திருச்சேறை


பண் :

பாடல் எண் : 1

பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
கூரி தாய அறிவுகை கூடிடும்
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன்றன் நாம நவிலவே.

பொழிப்புரை :

சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும் ; பொய்கெடும் ; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும் .

குறிப்புரை :

பூரியா - நிறைந்து , பெருகி . புண்ணியம் பூரியா வரும் . பொய் - புண்ணியத்துக்கு மறுதலையாகிய கீழ்மை . கூரிதாய அறிவு - கூர்மையான நுண்ணறிவு . கைகூடிடும் - உண்டாகும் . சீரியார் - சிறந்தவர் . பயில் - வாழ்கின்ற . நாரிபாகன் - பார்வதிதேவியைப் பாகமாக உடையவன் . நாமம் - திருப்பெயர் . நவில - சொல்ல . செந்நெறி - கோயில் திருப்பெயர் . செம்மை நவிலவரும் எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 2

என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! மின்னுகின்ற நீண்ட சடையையுடையவனும் , வேதவிழுப்பொருளும் , செந்நெல் பொருந்திய வயல் உடைய திருச்சேறையுட் செந்நெறியில் நிலைபெற்ற சோதியுமாகிய பெருமான் நம்மிடம் வந்து தங்க , நீ என்ன மாதவம் செய்தாய் !.

குறிப்புரை :

என்ன - எத்தகைய . மாதவம் - சிறந்த தவம் . செய்தனை - செய்தாய் . மின்னு வார்சடை - மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடை . வேத விழுப்பொருள் - வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன் . செந்நெல் ஆர்வயல் - செந்நெற் கதிர்கள் பொருந்திய வயல்கள் . மன்னு - நிலைத்து விளங்குகின்ற . சோதி - ஒளி வடிவானவன் . நம்பால் - நம்மிடத்து . வைக - நிலையாக வந்து எழுந்தருள .

பண் :

பாடல் எண் : 3

பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.

பொழிப்புரை :

திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால் , பிறப்பு , மூப்பு , மிக்கபசி , மிக்கபிணி , இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும் .

குறிப்புரை :

மூப்பு - முதுமைத் தன்மை . பெரும் பசி - மிக்க பசி . வான்பிணி - பெரிய தீராத நோய்கள் . எய்திடும் - உண்டாகும் . சிறப்பர் - சிறப்புடையவர் . மறப்பதின்றி - மறவாமல் . மனத்தினுள் வைக்க இன்பம் வந்தெய்திடும் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 4

மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

ஊமைகளே ! செல்வத்தைத்தேடி மயக்கத்தில் விழுந்து நீர் ஓடி இளைத்தும் பயன் இல்லை ; உயர்ந்தவர்கள் வாழ்கின்ற சேறைச்செந்நெறி மேவிய கூத்தப்பிரான் திருவடிகளை அடைந்து உய்வீர்களாக .

குறிப்புரை :

மாடு - செல்வம் . மயக்கினில் வீழ்ந்து - நில்லாதவற்றை நிலையின என்றுணரும் அறியாமையில் விழுந்து . எய்த்தும் - வருந்தியும் . ஊமர்காள் - ஊமைகளே ; பேசுதற்குரியவற்றைப் பேசாதவர் ; சொல்லும் கருவியிருந்தும் சொல்லாதவர் . சேடர் - அறிவால் பெருமையுடையவர் . வாழ் - வாழ்கின்ற . ஆடலான் தன் - ஐந்தொழில் ஆடவல்லானாகிய இறைவனது .

பண் :

பாடல் எண் : 5

எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

நாள்தோறும் எண்ணி எரியும் வேலும் உடைய கூற்றுவன் துண்ணெனத் தோன்றினால் , அவனைத் துரத்தும் வழி ஒன்று கண்டேன் ; திண்மை உடையவரும் , சேறையுட் செந்நெறி உறையும் அண்ணலாருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?

குறிப்புரை :

நாளும் எண்ணி - ஒவ்வொரு நாளும் உயிர்களின் வாழ்நாட்களைக் கணித்து . எரி அயில் - எரியும் நெருப்புப் போன்ற கூரிய வேல் . துண்ணென் தோன்றில் - நடுக்கம் உண்டாகும்படி எனக்கு முன் தோன்றிவந்தால் . துண்ணென்றொன்றில் எனவும் பாடம் . துரக்கும் வழி - அவனை ஓட்டும் வழியை . கண்டேன் - கண்டுபிடித்து விட்டேன் . திண்ணன் - வலியன் . அண்ணலார் - தலைமைத் தன்மை யுடையவர் . என்னுக்கு - எதற்கு ?

பண் :

பாடல் எண் : 6

தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

வானம் முறை தவறி ( வறண்டு ) உலகம் நடுங்கினால் என்ன ? ஒப்பற்ற அரசர்கள் ஒருங்கு உடன் சீறிச்சினந்தால் என்ன ? செப்பம் பொருந்திய சேறையுட் செந்நெறி மேவிய அப்பனார் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?

குறிப்புரை :

தப்பி - நிலைதவறி . வானம் - வானத்தில் உள்ள மழை . தரணி - நிலவுலகிற் பெய்யாது . கம்பிக்கில் என் - அசைந்தால் அதனால் விளைவது யாது ? வானம் என்பதற்கு வானமண்டலங்கள் நிலை தடுமாறி அதனால் உலக இயக்கம் நடைபெறாது நின்று போனால் என்ன எனினும் அமையும் . ஒப்பில் வேந்தர் - தன்னை ஒப்பார் இல்லாத அரசர் . ஒருங்குடன் - ஒன்றுசேர்ந்து . சீறில் என் - நம்மைக் கோபித்தால் அதனால் விளைவது என்ன ? செப்பமாம் - செம்மையோடு கூடியதாய . அப்பனார் - தந்தையாவார் . என்னுக்கு அஞ்சுவது - எதற்கு நாம் அஞ்சுவது ? ` திண்ணென் கெடிலப்புனலும் உடையார் ஒருவர்தமர் நாம் அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதும் இல்லை ` என்ற பதிகத் திருப்பாடல்களும் , ` `வானந் துளங்கிலென் மண்கம்பமாகிலென் இருசுடர் வீழிலென் அஞ்சல் நெஞ்சே` ` எங் கெழிலென் ஞாயிறெமக்கு ` என்ற திருப்பாடல்களும் அஞ்சாமையை வெளிப்படுப்பன .

பண் :

பாடல் எண் : 7

வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

தேடிவைத்த செல்வமும் , பெண்களும் , ஒத்தும் ஒவ்வாதும் உள்ள சுற்றத்தார் பிறரும் என்ன செய்வார் ? சித்தரும் , சேறையுட் செந்நெறி மேவிய அத்தருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?

குறிப்புரை :

வைத்த மாடு - நிலையென்று தேடிச் சேமித்து வைத்த செல்வங்கள் . மடந்தை நல்லார்கள் - மனைவியர் . ஒத்து ஒவ்வாத உற்றார்களும் - செல்வம் உள்ளபோது ஒத்தும் இல்லாதபோது ஒவ்வாதும் புறத்தால் கலந்து அகத்தால் கலவாத உறவினர் . என் செய்வார் - அச்சம் தரும் இறப்பு வரும்போது நமக்கு என்ன உதவியைச் செய்வர் ? சித்தர் - அட்டமா சித்திகள் கைவரப் பெற்றவரைச் சித்தர் என்பது , பெருமான் சித்திகளின் வடிவாக இருப்பவர் என்றோ அறிவு மயமாய் இருப்பவர் என்றோ பொருள் கூறுக . அத்தர் - தலைவர் .

பண் :

பாடல் எண் : 8

குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! குலங்கள் என்னசெய்யும் திறத்தன ? குற்றங்கள் என்ன செய்யும் திறத்தன ? மனம் அசைந்து நீ நின்று சோராதே ; விளங்கும் திருச்சேறையில் செந்நெறி மேவிய கொன்றை மாலையணிந்த இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எற்றுக்காக ?.

குறிப்புரை :

குலங்கள் - வருணாசிரமங்களாகிய சாதிகள் . குற்றங்கள் - நாம் செய்தனவாய தவறுகள் . என் செய்வ - என்ன தீமையைச் செய்யப் போகின்றன . துலங்கி - மனம் வருந்தி . சோர்ந்திடல் - வருந்தாதே . இலங்கு - விளங்குகின்ற . அலங்கனார் - மாலை அணிந்தவர் , அல்லது ஒளியோடு கூடியவர் .

பண் :

பாடல் எண் : 9

பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

பழகினால் வருகின்ற பழமையாய் உள்ள சுற்றத்தாரும் விழவிடாவிட்டால் வேண்டியதை எய்தவொண்ணாது ; விளங்குதலைக்கொண்ட சேறையிற் செந்நெறி மேவிய அழகராகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எற்றுக்கு?

குறிப்புரை :

பழகினால் - பழக்கத்தால் . வரும் - உண்டாய் வரும் . பண்டுள - பலகாலமாய் உளதான . சுற்றமும் என்பதிலுள்ள உம்மை உயர்வு குறித்தது . விழவிடாவிடில் - உண்மையானதல்ல என்றறிந்து அவர்கள் நம்மை நீங்கும்படி விட்டுவிடவில்லையானால் . வேண்டிய - உண்மையாய் நமக்குத் துணை செய்யும் பொருள் என்று உணர்ந்து விரும்பிய நன்மைகளை . எய்தொணா - அடையமுடியாது . திகழ்கொள் - விளங்குதலைக்கொண்ட .

பண் :

பாடல் எண் : 10

பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும் , திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை .

குறிப்புரை :

பொருந்து - நிலத்தில் ஆழமாய்ப் பொருந்திய. நீண் மலை - புகழால் உயர்ந்த திருக்கயிலை மலையை. பிடித்து - பற்றி. ஏந்தினான் - தூக்கியவனாகிய இராவணன். வருந்த - உடல் வருந்த. வாங்கினான் - அவனுக்குக் கருணை செய்வதற்காக மீளவும் எடுத்தான். இடர் - துன்பம்.
சிற்பி