செய்வர் . நித்தம் - நாள்தோறும் . நினை - நினைக்கும் . சித்தமாகில் - மனமுடையீரானால் . சேர்திர் - சேருவீர் .

பண் :

பாடல் எண் : 2

செய்ய மேனியன் தேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீலக் குடியரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாம்
கையி லாமல கக்கனி யொக்குமே.

பொழிப்புரை :

சிவந்த திருமேனியனாய்த் தேனும் , பாலும் , தயிரும் , நெய்யும் கொண்டு திருமுழுக்காடும் நீலக்குடி அரனின்மேல் காதல் கொண்டு மறவாத மனத்தினர்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனி போல அப்பெருமான் புலப்பட்டு அருள்புரிவான் .

குறிப்புரை :

செய்ய - சிவந்த . மையலாய் - அன்பு மயக்கம் கொண்டு . கையில் ஆமலகக் கனியொக்கும் - உள்ளங்கையில் நெல்லிக்கனியை ஒத்து வெளிப்படையாய்த் தோன்றி அருள் செய்வான் .

பண் :

பாடல் எண் : 3

ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே.

பொழிப்புரை :

நீலக்குடி உடைய பெருமான் , கங்கையாற்றுடன் கூடிய நீண்ட சடையையுடையவன் . உமாதேவியை ஒரு கூற்றிற் கொண்ட இயல்பினன் . திருமேனிக்கு அழகு தருவதாகிய திருநீற்றை உடையவன் . திருவடி போற்றினார் இடர்களைப் போக்கும் புனிதன் .

குறிப்புரை :

ஆற்ற - மிக . ஆயிழையாள் - அழகிய அணிகலன்கள் அணிந்தவள் . ஒரு கூற்றன் - ஒரு பாகத்தின்கண்ணே உடையவன் . கோலமதாகிய - அழகிய . போற்றினார் - தன்னைப் போற்றியவர்களது . இடர் - துன்பங்களை . புனிதன் - தூயவன் .

பண் :

பாடல் எண் : 4

நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே.

பொழிப்புரை :

நான்கு முனிவர்களுக்கு இன்னருள் புரிய ஆலமரத்தின் நன்னிழலின் கீழ் இருந்தோன் ; ஆலகால நஞ்சு உண்ட கண்டத்துடன் பொருந்திய நீலநிறம் உடையவன் . நீலக்குடி உறையும் மலமற்றவன் ; காலன் உயிர் போக்கிய கடவுள் .

குறிப்புரை :

நாலுவேதியர்க்கு - நான்கு வேதமுணர்ந்த அந்தண யோகியர்க்கு . நால்வராவர் - சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற் குமாரர் . இன்னருள் - இனிய திருவருளைச் செய்யும் . ஆலன் - கல்லாலின் நிழற் கீழ் இருப்பவன் . ஆலநஞ்சு - ஆலகாலமாகிய விடம் . கண்டத்து அமர் நீலன் - கழுத்திலே பொருந்திய நீலநிறத்தை உடையவன் . நின்மலன் - குற்றமற்றவன் . காலன் - காலனுக்குக் காலன் .

பண் :

பாடல் எண் : 5

நேச நீலக் குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சரம் எய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே.

பொழிப்புரை :

`நேசத்துக்குரிய நீலக்குடி அரனே !` என்னாத கீழ்மை உடையவராய் நெடுமால் செய்த மாயத்தால் திரிபுரத்து அசுரர்கள் ஈசன் ஓரம்பு எய்ய எரிந்து சாம்பலாய்ப் போய் நாசமாயினர் .

குறிப்புரை :

நேச - அன்பர்க்கு அன்பனே ! எனா - என்னாத . நெடுமால் - திருமால் . மாயம் - சூழ்ச்சிச் செயல் . நெடுமால் செய்த மாயத்தால் நீசராய் என மாறுக . நீசர் - வெறுக்கத்தக்கவர் . ஓர் சரம் - ஓர் அம்பு . நாசமானார் - அழிந்தனர் - திரிபுரநாதர் - திரிபுரங்களுக்குத் தலைவர் . திருமால் செய்த மாயமாவது , தாரகாசுரன் புதல்வராகிய கமலாக்ஷன் . வித்யுன்மாலி , தாரகாக்ஷன் என்ற மூவரும் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றுப் பல நகரங்களையும் அழித்துவந்தனர் . அதைக் கண்ட திருமால் புத்தராய் நாரதரை அனுப்பி அவர்களுக்குப் புற மதத்தை உபதேசித்து அவர்கள் பெருமானிடம் கொண்டிருந்த பக்திக்கு ஊறு விளைக்கச் செய்து திரிபுரங்களைப் பெருமான் அழிக்கும்படி செய்தார் .

பண் :

பாடல் எண் : 6

கொன்றை சூடியைக் குன்ற மகளொடும்
நின்ற நீலக் குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே.

பொழிப்புரை :

என்றும் பொய்யாகிய உலக வாழ்வை உகந்து இறுமாப்பு அடைகின்ற நீர் இறக்கும்போது நுமக்கு அறியவொண்ணுமோ ? ஒண்ணாதாதலால் கொன்றை சூடும் கடவுளுமாகிய மலை மகளோடும் நின்ற நீலக்குடி அரனே என்று உரைப்பீர்களாக !

குறிப்புரை :

குன்றமகள் - மலையரசன் புதல்வியாகிய பார்வதி . எனீர் - என்று சொல்லுங்கள் . என்றும் - எப்பொழுதும் . உகந்தே இறுமாக்கும் - மகிழ்வோடு பெருமிதம் கொள்ளும் . பொன்றும் போதும் - இறக்கும் போதும் . அறிவொண்ணும் - அவனை அறிதல் உண்டாகும் . இப்பிறப்பில் வாழ்வு சிறக்கும் . இறக்கும்போது அவன் நினைப்பு உண்டாய் மறுபிறப்பும் இல்லையாகும்படிச் செய்யும் என்க .

பண் :

பாடல் எண் : 7

கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே.

பொழிப்புரை :

கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக - நூக்கிவிட , என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன் .

குறிப்புரை :

கல்லினோடு - கருங்கல்லோடு . எனை - என்னை . பூட்டி - சேர்த்துக் கட்டி . அமண் கையர் - அமண் ஒழுக்கத்தையுடையவர் . அதாவது நிர்வாண ஒழுக்கத்தினர் . ஒல்லை - விரைந்து . நீர்புக நூக்க - கடலின்கண்ணே அழுந்தும்படியாகத் தள்ளிவிட . நெல்லு நீள் - நெற்கதிர்கள் பெருகியுள்ள ; நவிற்றி - சொல்லி . உய்ந்தேனன்றே - உய்ந்தேனல்லவா ? திருநாவுக்கரசு சுவாமிகள் கல்லிற் பிணைத்துச் சமணர் கடலில் தள்ளியபோது தாம் திருவருளால் கரையேறிய அற்புதத்தைத் தம் திருவாயால் தெளிய உணர்த்தும் திருப்பாடல் இது .

பண் :

பாடல் எண் : 8

அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி யுடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

` யாம் அழகியவர்கள் ; இளையவர்கள் ` எனும் ஆசையால் ஒழுகி , உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே , நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி அரனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக .

குறிப்புரை :

அழகியோம் - நாம் அழகாக இருக்கின்றோம் . இளையோம் - இளமைத்தன்மை உடையவர்களாக இருக்கின்றோம் . ஆசையால் - நிலையாத இவ்விரண்டையும் பெற்றுக் களிக்கும் ஆசையினாலே . ஒழுகி - தவறான வழிகளில் நடந்து . ஆவி - உயிர் . உடல் விடுமுன்னமே - உடலை விட்டு நீங்கும் முன்பாகவே . நிழலதார் பொழில் - நிழல் பொருந்திய சோலை .

பண் :

பாடல் எண் : 9

கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள்
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.

பொழிப்புரை :

கற்றையாகிய செஞ்சடையில் , குளிர்ந்த கதிர்களை வீசும் வெண்திங்களைப்பற்றிப் பாம்புடன் வைத்த கடவுளாகிய நெற்றிக்கண்ணுடைய நீலக்குடி அரன் , தேவர் சுற்றிவந்து தொழும் கழலணிந்த சோதிவடிவினன் ஆவன் .

குறிப்புரை :

கற்றை - பலவற்றின் தொகுதி . செஞ்சடைக்கற்றை என மாறுக . காய்கதிர் - கிரணங்களை வெளிவிடும் சூரியன் . பற்றி - பிடித்து . பராபரன் - மேலானவற்றிற்கெல்லாம் மேலானவன் . கழற் சோதி - கழலையணிந்த ஒளிவடிவானவன் .

பண் :

பாடல் எண் : 10

தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கொர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தன னென்பரே.

பொழிப்புரை :

நீலக்குடி அரன் தருக்கடைந்து திருக் கயிலையைத் தாங்கிய செறிந்த தோளை உடைய இராவணன் உடலை ஓர் திரு விரலால் நெரித்துப் பின்னையும் இரக்கமாகி அருள் புரிந்த கருணைத் திறம் உடையவன் என்பர் .

குறிப்புரை :

தருக்கி - செருக்கி. வெற்பது - கயிலைமலையை. தாங்கிய - சுமந்த. வீங்கு - பெரிய. அரக்கனார், ஆர் இழித்தற் பொருளில் வந்தது. பீழை செய்யினும் பிழைத்ததுணர்வராயின் பொறுத்தருளுவன் என்க.
சிற்பி