திருவெறும்பியூர்


பண் :

பாடல் எண் : 1

விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

அறியாமை உடைய நெஞ்சமே ! வெண்தலையைக் கையில் உடையவனும் , எறும்பியூர் மலையானும் ஆகிய எங்கள் ஈசன் , கலந்த அடியவர்களுக்குக் கரும்பின் ஊறல் போல்வான் . அவனை விடாது விரும்பியுறுவாயாக .

குறிப்புரை :

ஊறு விரும்பிவிடேல் - கேடுகளை விரும்பி வாணாளை வீணாளாக்கவிடாதீர் . கரும்பின் ஊறல் - கரும்பின் சாறு . கலந்தார்க்கு - மனம் ஒன்றியவர்கட்கு . இரும்பின் - இரும்பு போன்ற . ஊறல் அறாததோர் - நிணக்கசிவு அறாததொரு . வெண்டலை ஏந்தியவன் என்க .

பண் :

பாடல் எண் : 2

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

எங்கள் இறைவன் , விளங்கும் செஞ்சடையையுடைய பிஞ்ஞகனும் , பேணுகின்ற புகழை உடைய சுழன்றாடும் இயல்புடைய பூதகணங்களை உடையவனும் , நெற்றிக்கண்ணனும் ஆகி , மணம் வீசும் கூந்தலை உடைய உமாதேவியோடு நாள்தோறும் விளங்கும் எறும்பியூர் மலையினன் ஆவன் .

குறிப்புரை :

பிறங்கு - விளங்குகின்ற . பிஞ்ஞகன் - அழித்தற் கடவுள் . பேணு - விரும்புகின்ற . சீர் - சிறப்பையுடைய . கறங்கு - சுழல்கின்ற . நறும் - தூய .

பண் :

பாடல் எண் : 3

மருந்து வானவர் தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

எங்கள் இறைவன் வானவர்க்கு மருந்தாகவும் , தானவர்க்கு இன்சுவையாகவும் , முறுக்குண்ட புன்சடையை உடைய புண்ணியனாகவும் , நெற்றிக்கண்ணனாகவும் , பூண்கள் பொருந்தும் முலையையுடைய மங்கை நல்லாளொடும் மேவும் எறும்பியூர் மலையினன் ஆவன் .

குறிப்புரை :

வானவர் மருந்து தானவர்க்கு இன்சுவை என்க . தேவர்களுக்கு அருமருந்து போல்வான் . அசுரர்க்கு இனிய சுவை போல்வான் . தேவர்கட்கும் அசுரர்கட்கும் போகபோக்கியங்கள் அருளியவன் என்க . புரிந்த - முறுக்குண்ட . புன்சடை - மெல்லிய சடை , பூண் பொருந்து முலை என மாறுக . பூண் - அணிகலன்கள் .

பண் :

பாடல் எண் : 4

நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

எம் இறைவன் நீலநிறம் கொண்ட கண்டத்தை உடைய நின்மலனும் , மறம் கொண்ட வேல்போன்ற கண்ணையும் , ஒளியுடைய நுதலையும் உடைய மங்கை ஒருபாகமாகி அறம் புரிந்து அருள் செய்த எம் அண்ணலும் ஆகிய எறும்பியூர் மலையினன் ஆவன் .

குறிப்புரை :

நிறங்கொள் - நீல நிறத்தைக் கொண்ட . நின்மலன் - குற்றமற்றவன் . மறங்கொள் வேல் - வீரச்செயல் செய்யும் வேல் . வாள் - ஒளி . அறம்புரிந்து - அறத்தை விரும்பி . அங்கணன் - சிவன் .

பண் :

பாடல் எண் : 5

நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

நறுமணமும் பொன்போன்ற நிறமும் உடைய கொன்றையின் புதிய பூக்களும் , நாகமும் சுரும்புகள் அடர்ந்தது போன்ற சிவந்த சடையின்கண் தூயமதியோடு வைத்து , விண்ணை உறும் பொன்மலையாகிய இமவான்மகளாகிய உமாதேவியோடு ஊர் தோறும் வீற்றிருக்கும் எங்கள் இறைவன் , எறும்பியூர் மலையினன் .

குறிப்புரை :

நறும்பொன் - குற்றமற்ற தூய பொன்போன்ற . நாண் மலர் - புது மலர் . நாகம் - ஞாழல் மரம் . துறும்பு - நெருங்கிய அல்லது பொருந்திய என்க . வான்உறும் - ஆகாயத்தை அளாவும் . பொன்மால் வரை - பொன்மயமான பெரிய இமயமலை . மால்வரைப் பேதை - பார்வதி .

பண் :

பாடல் எண் : 6

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.

பொழிப்புரை :

சினந்து ஊர்வனவாகிய ஐம்பொறிகள் உள்ள உடம்பில் , மாறுபட்டு ஊர்வன மற்றும் பல உள்ளன ; அழுக்கு ஊர்வதாகிய கூடுபோன்ற அவ்வுடம்பின்கண் இட்டு என்னை எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது .

குறிப்புரை :

கறும்பி - சிறிது சிறிதாகத் தின்று . ஊர்வன - நம்மை ஊர்ந்து கொண்டிருப்பன . ஐந்து - ஐம்பொறிகள் . காயத்தில் - உடலில் . திறம்பி ஊர்வன - மனத்தொடு பிறழ்ந்து செல்வன . மற்றும் பல வாவன - அந்தக்கரணங்கள் முதலியன . குறும்பி - மலமூத்திராதி உடலழுக்கு . ஊர்வதொர் - பொருந்திதொரு . கூட்டகத்து - உடலிடத்துள் . இட்டு - அடைத்து .

பண் :

பாடல் எண் : 7

மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன் செய்த வியற்கையே.

பொழிப்புரை :

அறிவற்ற நெஞ்சமே ! பெருந்துன்பங்களால் நாள்தோறும் மற்று இதனை மறந்து மாறுபட்டு நீ நினையாதே ; புறத்தே கோலம் செய்யப்பெற்ற இக்குடிசையில் என்னை இட்டு எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது .

குறிப்புரை :

பேரிடர் இது மறந்து - பெரிய துன்பத்தை விளைப்பதாகிய இவ்வுடலை மறந்து . திறம்பி - உடலுணர்வினின்று மாறுபட்டு . நினையேல் - அதனையே நினையாதொழிவாயாக . புறஞ்செய் - உள்ளழுக்குத் தெரியாதவாறு புறத்தே செய்யும் . கோலக்குரம்பை - அழகிய உடலாகிய வீடு .

பண் :

பாடல் எண் : 8

இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு
துன்ப மும்முட னேவைத்த சோதியான்
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க்
கின்ப னாகு மெறும்பியூ ரீசனே.

பொழிப்புரை :

எறும்பியூர் இறைவன் இன்பமும் பிறப்பும் , துன்பமும் இறப்பும் உடன் வைத்த சோதிவடிவினனும் , ` அன்பனே ! அரனே !` என்று வாய்விட்டு அரற்றுவார்க்கு இன்பமளிப்பவனும் ஆவன் .

குறிப்புரை :

உடனே - ஒருசேர என்னும்பொருட்டு . இவ்வுலகில் பிறப்பும் இன்ப துன்பமும் ஆகிய இருவினைப்பயனும் உடன் வைத்தவன் என்க . சோதியான் - ஒளி வடிவினன் . அரற்றுவார்க்கு - பலகாலும் சொல்லுவார்க்கு .

பண் :

பாடல் எண் : 9

கண்நி றைந்த கனபவ ளத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாயுயி ராயவன்
எண்நி றைந்த வெறும்பியூ ரீசனே.

பொழிப்புரை :

எண்ணமெங்கும் நிறைந்த எறும்பியூர் இறைவன் , கண்ணுக்கு நிறைந்த பெருமைமிக்க பவளத்திரளும் , விண்ணில் நிறைந்த சுடர் விரிகின்ற சோதி வடிவானவனும் , உள்ளத்துள் நிறைந்து உருவாகி உயிராகியவனும் ஆவன் .

குறிப்புரை :

கண் நிறைந்த - கண் பார்வைக்குச் சிறந்த . கனம் - திரண்ட . பவளத்திரள் - பவளங்களின் தொகுதி . உள் நிறைந்து - மனத்திற்குள் நிறைந்து . உருவாய் - என் வடிவமாய் . எண் நிறைந்த - என் எண்ணத்தில் நிறைந்த .

பண் :

பாடல் எண் : 10

நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை யெம்மிறை காண்மினே.

பொழிப்புரை :

எறும்பியூர் மலைக்குரிய எம்மிறைவன் , நறுமணம் வீசும் கூந்தலையும் இளமையையும் உடைய உமாதேவி நடுக்கம் எய்திட வெண்ணிறம் கொண்ட திருக்கயிலைப் பெருமலையை வீரம் கொண்ட வாளை உடைய இராவணன் ஊன்றி எடுத்தலும் , அவன் ஆற்றலை வாடுமாறு செய்தான் .

குறிப்புரை :

நிறம் - வலிமை . மால்வரை - பெரிய மலை . ஊன்றி - கையை ஊன்றி . நறுங்குழல் - மணமுள்ள கூந்தல் . மறம் - வலிமை .
சிற்பி